2024

2024

இலங்கையை விட்டு அதிகமாக வெளியேறும் இளைஞர்கள்!

2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024 செப்டெம்பர் மாதத்தில் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர் மற்றும் 2023 செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 25,716 ஆக பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும்.இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 17,649 தொழிலாளர்கள் தொழில்சார் வேலைகளுக்காக (Professional employment) வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர், அதேவேளை, அரை திறன் (Semi-skilled jobs) கொண்ட வேலைகளுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3,704 ஆகும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சவூதி அரேபியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளனர், அந்த எண்ணிக்கை 38,133 ஆக பதிவாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில், 6391 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றுள்ளனர், மேலும் 6295 இலங்கையர்கள் ஜப்பானுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், 5870 பேர் தென் கொரியாவிலும், 5677 பேர் குவைத்திலும், 3995 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் வேலைக்காக வெளியேறியுள்ளனர்.

 

நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் – பெஃரல் கோரிக்கை!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பெஃரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்”

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகின்றது. நாட்டில் போராட்ட களத்தின் பின்னர் இடம்பெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும்.

 

நாட்டில் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். எனவே தேர்தலில் இளைஞர்களுக்கும் மகளிருக்கு முன்னுரிமையளிக்குமாறு நாம் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

 

குறைந்தபட்சம் 2 பெண் வேட்பாளர்களையேனும் முன்னிறுத்துமாறு கோருகின்றோம். 260 நாட்டில் மாவட்டங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேர் போட்டியிட முடியும்.

 

சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர்களுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபா மாத்திரமே செலவிட நேரிடும். ஏனெனில் சுயாதீன வேட்பாளர்கள் மாத்திரமே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 2000 ரூபா கட்டுப்பணம் அறவிடப்படுகின்றது.இது மிகவும் குறைந்த கட்டணமாகும்.

 

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிடம் கட்டுப்பணம் அறவிடப்படமாட்டாது. 196 பேர் மாத்திரமே மக்கள் வாக்கெடுப்பினால் தெரிவு செய்யப்படுவார்கள் ஏனைய 29 பேர் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி நீட்டிக்க நடவடிக்கை – சுமந்திரனிடம் அமெரிக்க தூதுவர் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் (02) கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.
இதன்போது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம், ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து சுமந்திரனிடம் தூதுவர் ஜூலி சங் கேட்டறிந்தார். அதேபோன்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சுமந்திரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்தல் என்பன உள்ளடங்கலாக சில நேர்மறையான வாக்குறுதிகளை இப் புதிய அரசு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதற்கு அமெரிக்கத் தூதுவர், தம்மிடம் ஊழல், மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அவசியமான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதனை அரசுக்கு வழங்கி உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளமுடியுமா? என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

1000ற்கு மேற்பட்ட சிறுவர்கள், 39க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் இராணுவத்திடம் சரணடைந்தனர் – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

 

சிறுவர் தின நாளில் வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தில் ஒருவர் குழப்பம் விளைவித்தமை குறித்து கண்டனம் தெரிவித்து இன்று (03) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

“எட்டுமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராட்டமானது பல இன்னல்களையும் துன்பங்களையும் சுமந்த போராட்டமாக பதினைந்து வருடமாக போராடிக்கொண்டு வருகின்றோம்.

 

இங்கு மாறி மாறி ஆட்சிக்கு வரும் இலங்கை அரசிடம் பலவழிகளில் பலமுறை நீதி கேட்டு நின்றோம். நீதி கிடைக்காத நிலையில் தான் நாம் எட்டு மாவட்ட உறவுகளும் சரவதேச நீதியைதேடி 2018ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என சர்வதேச நீதி கோரி ஜெனிவா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்று வருகின்றோம்.

 

எமது போராட்டங்களான மே18 இனவழிப்புநாள், சர்வதேச மனித உரிமைகள் தினம், சிறிலங்கா சுதந்திரதினம், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், சர்வதேச மகளிர்தினம், சர்வதேச சிறுவர் தினம் அத்துடன் மாதாந்த மாவட்ட ரீதியான கவனயீர்ப்பு போராட்டம் என அத் தினங்களில் நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடி வருகின்றோம்.

 

எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட் ட உறவுகளுக்கும் தலைமைகளுக்கும் சிறிலங்கா காவல்துறை விசாரணை, புலனாய்வுத்துறை விசாரணை என பல ஏராளமான மன உளைச்சல்கள், எண்ணிலடங்காத அச்சுறுத்தல்கள் இவற்றுக்கு மத்தியிலும் நாம் எப்போதும் எமக்கான நீதிக்கான போராட்டத்தை கை விடப்போவதில்லை என உறுதி எடுத்துக்கொள்கின்றோம் .

 

இதேபோல் சிறுவர் தினமான 01/10/2024 அன்று எட்டு மாட்டமும் மாவட்ட ரீதியாக சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு சர்வதேச நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கோண்டோம்.

 

எட்டு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் பட்டியலில்1000ற்கு மேற்பட்ட சிறுவர்கள், 39க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் இராணுவத்திடம் சரணடைந்தனர் அந்த குழந்தைகளூக்கு என்ன நடந்தது என மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கிறோம்.

“இந்த குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்கிய விடயத்தில் உலகளாவிய ரீதியில் சிறிலங்கா முதலாம் இடத்தைப் பெற்று நிற்கிறது. அதேபோல் எட்டு மாவட்டத்திலும் சிறுவர் தினத்தை கறுப்பு தினமாக அந்த அந்த மாவட்ட மக்களும் சிறுவர்கள், குழந்தைகள் அனுஷ்டித்தனர்.

 

வவுனியா மாவட்டத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி எஸ்.ஜெனித்தாவின் தலைமையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்துக்கு மூன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்க்கொண்டனா்.

 

போராட்டம் காலை10.30 ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருந்த வேளை போராட்ட இடத்திற்கு வந்த ஒரு நபர் தான் அநுரவின் ஆள் எனவும் இங்கு போராட்டம் செய்யவேண்டாம் என எச்சரித்தார்.

 

அதற்கு தாய்மார் இது ஜனநாயக போராட்டம் நாம் இதை ஏன் நிறுத்த வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அந்த நபர் மிக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவருடைய தொனியில் கத்தினார். யாரோ எமது போராட்டத்தை குழப்புவதற்கு அவரை அனுப்பியதாக எமக்கு தெரிந்தது.

 

தாய்மார் இதையெல்லாம் கதைக்க நீர் யார் என்று கேட்ட போது, குறித்த நபர் நான் அநுரவுடன் ஒன்றரை வருடமாக இருக்கின்றேன். அவர் இப்பொழுது ஜனாதிபதியாக வந்துவிட்டார் அதனால் உங்களை போராட்டம் செய்ய விடமாட்டேன் என்று இறுமாப்புடன் கூறினாா்.

 

அதுமட்டுமல்ல உங்களை எல்லாம் கைது செய்யப்போகிறேன் என்று தகாத வார்த்தைகளால் அவ்விடத்தில் பேசி எமது தாய்மாரின் மனதை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்.

 

ஆனால் எமக்கு இவர் ஜனாதிபதி அநுரவின் ஆளோ அல்லது காவல்துறையினரின் ஆளோ அல்லது புலனாய்வுத்துறையின் ஆளோ அல்லது வேறுயாருடைய ஆளோ என்று எமக்கு தெரியாது.

 

இங்கு குழப்பத்தை ஏற்படுத்தியவருக்கும் அவரை இயக்குபவருக்கும் நாம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் எமது போராட்டத்தை குழப்ப வரும் எவரானாலும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

நாம் உறவுகளை உயிருடன் ஒப்படைத்துவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த போராட்டத்தில் எம்முடன் இருந்து உறவைத தேடிய 280ற்கும் மேற்பட்ட உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இதற்கு யாருமே பதில் சொல்ல முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஆகவே எமது போராட்டம் எமக்கு சரியான சர்வதேச நீதி கிடைக்கும் வரை தொடரும் என பிரகடனப்படுத்துகின்றோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை உலுக்கிய ஹெலன் சூறாவளி – 200ஐ தாண்டிய பலி !

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணத்தில் பாரிய அளவில் அழிவை ஏற்படுத்திய ஹெலன் சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200யை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஹெலன் சூறாவளியினால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளதுடன் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், பல பகுதிகளில் வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்துள்ளதுடன் ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புளோரிடாவின் தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவில் பலர் உயிரிழந்தமையினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சூறாவளியின் பாதிப்புகள் தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் விரிவாக விளக்கப்பட்டுள்ளதுடன் புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதுடன் புளோரிடாவிலுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

சங்குச் சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமென்ற வாக்குறுதி காற்றில் பறந்தது – கனகரத்தினம் சுகாஷ் 

சங்குச் சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமென்ற வாக்குறுதி காற்றில் பறந்தது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டது. சங்குச் சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாகியது.

எங்கள் முடிவுகள் கொள்கையின் பாற்பட்டதே தவிர மதுபான அனுமதிப்பத்திரங்களையோ வேறு சலுகைகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது.

 

அன்புக்குரிய மக்களே, நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தடம்மாறாத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகளே தமிழினத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் என்பதைப் பொறுப்போடு பதிவு செய்கின்றோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆடையகத்தை தீயிட்டு கொளுத்திய வன்முறை கும்பல்!

யாழ்ப்பாணம் – நெல்லியடியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகமொன்று வன்முறைக் கும்பலினால் நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் கொண்ட குழு ஆடையகத்தை சேதப்படுத்தி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதன் காரணமாக பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆடையகத்தில் சில வாரங்களுக்கு முன்பும் நுழைந்த வன்முறைக் கும்பல் தீ வைக்க முயன்று தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக பொறுப்பேற்றார் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.

கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை ஒழிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் சம்பிரதாயம் மற்றும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், அரச சேவையின் செயற்பாடு தொடர்பான பிரஜைகளின் அதிருப்தி போன்றன தாக்கம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

எனவே, வினைத்திறன் மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக மக்கள் நம்புவதாகவும், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரச கட்டமைப்பு முழுவதும் பரவியுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச ஊழியர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன் மற்றும் செயற்திறன் மிக்க அரச சேவையை உருவாக்க தற்போதைய அரச உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அரச சேவையில் இதுகாலவரை இடம்பெற்று வந்த அரசியல் பழிவாங்கல், இடமாற்றம், அரச சேவையில் பதவி உயர்வு வழங்காமை போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறாது என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களை திருப்திப்படுத்தும் வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

 

எதிர்வரும் நாற்பது நாட்கள் நிலைமாற்ற காலமாகும் எனவும், அந்த காலப்பகுதியில் அரச சேவையை வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு அரச உத்தியோகத்தர் பாடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி சூசகமாக தெரிவித்தார்.

 

முன்பிருந்த அரச தலைவர்கள், அரச அதிகாரிகளை ஊடகங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பியது போன்று தான் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

 

அரசு ஊழியரின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் உடனடியாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள்!

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று (2.10.2024) புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நாடு முழுவதும் மதுபானச் சர்ச்சை நிலவுகின்றது. இதனால் அந்தப் பட்டியலை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் சிபார்சு செய்து இந்த அதிகூடிய சாராயக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

அது தேர்தலுக்கு முன்பு தெரிய வந்தால்தான் அப்படியானவர்களை விலக்கி வைக்கலாம். இது ஒரு சமூக விரோதச் செயற்பாடு. நாட்டிலே மதுபோதை தொடர்பில் சமூக மட்டத்தில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது.

இளையவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்கின்றது. அப்படியான நிலையிலும் மதுபானசாலைகளை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள், இரகசியமாக ஈடுபட்டவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

அவர்களது பெயர்கள் தெரிய வேண்டும். இது மட்டுமன்றி பணத்துக்கு ஆதாயமாக்கியும் உள்ளனர் அதாவது அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் எட்டியுள்ளது.

ஆகையினால் அவர்கள் யார் என்பதை நாடறிய வெளிப்படுத்த வேண்டும் இதேநேரம் மக்கள் சேவைக்கு வருபவர்களுக்கு மிக அதிகமான சலுகைகள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஆகையினாலே இந்தச் சலுகைகளைக் குறைக்க எமது பூரண ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தனை சலுகைகள் தேவையற்றது.

அதிகமான சலுகைகளைக் குறைக்கின்றபோது நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர்களது பெயர்கள் தெரிய வேண்டும். இது மட்டுமன்றி பணத்துக்கு ஆதாயமாக்கியும் உள்ளனர் அதாவது அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் எட்டியுள்ளது.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்ஸூக்கு தடை விதித்தது இஸ்ரேல்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர்.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மௌனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை ஐ.நா பொதுச் செயலாளர் கண்டிக்காதமை இஸ்ரேலை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.