Multiple Page/Post

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 இலட்சம் மக்கள் பாதிப்பு – பலியானோர் தொகை 300 ஆக உயர்வு; மீட்பு பணி துரிதம்

chile.jpgசிலியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்ப ட்டதாகவும், இதுவரை முன்னூறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாப்பான இடம்நோக்கி நகருமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளதுடன், அரசாங்க ஊடகங்கள் உடனுக்குடன் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன.

கட்டடங்கள், வீடுகள், மரங்கள் வாகனங்கள் என்பன இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகளில் சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் சென்று பார்வையிட்ட அந்நாட்டின் ஜனாதிபதி சுனாமி எச்சரிக்கையுள்ள பகுதிகளை அபாய வலயங்களாகப் பிரகடனம் செய்தார். வெளியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

சிலியை அண்மித்துள்ள அனைத்து நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கரையோரங்களிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொண்டு மக்களை விழிப்பூட்டியது. இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கத் தேவையான உதவிகளை சிலிக்கு வழங்கப் பல நாடுகள் முன்வந்தன. காயமடைந்த பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல அரச வாகனங்களும் தனியார் பஸ் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.

இறுதியாகக் கிடைத்த தகவலின் படி ஆறு ஒன்று உடைப்பெடுத்து வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் 60 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் இலங்கையர்கள் உண்ணாவிரதம்

இந்தோனேசியாவில் பல இலங்கைத்தமிழர்கள் வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்  இந்தோனேசியாவில் தஞ்சும்பினேங் என்ற இடத்தில் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்கள் பதினொருபேர் தம்மை சுதந்திரமாக வெளியில் நடமாடவோ அல்லது வேறொரு நாட்டில் தஞ்சம் பெறவோ அனுமதிக்கவோ வேண்டுமென கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாட்டுக்கு சுமையற்றதாக ஐ.ம.சு.மு அமைச்சரவை அமைய வேண்டும் – நிமலின் யோசனைக்கு ஏகமனதாக அங்கீகாரம்

sandanaya.pngபொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் அமைச்சரவை நாட்டுக்குச் சுமையற்றதாக அமைய வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபேட்சகர்கள் ஏகமனதாகத் தீர்மானமொன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றினர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனுராதபுரம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபேட்சகர்கள் உறுதிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்படி யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை அமைச்சர் சி. பி. ரட்நாயக்கா வழிமொழிந்தார். அதனை தொடர்ந்து இந்த யோசனை ஏகமானதாக நிறை வேற்றப்பட்டது.

50 வெளிநாட்டு கண்காணிப்பாளரை வரவழைக்க அனுமதி; 8000 பேருக்கு பயிற்சி

srilanka_parliament_02.jpgபாராளு மன்றத் தேர்தலுக்கென ஆசிய நாடுகளில் இருந்து 50 தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பெப்ரல் அமைப்புக்கு அனுமதி வழங்கியிருப்பதாக அதன் பணிப்பாளர் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை நாடளாய ரீதியில் பணியில் அமர்த்த பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான விசேட பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன குறிப்பிட்டார்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் தேர்தல்கள் ஆணையாளருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வாக்கு எண்ணுவதில் கலந்து கொள்வதற்கு பெப்ரல் அமைப்பு பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தேர்தல்கள் ஆணையாளரிடம் முன்வைத்திருப்பதாகவும் பணிப்பாளர் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் அடையாள அட்டையில்லாதவர்கள் கிராம சேவகர்களை தொடர்பு கொள்ளுமாறும் பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

mano-ganesan.jpgஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மனோ கணேசனுக்கு எதிராக ஹெல உருமய நேற்று பகல் கண்டி மாநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஹெல உருமயவின் கண்டி மாவட்ட பிரதான வேட்பாளரான சுவர்ண திலக்க தலைமையில் கண்டி தலதா வீதியில் நடைபெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் ஆதவாளரான மனோ கணேசனை கண்டியிலிருந்து விரட்டுவோம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்

jaffna.jpgகிளிநொச்சி, மாங்குளம், பூநகரி ஆகிய பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் தலைமை அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதி அடிக்கல் நடப்படவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் அடிக்கல் நடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இதற்கமைய மாங்குளம் நகரத்தில் புதிய பொலிஸ் கட்டடத் தொகுதியும், கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி பொலிஸ் தலைமை அலுவலகமும், மன் னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி

epdp.jpgஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நாடாளுமன்றத் தோ்தலில் தமது கட்சி வீணைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய

gotabhaya.jpgஇராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்தார்.

புலத்துத்தமிழா!! நோர்வே நக்கீரா

புலத்துத்தமிழா!!

ஊரை எண்ணி உருகினோம்
          உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
         தாமரை இலைத் தண்ணீர்தானே

வேரை தேட முயல்வதனால்
         விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
          உண்மையின் தரிசனம் தெரியதில்லை

பொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
           பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
          தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோ

உடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
          உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
          கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.

சேவல் செத்த தேசத்தில்
          சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
         எகிறி அலறும் அலாரமிங்கே

பூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
          பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
         தேடிய பணமும் எமைத்தேடாது போகும்

வேரை அறுத்து வந்த உனக்கு
          வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
           உத்தமனாய் விடாதே கணக்கு

தலைவிதி தன்னை தானே தீர்க்கும்
           தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
            கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டு

பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
            திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
            மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்

மண்ணை வேண்டிப் போராடி
           மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
           காதலி தமிழை மனதில் ஊட்டி

தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
          தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
         எழுந்து வாடா இனத்தை மீட்க

பத்துப் பெத்தால் பரிசளிப்போம்
         பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
         வித்தாய் விழைவோமா புலத்தினிலே

நோர்வே நக்கீரா

27.02 2010

கண்டன கூட்டம் – உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு கண்டனம் : தேடகம்

Uthayan_Canada ._._._._._.

கண்டன கூட்டம்
உதயன் பத்திரிகை  அலுவலகம் தாக்கப்பட்டதை  கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை  வலியுறுத்தியும்  தேடகத்தினால்  கண்டன கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது.

காலம் : 27-02-2010
இடம் : ஸ்காபுரோ சிவிக் சென்டர்
நேரம் : 3.00 pm – 6.00pm

அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்

தேடகம்

._._._._._.

கருத்துச் சுதந்திரத்திற்காய் தோள் கொடுப்போம்! – உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு எமது கண்டனம் : தேடகம்

Thedakam_Logo20.02.2010 அன்று உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலும், அதன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கான மிரட்டலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் உள்ளது. கனேடிய தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் இது முதலாவது நிகழ்வல்ல. தாயகம் பத்திரிகைக்கான தடை, அதன் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் மீதான மிரட்டல், தேடல் சஞ்சிகை விற்பனை நிலையங்கள் மீதான மிரட்டல், தேடக நூலக எரிப்பு, பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் மீதான தாக்குதல், வானொலி இயக்குனர் இளையபாரதி மீதான தாக்குதல், என ஊடகங்கள் மீதான வன்முறைகள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. சுதந்திரமாக கருத்தை முன்வைக்கும் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் கனடாவில் பல்வேறு தரப்பினரின் வன்முறைக்கு முகம்கொடுத்தே வந்துள்ளன. விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலின் அங்கமாகவே புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற ஊடகங்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான தாக்குதல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கருத்துக்களம் ஆரோக்கியமான சமூகத்திற்கு மிக முக்கியமான அடிப்படையாகும். கருத்தை கருத்தால் முகம் கொடுக்கும் ஓரு சமூகம் உருவாக்கப்படவேண்டிய காலகட்டமிது. எமது அடிப்படை மனிதவுரிமைகளை முன்னிறுத்தி வளமான எதிர்காலத்தை வென்றெடுக்க வேண்டிய காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு எம்மை பின்னோக்கித் தள்ளிய சுதந்திர மறுப்புகளை, அடக்குமுறைகளை அறவே அகற்றி நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகத்தை உருவாக்குவது அனைவரதும் கடமை. இதை அடிப்படையாகக் கொண்டே 1989ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பன்முகத்தன்மைக்காயும் கருத்துத் சுதந்திரத்திற்காயும் தேடகம் குரல்கொடுத்து வருகிறது.

“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தை
சொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார்”

என்று பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர் சொன்னது போன்று நீதிக்கும் சமத்துவத்திற்குமாக போராடும் மக்கள் குலாம், சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் இத்தகையை அச்சுறுத்தல்களை நிச்சயம் எதிர்த்தே தீருவர்.

உதயன் பத்திரிகை மீதான இவ் வன்முறையை தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராய் வன்முறையைத் தூண்டும் சக்திகளை இனங்கண்டு அவர்களை மறுதலிக்க தமிழ் மக்கள் முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.

22.02.2010
தேடகம்
கனடா