22

22

வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை மேலும் 6 மாதங்கள் வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம்

உலக உணவுத் திட்டமானது வடக்கில் இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட் களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்ட நிறுவனத் திடம் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கிணங்க இவ்விணக்கப் பாட்டினை அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடம்பெயர்ந்த மக்களுக்கு கடந்த ஆறுமாத காலங்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் வழங்கி வந்துள்ளதுடன் அப்பொருட்கள் மக்களுக்குப் பகிர்ந்த ளிக்கப்பட்டு வந்துள்ளன.

கடந்த மாதத்துடன் ஆறு மாதகால ஒப்பந்தம் நிறைவடைவதுடன் அவ்வுதவியினை மேலும் ஆறுமாத காலத்திற்கு நீடிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கிணங்க மேலும் ஆறு மாத காலத்திற்கு உணவுப் பொருட்களை வழங்க அந்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மிக முன்னேற்றகரமான நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படும்

இலங்கையில் மிகவும் முன்னேற்றகரமான நகராக யாழ். நகரை மாற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். யாழ். மாவட்டத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்திற்கு மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான பெருமளவு இலக்கிய நூல்களை அன்பளிப்புச் செய்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு சமூகத்தின் மனித வளங்களை மட்டுமன்றி பெளதீக வளங்களையும் மேம்படுத்த வேண்டும். பல வருடங்கள் நீடித்த யுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளிவைத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. அபிவிருத்தியை மேலும் வேகப்படுத்துவதற்கு மனித வள முகாமைத்துவம் மிகவும் முக்கியமாகும்.

பல வருடங்களாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த யாழ். மாவட்டம் இன்று சுதந்திர பூமியாக மாறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் யாழ். மாவட்டம் நாட்டில் முன்னேறிய நகரமாக முன்னேற் றப்படும். இன, மத அடித்தளத்தில் இருந்து ஒதுங்கி செயற்படுவதன் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கல்வி நிலையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். சிங்கள மற்றும் தமிழ் கலாசார பெறுமானங்களை மதித்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்ற சகலரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார். அமைச்சர், சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையம், யாழ் மின்சார சபை என்பவற்றிற்கும் விஜயம் செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்ரகுமார், ஹெல உருமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு ஈரானில் மரண தண்டனை

ஈரானில் கைது செய்யப்பட்ட சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் குறித்த சுன்னி ஆயுதக் குழுத் தலைவர் அப்டொல்மாலிக் ரெஜி கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்டொல்மாலிக் ரெஜி, ஜூன்டல்லாஹ் கிளர்ச்சிக் குழுவின் தலைவராக கடமை யாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப் பினர்கள் முன்னிலையில் ரெஜிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிர விசாரணைகளின் பின்னர் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பலுகிஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கடுமையான குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் ரெஜிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் முகவராக செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னதாக ரெஜியின் சகோதரருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றியிருந்தது. எவ்வாறெனினும், ஜூன்டல்லாஹ் அமைப்புடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அமெரிக்கா நிராகரித்துள்ளது.