October

October

இலங்கையின் வடபகுதியில் அதிகரிக்கும் சீனாவின் ஆளில்லா விமானங்கள் – எச்சரிக்கிறது தமிழ்நாடு புலனாய்வு பிரிவு !

கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்

இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அயல்நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடு  இலங்கையின் வடபகுதியில் ஆளில்லா விமானங்கள் ஏனைய சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை போன்றவற்றினால் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என மாநில புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அனைத்து நகரங்கள் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர்களின் உதவியுடன் சீன இராணுவத்தை சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களிற்கு முன்னர்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு எல்லை பாதுகாப்பு குழு மத்திய புலனாய்வு பணியகத்தை மேற்கோள்காட்டி செய்மதிகள் ரொக்கட்கள் கண்டங்களிற்கு இடையிலான செய்மதிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கான சீனா கப்பலின் அம்பாந்தோட்டை  விஜயம் குறித்து எச்சரித்திருந்ததுடன்  தமிழ்நாட்டில் அணுசக்தி நிலையங்கள் துறைமுகங்கள் உள்ளதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்திருந்தது.

முல்லைத்தீவு அனலைதீவு மீசாலை சாவகச்சேரி உட்பட வடக்கின் பல பகுதிகளிற்கான சீன பிரஜைகளின் நடமாட்டம் தமிழ் மீனவர்களின் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் ஒரேயொரு வாழ்வாதாரத்திற்கான வழியாக காணப்படுகின்ற  கடல்வளத்தை சீனர்கள் பயன்படுத்துகின்றனர்என  அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலை இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம் வடக்குகிழக்கு பகுதியில் இந்தியாவி;ன் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர் என   புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

 

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி – பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இன்னமும் உரிமையற்றோராய் !

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை கடக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்கவில்லை எனவும், இதன் விளைவாக நிலம் உரிமை, மொழி உரிமை, கலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அதற்கு எதிராக இன்று (16) ஹட்டன் நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அபிவிருத்தியிலும், இலங்கையின் பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இவர்களின் வாழ்வு நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மருத்துவமனையின் மேல்தளத்தில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள் !

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மேல்தளத்தில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் நிஷ்டர் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், நிஷ்டர் மருத்துவமனைக்கு இருநாட்களுக்கு முன் சென்றபோது மருத்துவமனையில் பிணங்கள் இருக்கும் தகவலை ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நிஷ்டர் மருத்துவமனையின் பிணவறையின் கதவை திறக்க குஜ்ஜார் உத்தரவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது பிணவறையில் 200 க்கும் அதிகமான உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து குஜ்ஜார் கூறும்போது,

“ முதலில் மருத்துவமனை ஊழியர்கள் பிணவறையின் கதவை திறக்கமாட்டேன் என்றனர். நான் போலீஸுக்கு இதுகுறித்து புகார் அளிப்பேன் என்றவுடன் கதவை திறந்தார்கள். கல்லூரி முதல்வரை இதுகுறித்து கேட்டபோது மருத்துவ மாணவர்களின் கல்வி ரீதியான தேவைக்காக இந்த உடல்கள் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் பிணங்கள் அதிகளவில் சிதைவடைந்து இருந்தன. 50 ஆண்டுக்கால பாகிஸ்தான் வரலாற்றில் நான் இப்படியொரு நிகழ்வைப் பார்த்ததில்லை” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை பஞ்சாப் அரசு நியமித்துள்ளது. அரசு மருத்துவமனையில் உரிமை கோரப்படாத 200 க்கும் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளை நான் அழித்ததாக சொல்வதில் உண்மை இல்லை – முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்கிய கடனை இலங்கை செலுத்த வேண்டும் – பங்களாதேஷ்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான பதில்கள் தெரிவிக்கப்பட்டதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களுடன் இணைந்து பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அந்நியச் செலாவணி ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் வழங்க முடியாத நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு தடவைகள் காலத்தை நீடிக்க பங்களாதேஷ் இணக்கம் தெரிவித்திருந்தது.

இதன்படி அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உரிய கடன் தொகையை செலுத்துவதற்கு இலங்கை இணங்கியுள்ளதாகவும், உடன்படிக்கையின் பிரகாரம் உரிய நேரத்தில் உரிய பணம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடு – பைடன் கருத்தால் பரபரப்பு !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழச்சியில் ஜோ பைடன் இவ்வாறு பேசியிருக்கிறார்.

ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ள சவால்கள் குறித்து பேசும்போது, பாகிஸ்தான் குறித்து பைடன் பேசினார். தன்னுடைய பார்வையில் பாகிஸ்தான் நாடு, உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று எனவும், எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துக்கொண்டிருக்கும் நாடு எனவும் தெரிவித்தார். அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பைடன் இவ்வாறு கூறியிருப்பது பாகிஸ்தான் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு பைடனின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. 48 பக்கங்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கொள்கை அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஓய்வூதியம் பெறும் 690,000 பேர் !

சுமார் 690,000 பேர் ஓய்வூதியம் பெறுவோர் இலங்கையில் உள்ளதுடன்,அதற்காக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 24,200 மில்லியன் ரூபாவை ஓய்வூதியத்திற்காக செலவிடுகிறது எனவும் எனினும் எவ்வாறான பொருளாதார சிரமங்கள் அல்லது பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற பின்னர், கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள ஓய்வூதிய திணைக்களத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் ஓய்வூதிய பராமரிப்பு பியச மாவட்ட அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

ஒக்டோபர் 8ஆம் திகதி தேசிய ஓய்வூதிய தினத்துடன் இணைந்து ஓய்வூதியத் திணைக்களத்தை மாவட்ட மட்டத்திற்கு பரவலாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, குருநாகல் மாவட்ட செயலகத்தின் கீழ் தளத்தில் ஒக்டோபர் 12 ஆம் திகதி குருநாகல் ஓய்வூதிய மாவட்ட அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது என ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

சில ஓய்வூதியதாரர்களின் வெளிநாட்டுப் பயணம், தவறுகள், மோசடிகள் அல்லது பிற குறைபாடுகள் காரணமாக அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் மற்றும் விசாரணைகள் முடிந்தவுடன் பணம் செலுத்தப்படும். வருடாந்தம் சுமார் 28,000 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் 8,000 முதல் 9,000 பேர் முப்படைகளை சேர்ந்தவர்களாவர்.

ஓய்வூதியத் துறைக்கு தனிப்பட்ட கோப்புகளை அனுப்ப நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 40 முதல் 50 சதவீதம் பேர் ஓய்வு பெறும் திகதிக்கு முன் கொடுக்கப்பட்ட மூன்று மாதங்களை பயன்படுத்துகின்றனர். வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் ஏனைய அரச நிறுவனங்கள் தமது பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரே தனிப்பட்ட கோப்புகளை அனுப்புகின்றன. ஓய்வூதியத் துறையிடம் சுமார் 300 முதல் 400 கோப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த விண்ணப்பங்களை நாங்கள் மூன்று நிலைகளில் சமாளித்து விரைவில் ஓய்வூதியம் வழங்கும் வகையில் செயற்படுவோம். துரதிர்ஷ்டவசமாக, பிற அலுவலகங்களில் இருந்து எங்களுக்கு ஆதரவில்லை. நாம் ஒரு கையால் கைதட்ட முடியாது.

தனிப்பட்ட கோப்புகளை பராமரிக்கும் ஏனைய அனைத்து அலுவலகங்களும் ஒரு நல்ல சேவையை வழங்க ஒத்துழைக்க வேண்டும். அந்த ஆதரவை வழங்கினால், ஓய்வூதியதாரர்கள் இது தொடர்பாக விண்ணப்பங்களை சமர்ப்பித்த அடுத்த மாதம் முதல் ஓய்வூதியம் வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மீண்டும் ஒரு நாடு, ஒரு தலைவர் முறை !

சீனாவில் ஆட்சியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில், ஒரு நாடு, ஒரு தலைவர் என்ற பழைய முறைக்கு மீண்டும் மாறும் முறை அமலாக உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் அதிபராக, 2012ல் பதவியேற்றார் ஷீ ஜிங்பிங். சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறையே உள்ளது. அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறை ஐந்தாண்டுகள் பதவியைத் தொடர முடியும் என்ற நடைமுறை உள்ளது. அதாவது, 10 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். இதன்படி, ஜிங்பிங் சீன அதிபர் பதவியில், 10 ஆண்டுகளை விரைவில் நிறைவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், அவர் அதிபர் பதவியை ஏற்றதும், கட்சியின் தலைவர், ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். சீனாவில் அசைக்க முடியாத தலைவராக ஜிங்பிங் மாறியுள்ளார். தன் வாழ்நாள் முழுதும் அதிபர் பதவியில் இருக்கும் வகையில், கட்சியில் சட்டம் திருத்தம் செய்வதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங் தான், 1976ல் அவர் இறக்கும் வரை அதிபராகவும், கட்சித் தலைவராகவும் மிக நீண்ட காலம் இருந்தார். அதன் பிறகு அதிபராக பொறுப்பேற்ற டெங்க் ஜியோபிங் ஆட்சியின்போது தான், 10 ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் மா சேதுங் காலத்துக்கு சீனா செல்ல உள்ளது. கட்சியின் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு, வரும், 16ம் திகதி நடக்க உள்ளது.

இதில் கட்சியின் நிர்வாகிகள் சேர்த்து, வாழ்நாள் முழுதும் ஜிங்பிங் அதிபராக தொடரும் முடிவை எடுக்க உள்ளனர். இதற்கேற்ப, கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், தன் ஆதரவாளர்களை மட்டுமே ஜிங்பிங் நிறுத்தினார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட, 2,296 பேர் இணைந்து, ஜிங்பிங் அதிபராக தொடரும் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர்.

பாகிஸ்தானில் ஒவ்வொருநாளும் 12 பெண்கள் பலாத்காரம் – நான்கு ஆண்டுகளில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் !

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. கௌவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் பாகிஸ்தானில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சர்வே எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும், தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1,957 கௌரவக் கொலைகள் பதிவாகியிருப்பதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.பொதுச் சபையில் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் !

உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.