May
May
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் கவுன்சிலினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநதிகள் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா, இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியமான முஸ்லிம் கவுன்சில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு ஏற்கனவே பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இன்று 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதற்காக அந்த அமைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.
வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கென முழு அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். 19 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதன் செயலாளராக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய அமைச்சர்களின் செயலாளர்கள், பிரதான பாதுகாப்பு அதிகாரி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஆணைக்குழு, நிறுவனங்களின் முக்கியஸ்தர்களைக் கொண்டதாக இச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஜனாதிபதி செயலணியின் முதலாவது அமர்வு நேற்று அதன் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியினூடாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் புனர்வாழ்வளித்தல், வடமாகாண பொருளாதார, சமூக, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுத்தல், அவற்றை செயற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புகளை செய்தல். மேற்படி நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அரச பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளல்.
குறிப்பிட்ட மாகாண அதிகாரிகள், உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களை கண்காணித்தல்.முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அரச தனியார், மற்றும் தனிப்பட்ட நபர்களின் சமூகத்தின் ஒத்துழைப்பை பெறுவதும், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதலும்.
மேற்படி செயலணியின் உத்தியோகபூர்வ பணிப்புரைகளை, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், தடைகளுக்கு உடனடி தீர்வு காணவும் உடனடியாக மாற்று வழிகளை கண்டறியும் விதத்தில் ஜனாதிபதி செயலணி செயற்படும். வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்னெடுப்பதில் ஏற்படும் முன்னேற்றங்களை அவ்வப்போது ஆராய்தலுடன் தேவையேற்படும் பட்சத்தில் உடனடியான மாற்றங்கள், திட்டங்களை நடை முறைப்படுத்துவதும் மேற்படி செயலணியின் கடமையாகும். இதேவேளை செயலணியின் நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அவ்வப்போது அறியத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன் மேற்படி செயலணியின் நடவடிக்கைகளின் போது உதவிகள் அல்லது சரியான தகவல்கள் கேட்கப்படும் பட்சத்தில் தவறாது சரியான தகவல்களையும் தாமதமின்றி வழங்க வேண்டுஎனவும் சகல அரச ஊழியர்களுக்கும் இத்தால் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு அரச ஊழியரோ அல்லது எந்தவொரு அமைச்சிலோ, அரச திணைக்களமோ, அரச கூட்டுத்தாபனமோ, அல்லது இவ்வாறான நிறுவனங்களிலுள்ள ஊழியர் எவரோ நியமிக்கப்பட்ட செயலணியின் மூலம் வழங்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புக்களையும், தவறவிடுவாராயின், அவ்வாறு அவர் தவறவிட்ட சந்தர்ப்பங்களை உடனடியாக தமக்கு அறியத்தர வேண்டும் என்றும் செயலணிக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு வழங்கப்பட்ட ஆணைக்கமைய செயற்பட்டு தனது செயற்பாடுகளை பூர்த்தி செய்த பின்பு ஒருவருட காலத்தினுள் தமக்கு அறிக்கையிடுமாறும் ஜனாதிபதி செயலர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலணி குழுவில் அங்கம் வகிப்போர் விபரம் வருமாறு:- 1. பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் 2. லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலாளர் 3. கோத்தாபய ராஜபக்ஷ செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு 4. சுமித் அபேசிங்க செயலாளர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு 5. யூ.எல்.எம். ஹால்தீன் செயலாளர் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு 6. டபிள்யூ.கே.கே. குமாரசிறி செயலாளர் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு 7. எஸ். அமரசேகர செயலாளர் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு 8. எம்.எம்.சி. பேர்டினன்டோ செயலாளர் மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு 9. ஜே.ஆர்.டபிள்யூ. திஸாநாயக்க செயலாளர் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு 10. டாக்டர் அதுல கஹந்தலியனகே செயலாளர் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் போஷாக்கு அமைச்சு
11. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா பிரதான பாதுகாப்பு அதிகாரி 12. லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதி 13. வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதி 14. எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க விமானப் படைத் தளபதி 15. ஜயந்த விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபர் 16. ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் 17. மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இராணுவ பிரதான அதிகாரி வட மாகாணத்திற்கான தகுதிவாய்ந்த அதிகாரி 18. எஸ். பி. திவாரத்ன அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் 19 டீ. அபேயகுணவர்தன முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேசிய திட்டமிடல் திணைக்களம்
இலங்கையில் மோசமாகிவரும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபையும், தனது பெரும் கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கை விடயம் குறித்து மூடிய கதவுகளுக்கு பின்னால் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த ரஷ்யாவின் ஐ.நாவுக்கான தூதர் விடாலி சர்கின் அவர்கள், அதிகாரப் பூர்வமாக கட்டுப்படுத்தாத அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில், இலங்கையின் வடக்குப் பகுதியில் மோசமாகிவரும் மனிதாபிமான அவல நிலைமைகள் குறித்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பதினைந்து உறுப்பினர்களும், பெரும் கவலையடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சமீப நாட்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து அவர்கள் பெரும் கவலையடைவதாக ரஷ்ய தூதுவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல ஆண்டுகளாக நடத்தி வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தற்போது அவர்கள் பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, மனித கேடயங்களாக அவர்களை பயன் படுத்துவதை மிகக்கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இலங்கை அரசுக்கு இருக்கும் சட்டரீதியான உரிமையை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் கூறினார்.
விடுதலைப்புலிகள் தங்களின் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரிய ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புசபையின் உறுப்பு நாடுகள், பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்களில் இலங்கை அரசு கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்துவதாக வெளியாகும் செய்திகளை கண்டு தாங்கள் ஆழ்ந்த கவலை கொள்வதாகவும் தெரிவித்துள்ளன.
இந்த அறிக்கைக்கான மூலவடிவம் கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இலங்கையின் மிகமோசமான மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு சபை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை நிலைமைகள் சமீப காலத்தில் மிகமோசமான கட்டத்தை எட்டிய பிறகு, ஐநாவின் பாதுகாப்புச்சபையால் வெளியிடப்பட்ட முதலாவது கடுமையான அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அம்னெஸ்டி இண்டர் நேஷனல், ஹூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் இலங்கையில் சார்வதேச சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுவதற்கான வலுவான சான்றுகள் உருவாகி வருவதாகவும், அது குறித்து ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த பின்னணியில் இந்த அறிக்கை நேற்று வெளியாகியிருப்பதாகவும் அங்குள்ள செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது
![]()
இலங்கையின் வடக்கே போர் நடக்கும் பகுதியில் இருக்கும் தற்காலிக மருத்துவமனையின் மீது நடந்த எறிகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது
இது குறித்து தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையின் மருத்துவர் ஷண்முகராஜா, இன்று மருத்துவமனைமீது இரண்டு எறிகணைத் தாக்குதல்கள் நடந்ததாகவும் இத்தாக்குதலில் 52 பேர் உயிரழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் மருத்துவமனைப் பணியாளர் ஒருவரும் வேறு ஒரு தொண்டரும் உயிரழந்ததாக அவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு பெரும் சிரமங்கள் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு உதவக்கூட இப்போது ஆட்பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 இறந்த உடல்கள் இருப்பதாகவும், இந்த உடல்களை அடக்கம் செய்யக்கூட முடியவில்லை என்றும் தற்போது இந்த வளாகத்திலேயே அடக்கம் செய்ய முடியுமா என்று தாங்கள் பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரச படைகள் ஷெல் தாக்குதல் நடத்தவில்லை என்கிறார் பிரிகேடியர் உதய நானயக்கார
பிரிகேடியர் உதய நானயக்கார அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து பிபிசி சார்பாக கேட்டபோது, மோதலற்றப் பிரதேசங்களையும் சேர்த்து புலிகளிடம் 4.5 கிலோமீட்டர் பகுதிதான் எஞ்சியுள்ளது. எனவே இந்தப் பகுதியில் ஷெல் தாக்குதல்களை நடத்த தேவையில்லை. இராணுவத்தினர் சிறு குழுக்களாக சிறு ஆயுதங்களைக் கொண்டு முன்னேறி வருகின்றனர் என்றார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார் என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது நேற்று வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய செய்தி ஊடகங்களுக்கான உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் தம்வசம் உள்ள ஆயுதங்களை களைந்து தாம் பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ஒபாமா அவர்கள், அங்குள்ள மனித அவலத்துக்கு தீர்வுகாண இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
”விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிட்டு, தம்வசம் உள்ள மக்களை வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதும் மற்றும் அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும். இப்படியான நடவடிக்கைகள் அவற்றைச் செய்வோரை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும்.” என்றார் ஒபாமா. அதேவேளை இந்த மனித அவலத்தை ஒழிக்க இலங்கை அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
”முதலாவதாக பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மோதல் பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவக்கூடிய உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுக்களை உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அத்துடன், மூன்றாவதாக இந்த மோதலில் இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் மக்களுக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், செஞ்சிலுவைச் சங்கத்தையும் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.” என்றார் அதிபர் ஒபாமா.
”இலங்கை மக்கள் துயருறுகின்ற இந்த வேளையில், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைத்து செயற்பட அமெரிக்க தயாராக இருக்கிறது. நாம் இனிமேலும் தாமதிக்கலாம் என்று நான் கருதவில்லை. அங்கு மேலும் மனிதாபிமான அவலங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது.” என்றார் ஒபாமா.
”இவற்றுக்கு எல்லாம் அப்பால், இலங்கை மக்கள் எல்லாரையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான நிரந்தர சமாதனம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகரிக்கின்ற மனித இழப்புகளும், மறுவாழ்வு முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாமையும், இலங்கையில் மக்கள் எதிர்பார்க்கின்ற அமைதியை பெறுவதை மேலும் கடினமாக்கவே உதவும்.” என்று கூறினார் அமெரிக்க அதிபர் ஒபாமா என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது
சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. லண்டனில் கிளைவ் லொயிட் தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் கிரிக்கெட் குழு கூட்டம் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் போதே பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில் ஒருநõள் போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவு ஆட்டங்களாக நடத்தலாம் எனும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களின் முடிவை எதிர்த்து முறையீடு செய்ய வாய்ப்பளிக்கும் முறையை தொடர்வது குறித்தும் அலோசிக்கப்படவுள்ளது. தற்போது இந்த முறை பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இது குறித்து முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது
இந்த குழுவின் பரிந்துரை கிரிக்கெட் கௌன்ஸிலின் முதன்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜூன் மாத இறுதியில் இந்த குழு கூடி இறுதி முடிவு எடுக்கும்.
அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர் குண்டுகள், 85 கிலோ வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் நேற்று கொழும்பு பாலத்துறை (தொட்டலங்க) பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு பாலத்துறை, லூகாஸ் மாவத்தையிலுள்ள கராஜ் ஒன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே படையின் இத்திடீர் சுற்றிவளைப்பை பாலத்துறை பகுதியில் மேற்கொண்டனர் எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஒவ்வொன்றும் சுமார் 7.5 கிலோ எடை கொண்ட 18 கிளேமோர் குண்டுகள் இங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் 85 கிலோ வெடிமருந்து மற்றும் இரண்டு வாக்கிடோக்கிகள், வெடிக்கவைக்கும் கருவிகள் இரண்டு ஆகியனவும் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த பிரதேசத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.கொழும்பில் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.