இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை

obama_.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார் என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது நேற்று வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய செய்தி ஊடகங்களுக்கான உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தம்வசம் உள்ள ஆயுதங்களை களைந்து தாம் பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ஒபாமா அவர்கள், அங்குள்ள மனித அவலத்துக்கு தீர்வுகாண இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

”விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிட்டு, தம்வசம் உள்ள மக்களை வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதும் மற்றும் அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும். இப்படியான நடவடிக்கைகள் அவற்றைச் செய்வோரை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும்.” என்றார் ஒபாமா. அதேவேளை இந்த மனித அவலத்தை ஒழிக்க இலங்கை அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

”முதலாவதாக பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மோதல் பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவக்கூடிய உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுக்களை உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அத்துடன், மூன்றாவதாக இந்த மோதலில் இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் மக்களுக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், செஞ்சிலுவைச் சங்கத்தையும் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.” என்றார் அதிபர் ஒபாமா.

”இலங்கை மக்கள் துயருறுகின்ற இந்த வேளையில், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைத்து செயற்பட அமெரிக்க தயாராக இருக்கிறது. நாம் இனிமேலும் தாமதிக்கலாம் என்று நான் கருதவில்லை. அங்கு மேலும் மனிதாபிமான அவலங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது.” என்றார் ஒபாமா.

”இவற்றுக்கு எல்லாம் அப்பால், இலங்கை மக்கள் எல்லாரையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான நிரந்தர சமாதனம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகரிக்கின்ற மனித இழப்புகளும், மறுவாழ்வு முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாமையும், இலங்கையில் மக்கள் எதிர்பார்க்கின்ற அமைதியை பெறுவதை மேலும் கடினமாக்கவே உதவும்.” என்று கூறினார் அமெரிக்க அதிபர் ஒபாமா என பீபீஸி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • நண்பன்
    நண்பன்

    ஒபாமா , ஆயுதங்களை போடச் சொல்லிட்டார். போடுவீங்களா?

    Reply
  • murugan
    murugan

    நேற்று இரவு தீபம் ரிவி ஒபாமா தாக்குதலை நிறுத்துமாறும் ஐ.நா பணியாளர்களை மோதல் பகுதிக்கு அனுப்புமாறும் சொன்னதாக எழுத்தில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஏதென்று இணையங்களை பார்த்தால் அவர் ஆயுதங்களையும் போடச் சொல்லியிருந்தார். ஆயுதங்களை போடச் சொன்னதை எழுத்தில் ஓட விடவில்லை. மக்களை தீபம் நன்றாகத் தான் மேய்த்து தண்ணிக்கு விடுகிறது. அதே நேரம் எஞ்சினியர் ராஜ மனோகரனும் ஜிரிவி யில் வந்து மணித்தியாலக் கணக்கு சொல்லி தெருவிற்கு போராட வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார். இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கலைகளை எல்லாம் தாராளமாக கொடுத்து செல்லச் செழிப்பில் வாழவைத்துக் கொண்டு மற்றவர்களை முன்னுக்கு வரவிடாமல் தமது கனவுக்கு பலியிடுகிறார்கள். ராஜமனோகரனின் பிள்ளைகள் வன்னிக் களத்திற்கு போக விடுவாரா? தெருவில் இறங்கி சத்தம் போடத்தான் விடுவாரா? இவர்கள் தானாம் படித்தவர்கள் .பண்புள்ளவர்கள்.

    Reply
  • BC
    BC

    //ஒபாமா ஆயுதங்களை போடச் சொல்லிட்டார். போடுவீங்களா?//

    அது எல்லாம் தணிக்கை. இலங்கை அரசாங்கம் வைத்தியசாலைகள் மற்றும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஒபாமா கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார் என்று மட்டும் சொல்வார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // இராக்கிலும், ஆப்கானிலும், அமெரிக்கப்படையினரால், கைதிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை காண்பிப்பதாக கூறப்படும் புதிய புகைப்படங்களை வெளியிடுவதற்கான திட்டத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். – பிபிசி தமிழோசை//

    ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்க அண்ணாத்தே, தன் வீட்டுப் பீத்தல்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே!!!!

    Reply