- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவேளை, அரசுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை செய்தி ஏஜென்ஸிகளுக்கு வழங்கிக் குற்றமிழைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாவது தமிழ் டாக்டரும் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் எஸ்.சிவபாலன் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்தஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
அவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து இரண்டு லட்சம் ரூபா உறுதிப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு டாக்டர்களையும் கடந்த 24ஆம் திகதி நிபந்தனைப் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவானால் அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.
மலையகத் தின் அனைத்துத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் இன்று இரண்டாம் திகதி முதல் ஒத்துழையாமை போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 500 ரூபாவால் அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டதையடுத்து, தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
கொட்டகலையில் நேற்று சங்கங்கள் ஒன்றுகூடி இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது பற்றித் தீர்மானித்ததாகப் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக மீண்டும் எதிர்வரும் 7 ஆந் திகதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. எவ்வாறெனினும், 500 ரூபா சம்பள உயர்வு என்ற அடிப்படையிலும், ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரிக்கப்படும் தொகையை தீபாவளி மாதச் சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென தொழிற்சங்கங்கள் அறிவித்து விட்டதாக பிரதி அமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (31) கொட்டகலையில் நடை பெற்றது. இதில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்க வேண்டும் எனச் சங்கங்கள் கோரின. ஆனால் முதலாளிமார் சம்மேளனம், அவ்வாறு வழங்க முடியாதென்றும் 12.5% அதிகரிக்க முடியுமென்றும் கூறிவிட்டது. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் கலாவாதியான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுபிக்க இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கமின்றி முறிந்தது. மீண்டும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முதலாளிமார் சம்மேளனம் சம்பள அதிகரிப்பை நிராகரித்து விட்டது. இதனையடுத்து தொழிற்சங்கங்கள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து நேற்று கொட்டகலையில் கூடி ஆராய்ந்து முடிவெடுத்துள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி ஆகிய சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தோட்டத் தொழிலாளர்கள் மனநிறைவுடன் பணியாற்றுவதற்கு அவர்களுக்கு திருப்திகரமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்டத் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டியின் தலைவர் எஸ். இராமநாதன் தெரிவித்தார். தமது அமைப்பில் உள்ள தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இம்முறை போராட்டத்தை இறுக்கமாக மேற்கொள்ளப் போவதாக இராமநாதன் கூறினார்.
தொழிலாளர்களுக்கு தற்போது 200 ரூபா அடிப்படைச் சம்பளமாகவும், தேயிலை விலைக்கு 20 ரூபாவும், 75% வேலைக்குச் சென்றால் 70 ரூபாவும் வழங்கப்படுகின்றது. இதனையடுத்து மொத்தமாக 500 வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மலையக மக்கள் முன்னணி இதய சுத்தியுடன் இணைந்து செயல்படுவதற்கும் போராட்டங்களில் பங்கெடுப்பதற்கும் பின் நிற்காது.
கட்டாயமாக இன்றைய வாழ்க்கையை ஓரளவாவது சமாளிப்பதற்கு 600 ரூபா நாட்சம்பளமாக வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என்று மலையக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“மலையக மக்கள் முன்னணி சமூக நலனில் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்றது. முதலாளிமார் சம்மேளனம் மலையகத் தொழிலாளர்களின் விடயத்தில் எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடந்து கொள்வது வேதனைக் குரிய விடயமாகும்.
கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் நடந்து கொண்ட முறையிலிருந்து விடுபட்டு சமூக நலனில் அக்கறை காட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி இவ்விடயத்தில் ஒதுங்கி இருக்கக் கூடாது. அதே போல மற்றைய கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் நடைமுறைப் பற்றாக்குறைகள், வாழ்க்கைச் செலவு உயர்ச்சி, வேலை குறைப்பு என்பவைகள் தொடர்பாக உறுதியான முடிவு எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நியூஸீ லாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்ததால் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சங்கக்காரா ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். இதனால் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் மஹேல ஜெயவர்தனா உள்ளனர்.
டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் டேல் ஸ்டெய்ன், முரளிதரன், மிட்செல் ஜான்சன் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சானியா மிர்சா மற்றும் இந்திய வீரர் சோம்தேவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, பெலாரசின் வோல்கா கோவர்ட்சோவாவை எதிர்கொண்டார்.
இதில் சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட்களில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார். அதில் அவர் இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், போர்ச்சுக்கல்லை சேர்ந்த பெரட்ரிகோ கில்லை 6-3, 6-4, 6-3 என வென்றார். இவர் இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைப்பரை சந்திக்கிறார்.
இது குறித்து சானியா கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு ஒற்றையர் போட்டியில் ஒரே சமயத்தில் இரண்டு இந்தியர்கள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள வசதிகுறைந்த 300 முதியோர்களை இன்று புதன்கிழமை அகில இலங்கை இந்து மாமன்றம் பொறுப்பேற்றுக்கொள்கிறது.
சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் செயலாளர் திருமதி வி. ஜெகராசசிங்கம் ஆகியோரிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று 300 முதியோர்கள் இந்து மாமன்றத்திடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள அவர்களுக்கான இல்லங்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர்.
பல நுற்றாண்டு காலமாக இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர கௌரவம் கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் இழக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இராஜதந்திர ஒத்துழைப்பு தொடர்பில் அரசாங்கம் தெளிவற்ற வகையில் செயற்படுவதே இதற்கான காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையை ஆட்சி செய்த கடந்த கால அரசாங்கங்கள், வெளிநாடுகளுடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் அதிக அக்கறை கொண்டிருந்தன. எந்த நாடாக இருந்தாலும் வெளிநாட்டு உறவுகள் என்ற விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதுவே பொருளாதாரத்தில் மாத்திரமன்றி இராஜதந்திர உறவுகளிலும் கைகொடுக்க கூடியதாக இருக்கும்.
இவ்வாறான நிலைமையில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை புறக்கணித்து செயற்படுவதானது, எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளையே நாட்டுக்கு ஏற்படுத்தும் என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் மாகாண சபைத் தேர்தல் பிரசாரப் பணிகளை முன்னெடுக்க பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயக்கவின் தலைமையில் தேசிய நடவடிக்கைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டங்களுக்குப் பொறுப்பாக அமைச்சர்கள் தலைமையிலான பிரசாரக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-
அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜந்த், தினேஷ் குணவர்த்தன, சம்பிக ரணவக்க மற்றும் விமல் வீரவன்ஷ, பசில் ராஜபக்ஷ, கருணாஜீவ, சுமித் விஜேசிங்க ஆகியோரும் இந்தக் குழுவில் அடங்குவர். இது தவிர பல தேர்தல் பிரசாரக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் 3 மாவட்டங்களிலும் உள்ள மக்களை வீடுவீடாகச் சென்று அறிவூட்ட உள்ளோம். இது தவிர ஜனாதிபதி பங்கேற்கும் மூன்று கூட்டங்கள் 3 மாவட்டங்களிலும், நடத்தப்பட உள்ள தோடு, மாவட்ட, தொகுதி, பிரதேச செய லக பிரிவு, வாக்குச்சாவடி மட்டங்களிலும் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும்.
2005 ஜனாதிபதித் தேர்தலில் தென் மாகாணத்திலே அதிக கூடுதல் வாக்குகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார். ஜனாதிபதித் தேர்தலை விட இரு மடங்கு அதிகமான மக்கள் இந்தத் தேர்த லில் வாக்களிப்பர். தென் பகுதி கடந்த காலங்களில் பாரியளவு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் ஐ.ம.சு. முன்னணியை பெரு வெற்றியீட்ட வைப்பது உறுதி என்றார். இம்முறை தேர்தலில் 3 மாவட்டங்களுக் கும் குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் வேட்பாளர் எவரும் நியமிக்கவில்லை என்றார்.
லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் குற்றவாளி விடுதலையானமைக்கும் லிபிய அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
லிபியாவுடன் எண்ணெய்வள ஒப்பந்தத்தில் பிரிட்டிஷ் கைச்சாத்திட்ட பின்னர் இவர் விடுதலையானதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அல்மெஹ்ராஹி ஒரு புற்று நோயாளி. இவர் இன்னும் சில மாதங்களில் மரணமடைவார் என வைத்தியர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இவரது கடைசிக் காலத்தை குடும்பத்துடன் கழிக்க வசதி செய்யும் நோக்குடன் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கருணை அடிப்படையில் இந்த விடயம் நோக்கப்பட வேண்டுமென பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திலிருந்து 1988ம் ஆண்டு அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 270 அமெரிக்கர்கள் பலியாகினர். இதற்கு லிபியாவைச் சேர்ந்த மொஹமட் அல் மெஹராஹி காரணம் எனக்குற்றம் சாட்டப்பட்டது.
ஏழு வருடங்கள் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மருத்துவ பரிசோதனையில் மரணத்தை நெருங்கியுள்ள நோயாளி என ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் ஸ்கொட்லாந்த் சிறையிலிருந்து விடுதலையானார்.
தனது தாய்நாடான லிபியா சென்ற இவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. நான் மரணிப்பதற்காகவே வீடு செல்கிறேன் என சிறையிலிருந்து வெளியேறுகையில் மொஹமட் அல் மெஹ்ராஹி கூறியமை குறிப்பிடத்தக்கது.
கண்டி, கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 44 பேர் படுகாயமடைந்துள்ளனர். கதிர்காம யாத்திரை சென்று திரும்பி வந்து கொண்டிருந்த பஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான வாகனத்தை செலுத்தி வந்த பஸ் சாரதியும், பாடசாலை மாணவி ஒருவமே இந்த விபத்தில் பலியானவர்கள் என்று தெரிவித்த பொலிஸார் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் கலகெதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி- குருநாகல் பிரதான வீதியில் நேற்று முன்தினம் (31) நள்ளிரவு இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவாவது:- நீர் கொழும்பு- தங்கொடவிலிருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்ட இவர்கள் மீண்டும் தமது வீட்டுக்குச் செல்லும் போதே இந்த விபத்து நடந்துள்ளது.
எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் ஜயவீர ஆராச்சிலாகே ருமேஸ் மதுஷா (வயது-8) என்பவரும் குறித்த பஸ் வண்டியின் சாரதியான எம். கிர்ஷான் (40) ஆகிய இருவருமே ஸ்தலத்திலேயே பலியானார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 17 பேர் பலத்த காயங்களுடன் கண்டி வைத்தியசாலையிலும் 13 பேர் கலகெதர வைத்திய சாலையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர். பலர் சிகிச் சைகளைப் பெற்ற பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளி யேறிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.