2024

2024

கட்சியில் அங்கத்துவம் இல்லாத பெண்கள் இருவரை சுமந்திரன் திட்டமிட்டு களமிறக்கியுள்ளார் – தமிழரசுக்கட்சி மகளிர் அணி குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியின்மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர்.

இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:-

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது. இந்தப் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார்.

ஆனால், 5 ஆம் திகதி பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றவர் மறுநாள் 6 ஆம் திகதி இரண்டு பெண்கள் விண்ணப்பித்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றார். உண்மையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களை மறைத்து யாரும் விண்ணப்பிக்கவில்லை எனச் சொன்னவர் திடீரென இருவர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றார்.

ஆகவே, எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார். இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை.

எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்குத் துதிபாடுபவர்களை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நிறுத்தியுள்ளார். ஆக முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்..?

ஆக மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் பொய் கூறுகிறார்.

வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும்.

 

இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடுபவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார்.

 

எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார். முன்னர் விண்ணப்பித்தவர்களைப் புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக்கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” – என்றார்.

 

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ரஜனி ஜெகப்பிரகாஷ், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஜங்கரன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி ஆகியோரும் பெண் வேட்பாளர் நியமனத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டனர்.

 

தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கின்றது என்றும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் – மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் – தேசிய மக்கள் சக்தி மக்களிடம் கோரிக்கை!

நாட்டில் கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் – மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் ஊழலுக்கு எதிரான அமைப்பிற்கு வழங்குமாறு குறித்த அமைப்பின் அமைப்பாளர் வசந்த சமரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொள்ளையர்களுடன் எவ்வித உறவையும் பேணாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

கடந்த மாதம் 23ஆம் திகதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 24ஆம் திகதி மிகச்சிறிய அமைச்சரவையை நியமித்து மக்கள் எதிர்பார்த்தவாறு நிதி முறைகேடுகள் செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார்.

 

புதிய அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொதுமக்கள் வழங்கும் தகவல்களும் மிகவும் முக்கியமானவையாகும். அந்தத் தகவல்களின் மூலம் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத வேலைகளைச் செய்த நபர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்பதை பொதுமக்கள் அவதானிக்க முடியும்.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமக்கு எதிராக சட்டத்தை விரைவில் அமுல்படுத்துமாறு கோரி வருவதாகவும், அவசரப்படாமல் ஆதாரங்களுடன் தகவல்களைப் பெற்ற பின்னரே இதனைச் செய்ய வேண்டுமென்பதனால் முறையாகச் செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை !

தனியார் பேருந்தொன்றில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

இது தொடர்பாக தெரியவருவதாவது

களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரின் கல்முனை – மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார்.

 

இந்நிலையில், அந்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துநர் மீது தனியார் பேருந்து உரிமையாளர் குற்றஞ்சாட்டி கடமையிலிருந்த இளைஞரை இன்று பகல் ஓந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

 

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து, பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

 

அதன் பின்னர், மரத்தில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

9/21: இலங்கையில் நிகழ்ந்த அரசியல் சுனாமி ! வீழ்ச்சியிலிருந்து ஆட்சியை நோக்கி …

செப்ரம்பர் 21, 2024 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சுனாமியை கண்டு மேற்குலகின் தலைநகர்களில் இருந்தவர்களின் புருவங்கள் உயர்ந்தன என்று சர்வதேச மற்றும் நோர்வே ராஜதந்திரியும் அரசியல்வாதியுமான எரிக்சோல்ஹைம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்தை எவ்வாறு கண்ணியமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை மேற்கு நாடுகள் இலங்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்தோடு நீண்டகாலத்திற்குப் பின் இலங்கையில் இனவாதத்திற்கு மதவாதவாதத்திற்கு தீவிரவாதத்திற்கு இடம்கொடுக்காமல் இத்தேர்தல் நடந்தது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகள் அண்மைய எதிர்காலத்தில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவிற்கு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்பதை எரிக் சொல்ஹைம் கோடிட்டுக்காட்டியுள்ளார். அமெரிக்க வல்லரசின் ஒரு மென்போக்கு முகமே நோர்வே ராஜதந்திரி எரிக் சொல்ஹைம். அவருடைய பதிவில் “தேர்தல் காலத்தில் ஏகேடி (அனுர குமார திஸ்ஸநாயக்க) இந்தியாவை சீனாவை மேற்குலகையும் தொடர்பில் வைத்திருந்தார்” என்பதையும் குறிப்பிட்டுள்ளார். “ஏகேடி ஒரு தலைவராக வெற்றி பெறவும், இலங்கை வளமான, அமைதியான, பசுமையான நாடாக வருவதற்கும் நாங்கள் உதவ வேண்டும்” என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டுள்ளார். 2001 செப்ரம்பர் 9/11 க்குப் பின்னாக இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிஸ்தவர், கொழும்புக்கும் வன்னிக்கும் டெல்லிக்கும் இடையே பறந்து திரிந்தவர் எரிக் சொல்ஹைம்.

சுதந்திர இலங்கையின் அரசியலில் 9/21 என்பது ஒரு அரசியல் சுனாமி என்றால் மிகையல்ல. ஆனால் இது எப்படி சாத்தியமானது ? என்பது, ஆறு சகாப்தங்களுக்கு மேலான ஒரு தவம்.

ஜேவிபி – ஜனத்தா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) அறுபதுக்களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இடதுசாரித்துவம் கொண்ட அரசியல் இயக்கம். விவசாய பூமியான இலங்கை பிரித்தானிய காலனித்துவவாதிகளால் கொள்ளையிடப்பட்டு, சுறையாடப்பட்டு, தன்னிறைவை இழந்து, வறிய நாடாக்கப்பட்டு, 1948இல் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானிய காலனித்துவ வாதிகளுக்கு விசுவாசமான அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமேட்டுக்குடி சிங்கள – தமிழ் அதிகார வர்க்கத்திடம் கை மாற்றப்பட்டது. இலங்கையின் கிராமம்புற விவசாயிகள் பெரும் கஸ்டத்தை அனுபவித்த காலகட்டம் அது. வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை உலுக்கிய காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் தான் ஜேவிபி கருக்கொண்டது. இது கியூபா புரட்சிக்குப் பின்னான காலகட்டம். கியூபாப் புரட்சியால் ஈர்க்கப்பட்டவர்களில் ரோகனவிஜயவீரவும் ஒருவர். கியூபாப் புரட்சியில் பிடல் கஸ்ரோவோடு தோளோடு தோள் நின்று போராடியவர் சே குவெரா. ஜேவிபியின் தலைவர் ரோகன விஜயவீர பொலிவியாவில் 1967இல் சிஐஏ – அமெரிக்க புலனாய்வுப் பிரிவு – சென்ரல் இன்ரலிஜன் ஏஜென்சி யினால் படுகொலை செய்யப்பட்ட சேகுவராவின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். அதனால் பிற்காலங்களில் இவ்வமைப்பு ‘சேகுவேரா’ என்றும் அறியப்பட்டிருந்தது.

1971 அன்று மார்ச் மாத முற்பகுதியில் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் நான் பிறந்திருந்த காலத்திலேயே அந்தப் புரட்சி வெடிக்கக் காத்திருந்தது. அனுராதபுரம் சிங்கள மக்களின் கலாச்சாரத் தலைநகரம். எமது குடும்பத்தின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் என்னுடைய அம்மப்பாவின் தந்தையின் தொழில்நிமித்தம் அன்றைய காலத்தில் எனது குடும்பமும் உறவுகளும் அனுராதபுரத்தில் வாழ்கின்றோம். எனது தந்தையார் ஈவிகே பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஒரு திராவிடன். அதனால் அவருக்கு ஜேவிபி மீதும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. ஆனால் ஒரு ஜேவிபி உறுப்பினராக ஆயதம் ஏந்த அவர் முன்செல்லவில்லை. ஆனால் அவர் ஜேவிபியை மனதார ஆதரித்தார். இந்தப் பின்னணியில் நான் பிறந்திருந்த அந்தச் சுழல், இலங்கை அரசைக் கைப்பற்றும் இராணுவத்திட்டம் ஒன்றுக்கு ஜேவிபி தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது.

‘சேகுவரா கலவரம்’ என்று பெரும்பாலும் அறியப்பட்ட ஜேவிபி இலங்கை அரசைக் கைப்பற்ற ஏப்ரல் 5, 1971இல் மேற்கொண்ட புரட்சிக்கு முன்னதாகவே அதன் தலைவர் ரோகன விஜயவீர உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இருந்தும் இலங்கையின் பல மாவட்டங்கிளிலும் இருந்தும் 100 வரையான பொலிஸ் நிலையங்கள் ஏப்ரல் 5 இரவு தாக்கப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மாறாக ஏப்ரல் 5 அதிகாலையிலேயே தவறான தகவலையடுத்து மொனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதால் ஏனைய பொலிஸ் நிலையங்கள் உசார் படுத்தப்பட்டது. ஒரு அதிர்ச்சியான தாக்குதலை தொடுக்க இருந்த ஜேவிபியால் அந்த அதிர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை. பல்வேறு களநிலைமைகள் காரணமாக ஒரு சில வாரங்களிலேயே புரட்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பலர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அரச இயந்திரம் கொடூரமான கரங்கள் கொண்டு, ஜேவிபி இல் இருந்தவர்களை மட்டுமல்ல அவர்களுடைய குடும்பங்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் எனப் பல நூறு, ஆயிரம் பேரை கொன்றொழித்தது. அந்தக் கொடூரக் கொலைகளின் அடையாளங்களில் ஒன்றுதான் கத்தரகம (கதிர்காமம்) புதவருட அழகுராணி பிரேமாவதி மன்னம்பேரியின் படுகொலை. 22 வயதேயான இவ்விளம்பெண்இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாணமாக தெருவால் இழுத்துவரப்பட்டு ஏப்ரல் 16, 1971 அன்று பல தடவை சுடப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டாள். யாழ் செம்மணியில் எரிக்கப்பட்ட கிருசாந்திக்கும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவுக்கும் இவள் அக்காவாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறான பல சம்பவங்கள் தெற்கிலும் அதன் பின் வடக்கிலும் இடம்பெற்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிங்கள – தமிழ் ஆளும் குழமங்கள் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் தங்கள் வாக்கு வங்கிகளைக் காப்பாற்ற அதிகாரத்தை சுவைக்க ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை கக்கி அந்த இனவாதத்திற்கு நெய்யூற்றி வளர்த்து வந்தனர். தமிழரசுக் கட்சியுடைய உண்மையான பெயர் சமத்துவக் கட்சி. தமிழ் மக்களை ஏமாற்றவும் உசுப்பேத்தவும் வைத்த பெயர்தான் தமிழரசுக் கட்சி;. 1970 தேர்தலில் இடதுசாரிகளின் கை ஓங்குவதை அவதானித்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் 1976இல் ஒன்றாகி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி இடதுசாரிகளை தோற்கடிக்க போட்ட திட்டம் தான் நாட்டைப் பிரிக்கின்ற தமிழீழ விடுதலைக் கோரிக்கை – வட்டுக்கோட்டைத் தீர்மானம். அப்புகாமியும், பொன்னையாவும், சலீம்பாயும் தெருவில் வயிற்றுப்புழைப்புக்காகச் சண்டைபிடிக்க ஜேஆர் மாத்தையாவும், பொன்னம்பலம் மாத்தையாவும் ஹக்கீம் மாத்தையாவும் தொண்டமான் மாத்தையாவும் கூடி விருந்துண்டு மகிழ்ந்திருந்தனர். இந்த முரண்பாடு அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் தொடர்கிறது.

1971 வீழ்ச்சியிலிருந்து ஜேவிபி படிப்படியாக தனது அரசியல் பண்புகளை மாற்றி அரசியல் களம் புகந்தது. ரோகன விஜயவீர உட்பட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய நிலைக்கு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி) தள்ளப்பட்டது. 1979இல் கொழும்பில் நடைபெற்ற மாநாகரசபைத் தேர்தலில் ஜேவிபி வெற்றி பெறாவிட்டாலும் ஏனைய இடதுசாரிகளைப் புறம்தள்ளி முன்னிலைக்கு வந்தது. 1981 இல் இடம்பெற் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஜேவிபி போட்டியிட்டு 13 ஆசனங்களைப் பெற்றது. 1982இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரோகண விஜயவீர போட்டியிட்டார். எனது தந்தையின் வாக்கும் அவருக்குச் சென்றது. 1982இல் அனுராதபுரத்திலிருந்த ‘கடதாய’ என்ற குறிச்சியிலிருந்த குவாட்டஸில் நான் எனது தந்தை சிறிய தந்தையின் வீட்டில் குடியிருந்தோம். வானொலியில் கேட்டு தேர்தல் முடிவுகளை கொப்பியில் எழுதிய ஞாபகங்கள் இன்னும் இருக்கின்றது. அப்போது இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியாக ஜேவிபி பரிமாணம் பெற்றது.

ஜேவிபி யின் வளர்ச்சியை அவதானித்த ஐக்கிய தேசியக் கட்சியின் (யுஎன்பி) அன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன, ஒரு நரித்தந்திரத்தை மேற்கொண்டார். தனது வாக்குவங்கியைப் பலப்படுத்த இனவாதத்தைத் தூண்டிவிட்டார். ஜேஆர் ஜெயவர்த்தனா 1977இல் ஆட்சிக்கு வந்ததுமே இனக்கலவரம் ஒன்றைத் தூண்டிவிட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி காடையர்கள் 1983இல் மற்றுமொரு இனக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டனர். அதனைச் சாதுரியமாக ஜேபிவி இன் தலையில் போட்டார் ஜேஆர் ஜெயவர்த்தன, ஜேவிபியை அரசியலில் இருந்து தடைசெய்தார்.

இந்த இடைவெளியில் ஜேவிபி மீண்டும் தலைமறைவாகியது. 1987 இலங்கை – இந்திய ஓப்பந்தம் உருவாகி இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு இராணுவமாக இலங்கைக்குள் நுழைந்தது. ஏற்கனவே இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய விசேட கற்கைகளைக் கொண்டிருந்த ஜேவிபி மீண்டும் ஆயதங்களை ஏந்தியது. இதில் உள்ள பெரும் முரண்நகை என்னவென்றால்: ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதியாக வந்த ரணசிங்க பிரேமதாஸ இந்திய எதிர்ப்பை முன்வைத்து, “இந்திய இராணுவத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவேன்” என்ற கோஸத்துடன் ஜனாதிபதியானவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் யுத்தத்தை ஆரம்பித்திருந்தனர். ஜேவிபி யும் இந்தியாவுக்கு எதிராக ஆயதம் ஏந்தினர். ஜனாதிபதி பிரேமதாஸா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தன்னுடைய சகோதரன் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். ஆனால் …

ஜனாதிபதி பிரேமதாஸாவின் மென்போக்கை சாதகமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு சார்பான நிலைப்பாட்டையே எப்போதும் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரியுஎல்எப்) தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரை யூலை 13, 1989 அன்று கொழும்பில் அவர்களுடைய இல்லத்தில் வைத்துப் படுகொலை செய்தனர். இப்படுகொலை நடைபெற்று 48 மணிநேரங்களுக்குள்ளாக யூலை 16, 1989 அன்று ஜேவிபி உடன் நெருக்கத்தைக் கொண்டிருந்த ஒரே தமிழ் அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரன், அவருடைய மெய்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அச்சம்பவம் நடைபெற்றது வெளி உலகத்திற்கு தெரியவருமுன்னரேயே தமிழகம் சென்று, இந்திய புலனாய்வுப் பிரிவான ரோவிடம் அடைக்கலம்பெற்றனர். அதற்கான ஏற்பாடுகளை ரோ முகவர் வெற்றிச்செல்வன் ஏற்படுத்தி இருந்தார். அப்போது நானும் அவர்களோடு இந்தியாவில் தங்கி இருந்தேன், வெளிநாடு வருவதற்காக. நவம்பர் 13, 1989இல் ஜேவிபி இன் தலைவர் ரோகண விஜயவீர இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தாலும் 1990க்களில் இந்திய இராணுவம் பெருத்த அவமானத்துடன் இந்தியாவுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. மே 21, 1991 இலங்கை – இந்திய ஓபந்தத்தை பலவந்தமாக அங்கீகரிக்க வற்புறுத்தியமைக்காகவும் இந்திய அமைதிப்படை தங்களைத் தாக்கியமைக்காகவும் முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். மே 1, 1993 இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாஸாவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். இவர்கள் எல்லோரையும் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் மே 18, 2009இல் இலங்கை அரசு படுகொலை செய்தது. இதன் பின்னணியில் இந்தியாவின் உளவுத்துறை செயற்பட்டதாக பலத்த குற்றச்சாட்டுகள் உண்டு. 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய தலைவர்கள் யாரும் இன்று உயிருடன் இல்லை. இவர்களில் ஜேஆர் ஜெயவர்த்தன மட்டுமே இயற்கை மரணத்தைத் தழுவினார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு முத்தரப்பு தோல்வி. அது தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சினைக்கான கேள்விக்கு எந்தத் தீர்வையும் தரவில்லை. அதனைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பமோ அல்லது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற விருப்பமோ இந்தியாவுக்கு இருக்கவில்லை. ஆனால் அதனை இலங்கை அரசை தனது நலன்சார்ந்து கட்டுப்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டாகவே இந்தியா தற்போதும் பயன்படுத்தி வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 முதல் 1993 வரையான தொடர்ச்சியான ஆட்சியில் இலங்கையில் இரத்த ஆறு ஓடியது. அது தெற்கிலே ஆரம்பித்து வடக்கு வரை வற்றாது ஓடியது. ஜனாதிபதி பிரேமதாஸ ஜேவிபி உறுப்பினர்களைப் படுகொலை செய்து சடலங்களை களனி ஆற்றில் மிதக்கவிட்டார். 1989 காலப்பகுதியில் 60,000 சிங்கள ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகின்றது. 1971 ஜேவிபி புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஆக இருந்தது. அதே போல் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அனைத்து தரப்பையும் சேர்த்து 5,000 பேராகவே மதிப்பிடப்பட்டது. (இந்திய – இராணுவத்துடனான மோதல் புள்ளிவிபரங்கள் இதனுடன் இணைக்கப்படவில்லை.)

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி மீதான வெறுப்பால் முதல் தடவையாக சிங்கள – தமிழ் மக்கள் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசான சந்திரிகா குமாரதுங்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தனர். இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்த ஒரு தலைவராக அவர் அன்று காணப்பட்டார் என்றால் மிகையல்ல. இவர் ஜேவிபி மீதும் மென் போக்கைக்காட்டினார். 1995இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜேவிபி ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. இதுவே ஜேவிபியின் முதல் பாராளுமன்ற ஆசனம். ஆனால் 2001இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி 16 ஆசனங்களை வென்றதோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கொள்கை முரண்பாடுகளால் இம்முன்னணி நீண்டாகாலம் நிலைக்கவில்லை. 2020இல் ஜேவிபி, என்பிபி – தேசிய மக்கள் சக்தி என்ற முன்னரங்க அமைப்பொன்றை நிறுவிப் போட்டியிட்டு மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

ஏழ தசாப்தங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் குழுமம் தங்களுடைய பொறுப்பற்ற ஆட்சிமுறைமையினால் நாட்டை மெது மெதுவாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக ஆளும் குழமங்களின் குடும்பங்களின் வளர்ச்சிக்கு இன, மத பேதமின்றி அப்பாவி மக்கள் பலிக்கடாவக்கப்பட்டனர். அவர்கள் நாளாந்த வாழ்வுக்கு கஸ்டத்தை அனுபவிக்க, சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையகத் தலைவர்கள் பொருளாதார சுபீட்சத்தை எட்டினர். இதனால் ஏற்பட்ட தார்மீகக் கோபம் ‘அறகலயா’ என்ற மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. ஆனால் இந்த மக்கள் எழுச்சியை மக்கள் தங்களுக்கு சார்பானதாக்க முதலே, மேற்குலகம் அந்த எழுச்சியை தனக்கு சாதகமாக்கியது. சீன சார்பான ராஜபக்ச குடும்ப ஆட்சியைக் கலைத்து மேற்குக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த விசுவாசமிக்க முகவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய நண்பருமான ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக்கப்பட்டார். மாறாக ‘அறகலயா’ போராட்டத்தை முன்னெடுத்தவர்களை விரட்டியடிக்க மேற்குலகம் முழு ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கொடுத்தது. மக்கள் மேலும் சினங்கொண்டனர். 2024 செப்ரம்பர் இலங்கை மக்களின் தீர்க்கமான நாளாக மாறியது. இந்த மாற்றத்தை தமிழ், முஸ்லீம், மலையகத் தலைமைகள் உணர்ந்தார்களோ இல்லையோ இந்தியா மிகத் தெளிவாக உணர்ந்திருந்ததை முன்னாள் இந்திய இராணுவத்தளபதி ஹரிகரன் இலங்கை வானொலிக்கு செப்ரம்பர் 28 வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ஜேவிபியின் வெற்றியைத் தடுப்பதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள வாக்குகள் ஜேவிபிக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய புலனாய்வுத்துறையின் செல்லப்பிள்ளையான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கொண்டுவந்த திட்டமே தமிழ் பொதுவேட்பாளர். கொழும்பில், யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் சட்டைப்பையில் இருக்கின்ற தமிழ் ஊடகங்கள், அதற்கு தமிழ்த் தேசிய மூலாம் பூசி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அரசியல் முகவரியற்ற பாக்கியசெல்வம் அரியநேந்திரனைக் களமிறக்கினர். அவரை வைத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜேவிபிக்கும் செல்லக்கூடிய வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு மடைவெட்டிவிடப்பட்டது. இதே பாணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு விழக்கூடிய வாக்குகளை தடுப்பதற்காக தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோரினர். அதற்காக மகிந்த ராஜபக்ச 200 கோடிகளை இலங்கை ரூபாய்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தனர். இது இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. 2006இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் என்ன நடந்தது என்பதை வரலாறு குறித்துக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் வீழ்ந்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்கள், மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில்; ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவின் மகன் சஜித் பிரேமதாசவும் அவரைத் தொடர்ந்து சுயேட்சையாகப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தின் அழைப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து இருந்தனர். வடக்கு கிழக்கில் உள்ள எந்தவொரு மாவட்டத்திலும் தமிழ் பொது வேட்பாளரான பாக்கியசெல்வம் அரியநேத்திரனால் முதலிடத்தைப் பெற முடியவில்லை. யாழ் மாவட்டத்தில் மட்டுமே அவரால் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. வன்னி மாவட்டத்தில் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் அவர் நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதுவே தமிழ் தேசியத்தின் காவலர் என்ற போர்வையில் களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு.

வாக்களிக்கப்பட்ட வீத்த்தை ஒப்பிடுகையிலும் சிங்களப் பகுதிகளுக்கு ஈடாக தமிழ் மக்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியத்தை முன்னெடுத்த கஜா அணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் அறிவிப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை தமிழ் மக்கள் ஓரம் கட்டியுள்ளனர் என அனந்தி சசிதரன் குறுஞ்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியம் பேசி தமிழ் பொதுவேட்பாளரை அறிவித்தவர்களையும் தமிழ் மக்கள் தோற்கடித்து மூன்றாம் நான்காம் நிலைக்குத் தள்ளி மண் கவ்வச் செய்துள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த இலங்கைத் தேர்தல் முடிவுகளில் பின்பற்றப்பட்ட போக்கு இத்தேர்தல் முடிவிலும் வெளிப்பட்டு இருப்பது கண்கூடு. 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்காவும் அதன் பின் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இரு தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் தமிழ் மக்களின் தெரிவுக்கு மாறாகவே சிங்கள மக்களின் ஜனாதிபதித் தெரிவு அமைந்துள்ளது.

இதுவரை ஆட்சி செய்து வந்த ஆட்சிக்குழுமத்திற்கு எதிரான போக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாட்டை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நகர்வை, மக்களை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கவனிக்கத் தவறியிருந்தன. இளையோர் சமூகம் ஊழலற்ற ஒரு ஆட்சியை, மாற்றமொன்றுக்காக வாக்களித்துள்ளனர். சுதந்திர இலங்கையில் இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இத்தேர்தலில் இனவாதம் மதவாதம் பின் தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தி. அதனால் அவர்கள் முதற்தடவையாக சிறுபான்மை மக்கள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கியை பல மடங்காக அதிகரித்துள்ளனர்.

இலங்கையின் தென்பகுதியைப் போல் வடக்கு, கிழக்கு மலையகத்திலும் மக்கள் அலையாகத் திரண்டு வந்து ஜேவிபியின் முன்னரங்க அமைப்பான என்பிபிக்கு வாக்களித்துள்ளனர். தென்பகுதியில் கடந்த காலங்களைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக மக்கள் ஜேவிபிக்கு வாக்குகளித்து இருந்தனர். ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் மக்கள் பதினைந்து மடங்கிலும் அதிகமாக ஜேவிபிக்கு வாக்களித்துள்ளனர். இலங்கையில் 2019இல் நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் இத்தேர்தலில் என்பிபி க்கு பதின்மூன்று மடங்கு வாக்குகள் கிடைத்திருந்தது. ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த தேர்தலைக்காட்டிலும் 20 மடங்கு அதிகமாக மக்கள் என்பிபிக்கு வாக்களித்துள்ளனர். இலங்கையிலேயே யாழ் மாவட்டத்தில் தான் என்பிபி கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் கூடுதல் மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. 2019 இல் என்பிபி பெற்ற வாக்குகள் 1,375. இத்தேர்தலில் என்பிபி பெற்ற வாக்குகள் 27,086 வாக்குகள். அது தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஜேவிபி மிதான அச்சம் நீங்கி தமிழ் மக்கள் ஜேவிபியை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றது. இந்த வாக்கு நகர்வு நவம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இதுவரை வடக்குக் கிழக்கில் ஒரு போதும் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறாத ஜேவிபி நவம்பர் 2024 பாராளுமன்றத் தேர்தலில் மூன்று முதல் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம். இப்பாராளுமன்றத் தேர்தல் போலித் தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவதாக அமையும்.

தமிழ் முஸ்லீம் கட்சிகள், தேசியம் பேசிய தமிழ் கட்சிகளும் கூட மக்களைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் கடந்த 2019 தேர்தலில் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைப் பெற்றதால் தங்களுடைய வழமையான புளித்துப்போன போர்மிளாவின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தனர். தற்போது மண் கவ்வியுள்ளனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை இழந்துள்ளனர். தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் மத்தியிலிருந்து அரசியல் புத்துணர்ச்சி கொண்ட இளைய தலைமுறை அரசியலுக்கு வந்து காலாவதியாகிப் போன இப்போதுள்ள தலைமைகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது மிக அவசியம்.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மாற்றத்தை நோக்கி நாட்டை நகர்த்த தயாராகி விட்டனர். ஏனைய சமூகங்களும் அந்தப் பாதையில் முன்னேறிச் செல்வதை இத்தேர்தல் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை. மாற்றங்கள் அவ்வளவு இலகுவில் வந்துவிடப் போவதுமில்லை. தேசிய மக்கள் சக்தியின் அடுத்துவரும் காலங்கள் கடுமையானதாகவும் சவாலானதாகவும் அமையும்.

நவம்பரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் என்பிபிக்கு வழங்கிய ஆணையை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் (113 ஆசனங்கள்) பெற்றுக்கொள்ளும் வகையில் தங்கள் வாக்குகளை வழங்க வேண்டும். என்பிபி பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்கும். ஆனால் அவர்களால் அறுதிப் பெரும்பான்மையை அதாவது மூன்றில் இரண்டு (150 ஆசனங்கள்)பெரும்பான்மையை தக்க வைக்க முடியும் என்பது இலங்கைத் தேர்தல் முறையில் மிகக் கடினமானது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் ஆணையைப் பெற்றாலேயே ஜேவிபி யால் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு வரும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாக ஜேவிபி தன்னுடைய பிரத்தியேக ஆட்சி முறையை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். பொருளாதாரத்தில் குறிப்பாக பொருட்களின் விலையில் வீழ்ச்சியயைக் காட்ட வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கும் மற்றும் மேற்குலகுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் பணியாமலும் எகிறாமலும் உறவைத் தக்கவைத்து காய்களை நகர்த்த வேண்டும். இவற்றைச் சாத்தியமாக்குவதற்கு மக்கள் ஜேவிபியின் பின்னால் நின்றால் மட்டுமே சாத்தியம். என்பிபியைப் பொறுத்தவரை ஜனாதிபதிப் பதவியையும் பாராளுமன்றத்தையும் கைப்பற்றுவது இலகு. ஆனால் அவற்றைத் தக்க வைக்க மக்களுடைய பரந்துபட்ட எதிர்பார்ப்புக்கு தீர்வுகளை வழங்குவது மிகச்சிக்கலானதும் கடினமானதும் ஆகும். இலங்கையில் அடிப்படை அரசியல், பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த என்பிபிக்கு இரண்டு பாராளுமன்றக் காலம் அவசியமானது. அதிகாரத்தின் சுவை என்பிபியை மாற்றுகின்றதா இல்லை என்பிபி நாட்டின் அரசியல் பொருளாதார கட்டமைப்பை மாற்றுவார்களா என்பதை அடுத்து வரும் மாதங்கள் வெளிப்படுத்தும்.

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. – செல்வம் அடைக்கலநாதன்

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளோம்.

தென்பகுதி மக்கள் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழலுக்கு எதிராக ஜே.வி.பி கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தற்போது அது எங்களிடமும் பரவியுள்ளது.

ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஜே.வி.பி. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

அந்த வகையில் எமது இன பிரச்சினையாக இருக்கலாம்,எமது நிலங்கள் அபகரிக்க படுகின்ற விடையங்களாக இருக்கலாம். கடந்த காலங்களில் அனுபவித்த துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத எமது தேசத்தை அனுபவிக்கின்ற நிலைப்பாடுகளை இந்த ஜே.வி.பி அரசாங்கம் நிறுத்துமா? என்கிற கேள்வி இருக்கிறது என தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தல் – வேட்பாளர்களின் சொத்து மதிப்புக்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல்செய்யும் அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் வரையிலான தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

தேசியப்பட்டியல் வேட்பாளர்களும் தமது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

தமது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்கத் தவறுகின்றமை தண்டனைக்குரிய குற்றமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு !

2024 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு, மருத்துவத்திற்கு பெருமை சேர்த்த இரு விஞ்ஞானிகளான விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக சுவீடனின் கரோலின்ஸ்கா பயிற்சி மையத்திலிருந்து இன்று அறிவிக்கப்பட்டது.

விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு அணி என செயற்படுபவர் தான் சுமந்திரன். – கே.வி. தவராசா குற்றச்சாட்டு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதன் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

கட்சியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டுள்ள தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது.

தமிழ்த் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்டுவதற்கான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய மேலதிக பேட்டி ஒன்றில் இரா.சம்பந்தன்  மற்றும் மாவை சேனாதிராஜா  ஆகியோரின் ஆளுமையின்மையின் வெளிப்பாடு தான் இன்றைய சுமந்திரனுடைய ஆட்டத்திற்கு காரணம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா  தெரிவித்தார்.

தலைமைத்துவத்தை சரியாக கையாளாமல் விட்டமையினால் இன்று தமிழரசுக்கட்சி தனியொருவரினுடைய கம்பனியாக மாறிவிட்டது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சுமந்திரனுக்கும் எனக்கும் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் நான் தமிழரசுக் கட்சியினுள் வந்துவிடக் கூடாது என்பதிலும் நாடாளுமன்றத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் சுமந்திரன் விசேடமாக அக்கறையாக உள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு அணி என செயற்படுபவர் தான் சுமந்திரன். அவருக்கு என்ன தேவையோ அந்த நேரத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உலகமே அறிந்ததாகும்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களுக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழரசுக் கட்சி இவ்வாறு செயற்படுமாக இருந்தால் அதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேணடுமென தெரியும்.“ என தெரிவித்தார்.

அனைத்து சிறு வழக்குகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்க உத்தரவு !

பொதுமக்களால் முன்வைக்கப்படும் நிலுவையில் உள்ள அனைத்து சிறு புகார்கள் குறித்தும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார் மாவை சேனாதிராஜா !

தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா , தான் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்கி உள்ளதாகவும் உறுப்புரிமையில் மாத்திரம் தமிழரசுக் கட்சியில் இருப்பேன் எனவும் தெரிவித்ததோடு கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்திய கலாநிதி சத்தியலிங்கத்திடள் இது தொடர்பில் கேட்டபோது, எனக்கு எவ்விதமான கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.