12

12

இலங்கையில் ரத்தக்களறி ஏற்படக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் கவலை

20090424063601srilanka4.jpgஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பாருக்கும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் போர் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடப்பதை உலகம் கவனித்து வருவதாகவும், இரு தரப்பாரும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அங்கு ரத்தக்களறி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கார்டன் வைஸ் பீபீஸி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் இறுதியில் இடம் பெற்ற தாக்குதல்களும், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் ஒரு முறை இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுசீரமைப்பு குழுவின் தலைவராக வஜிர எம்.பி – ஐக்கிய தேசியக் கட்சி

unp.jpgமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் கிரமமாக்குவதற்கும் பலப்படுத்துவதற்குமான விசேட திட்டமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மறு சீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக ஐ.தே.க.வினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முன்னர் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாள்வதற்கென இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாளும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையர்கள் 40 ஆயிரம் பேருக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு

itali.jpgஇலங்கையர்கள் 40 ஆயிரம் பேருக்கு இத்தாலியில் வேலை வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.  இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று விரைவில் செய்து கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையர்களுக்கு இன்னும் சில மாதங்களில் வேலை வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள இத்தாலிய அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சுகாதாரததுறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கைத் தாதியர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு  அங்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

மெனிக்பாமில் தயார் நிலையில் இரு தீயணைப்பு படை வாகனங்கள்

international-firefighters-day.jpgசெட்டி குளம் மெனிக்பாம் பகுதியில் இரண்டு தீயணைப்புப் படை வாகனங்களும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இங்கு தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுகிறது. ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையிலேயே தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்பகுதியிலிருந்து இரு தீயணைக்கும் படைப் பிரிவும், பாவனைக்குரிய அம்புலன்ஸ் வண்டிகளும் பணியாளர்களும் 24 மணி நேரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்குழு அவசரப்பட்டுவிட்டது : ரஜீவ விஜேசிங்க

rajee-vija.jpg“இலங்கை விவகாரம் குறித்த விடயத்தில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்கள் குழு அவசரப்பட்டுவிட்டது என்று கருதுகின்றோம். இலங்கைக்கு சர்வதேச விசாரணை குழுவை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை சுயாதீன நிபுணர்கள் குழு முன்வைத்திருந்தாலும் அதனை பாதுகாப்பு சபை அங்கீகரிக்கவேண்டியது அவசியமாகும்” என்று அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளரும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச விசாரணைக் குழுவை அனுப்பவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர்கள் குழு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மே 12 – சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம். (International Nurses Day) – புன்னியாமீன்

florencenightingale.jpg உலக ளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12 ஆம் திகதியும் சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்  (International Nurses Day) கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland)  என்பவர் இத்தினத்தை  செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவர்  நிராகரித்துள்ளார். இருப்பினும் 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்  (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் (தாதிகள்) மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், 1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 முதல் மே 15 வரை செவிலியர் வாரம் கொண்டாடப்படுகிறது.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “செவிலியர்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். “செவிலியர்கள்” உலக அரங்கில் அங்கீகரிக்கபடுகிறார்கள். இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து யுத்தகால வைத்தியசேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக்கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் ஒரு கட்டாயக் கடமையாகவும் உள்ளது.

மறுபுறமாக ‘தாதியார்தினம்’ என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ‘விளக்கேந்திய சீமாட்டி’, ‘கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார்.

பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர், இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். இவரின் தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1789-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்) (1794- 1875). புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார். ‘எம்ப்லீ பார்க்’ இது  புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடமாகும்.

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் புள்ளிவிபரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் புள்ளி விபரங்களை அதிகளவில் பயன்படுத்தினார். தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.

இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார். 1858 இல் பதவியேற்றதன் மூல அரச புள்ளிவிபரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார். அதேபோல இவர் ஒரு எழுத்தாளருமாவார்.

ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு ‘இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே’ தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண்டார். பெற்றோர் அக் கல்வி நெறியைப் பயில மறுப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் அறிக்கையிடுதல் சார்பான கல்வி நெறியைப் பயில ஊக்கமளித்தனர். இதனை மறுதலித்து நோயாளர்களைப் பராமரி க்கும் கல்வி நெறியை மேற்கொண்டு மூன்றா ண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், எதிர்ப்புக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து தன் வாழ்நாளையே தாதிச் சேவையில் இவர் இணைத்துக் கொண்டமை இவரது உள விருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதற்கான அடையாளப்படுத்தலாகவும் கொள்ளப்படுகின்றது.

அக்காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அக்காலத்தில் தாதியர் சமையல் வேலையாட்களாகவும் உயர்குடும்பங்களில் வேலை செய்யவேண்டி இருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் இவர் ஜேர்மனி சென்றார். அங்கு கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் வழங்கப்படும் கவனிப்புகளும், மருத்துவச் சேவைகளும்  இவரை மிகவும் கவர்ந்தன. 1851 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 4 மாதங்களாக  ஜெர்மனியில் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் இவர் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார்.

பின்னாளில்- சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராகப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கெனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார் எனக் கூறப்படுகின்றது.

1854ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. இப்போரின் போது லண்டன் டைம்ஸ் உட்படப் பல முன்னிலைத் தினசரிகள் கிரிமியாவில் காணப்படும் பரிதாபகரமான நிலைமைகளையும் காயமுற்றோரும் ஊனமுற்றோரும் முறையாகப் பராமரிக்கப்படாமை சார்பாக பல கட்டுரைகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிட்டன.

இந்த யுத்தப் பகுதியில் போதியளவு சத்திர சிகிச்சை நிபுணர்கள், தாதிமார்கள், மருந்து வகைகள், மருந்துத் துணிகள் இல்லாமை பற்றி மனிதாபிமானத்தோடு சுட்டிக்காட்டி டைம்ஸ் தினசரி கட்டுரை வெளியிட்டது. இதனை வாசித்த புளோரன்ஸ் அதிர்ச்சியும் கவலையும் கொண்டார். கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 தாதியருடன் இராணுவ வைத்திய சாலைக்குச் சென்றார். பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். தனதன்பினாலும் சிகிச்சைகளாலும் புளோரன்ஸ் படையினரைக் குணப்படுத்தினார். ஒரே தடவையில் பெருமளவு காயப்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வேளை இடைவிடாது அவர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். இரவு வேளைகளில் கையில் விளக்கொண்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று சுகம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தம்மைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு வந்துள்ளது என இராணுவவீரர்கள் புளோரன்ஸைக் கெளரவித்தனர். விளக்கேற்றிய பெருமாட்டியை ‘Lady with the Lamp’ என வர்ணித்தனர்.1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.

இந்தப்போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது. பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும், சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருந்துத் தட்டுப்பாடும், குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார்.

மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing),  “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்” (Notes on Matters Affecting the Health),”பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.

போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக ‘பிபிசி’யினால் இனங்காட்டப்பட்டார். விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். அத்துடன், அரசாணைக் குழுவிற்கு இவர் சமர்ப்பித்த அறிக்கையில் படை வீரர்களின் இறப்புக்கு படைவீரர்களின் வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமென எடுத்துரைத்தார்.   பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார். மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

துருக்கியிலிருந்த போது நவம்பர் 29, 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் ‘தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம்’ நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் துணையுடன் புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9, 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியியல் மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907 இல் புளோரன்ஸின் அரும்பெருஞ் சேவைகளை அறிந்த இங்கிலாந்து மன்னர் பாம் எட்வேட் ‘Order of Merit’ எனும் பட்டத்தை வழங்கி புளோரன்ஸைக் கெளரவித்தார். உலகில் இப்பட்டத்தைப் பெற்ற முதலாவது பெண்மணியெனும் பேரும் புகழும் இவருக்கே உரித்தாகும்.

அதீத களைப்பு ஏற்படல் (Chronic Fatigue Sydnrome) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாகவும் உள்ளது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) பற்றி ஆராய்கிறது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். ஆகஸ்ட் 13, 1910 இல் இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) புதைக்க அரசு முன்வந்தது.  

ஆனால் அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன. ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு ‘பெட்சைட் புளோரன்ஸ்’  (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.

மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புகழ் பெற்றிருந்தைப் போலவே  இங்கிலாந்தின் பெண்ணியத்திலும் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார். 1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை “சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்” என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப் படவில்லையாயினும் ‘கசான்ட்ரா’ எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (The Cause) எனும் பெண்ணியல் வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

எனவே இத்தினத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.

தொலைபேசியை பாதுகாப்பாக வைத்திருக்க பத்து ரூபா அறவிடும் தேநீர்க்கடை உரிமையாளர்

imobile-phone.jpg
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பிரதேசத்துக்குள் கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வதற்கு நீதிமன்று பொலிஸ் சோதனைச் சாவடியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற பொலிஸ் சோதனைச் சாவடியின் முன்பாகவுள்ள தேநீர்க்கடை உரிமையாளர் தொலைபேசியை வைத்திருப்பதற்காக பத்து ரூபா வீதம் அறவீடு செய்து கொள்ளை இலாபமீட்டுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற தேவைகளுக்காக பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஒலுவில் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த அதிகமான மக்கள் நாளாந்தம் தமது நீதிச்சேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர். எனினும் இவர்கள் தமது கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற பிரதேசத்துக்குள் பொலிஸ் சோதனைச்சாவடியூடாக உட்கொண்டு செல்லத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனாலேயே சோதனைச்சாவடிக்கு எதிரே உள்ள தேநீர்க்கடையில் கையடக்கத் தொலைபேசியை வைத்துச்செல்வதற்கு வாடகையாக பத்து ரூபா அறவீடு செய்யப்படுகின்றது. எனவே, கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வதற்கான தடைக்குப் பதிலாக மாற்றுவழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், தேநீர்க் கடை வியாபாரி நாளாந்தம் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெற்றுவருவதுடன், இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினருக்கும் ஒருதொகைப்பணம் இலஞ்சமாக வழங்கப்படுகின்றது என பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டை தீர்மானம் என்ன கேலிக்கூத்தா? – குலன்

Pirabakaran_V_2008EelamAmir_Mangayatkarasi_._._._._._

….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு ….. தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம் சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தை தூண்டி வளர்த்து தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக பயன்படுத்திய படியால் இலங்கைவாழ் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது. ….. இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை மீள்வித்து புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

: தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தமிழீழப் பிரகடனம் 14 மே 1976

_._._._._._

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி எழுதவந்த விடயத்திற்கு முன் வரலாறு பற்றி ஒரு முற்குறிப்புக் கொடுக்கவேண்டிய அவசியம் இங்குள்ளது. 1976க்கு முன்னிருந்த முக்கிய பல தமிழ் அரசியற் கட்சிகள் தமிழ் மக்களின் ஏகோபித்த நலன்கருதி தம்வேற்றுமைகளை மறந்து மக்களுக்காக ஒன்றாக இணைந்து உருவாக்கப்பட்டது தான் தமிழர் விடுதலைக் கூட்டணி. இது எமது சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
 
இக்கூட்டணியின் இளைஞர் அமைப்புத்தான் தமிழ் இளைஞர்பேரவை. இன்று தமிழர் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவே தலைமை வகித்தார். இளைஞர்பேரவை என்பது கூட்டணியின் அரசியல் கருத்துக்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர் அமைப்பாகவே இருந்தது. மாவை சேனாதிராஜா அவர்கள் சிறை சென்றபோது யாப்பானது வெறும் பாராளுமன்றத்தை நோக்கிய யாப்பாக இன்றி விடுதலை அமைப்புக்குரிய யாப்பாக நாம் அதை மாற்றினோம். மாவை அண்ணர் சிறை மீண்டதும் முரண்பாடுகள் முண்டியடிக்க இளைஞர் பேரவை இரண்டானது. அதில் தீவீரவாதத்தை விரும்பிய இளைஞர்களாகிய நாம் இளைஞர்பேரவை விடுதலைஇயக்கம் என்று பிரிந்து சென்றோம். இப்படிப் பிரிந்து சென்ற நாம் தனிநபர் தீவீரவாதிகளுடனும், அமைப்புகளுடனும் இணையத் தொடங்கினோம். இருப்பினும் நாம் உடைந்தாலும் பாதை தவறிப்போகவில்லை. எமது போராட்ட வழியில் குறியுள்ளவர்களுடன் இணையத் தொடங்கினோம். இதில் முக்கியமான சிலரை நினைவு கூருவது மிக முக்கியமானது. இறைகுமாரன், உமைபாலன், வாசுதேவா, சந்ததியார், உமாமகேசன், செந்தில், சேயோன், கனககுலசிங்கம், புஸ்பராஜா, இராசநாயகம் போன்ற பலரை இங்கு குறிப்பிடலாம். எனக்கு இன்று தொடர்புகள் அற்றுப்போனதன் விளைவாக எல்லோரது பெயர்களையும் குறிப்பிட முடியவில்லை. முக்கியமாக உயிருடன் இருப்பவர்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
 
இந்த பிரிந்துபோன தீவிரவாத எமது இளைஞர் அமைப்பு தனிநபர் தீவிரவாதிகளாக இருந்த பலரை உள்வாங்க முயன்றதன் விளைவாக பிரபாகரன் போன்றோருடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தது. அக்காலகட்டத்தில் தான் பிரபாகரன் உமாமகேஸ்வரன் ஒன்றாக இணைந்து செயற்படத் தொடங்கினர். மாணவர்பேரவை, இளைஞர்பேரவை விடுதலை அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்தனர். உருவாகிய அந்த அமைப்புக்கு ஒருமத்திய செயற்குழு உருவாக்கப்பட்டது. அதற்கு உமாமகேஸ்வரன் தலைவராகவும் தளபதியாக பிரபாகரனும் நியமிக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில்தான் சி.ஐ.டி யாக கடமையாற்றி தமிழ் இளைஞர்களை 4ம்மாடியில் சித்திரவதை செய்து வந்த இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தகவல் கொடுத்து அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் காட்டிக்கொடுப்போர், பொலிஸ் சி.ஐ.டி களும் தேடித்தேடிச் சுடப்பட்டனர். புதியபுலிகள் தோற்றம், உட்பூசல்கள் காரணமாக புளொட் பிரிவு, புளொட் புலிகள் கொலைமுயற்சிகள், சகோதரப் படுகொலைகள் என்று பல பல….
 
இந்த இளைஞர் பேரவை பிரிவதற்கு முன்னரே இந்த வட்டுக்கோட்டை மகாநாடு பண்ணாகத்தில் நடந்தது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 5 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வட்டுக்கோட்டைத் தொகுதி ஐவரில் இன்று உயிருடன் இருப்பது நான் மட்டுமென்றே கருதுகிறேன். ஏன் இதை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் அன்று எனக்கு இருந்த வேதனையும் வலியும் எனக்கு மட்டும்தான் தெரியும். நாம் பலர் ஊர்வலமாகச் சென்றபோது பொலிசாரினால் அடித்துதைக்கப்பட்டோம், பிடித்துச் செல்லப்பட்டோம் அதை எழுதுவதற்கு நான் தகுதி உடையவனா? இல்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்குக.
 
இனி சொல்ல வந்த முக்கிய விடயத்துக்கு வருகிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வைத்தே 1977 தேர்தல் நடந்தது. அன்று இருந்த மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியியும் எம்வரலாற்றில் என்றும் இருந்ததில்லை. 98 சதவிகிதமான மக்கள் அன்று தமிழ் ஈழம்தான் முடிந்த முடிவு என்று அறுதியாகவும் உறுதியாகவும் ஆணையிட்டதன் விளைவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியானது, என்றும் தமிழர்களுக்குக் கிடைக்காத எதிர் கட்சி என்ற நிலையை அடைந்தது. இதுவும் எம்சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும். அந்த ஆணையானது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கீழ் ஏகோபித்த தமிழ் பேசும் மக்களின் ஆணையாகும். அதாவது வடக்குக் கிழக்கு மக்களுடன் முஸ்லீம்களும் இணைந்து தான் வாக்களித்தார்கள் என்பது மிகமுக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இத்தீர்மானமானது வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரம் கொண்ட தனித் தமிழீழம் என்பதாகும். இது சுயநிர்ணய கோட்பாட்டின் கீழ் ஒரினம் தன் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை கொண்டது. தனித் தமிழீழம் அடையும்வரை விடாது போராட வேண்டும் என்பது முடிவாக்கப்பட்ட ஒன்றானது. விடுதலைப் போராட்டம் எனும்பொழுது இளைஞர்கள் முக்கியத்துவம் பெறுவது இயற்கையே.
 
இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தில் எங்கேயும் இத்தீர்மானம் காலவதியாகும் என்று குறிப்பிடப்படவில்லை. இந்தத் தேர்தல் ஆணையை வைத்தே புலிகள் போராடி வந்தார்கள் என்று பிரபாகரனே தொலைக்காட்சிகளில் செவ்வியதை யாவரும் செவிமடுத்திருப்பர். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளாய்வு செய்வதோ மீழுறுதிப்படுத்த முயல்வதோ அன்று வாக்களித்த தமிழ் மக்களை கொச்சைபடுத்தும் செயலாகும். அந்த மக்கள் ஆணை என்பது காலவதியற்றது. இதை மீளுறுதி செய்வதற்கு வெளிநாடுகளில் இருக்கும் நீங்கள் யார்? இங்கே வாக்களித்த பலர் ஈழத்தில் பிறந்தவர்களே இல்லை. இவ்வளவு காலமும் தம்முயிர்களை ஈர்ந்த தமிழ்தனையர்கள், யுவதிகள், பொது மக்களின் உயிர்களுக்குக் கொடுக்கும் சன்மானமா இது?
 
தமிழ் மக்களுக்கு சிங்கள இனவாத அரசால் இழைக்கப்பட்ட இன்னல்களை, எதிர்நோக்கும் பேரழிவுகளை மக்கள் முன்கொணர்ந்து மக்களை விழிப்புறச்செய்து தானைத் தளபதி என்று கருதப்பட்ட அமிர்தலிங்கம் போன்றோர்க்குக் கிடைத்தபரிசு தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்). மக்களை அன்று தட்டி எழுப்பியது யார்? இளைஞர்களைத் தான் சொன்னார்கள் ஆயுதம் ஏந்தியாயினும் ஈழம்பெறும் வரை போராடுங்கள் என்று. அன்றைய தலைவர்கள் தம்தகுதிக்கு ஏற்ப போராடினார்கள், கிளர்ச்சியை ஆதரித்தார்கள்.
 
அமிர்தலிங்கம் அவர்களைத் துப்பாக்கி இரவைகள் துளைப்பதற்கு முன்சொன்ன வார்த்தைகளை இங்கே கேளுங்கள். “தம்பிமார்களே எங்களாலை ஆயுதம் தூக்கிப் போராட இயலாது. நீங்கள் போராடுங்கள் எம்மால் இயன்றவரை நாம் போராடுகிறோம். ஒருவரின் வழியில் இன்னொருவர் குறுக்கிடாமல் மக்களின் நலனுக்காகப் போராடுவோம். இந்தியாவின் உதவியின்றி எமக்கு ஒருதீர்வு கிடைக்கப் போவதில்லை.” இந்த அரசியல்மேதை சொன்ன பொன்னான வார்த்தைகள் இன்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் இன்று கூட மறுக்க இயலுமா? முடியுமா?

அன்று இந்திய மத்திய அரசின் லோக்சபாவிலேயே தனித் தமிழனின் குரலாக ஒலித்தது அமரர் அமிர்தலிங்கத்தின் குரல் ஒன்றே. அன்று தேசத்தின் குரல் என்ன செய்தது? அதன்பின் யாராலாவது அது முடிந்ததா? உங்கள் குரல்கள் கணக்கெடுக்கப்பட்டதா? துப்பாக்கிகளின் துர்ப்பாக்கிய தீர்வுகள் திருத்தியமைக்க முடியுமா? அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோரை மீளத்தர முடியுமா? உலக நாடெங்கும் நின்று தெருத்தெருவாய் கத்தினோம் யாருக்குக் கேட்டது. எவ்வளவு கேட்டது. ஒரு தனிமனிதனாகச் செய்ய முடிந்ததை இரண்டு இலட்சமாக நாம் தெருவில் இறங்கியும் முடியவில்லையே.
 
இன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீழுறுதி செய்கிறார்களாம். இது வேடிக்கையா? கேலிக்கையா? இன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில் 90 விதமானவர்கள்  யாழ்பாணத் தமிழர்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. இங்கே கிழக்குத் தமிழர்களினதும் இஸ்லாமியத் தமிழர்களினதும் கருத்துக்கள், விருப்புக்கள் சாகடிக்கப்படுகிறன்றன. புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம்கள், கிழக்கு முஸ்லீம்களின் கருத்துக்களுக்கு இடமெங்கே? அங்குள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க நீங்கள் யார்? சரி அங்கே ஒரு நடுநிலையாக தேர்தலை நடக்த முடியாது என்று கருதினால் ஐ.நா அதை அங்கே செய்யட்டும்.
 
வெளிநாட்டில் எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் நீங்கள் ஈழத்து மக்களின் தலைவிதியை இங்கு வசதியாக இருந்து கொண்டு தீர்மானிக்க இயலுமென்றால் பிராந்திய வல்லரசுகளான அண்டை நாடுகள் தம் பாதுகாப்புக்கருதி ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது சரி என்றாகிவிடும் என்பதை உணர்க.
 
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் குறுஞ்செய்தி வந்தது 99 சதவிகிதமானவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று. இது மிகப்பெரிய வேடிக்கை. நோர்வேயில் எந்த மாநகரசபையை தமிழீழம் ஆக்கப்போகிறீர்கள். 99 சதவிகிதம் என்பது எதைவைத்துக் கணிக்கப்பட்டது என்பதுதான் என் கேள்வி? சரி எத்தனை சதவீதமானவர்கள் வாக்களித்தார்கள் என்றால் அது இவர்களுக்குத் சரியாகத் தெரியுமா? இன்று நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர்கள் எத்தனை? இதில் எத்தனை பேர் 18 வயதைத் தொட்டவர்கள்? இந்த 18வயதைத் தொட்டவர்களில் சமூகம் அழித்தவர்கள் எத்தனை வீதம்? இதுவாவது தெரியாது? அதாவது குஞ்சு குருமான்கள், விசா இல்லாதோர், பாஸ்போட் இல்லாதோர் எல்லாமுமாகச் சேர்த்து சுமார் 20 000 க்கும் குறைந்த நோர்வே வாழ் ஈழத் தமிழர்கள் 3 மில்லியன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லை?
 
இந்த வாக்கெடுப்பை நடத்திய உதுறுப் (கத்துதல், அழைத்தல் என்பதே தமிழாக்கம்) என்ற அமைப்பின் இணையத்தள வெளியீட்டில் இருந்து.
 
18 வயதுக்கு மேற்பட்ட வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள் தொகை 8797 (எந்த தேர்தல் ஆணையகம் இதைத் தந்தது)
 
வாக்களித்தவர்கள் தொகை 5633 இதில் தமிழீழம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 5574
 
ஆகவே நோர்வேவாழ் தமிழர்களில் வாக்குரிமை கொண்டவர்களில் ஈழம் வேண்டுவோர் எத்தனை வீதம்? 63 சதவீதம் என்பதே சரியானது (5574தர 100 கீழ் 8797). இதில் வாக்களிக்காதவர்கள் 35 வீதம் என்பதையும் கவனிக்க.
 
தமிழர்சார் உதுறுப் தன்தலையங்கத்தில் எழுதியுள்ளது: 99சதவிகிதமான நோர்வே தமிழர்கள் தனித்தமிழீழம் பிரிவதையே விரும்புகிறார்கள். நோர்வேயில் தமிழர்கள் செறிந்து வாழும் எந்தப் பகுதியில் ஈழம் காணப்போகிறார்கள். ஈழத்தில் நடுநிலையாக ஒருதேர்தல் நடத்தினால் என்ன விளைவு கிடைக்கும் என்பதை இதற்கு அனுரசணையாக இருந்த பின்புலத்தார் உணர்வார்கள்.
 
கிழக்கிலங்கை, ஈழக்கதை இன்றி ஏதோ ஜனநாயகம் இல்லாத துப்பாக்கித் தனிநியாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வடபகுதி முஸ்லீங்கள் சொந்த பூமியை விட்டு விரட்டப்பட்டு விட்டார்கள். யாழ்பாணம் ஆமியின் பிடியில் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கணக்கில் இருக்கிறது. வன்னியில் புலியழிப்பென மக்கள் அழிப்பு நடக்கிறது. இவர்கள் கருத்துக்கள் கணிக்கப்பட்டதா? இதற்குச் சரியான பதில் சொல்ல வேண்டியவர்கள் அங்குள்ள மக்கள் மட்டுமே. சரி அங்கு தேர்தல் நேர்மையாக நடத்த முடியாது என்றால் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட தேர்தல் எந்த வகையில் முறையானது. இதை ஒரு கருத்துக் கணிப்பாகவே கருதவியலாது. வாக்களித்தவர்கள் யார்? குறிப்பிட்ட வட்டங்களில் உள்ள குழுக்கள். கருத்துக் கணிப்பு என்றும் பரந்துபட்டே எடுக்கப்படும். இந்த வகையான தேர்தல் வெறும் கேலிக்கூத்து என்பதே உண்மை.

இந்தக் கேலி, போலித்தேர்தலில் பங்குபற்றாத பலர் என் காதுபடச் சொன்ன விடயம் என்னவென்றால் ‘கண்டநிண்டவன் எல்லாம் தேர்தல் நடத்துவான். இனி அதை வைத்தோ பாராளுமன்றம் போக வேண்டும்’ என்பர். இவர்களின் கோமாளிக் கூத்துக்கு நாங்களும் ஆடுவதா? ஈழத்தில் எம்மக்களை கோமாளிகளாக்கி கொன்று போட்டது போதாதா? இங்கும் இளைஞர்களைத் தூண்டி இரத்தக்களரிக்குத் தயார்படுத்துகிறார்களா? இராஜதந்திரம் புத்திசாதுரியமான வளைந்து கொடுப்புக்கள் மூலம் எமது நோக்கு வென்றெடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் துப்பாக்கிகளே தமிழர்களின் தலைவிதியை அவசர அவசரமாகத் தீர்மானித்தன.
 
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கொடுத்த மக்கள் ஆணை என்பது என்றும் காலாவதியாவதில்லை. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் என்று எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. அங்குள்ள மக்கள் கொடுத்த தீர்ப்பை அங்குள்ள மக்களே தம்தலைவிதியை தீர்மானிக்க வேண்டும்.
 
எமது மக்களின் கிளர்ச்சிகளும் உணர்வுகளும் சரியான முறையில் வழிநடத்தப்படவில்லை என்பதுதான் காலம் தந்த பதில். அங்குள்ள மக்கள் என்றோ ஒருநாள் தம்மிடையே உள்ள சக்திகளைத் திரட்டி சரியான தலைமையை தெரிவுசெய்து தம்போராட்டத்தை வென்றெடுப்பார்கள். பலாத்காரத்தினால் மக்கள் எழுற்சியைக் கட்டுப்படுத்த இயலாது. இது சரித்திரச் சான்று.
 
ஈழத்தமிழர் விடுதலைக்கு நாமே ஏகப்பிரதிநிதிகள் என்று எம்மக்கள் போராட்டத்தை மழுங்கடித்தன் விளைவு இன்று எம்தமிழினம் விடுதலை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இனி எத்தனை தலைமுறை எடுக்குமோ? இது சுடுகிறது மடியைப்பிடி என்று செய்யும் காரியமல்ல. தாமே ஒட்டுமொத்த தமிழினத்துக்கும், தமிழீழத்திற்கும் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டவர்களே ஈழத்தமிழர் அழிவுக்கு மட்டுமல்ல மக்களின் தன்னம்பிக்கை இழப்புக்கும் காரணமானவர்கள். தன்னம்பிக்கை இழப்பு என்பது தற்கொலைக்குச் சமனானது. ஒரு இனத்தின் தன்னம்பிக்கை மழுங்கடிக்கப் படும்போதுதான் அடிமை நாடகம் அரங்கேறும்.
 
தனிநபர்களின் தலைமையில் விடுதலைப் போராட்டங்களைக் கட்டி எழுப்புவதை விட்டு விட்டு, அதாவது கதாநாயகத்துவம் (கீரோயிசம்) அற்ற மக்கள் அமைப்பைக் கட்டி எழுப்புங்கள். மக்களின் குரல்களுக்குச் செவிசாயுங்கள். விடுதலை மக்களுக்கே தவிர மண்ணுக்கல்ல. மண் என்பது வெறும் இருப்பு மட்டுமே. மண்தான் முக்கியம் என்றால் எமது மண் சிந்துநதிப் பள்ளத்தாக்கிலும் இருக்கிறது. அதையும் போய் மீட்போமா?
 
இக்கட்டுரையைத் தொடர்ந்து பலகட்டுரைகளை ஏனைய வாசகர்களும் எழுதுவீர்களாயின் ஒரு ஆரோக்கியமான கருத்தியலை நாம் பகிர்ந்து கொள்ளலாம். பின்னோட்டங்களும் சிந்தனையைத் தூண்டுவதாய் அமையும்.