2024

2024

கண்டியில் பாடசாலைக்கு முன்னாள் அமைச்சர் ஹெகலியவின் பெயர் – மாகாண கல்வி அமைச்சு விடுத்த உத்தரவு!

கண்டி  – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை  பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை மாற்ற மத்திய மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலையை பெயர் மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு நேற்றைய தினம் (16.10.2024) ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோன் அனுமதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, இக்கல்லூரிக்கு குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என பெயரிடுவதற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சீ ஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்தவர் பதவிப்பிரமாணம்!

சீ ஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அரச சபையில் நேற்று (16) அவர் சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக சீ ஷெல்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக அவர் பிஜியில் சட்டத்தரணியாகவும், மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தராகவும் தகுதி பெற்றுள்ளார்.
சீ ஷெல்ஸின் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, வின்சென்ட் பெரேரா, சீ ஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

பகிரங்கமாக வெளியிடுவதாக இருந்தால் என்னிடமுள்ள ஈஸ்டர் அறிக்கையை வழங்க தயார் – உதய கம்மன்பில

அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத தன்னிடமுள்ள இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

என்னிடமுள்ள அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஜனாதிபதியோ அமைச்சரவை பேச்சாளரோ நான் வழங்கும் அறிக்கைகளை வெளியிடுவோம் என உறுதியளிக்கும் வரை நான் அரசாங்கத்திடம் அவற்றை கையளிக்க தயாரில்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

நான் வேண்டுகோள் விடுத்தபடி ஏழுநாட்களிற்குள் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால், நான் அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

காசா மீது தொடரும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் – உணவு, குடிநீர் இன்றி இறக்கும் நிலையில் நான்கு லட்சம் பாலஸ்தீனியர்கள்!

இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசா வில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இதனால் அதிக மக்கள் உயிர்ப் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள் ளது என ஐரோப்பிய – மத்திய தரைக் கடல் மனித உரிமை கள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் சுமார் 2, 00,000 பாலஸ்தீனர்கள் பத்து நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தூக்கி எறிந்தது போல என்னையும் தூக்கி எறிந்து விடாதீர்கள்- ஜீவன் தொண்டமான்

நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணிலை மக்கள் தூக்கி எறிந்தவாறு தம்மை மக்கள் தூக்கி எரியாமல் இருந்தால் சரி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகளை வழங்கிய புதிய ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் (16) நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், “பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் 1350 ரூபாய் அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவை அதிகரிக்குமாறு சம்பள நிர்ணய சபையில் நாங்கள் கோரிக்கையை முன்வைத்த போது அதனை நிராகரித்தது தற்போதய ஜனாதிபதியுடைய கட்சியான தேசிய மக்கள் சக்தி.

விமர்சனங்கள் பல இருந்தாலும் நான்கு வருடகாலமாக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன் அதேபோல் மக்களின் பிரச்சினைகளுக்கு களத்தில் இறங்கி நான் குரல் கொடுத்திருக்கின்றேன் எந்த இடத்திலும் நான் ஓடி ஒழியவில்லை நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 30 சுயாதின கட்சிகள் உருவாகியுள்ளன.

 

எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் பிரதி நிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற பட்டியலை எடுத்து நோக்கினால் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் நான் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராமகிருஷ்ணன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராமேஸ்வரன் உதயகுமார் போன்ற அநேகமான பெயர்கள் காணப்படும்.

 

ஆனால் தற்போது ரவிந்திரன் என்பவருடைய பெயரும் காணப்படும் அவர் தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வேட்பாளர் அவர் யார் புரொடொப் தோட்டபகுதியில் முகாமையாளராக இருந்து மக்களை தாக்கி தொழிற்சாலையில் அடைத்து வைத்திருந்தவர்.

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தான் சென்று அம் மக்களை விடுவித்தோம் அவர் போன்ற ஒருவருக்காக மலையகத்தில் சிலர் கொடியினை உயர்த்தி கொண்டு ஆதரவு வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

தனக்கு கிடைத்த வளங்களை வைத்து மாத்திரம் வேலை செய்ய முடியுமே தவிர வளங்களை உருவாக்க முடியாது நாடு வங்குரோத்து அடைந்த போது கூட மலையகத்தை பொறுத்தவரையில் இரண்டு சம்பள உயர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

 

ஆரம்பகாலம் முதல் நான் சொல்லி வருவது எம்மிடம் இருப்பது 10000ம் வீடுகள் ஆனால் 10000ம் வீடுகளை வைத்து ஆறு அரசியல்வாதிகள் ஒன்றறை இலட்சம் பேரை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்குகளுக்காக ஒரு தவறான வதந்திகளை பரப்பாது கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் அமைக்கும் போது அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சிகளும் இல்லாமல் போயுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார தரப்பினரும் கடந்த காலங்களில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொண்டார்களா..? – கீதநாத் காசிலிங்கம் குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சி காலத்தில் ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(16) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கீதநாத் காசிலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “ கடந்த ஆட்சி காலத்தில் பெறப்பட்ட மதுபான சாலைகள் தொடர்பான விபரங்களை அநுர குமார திஸாநாயக்க வெளியிடுவேன் என தெரிவித்தார்.

 

தற்போது சில வாரங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பை நடத்திய அக்கட்சியின் பிரமுகர் வசந்த சமரசிங்க மதுபான சாலைகளை பெற்றவர்கள் மற்றும் சிபாரிசு செய்தவர்களின் விபரங்களை வெளியிடப்போவதாக கூறினார்.

ஆனால் மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை அந்த பட்டியல் வெளியிடப்படவில்லை.

 

இதன்மூலம் ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நான் மகிந்த ராஜபக்சவுடன் 15 வருடங்களாக இணைந்து வேலை செய்கிறேன். இதுவரை மதுபான சாலை அனுமதிப்பத்திரமோ, மதுபான போத்தலையோ நானும் பெற்றதில்லை. எவருக்கும் பெற்றுக்கொடுத்ததில்லை.

தான் மதுபான சாலை அனுமதிப்பத்திரத்தை பெறவில்லை என தெரிவித்து சத்தியக்கடதாசியை தயாரித்து ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

 

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை வெளிப்படுத்த வேண்டும்”என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் !

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்

 

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கூறும் போதே பிரதமர் அலுவலகத்தில் கியூபா தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார்

 

இதேவேளை இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான ஏறக்குறைய 65 வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்துதல், கியூபாவின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுத்தப்பட்ட நுளம்பு ஒழிப்பு திட்டங்களை மீள ஆரம்பித்தல், இலங்கையில் உள்ள பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ மற்றும் விளையாட்டு கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது

 

மேலும் கடந்த சில வருடங்களில் கியூபா பொருளாதார ரீதியாக சவால்களை எதிர்கொண்ட போதிலும், கியூபாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர் , கியூபா பிரதமருக்கு இலங்கை விஜயம் செய்ய உத்தியோகபூர்வ அழைப்பையும் விடுத்திருந்தார் .

 

இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் கியூபா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியை பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை. “- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவித்துவமான மொழி நடையில் வரலாற்றுடன் தொடர்புப்படுத்தி எழுதியமைக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தென்கொரியாவைச் சேர்ந்த முதல் பெண் எழுத்தாளர் நோபல் பரிசு பெறுவதால், அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் தனது பேஸ்புக் பக்கத்தில், “நமது நவீன வரலாற்றின் வலிமிகுந்த காயங்களைக் கடந்து ஒரு சிறந்த இலக்கியப் படைப்பை உருவாக்கியுள்ளது. இது கொரிய இலக்கிய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தேசிய கொண்டாட்டத்திற்கான காரணம்” எனப் பதிவிட்டுள்ளார்.

”ஹான் காங் ஒரு சிறந்த நாவலாசிரியர் ஆவார். இந்த உலகளாவிய அங்கீகாரத்திற்கு அவர் மிகவும் தகுதியானவர்” என பச்சிங்கோவின் கொரிய-அமெரிக்க எழுத்தாளர் மின் ஜின் லீயும், “ஒரு கொரிய நாவலாசிரியர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்றால், அது ஹான் காங்காக இருக்க வேண்டும்” என்று தென்கொரிய எழுத்தாளர் சுங்-இல் கிம்மும் “கொரியாவின் கடந்தகால வரலாற்றை மறைக்கவும் சிதைக்கவும் முயற்சிக்கும் முட்டாள்தனத்தை இந்தப் பரிசு வென்றுள்ளது” தென் கொரிய எழுத்தாளர் கிம் போ-யங்கும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள தென் கொரிய எழுத்தாளரான ஹான் காங், இதுகுறித்த சந்தோஷத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர், தனது தந்தையிடம் சில கருத்துகளைக் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதன்படி ஹான் காங்கின் தந்தையும் எழுத்தாளருமான ஹான் சியுங்-வோன், “ ‘போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் அல்லது செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?’ என என் மகள் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

உக்ரைன் மற்றும் காஸாவில் நடைபெற்று வரும் போர், தன் மகளைத் தொந்தரவு செய்துள்ளது. ’உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியை பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை. நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் தொலைவில் இருந்தாலும் அதற்கான நமது பொறுப்புகளை நாம் கைவிட முடியாது’ என தன் மகள் தன்னிடம் தெரிவித்தார்.

 

வெகுஜன மனிதர்கள், துயரத்தில் இருக்கும்போது ஓர் எழுத்தாளராக தனக்கு தார்மீக பொறுப்பு இருப்பதாக அவள் உணர்கிறாள். ஆரம்பத்தில் இதைக் கொண்டாடுவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் ஒரே இரவில் தன் மனதை மாற்றிக் கொண்டார்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் இணையதள மோசடி குழுக்களின் எண்ணிக்கை !

இலங்கையில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் இணையதள மோசடி குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

 

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,”நாங்கள் இங்கே ஒரு தனித்துவமான சூழ்நிலையை அனுபவித்தோம்.ஸ்கேனிங் முகாம். இவை முகாம்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது இலங்கைக்கு ஒரு புதிய போக்கு. 2024ஆம் ஆண்டு தான் இந்த முகாமின் நிலை தெரியவந்தது. இந்த முகாமில் என்ன நடக்கிறது என்றால், அவர்கள் ஒரு தனி இடத்தை தேர்வு செய்கிறார்கள், அவர்களுக்கு அறை வசதியுடன் கூடிய விசாலமான இடம் தேவை. இவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை. இலங்கையர்கள் மியான்மரில் சிக்கியுள்ளனர் என்றால் அதே நிலைதான் இங்கும் நிலவுகிறது” என்றார்.

 

இணையவழி மோசடி தொடர்பில் சுமார் 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், 500 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 300 கணினிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இணையவழி மோசடியை மேற்கொள்ளும் நபர்களுக்காக இடங்களை வழங்குபவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் விஜித ஹேரத்

நாட்டில் பாரியளவில் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர். விரைவில் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர்.

 

இவ்வாறு செலுத்தப்படாமல் இருக்கும் பாரிய தொகையைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விரைவில் அதனை செய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம்.

 

இந்த விவகாரத்தில் நபர்கள் தொடர்பான தராதரம் இன்றி நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அது முறையான வழிமுறைக்கமைய முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வற் வரியில் மோசடி செய்தமைக்காக பிரபல வர்த்தகர் அர்ஜூன் அலோசியஸூக்கு 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.