2024

2024

அரசுக்கு சொந்தமான பணத்தை கிறீஸ் நாட்டில் முதலீடு செய்தமைக்கு எதிராக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

 

2012 ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, ​​இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகளில் ஒருவரை 10 மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தமிழ்பாட ஆசிரியருக்கு லண்டனில் 11 ஆண்டுகள் சிறை !

பிரித்தானியாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்ற 8 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் குறொய்டன் பகுதியை சேர்ந்த 51 வயதான ஜேக்கப் தனுகரன் எனும் நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தனியார் வகுப்பு தமிழ்பாட ஆசிரியராகவும் தபாலக முகாமையாளராகவும் செயற்பட்டுள்ளார்.

2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இவரால் பல மாணவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படட்மைக்கான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு குறொய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அங்கு அவர் 8 வயது முதல் 4 வயதுக்குட்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமைகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் தனிப்பட்ட பயிற்சிக்காக அவரது வீட்டிற்குச் சென்றபோது தனுஹரனால் பாலியல் ரீதியாக தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறோய்டனை ஐ உள்ளடக்கிய பொதுப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சார்ஜென்ட் விக்கி தாம்சன் இது தொடர்பில் கூறிய போது “பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறைக்கு வந்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததன் மூலம் அதீத துணிச்சலைக் காட்டியுள்ளனர். அவர்களின் தைரியத்திற்கு நன்றி.  அதேவேளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எவரையும் நாங்கள் முன் வந்து காவல்துறையிடம் பேச ஊக்குவிப்போம். எவ்வளவு நேரம் கடந்தாலும், எங்கள் சிறப்பு அதிகாரிகளால் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள் – ஆதரிக்கப்படுவீர்கள். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார்.

கடந்த திங்கட்கிழமை(07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில்(ICU) சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர்(09) உயிரிழந்துள்ளார்.

கடந்த 1991ஆம் ஆண்டு மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றதுடன் அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார், லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதன்போது, ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனது பணிவு, இரக்கம், மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அற்ப்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா. அருடைய இழப்பு பேரிழப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் மோட்டார் வாகன துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி !

ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் கட்சி இன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 

கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிட உள்ளது.

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், உட்பட பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்சியில் இணைய உள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் – லெபனானில் பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

 

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27ஆம் திகதி தாக்குதல் நடத்தி கொன்றது. அடுத்தடுத்து பல தலைவர்களையும் படுகொலை செய்துள்ளது.

 

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், லெபனான் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் நாசர் யாசின் கூறும்போது, லெபனானில் கடந்த 24 மணிநேரத்தில், இஸ்ரேல் 137 வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது பதிவாகி உள்ளது. இதுவரை மொத்தம் 9,400 தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

புலம்பெயர்பவர்களை தங்க வைப்பதற்காக 990 மையங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் 781 மையங்களில், அதிகபட்ச அளவிலான மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

 

கடந்த 24 மணிநேரத்தில், லெபனானில் 36 பேர் உயிரிழந்து உள்ளனர். 150 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால், லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் இதுவரை நடத்திய வான்வழி தாக்குதலில் மொத்தம் 2,119 பேர் பலியாகி உள்ளனர். 10,019 பேர் காயம் அடைந்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு வழங்கிய ஆணையை மீறி செயல்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

 

தமிழரசு கட்சியை மற்றும் சுமந்திரன் செயல்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

 

தேர்தல் காலங்களில் தமிழரசு கட்சி சமஸ்டி, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, ஒற்றை ஆட்சியை எதிர்க்கிறோம் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் முன்வைத்து வாக்குகளை பெறுகிறார்கள்.

 

தேர்தலில் வென்ற பின்னர் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து தமது இருப்புக்களையும் சுயலாப அரசியலையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் தமிழரசு கட்சியை ஈடுபட்டு வருகிறது.

 

அண்மையில் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், ஜனாதிபதி அனுரவை சந்தித்து மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு கோருகிறார்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரவை முதன் முதலில் சந்திக்க சென்ற சுமந்திரன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அனுரவுடன் பேசாமல் மதுபான அனுமதிப்பத்திர பெயர்களை வெளியிடுமாறு கேட்கிறார்.

 

பெயர் பட்டியல் வெளியிடுவதை வேண்டாம் என நாங்கள் கூறவில்லை சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் தனக்கு வேண்டாதவர்களை அப்புறப்படுத்துவதற்கும் தனது இருப்பை தக்க வைப்பதற்கும் மதுபான அனுமதி பத்திரங்களை வெளியிடுமாறு கேட்பதாக நான் கருதுகிறேன்.

 

ஏனெனில் தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகங்களை செய்த ஜே.வி.பி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு அரசியல் நீதியாக ஆதரவு வழங்கிய கட்சிகளில் பிரதானமான கட்சியாக ஜே.வி.பி விளங்கியது.

சமாதான ஒப்பந்த காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் சென்று பிரித்தவர்களும் ஜே.வி.பியினர் தான்.

 

அதுமட்டுமல்லாது அரசியல் அமைப்புத் தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இராணுவத்தை தண்டிக்க விடமாட்டேன் என கூறும் ஜனாதிபதியாக அனுர காணப்படுகிறார்

 

இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகங்களை இழைத்த கட்சியைச் சார்ந்தவரிடம் தமிழரசு கட்சி சுமந்திரன் சந்திக்க சென்ற போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்க வேண்டும் அதுவே வாக்களித்த மக்களுக்கு தமிழரசு கட்சி செய்ய வேண்டிய கடமை அதை சுமந்திரன் செய்யவில்லை.

 

அது மட்டும் அல்ல. தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரவை சந்தித்தமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பொது வழியில் பேசப்படுவருகிறது.

 

ஆகவே தமிழரசு கட்சியும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையிலிருந்து விலகி தமது சொந்த சுயநல அரசியலுக்காக செயற்பாட்டுவரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பிரயோசனப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் ஆரம்பம்!

நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் இடம் பெறவுள்ள நிலையில் தடய பொருட்களை பிரித்தெடுத்தல், புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் செய்தல், அகழ்வு செய்யும் பணிகள் முதற்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.

 

மன்னார் சதொச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள் புதன்கிழமை (9) இடம்பெற்றன.

 

இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கேன் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்க, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாகவே சதொச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடையங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 

என்ற போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளையோ கணொளியோ புகைப்படமே எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தாக்கல் !

நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன .

 

இந்த பட்டியலில் யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் வி. மணிவண்ணன், தவச்செல்வம் சிற்பரன் ( கட்டிடக் ட கலைஞர், தமிழ் மக்கள் கூட்டணி சிரேஷ்ட உறுப்பினர்), மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் (தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் முன்னாள் உப தலைவர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி), வரதராஜா பார்த்தீபன் (யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மற்றும் யாழ் எயிட் தொண்டுநிறுவன சிரேஷ்ட தலைவர்), நாவலன் கோகிலவாணி ( முன்னாள் போராளி, நிர்வாக இயக்குநர் , தொழில்முனைஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்), அருள்பரன் உமாகரன் ( சட்டத்தரணி, கவிஞர் மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்), பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன்( யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி ), முருகானந்தம் யசிந்தன் (பிராந்திய இயக்குநர் , ஆர். பி. கொ நிறுவனம்), கதிரேசன் சஜீதரன் (யாழ் பல்கலைக்கழக பட்டதாரி, கோண்டாவில் இந்துக்கல்லூரி ஆசிரியர்) ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவுசெய்யப்பட்ட மான் சின்னத்தில் இவர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.

 

அரசியலில் இளையோருக்கு இடமளிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் ஆனால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாகவும் கட்சித் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை !

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ஆம் திகதி உத்தரவிட்டது.

 

இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

 

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.