08

08

தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஓயவில்லை – தனது நூலில் கோட்டாபய ராஜபக்ஷ!

தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஒருபோதும் ஓயமாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி’ என்ற பெயரிலான கோட்டாபய எழுதிய புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 

சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கினர்.

வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை, அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்.

மேலும் பௌத்த சமயத்தை பலப்படுத்த தாம் செயற்பட எத்தனித்த போது தமிழ் மற்றும் முஸ்லீம் உள்ளிட்ட சிறுபான்மை சக்திகள் தனக்கு எதிரான அரகலய போராட்டத்தில் முன்னிலையில் செயற்பட்டதாகவும் குறித்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் சதி மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் பதவி விலகியதாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான கியூபத் தூதுவர் – அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே சந்திப்பு !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இலங்கைக்கான கியூபத் தூதுவர் Andrés Marcelo Garrido வுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் இடம்பெற்றது.

 

இச்சந்திப்பில் கியூபத் தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளர் Mrs. Maribel Duarte Gonzalez வும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டனர்.

 

இதன்போது நீண்டகாலமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இருந்த அரசியல் தொடர்புகள் பற்றியும் நிகழ்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் விலாவரியாக கலந்துரையாடப்பட்டது.

 

நீண்ட காலத்துக்கு முன்பாக கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை பற்றியும் இன்றளவில் கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நேரடி தொடர்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், பிரச்சினைக்குரிய பகுதிகள் பற்றியும் கியூபத் தூதுவர் அநுர குமார திசாநாயக்கவிடம் தெளிவுபடுத்தினார்.

‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ – முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!

நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக ‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப்பொருளில் வட மாகாண ரீதியாக முப்படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது.

வட மாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி, அந்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காணிகளின் உரிமையாளர்கள் தமது காணியின்றி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர், அந்த காணிகளை விடுவித்து, மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் காரியாலயத்துக்கு ஐயாயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்வேறு காணிகளை சேர்ந்த மக்களை இணைத்து ஜனாதிபதிக்கான தபால் அட்டையை அனுப்புவதற்கான பணிகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற முக்கியமாக கேப்பாப்புலவு வட்டுவாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமது காணிகள் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ள மக்களை இணைத்து இவர்களினூடாக தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னதாக காணி உரிமையாளர்கள் மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சூழலியல் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் காணியை இழந்த மக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்தே, தபால் அட்டைகளை பூர்த்தி செய்த மக்கள் முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று, அங்கு தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

கனடாவில் 6 பேர் படுகொலை : இலங்கையை சேர்ந்த சந்தேகநபர் கனடா நீதிமன்றில் !

கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

அங்கு, சந்தேக நபர் மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மீண்டும் அமர்வதற்கு முன்பு தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், எதிர்வரும் 14ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் விக்கிரமசிங்க குடும்பத்தை ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை. 5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களிடம் பேச வேண்டாம் என நீதிமன்றம் சந்தேகநபருக்கு உத்தரவிட்டுள்ளது.

 

அவர்களில் ஒருவரான தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கனடாவில் கல்வி கற்கும் ஃபேப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞரே இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த படுகொலையில் பயங்கரவாதி கூரிய ஆயுதத்தை பயன்படுத்தியதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

புதன்கிழமை இரவு 10:52 மணியளவில் 911 என்ற எண்ணுக்கு இரண்டு அழைப்புகள் வந்ததாகக் ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.

 

கொலைச் சம்பவத்திற்கு முன்னர் இந்த இலங்கைக் குடும்பத்திடமிருந்து பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என ஒட்டாவா பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:

 

தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது

இனுக விக்கிரமசிங்க – 07 வயது

அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது

றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது

கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்

 

காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.

 

குழந்தைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டவர்கள் சமீபத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், இரண்டு மாத வயதுடைய இளைய மகள் மட்டுமே கனடாவில் பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சுமார் ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒட்டாவாவில் இதுபோன்ற படுகொலைகள் ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் தலைநகரில் நடந்த மிகக் கொடூரமான படுகொலை இது என்று கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உயிரிழந்த இலங்கை குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

உலகெங்கிலும் உள்ள சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடும் நிலையில், அரசாங்கத்தால் பெண்களின் உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டலை உறுதி செய்யும் இரண்டு புதிய சட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்தார்.

 

பெண்கள் அதிகாரமளிக்கும் சட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், பாலின சமத்துவ சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது.

இலங்கையில் முறையான பாலியல் கல்வி இன்மையின் வெளிப்பாடு – ஒரே ஆண்டில் 700 எயிட்ஸ் நோயாளிகள்!

நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 700 எயிட்ஸ் (AIDS) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த வருடம் 13% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

2022 ஆம் ஆண்டு நாட்டில் 607 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 15 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட 91 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே, 2023 ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோயினால் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 5,705 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

பாலியல் கல்வி இன்மை, ஆபத்தான பாலியல் நடத்தைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமை உள்ளிட்ட காரணிகளால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சாணக்கியனை தாக்க முற்பட்ட அரச தரப்பு எம்.பி – வெளியாகியுள்ள விளக்கம்!

சாணக்கியன் எம்.பி.யை நான் பாதுகாப்பாக பிரதமரிடம் அழைத்து செல்லவே லிப்டுக்கு (மின்தூக்கி )அருகில் வருமாறு அழைத்தேன் என அரச தரப்பு எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

சாணக்கியனின் குற்றச்சாட்டு தொடர்பில் சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தி கருத்து தெரிவித்த போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமரை சந்திக்க வந்த தன்னை நான் தாக்க முற்பட்டதாக சாணக்கியன் எம்.பி கூறி சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். நான் அந்த விசாரணைக்குழு முன்பாக ஆஜராவேன் .எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

பிரதமரை சந்திக்க வந்த சாணக்கியனிடம்” நீங்கள் பிரதமரையா சந்திக்க வந்தீர்கள்.லிப்டுக்கு வாருங்கள் அழைத்து செல்கின்றேன் என்றே கூறினேனே. அதாவது பிரதமரை சந்திக்க வந்த சாணக்கியன் எம்.பி. யை பாதுகாப்பாக பிரதரிடம் அழைத்து செல்லவே நான் முயற்சித்தேன். ஆனால் இவரிடம் இந்தளவுக்கு பயம் இருக்கும் என்பது எனக்குத்தெரியாது என்றார்.