2024

2024

இலங்கைக்கு சீனாவிடமிருந்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் !

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது.

அந்த நிதி உதவிக்கு மேலதிகமாக இந்த உதவியும் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிடுகிறது.

இனிமேல் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்றியமைக்கும் அமைச்சரவையும் அரசாங்கமும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் உருவாக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றாடம் தீர்வுகளை வழங்குவதற்கு மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர்களை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

மக்களிடம் இருந்து தொலைவில் உள்ள தலைவர்கள் அல்ல. வாக்குகளை பெற்று கொழும்பில் இருக்கும் தலைவர்கள் அல்ல.

அதனால்தான் எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் இல்லை. அரசாங்கம் தரப்போவதும் இல்லை.

கிராமத்திற்கு வாருங்கள், கிராமத்தின் பிரச்சனைகளைப் பாருங்கள். மக்களைத் திரட்டி இந்தப் பணியைச் செய்யுங்கள்.

இலங்கையில் இவ்வாறான அரசாங்கங்கள் உருவாகவில்லை. கிராமப்புற வறுமையை ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தி அரசின் தலையாய பணியாகும் என்றார்.

அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்று உத்தரவு! அர்ச்சுனா எஸ்கேப். கௌசல்யா தடுமாற்றம்! : நட்சத்திரன் செவ்விந்தியன்

 

Dr. அர்ச்சுனா கௌசல்யா உறவு ஒரு தொழில்நெறி ஆய்வு

Dr. அர்ச்சுனாவின் குறளிவித்தைகளும் கூத்துக்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக விரிகிறதே தவிர குறையவில்லை. இவ்வாரத்தில் அர்ச்சுனாவின் சட்டத்தரணி கௌசல்யாவின் காதலனும் அர்ச்சானாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் வலைத்தளங்களில் வெளியாகி பெரிய பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

தொழில்முறையில் சட்டத்தரணி கௌசல்யாவின் வாடிக்கையாளர்(Client) Dr. அர்ச்சுனா. வலைத்தளங்களில் வெளியாகிய உரையாடல்களில் கௌசல்யாவின் காதலன் அவளை விட்டு தன்னால் வாழமுடியாது என்று அழுகிறான். அர்ச்சுனாவோ அவள் இப்போ இரவிலும் என்னோடுதான் இருக்கிறாள். அவளை தான் கல்யாணம் கட்ட தயார் என்கிறார். மேலும் மிக அநாகரீகமாக உன் விதைகளை கவனமாகப் பாதுகார் இல்லாவிடில் நான் உன் விதைகளை பைற் ஆக்கி சாப்பிடுவேன் என்கிறார். தான் நரமாமிசி என்று மிக அசிங்கமாக அறிவிக்கிறார்.

கௌசல்யா இந்த தொலைபேசி உரையாடல்கள் பற்றி எக்கருத்தும் சொல்லவில்லை. இன்று அர்ச்சுனா மன்னார் நீதிமன்றில் ஆஜராகாமல் விட்டபின் அவரை கைது செய்ய நீதிமன்று உத்தரவிட்பின் மட்டும் ஒரு முகநூல் பதிவு போட்டார். சில நிமிடங்களிலேயே அதனை அழித்து விட்டு இன்னொரு பதிவு போட்டார். அப்பதிவிலும் அர்ச்சுனா அவரைத் திருமணம் செய்யத் தயாராக இருக்கிறார் என்பது பற்றிய போட்ட றெக்காடிங் பற்றி எதுவுமே சொல்லவில்லை. கௌசல்யாவின் மௌனம் மூலம் அர்ச்சுனாவோடு உறவிலிருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ளமுடியும். அர்ச்சுனா கௌசல்யாவின் காதலனுடன் மிகக்குருரமாக உரையாடியதும் இதற்கான ஆதாரங்கள்.

பழமைவாத ஒழுக்கவாத அடிப்படையில் இங்கு உரையாடவில்லை. கௌசல்யாவோ அர்ச்சுனாவோ தங்களது காதலர்களை தெரிவுசெய்ய உரித்துடையவர்கள். இங்கு நமக்கு உதைக்கும் விடையம் காதலர்/உறவு தெரிவில் தொழில்நெறிகள் மீறப்படக்கூடாது என்பதே.

ஒரு சட்டத்தரணியாக தன்னுடைய வாடிக்கையாளரோடு தனிமனித உறவில் ஈடுபட்டால் அது அவரது தொழில் வல்லமையைப் பாதிக்கும். அதேபோல ஒரு வேட்பாளர்/அரசியல்வாதி தன் சட்டத்தரணியோடு உறவிலீடுபட்டால் அவரது தொழில் வல்லமையை பாதிக்கும். தரந்தாழும்.

ஆரம்பத்தில் அர்ச்சுனா மருத்துவர்களுக்கெதிரான போராட்டத்தை ஆரம்பித்தபோது உண்மையில் மருத்துவத்துறையில் பாரிய பிரச்சனைகள் இருந்ததால் மக்கள் அவரை நம்பினார்கள். காலப்போக்கில் அர்ச்சுனா ஒரு உண்மையான கலகக்காரன்(Whistleblower) அல்ல. தனிப்பட்ட காரணங்களுக்காக தனது தனிப்பட்ட எதிரிகளை பழிவாங்க சந்தர்ப்பங்களை சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்ட போலி ஆசாமி என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள். அர்ச்சுனா ஒரு புத்தி சுவாதீனமுடைய மனுசன் அல்ல என்பதும் வெளிப்பட்டது. மோசமான தன்மோக – நாசிசிஸ்ரிக் குறைபாடுடைய ஒருவன் என்பது அவனது நடவடிக்கைகளால் வெளியானது. அர்ச்சுனா வைத்த குற்றச்சாட்டுக்கள் எதற்கும்,அவனிடம் ஆதாரமில்லை என்பது உறுதியானது.

சமூக வலைத்தளங்களில் அநியாயமாகக் கிடைத்த ஆதரவால் தலைகெட்டு ஆடினான். குறைந்த பட்ச தொழில் தர்மத்தோடும் அவனுக்கு உதவவந்த அனைத்து அனைத்து அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், மக்கள், சமூக ஆர்வலர்கள் முதலிய அனைவரையும் புறக்கணித்து தறிகெட்டு ஆடினான்.அவர்களை தனது எதிரியாக்கினான். தன்மோகம் – நாசிசிசம் ஒரு பொல்லாத மனநோய். அது உண்மையிலேயே அதுவாக இருப்பதாக நம்பவைக்கும் பிரமை. இவன் யாழில் ஒரு ஆசனமே வெல்ல வக்கில்லாதவன். ஆனால் ஆறு ஆசனங்களையும் தன் ஊசிக்கட்சிதான் வெல்லும் என்பது வெறும் அடிச்சுவிட்டது அல்ல.

உண்மையிலேயே நோய்காரணமாக நம்பினான். அதுவாக இருப்பதாக நம்பவைக்கும் பிரமை.
அர்சுனாவின் கோளாறு அறிந்து அவனுக்கு உதவ வந்தவர்கள் அனைவருமே அவனைவிட்டு விலகினார்கள். இவன் அவர்களை விலக்கினான். அந்த மன்னார் சம்பவத்தோடு அர்ச்சுனா தேறியிருந்தால் கரை கண்டிருப்பான். அங்கு ஒரு வழக்கறிஞர் குழுவே அவனுக்காக வாதாடியது. மன்னார் விளையாட்டுத்திடலில் விழா எடுத்து அவனை கீரோ ஆக்கியது. அக்கணத்திலிருந்து அவன் அமைதி காத்திருந்தால் இன்று JVP தம் கட்சி சார்பில் அவனை முதன்மை வேட்பாளராக்கியிருக்கும். விதி யாரை விட்டது. அர்ச்சுனாவின் உளக்கோளாறு – நாசிசிசம் தான் அவன் முதல் எதிரி.

பிறகு மன்னாரில் எந்த வழக்கறிஞர்/சட்டத்தரணியுமே அவனுக்காக வாதாட வரவில்லை. அவனே தன் முகநூலில் அழுது தானே தனக்காக வாதாடப்போகிறேன் என்று பதிவிட்டான். அக்கணத்தில் இவனுக்காக வாதாட வந்த மன்னார் சட்டத்தரணிதான் கௌசல்யா நரேன்.

இந்த இடத்தில்,யார் இந்த கௌசல்யா நரேன். இவரது தொழில்நெறி தர்மம் என்ன? Professional Ethics, வல்லமை என்ன என்பன ஆராயப்படவேண்டியது. இவன் அர்ச்னாவுக்கு இலவசமாக வாதாடவே யாரும் வராதபோது இவனது சுயேட்சை கட்சியில் போட்டியிட யாராவது வருவார்களா? கிடைத்த “தங்கம்” கௌசல்யாவை தனக்கு அடுத்த வேட்பாளராக்கினான் அர்ச்சுனா. இந்த இடத்தில் தொழில் நெறிக்கும் தனிப்பட்ட வாழ்வுக்குமான சிக்கல் மேலும் அதிகமாகிறது.

கௌசல்யா நரேன் தன் காதலன் உறவை வரன் முறையாக முறித்து சட்டப்படி செய்தி சொல்லியிருந்தால் அவன் இப்போது சீனில் வந்திருக்கவே மாட்டானே. அர்ச்சுனா இவ்வளவு ரென்சனாகி அக்காதலனின் கொட்டைகளை பைற் ஆக்கி சாப்பிடுவேன் என்று தொலைபேசியில் பேசியிருக்கமாட்டானே.

ஆக தன்னுடைய தனிப்பட்ட வாழ்வுக்கும் தொழில்நெறிசார் – Professional – வாழ்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் அல்லல் பட்ட அபலைப்பெண்ணான கௌசல்யாவை சந்தர்ப் சூழ்நிலைகளை சாதுரியமாகக் கையாண்டு அர்ச்சுனாவால் ஆட்டையைப் போடப்பட்ட பெண்ணாகவே அவர் இப்போதிருக்கிறார். முறையாகச் சட்டம் படித்து வந்த ஒரு பெண்ணின் கதியே இப்படியிருக்கிறதென்றால் சாதாரண ஈழப்பெண்களின் கதையை/கதியை யோசித்துப்பாருங்கள். மண்டையில் களிமண்ணிருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் சாத்தான் வேடதாரி அர்ச்சுனா போட்ட நாடகத்திற்கு எடுபட்டுப்போகும் சட்டத்தரணிப் பெண்ணின் கதியே இதுவென்றால் சாதாரண ஈழப்பெண்களின் கதி?

ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் நிற்கின்றீர்கள்? சங்கரி ஐயாவுக்குப் பின் கட்சி யாருக்கு? கௌரி நித்தியானந்தன் உதயசூரியன் 4

ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் நிற்கின்றீர்கள்? சங்கரி ஐயாவுக்குப் பின் கட்சி யாருக்கு?
கௌரி நித்தியானந்தன் உதயசூரியன் 4

12 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

தமது உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களை கையகப்படுத்துவதற்கான விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 12 முன்னாள் அமைச்சர்கள் தங்களுடைய குடியிருப்புகளை இதுவரை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்தினால் முன்னாள் அமைச்சர்களுக்கு 28 உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு, குறித்த குடியிருப்புகளின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் மீண்டும் கையளிக்கப்படும் போது அவற்றை செலுத்திவிட்டு கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு அமைய நான்கு முன்னாள் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, திலும் அமுனுகம, ரமேஷ் பத்திரன மற்றும் அஜித் ராஜபக்ச ஆகியோர் தமது இல்லங்களை ஒப்படைத்துள்ளனர்.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை !

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் ஒக்டோபர் 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர், அவரை ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பமானது 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு!

2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை இன்றைய தினம் தவிர, எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் 1, மற்றும் 4 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

மேற்கண்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் மக்கள் போராட்டம்!

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட தமது உறவினர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருமாறுக்கோரி உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தங்களது உறவினர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடையாது எனவும், அவர்களின் சம்பளங்களும் தமக்கு கிடைக்கப்பெறுவதில்லை எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் குடும்ப செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுளள்னர்.

கடந்த அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கடன்கள் எவற்றையும் நாம் பெறவில்லை -அமைச்சர் விஜித ஹேரத்

அரசாங்கத்தினால் எந்தவொரு விதத்திலும் புதிய கடன்கள், எந்தவொரு நாட்டில் இருந்து அல்லது நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் பணத்தை அச்சிட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது – ஜனாதிபதி அனுர குமார

“அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

 

“ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர். இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை.

 

எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. அன்று கூறிய அனைத்தும் பொய்யென உறுதியாகியுள்ளது.

 

எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

 

எனவே, எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள். இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

 

அறுகம்பே சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர்.

 

மூன்று வாரங்களுக்கு முன்னரே எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறையும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் அதேவேளை திட்டமிட்டவர்களையும் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.