17

17

நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் – டொனால்ட் டிரம்ப்

2024 ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட கார்களிற்கு 100 வீத வரியை விதிப்போம் என தெரிவித்துள்ள டிரம்ப் நான் தெரிவு செய்யப்பட்டால் அந்த வெளிநாட்டு கார்களை விற்கமுடியாத நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை டிரம்பின் இந்த கருத்து அவர் மற்றுமொரு ஜனவரி ஆறாம் திகதியை விரும்புகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடனின் பிரச்சார பிரிவின் பேச்சாளர் ஜேம்ஸ் சிங்கெர் தெரிவித்துள்ளார்.

 

அமெரி;க்க மக்கள் டிரம்பின் தீவிரபோக்கினை தொடர்ந்து நிராகரித்துவருவதால் நவம்பர் தேர்தலில் அவர்கள் அவரை நிராகரிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்க மக்கள் அவரின் வன்முறை மீதான விருப்பம் பழிவாங்கும் குணம் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவுக்கு வந்தது வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸாரால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

அவர்களில் 05 பேர் கடந்த செவ்வாய்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில், வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.

 

ஆர்ப்பாட்டம் வவுனியா சிறைச்சாலை முன்றலில் நிறைவடைந்ததை தொடர்ந்து, வேலன் சுவாமி, அருட்தந்தை ரமேஸ், சட்டத்தரணி க.சுகாஸ், பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் இணக்கத்துடன் சிறைச்சாலைக்கு சென்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் மதிமுகராசா, எஸ்.தவபாலசிங்கம், கிந்துஜன், தமிழ்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய 5 பேருடனும் கலந்துரையாடி அவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.

 

இதன்போது, அவர்களின் விடுதலைக்காக தாம் வெளியில் ஒன்றுபட்டு தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடிந்து வைத்தவர்கள் உறுதி மொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொழிப் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் – வவுனியாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

வடக்கு தமிழ்த் தலைவர்களுடன் ஏப்ரலில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், மொழிப் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் எனவும் தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும்,சுதந்திரத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகளை தொடர்ந்தும் பின்பற்றிக் கொண்டும், பரம்பரைபரம்பரையாக ஆட்சி அதிகாரத்தினை தக்கவைக்கும் கலாசாரத்தினையும் மாற்றுதற்கு தெற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

 

அவர்களுடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். தமிழர்களின் பங்களிப்புடனான ஆட்சியையே நாம் எதிர்பார்க்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை – பெண் ஒருவர் கைது !

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பெண்ணை கைது செய்யும் போது , அவரது உடைமையில் இருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்கு ஒரு தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய வட – கிழக்கு மாகாணங்களில் தமிழ் பொலிஸ் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் !

வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியிலிருந்து ஆரம்பமாகும் என உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரிவுத் தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தது.

 

இருப்பினும், இச்சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் உள்வாங்கப்படவில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

 

எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய தீர்வினை வழங்கும் நோக்கில் இயங்குவதாகக் கூறும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்காதது ஏன் எனவும், செயலகத்தின் சந்திப்புக்களில் பங்கேற்றவர்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்கள் எனவும் வினவியபோதே யுவி தங்கராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அண்மையில் தமது செயலக அதிகாரிகள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்ற வரையறுக்கப்பட்ட சில தரப்பினருடன் மாத்திரமே சந்திப்புக்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட சந்திப்புக்களில் இன்னமும் ஈடுபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அதேவேளை, ‘உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதில் முன்னிலையாகும் தரப்பினர் கையாளப்படவேண்டிய முறை உள்ளிட்ட ஒழுங்குவிதிகளை நாம் இப்போது தயாரித்து வருகின்றோம். அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக நாம் சந்திக்கவேண்டிய பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றோம். அத்தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாக சேகரிக்கின்றோம்’ என்றும் யுவி தங்கராஜா குறிப்பிட்டார்.

 

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணி வந்திருந்தாலும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியிலான சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.