Multiple Page/Post

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்ற உழைக்கும் மக்களின் பங்களிப்பு அவசியம் – மே தினச் செய்தியில் ஜனாதிபதி

president.jpgசர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களோடு பெருமையோடு இணைந்து கொள்ளும் எமது நாட்டு உழைக்கும் மக்களுக்கு நான் இவ்வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டுக்கும் அதன் உழைக்கும் மக்களுக்கும் மிகப் பெரும் சவாலாக இருந்து வந்த பயங்கரவாதத்தை நாம் தற்போது வெற்றி கொண்டுள்ளோம். இச்சவாலை வெற்றிகொள்வதில் எமது நாட்டின் உழைக்கும் மக்கள் பாரியதொரு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது : பயங்கர வாதத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

உழைக்கும் மக்களின் தாராளமான உதவியோடு தலைமைத்துவத்தை அடைந்துகொண்ட ஒரு தலைவன் என்ற வகையில் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்கு முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்து அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ள முடிந்தமை எமது வெற்றியின் இரகசியம் என நான் கருதுகின்றேன்.

நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எம்மை மென்மேலும் பலப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியில் உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையை உறுதிசெய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு மென்மேலும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது முன்னேற்றப் பாதையில் தடையாகவிருக்கும் எல்லா சவால்களையும் வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையுடன் அடையப்பெறும் தேசிய அபிவிருத்தியின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்க முடியும் என இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

உழைக்கும் மக்களுக்கு வெற்றி கிட்டுமாகுக.

எதிர்கால சவாலை வெற்றிக்கொள்ள இத்தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம் – பிரதமர் மேதினச் செய்தி

deemu.jpgமூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்திலிருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரமானதும் அடிமையற்றதுமான நாட்டில் கொண்டாடப்படும் இந்த உலகத் தொழிலாளர் தினத்தை, எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான திடசங்கற்பத்தை உழைக்கும் மக்களின் மனங்களில் பதியச் செய்யும் தினமாகக் கருதுவதாகப் பிரதமர் டி. எம். ஜயரத்ன விடுத்துள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“தொழிற்சாலையிலும் விவசாய மண்ணிலும் மற்றம் கடலிலும் உழைத்து வியர்வை சிந்தும் சகல ஊழியர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்கும் சவாலே இன்று எம்முன் உள்ளது.

இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களுடன் பங்களிப்புச் செய்வது எனது எதிர்பார்ப்பாகும். நமது நாடு நெருக்கடியைச் சந்தித்த சகல சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியும், சகல இடையூறுகளையும் சகித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் உலகுக்கு வெளிப்படுத்திய முன்மாதிரிக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்”, என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், உழைக்கும் மக்களின் ஆதரவு முன்னரைவிட தற்போது கூடுதலாக அவசியமாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளைஞர் விவகார அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் குழுத் தலைவருமான டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையில், மேதினத்தில் உள்ள வரலாற்றைப் போன்று சமூக, அரசியல் முக்கியத்துவமான மே முத லாந்திகதியொன்று இலங்கை மக்களுக்குக் கிட்டியுள்ளதென்றும் 30 வருடங்களின் பின்னர் முழு இலங்கையிலும் உழைக்கும் வர்க்கம் இந்தத் தடவையே உண்மையான கெளரவத்துடன் அனுஷ்டிக்கிறார்களென்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை – ஆணையிறவில் பாதுகாப்புச் செயலாளர் தகவல்

gotabaya.jpgபுலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.

புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலையமைப்பை முறியடித்து இல்லாதொழிப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும்,  இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும்,  இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார். இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.

சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது. இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

தனியார்துறை ஊழியர் சம்பளம்; 20-45% அதிகரிக்க நடவடிக்கை தொழில் உரிமையை பாதுகாக்கவும் ஏற்பாடு – அமைச்சர் லொக்குகே

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்காத ஏனைய ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறை ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொழில் அதிகாரிகள் சங்கத்தின் 59வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மேற்படி சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.  தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹ ஹேவா, தொழில் ஆணையாளர் உபாலி விஜேவீர மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தனியார்த்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள்.  அவர்களின் தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்கள் தொழில் புரியும் காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்று ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில் திணைக்களமானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம் 725 பில்லியன் நிதியினைக் கொண்டுள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியமும் நூறு மில்லியனுக்கு மேலான நிதியினைக் கொண்டுள்ளது. இந்நிதியின் மூலமான பிரதிபலனைத் தொழிலாளர்கள் அனுபவிக்கக் கூடியதாக எதிர்காலத்தில் வழிவகை செய்யப்படும்.

தொழில் அதிகாரிகள் 610 பேர் நாடளாவிய ரீதியில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் அரச சேவை சம்பள உயர்வின்போது தர நிர்ணயங்களின்படி இவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்குத் தொழிலமைச்சின் மூலம் உச்சளவிலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று மே தினம்; பொலிஸ், அதிரடிப்படை பாதுகாப்பு கொழும்பில் 11 கூட்டங்கள்; 6 ஊர்வலங்கள்;

2010-may-day.jpgஉழைக்கும் வர்க்கத்தினரைக் கெளரவிக்கும் மே தினம் இன்றாகும். இதனையிட்டு நாடு முழுவதும் ஊர்வலங்களும், கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளின் பின்பு நாட்டில் மிகவும் அமைதியான சூழலில் நடைபெறும் இந்த மே தினக் கொண்டாட்டங்களையிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு மாநகரில் 11 கூட்டங்களும், ஆறு மே தின ஊர்வலங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆளும் ஐ. ம. சு. மு.வின் கூட்டம் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபை திடலில் நடைபெறுகிறது.  ”வேலைத் தளத்துக்கு பலம், தொழில்சாலைக்கு சுறுசுறுப்பு, தாய்நாட்டுக்கு சமாதானம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இவ்வருட மே தினம் அமைகிறது என இளைஞர் விவகார மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பல மே தின கூட்டங்கள் நடைபெறுகின்றன. பல தொழில் சங்கங்கள் பங்குபற்றும் இந்த கூட்டங்களில் பெருமளவு மக்கள் கூட்டம் திரளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி முன்னணி சங்கங்கள் நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கிருலப்பன பொது விளையாட்டு மைதானத்துக்கு வந்து அங்கு கூட்டம் நடத்துகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி இம்முறையும் மேதின கூட்டம் எதனையும் நடத்தப் போவதில்லை. அதற்கு பதிலாக கடந்த வருடங்களைப் போன்று சமய நிழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்க அமைப்பான ஜாதிக சேவக சங்கமய சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் தலைமையகம் அறிவித்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் மேதினக் கூட்டத்தை இம்முறை தலவாக்கலையில் நடத்துகிறது. இக்கூட்டத்துக்கு இ. தொ. கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை வகிப்பார். கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுவர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை பொரள்ள கெம்பல் பூங்காவில் நடைபெறுகிறது. இலங்கை தொழில் சங்கம், கெசல்வத்தையில் உள்ள ஏ. ஈ. குணசிங்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய சோஷலிச கட்சி கொடவத்தையில் அதன் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறது. ஜுலை 1980 வேலை நிறுத்தக்காரர்கள் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மே தின கூட்டத்தை நடத்துகிறது.
 

பதுளையில் கடும் மழை

lightning-01.jpgபதுளை மாவட்டத்தின் பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை ரணுகொல்ல ஆறு பெருக்கெடுத்ததால் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் சிக்கிய மேலும் ஆறுபேர் காப்பாற்றப்பட்டனர். பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்

நாடுகடந்த தமிழீழம் – நிலம் தொடாத வேர் – ரி சோதிலிங்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் ஆரம்ப காலங்களிலேயே தடம்புரண்டு விட்டது. அதன் பின்பு நடைபெற்றது ஆயுதத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்டது விடுதலைப் போராட்டம் என்பதிலும் பார்க்க அதிகார வெறியுடனான போராட்டமாகவே அமைந்தது. இந்த அதிகார வெறிக்கான போராட்டத்தில் வே பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றையவர்களை வெற்றி கொண்டு வன்னி மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்து அழித்தொழித்தனர் அல்லது இலங்கையரசு அழித்தொழிப்பதற்கு உதவினர். இந்த அழித்தொழிப்பு வரலாறு அதனுடன் நிற்கவில்லை. ‘தமிழீழத் தேசியத் தலைவர்’ பெற்றுத் தராத தனித்தமிழீழத்தை அவரின் தடங்களைப் பின்பற்றி பெற்றுத் தருகிறேன் என்று மே 18க்குப் பின் உருவான மதிஉரைஞர் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழம் என்று கலையாட ஆரம்பித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் அழிவு இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் அழியும்வரை போராடி முழுத் தமிழர்களையும் இல்லாதொழிக்காமல் பாதுகாக்கப்பதற்கு உதவியுள்ளது என்பது யதார்த்தம். இன்னும் சில பத்து ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்ந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் என்ற இனம் இருந்தது என்பதே வரலாறாகி இருக்கும். அது தற்போது தடுக்கப்பட்டு உள்ளது. அதனால் தற்போது எமக்கு இருக்கின்ற வளங்களை இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இன்று வெளிநாடுகளில் பேசப்படுகின்ற நாடுகடந்த தமிழீழம் என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்களை ஏமாற்றுகின்ற அரசியலின் ஒரு தொடர்ச்சியே. உருத்திரகுமாரனின் சன்றைஸ் வானொலிப் பேட்டியின் போது கூறப்பட்ட கருத்துக்களின்படி புலிகள் ஒரு நிழல் அரசை வைத்திருந்தாகவும் அதன் போராட்ட தொடரச்சியையே இன்று இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற அமைப்பினர் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். தமிழ்ப்பிரதேசங்களில் புலிகளின் படை என்ன செய்தது என்பதும் இன்று வெளிநாடுகளில் இந்த நாடு கடந்த தமிழீழப் படை என்ன நடாத்தி முடிப்பார்கள் என்பதும் எதிர்வுகூறக் கூடியதே.

வணங்கா மண், கண்ணீர் வெள்ளம் போன்ற இன்னோரன்ன நிதி சேகரிப்புக்கும் அதற்குக் கணக்குக் காட்டுவதற்கும் இவ்வாறான அரசியல் சதிராட்டங்கள் அவசியம். ‘நாடு கடந்த தமிழீழம்’ என்றும் ஜனநாயகம் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் தமிழர்களின் நலன்களில் அக்கறை காட்டி தமது சுய தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். இப்படியானவர்களை வணங்கா மண் மூர்த்தி தொடக்கம் இல்போர்ட் பிள்ளையார் கோயில் செல்வராஜா வரை இப்பட்டியல் மிக நீளமானது. நாட்டுக்கு நாடு தனித்தனிப் பட்டியல் உண்டு.

இதைவிட புலிகள் அழிக்கப்பட்டு ஒரு வருடமாகும் இந்த சூழ்நிலைகளை மிகத்தந்திரமாக பயன்படுத்தி நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு ஒரு தேர்தல் வைக்கப்படுகின்றது. ‘தேசியத் தலைவர்’ இன் இறுதியாணை நிறைவேற்றியுள்ளதை காட்டி மீண்டும் நிதி சேகரிக்க ஆரம்பிக்கவே இந்த ‘நாடு கடந்த தமிழீழம்’ உதவப் போகின்றது என்பதே வெளிப்படையான உண்மை. இதில் பல முன்னணிக் கொள்ளையர்கள் சில உள்ளுர் கொள்ளையர்களை இப்போது அமர்த்தி இந்த நாடு கடந்த அரசு உருவாக்கம் என்ற நாடகத்தை தொடக்கிவிட்டு பின்னர் தாமே நேரடியாக களமிறங்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

சர்வதேச சட்டதிட்டங்களைப் படித்து சர்வதேச ஜனநாயக நாடுகளில் பல வருடங்களாக வாழ்ந்த உருத்திரகுமாரன் மக்கள் அமைப்புக்கள், மக்கள் போராட்டம் என்பது என்ன? மக்களின் பங்களிப்பு என்பது என்ன? என்ற அர்த்தம் புரியாமலே வானொலியில் பேசினாரா? அல்லது இவரும் மோசடியில் இணைந்து செயற்ப்படுகிறாரா? என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.

சன்றைஸ் வானொலியில் ஒருவரின் கேள்வியில் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று கூறும் உருத்திரகமாரன் ஏன் தமிழர்க்கும் ‘காலம் தான் பதில் சொல்லும்’ என்று இருக்காமல் ‘நாடுகடந்த தமிழீழம்’ என்று இயங்குகின்றார்.

இந்த நாடு கடந்த தமிழீழம் என்பது ஆரம்பிக்கப்பட்டது எப்படி? எந்த ஜனநாயக அடிப்படையில் இது உருவாக்கப்படடது? போன்ற விபரங்களை எந்த நாடு கடந்த தேர்தல் வேட்பாளர்களும் பேசுவதாக இல்லை. மாறாக இவர்களது விளம்பரங்களை பார்த்தால் இவர்கள் தமது சுய நலத்தின் அடிப்படையிலே பிரச்சாரங்களை செய்கிறார்கள். இவர்களால் மக்களுக்கு செய்த சேவைகள் பற்றி சொல்லவதற்கு எதுவுமே இல்லை. இவற்றைவிட இதில் சிலர் முன்னணி கிரடிற்காட் மற்றும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள்.

‘புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. போராட்டம் தொடரப்பட வேண்டும்’ என்பதே உருத்திரகுமாரனின் கருத்தாக இருக்கிறது. போராட்டம் எங்கே என்றால் ‘புலம்பெயர்ந்த நாட்டில்’ நடக்குமாம். நாடுகடந்த தமிழீழம் என்பதை தான் உருத்திரகுமார் போராட்டம் என்கிறார். தமிழீழம் யாருக்கு என்றால் என்றால் அது தாயகத்தில் உள்ள மக்களுக்காகவாம். இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு வாய்க்கால் வெட்டுகிறார்கள் என்ற அச்சம் நியாயமானதே. இம்முறை உருத்திரகுமாரன் தலைமையில் இந்த முள்ளிவாய்க்கால் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் புலிகளின் போராட்டம் பற்றிய எந்தவித மதிப்புக்களும் இல்லாமல் புலிகளின் பணங்கள் விபரங்கள் சொத்துக்கள் பற்றியோ யார் இவற்றிக்கெல்லாம் இன்று பொறுப்பானவர்கள் பற்றியோ எந்தவித பேச்சுக்கள் இல்லாமல் சிலர் ஒளித்திருந்து இந்த நாடுகடந்த தமிழீழத்தவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். திரைமறைவில் இருப்பவர்கள் யார்? இவர்கள் யாருடன் தொடர்புடையவர்கள்? போன்ற விபரங்களை வெளிப்படுத்தாவிட்டால் பிறகு எப்படி ஜனநாயக அமைப்பு, அது, இது என்று பேசுகிறார்கள். அது மட்டுமல்ல இவையாவும் மக்கள் போராட்டம் என்று உருத்திரகுமாரன் பேசுகிறார். இது உருத்திரகுமாரனுக்கு மக்கள் போராட்டம் என்றால் என்ன என்று விளங்கவில்லை என்பதேயாகும். இவர் சன்றைஸ் வானொலியில் பேசும் போது ‘புலிப் போராளிகள் மக்களிடமிருந்தே வந்தனர். ஆகவே இது மக்கள்’ போராட்டம் என்றார். இவர் சுருக்கமாக ‘தலைவர்’ தமிழ் மக்களிடமிருந்தே வந்தார் ஆகவே இது மக்கள் போராட்டம் என்று சொல்லியிருக்கலாம்தானே.

இதர தமிழ்க்கட்சிகள் ரிஎன்ஏ மற்றும் திம்பு பேச்சவார்த்ததையில் ஈடுபட்ட அமைப்புக்களிடம் எந்தவித கலந்தாலோசனைகளும் இல்லாமல், இதர தமிழ்க் கட்சிகளுடன் எந்த ஒரு கூட்டிணைவையும் ஏற்படுத்தாமல் அல்லது அதற்கான முயற்சிகளையும் செய்யாமல் நாடு கடந்த தமிழீழம் மீண்டும் ஏகபிரதிநிதித்துவம் பாணியில் புறப்பட்டு உள்ளனர். இந்த நாடுகடந்த தமிழிழத்துக்கான ஆணைபெறல் என்பது புலிகள் பாணியிலான ஏகபோக பிரதிநிதித்துவம் என்ற சண்டித்தனமேயன்றி வேறேதுமில்லை.

‘இந்த நாடு கடந்த தமிழீழத்தை தாயகத்துக்குள் புகுத்துவதற்கு ஒரு இடைவெளியை சர்வதேசம் ஏற்படுத்தும்’ என்றும் ‘இந்த இடைவெளியை உருவாவதற்கு சர்வதேச சமூகத்திலும் இந்திய பிராந்தியத்திலும் உள்ள சர்வதேச மயமாக்கலில் ஏற்படவுள்ள சீன இந்திய உறவு விரிசல்களை உருவாக்கும்’ எனவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார். இவர்கள் இதனை நம்பியே ‘மக்கள் போராட்டத்ததை’ நடாத்துகிறார்கள். இவர்களும் நிலத்தை தொடாத ஆணி வேர்களேயாகும். ‘இன்று நாட்டிலுள்ள தலைமைகள் ரிஎன்ஏ இந்தியாவின் கையாட்கள்’ என்றும் ‘இலங்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லை’ என்றும் ‘வெளிநாடுகளிலேயே இந்த உத்தேச தமிழீழத்தை வளர்க்க வேண்டும்’ என்றும் உருத்திரகுமாரன் கருத்துப்பகிர்வு செய்வதன் மூலம் மக்களைத் தொடாத மக்கள் சம்பந்தப்படாத ஒருவிடயத்தை மக்கள் மீது திணிப்பதாகவே உள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழ் இளைஞர்க்கு ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே ஆயதப் போராட்டத்தை புலிகள் நடத்தியதாகவும் இன்று அதன் மற்றுமொரு வடிவமாகவே இந்த நாடு கடந்த தமிழீழம் அமைக்கப்படுவதாகவும் உருத்திரகுமாரன் கருத்து தெரிவித்தார்.

‘இந்த ஆயுதப் போராட்டத்திற்கு புலிகளுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஒரு புலிகளின் நிழல் அரசு இருந்ததாகவும் இதில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் இதில் புலிகள் இன்று ஆயுதங்களை மெளனித்துள்ளதாகவும்’ உருத்திரகுமாரன் தெரிவிக்க முயன்று ‘புலிகளின் தலைவர் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார். மக்கள் போராட்டத்தில் மக்கள் தலைவருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லத் துணிவில்லாதவரை நம்பி இத்தனை வேட்பாளர்கள் தமது சுயமரியாதையை இங்கே இழக்க உள்ளனர்.

இதே வானொலி நிகழ்வில் யூத மக்கள் பெருந்தொகையாக கொல்லப்பட்ட பின்பே இஸ்ரேல் உருவானதாகவும் இதேபோல் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருப்தாகவும் தமிழீழம் மலரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் உருத்திரகுமாரன்.

இந்த உருத்திரகுமாரின் பேச்சில் இவரும் முள்ளிவாய்யகாலில் பெருந்தொகையாக மக்கள் கொல்லப்பட்டதிற்கு புலிகள் மக்கள் இருப்புக்களின் மீது தாக்குதல் நடாத்தி மக்களை கொலை செய்ததற்கும் தொடர்புடையரவாகவே தென்படுகின்றுது. ஜபிசி-வானொலி, ஜிரிவி, தீபம் தொலைக்காட்சி சேவையினர் இந்த தமிழ் மக்களை தொகையாக கொலைக்களத்தில் தள்ளியதில் தொடர்புடையவர்களே. இவர்கள் புலம்பெயர்நாட்டில் இருந்து கொண்டு தமது சுயநலனுக்காக இளைய தலைமுறையினரை உசுப்பிவிட்டதில் பெரும்பங்கு கொண்டவர்களாகும். இப்போது இவர்கள் மீண்டும் நாடு கடந்த தமிழிழத்திற்கான குத்தகையை பெற்றுக் கொண்டுள்னர். இன்று இவர்கள் ‘மக்கள் ஆணை’ என்றும் ‘மக்கள் தீர்ப்பு’ என்ற பொய்யான பிரச்சாரங்களை தொடக்கிவிட்டுள்ளனர்.

ஜிரிவி, ஜபிசி, தீபம் அமைப்பினரும் புலிகளால் மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் பங்கு போட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்து இதில் குறிப்பாக முதலாம் கட்ட போர் நிதியிலிருந்து கண்ணீர் வெள்ளம், வணங்காமண், இறுதிக்காலப் போர்நிதி தமிழீழ காப்புறுதி என பலவகைப்பட்ட நிதி சேகரிப்புக்களுக்கு செய்யப்படும் பிரச்சாரங்கள் புலி இணைவு ஊடகங்களான இவர்களாலேயே மக்கள் ஏமாற்றப்பட்டதாகும்.

‘நாடு கடந்த தமிழீழம் கடந்தகால புலிகளின் போராட்ட தொடர்ச்சி’ என்று கூறும் உருத்திரகுமாரன் ‘கடந்த காலத்தில் நடைபெற்றது மக்கள் போராட்டம்’ என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களும் தமிழ்பேசும் மக்களே என்று கூறும் உருத்திரகுமாரன் முஸ்லீம்களை ஏன் சுட்டுத்துரத்தினர் என்பது பற்றி மெளனமாகவே உள்ளார்.

முஸ்லீம்கள் தமிழ்பேசும் மக்கள் என்றால் இந்த நாடு கடந்த தமிழீழம் அமைப்பினர் எந்த முஸ்லீம் அமைப்புடன் பிரதிநிதிகளுடன் பேசினர் என்பதை இன்று வரையில் ஏன் வெளியிடவில்லை.

ரிஎன்ஏ தமிழரசுக் கட்சியினர் குறைந்த பட்சம் ஒரு சிங்களவரையென்றாலும் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தி வெற்றியும் பெற்றனர் இந்த 30 வருட மக்கள் போராட்ட ஜனநாயக அனுபவம் என்று கூறும் உருத்திரகுமாரனும் இந்த நாடுகடந்த தமிழீழத்திற்கான அமைப்பினரும் எத்தனை முஸ்லீம்களை இந்த நாடுகடந்த தமிழீழ வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மாறாக இந்த நாடுகடந்த பாராளுமன்றத்திற்கான வேட்பாளர்களில் பலர் முன்னாள் புலிகளும், புலிகளின் பெயரில் தமது சுய தேவைகளை பூர்த்தி செய்தவர்களும் புலிகளினால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களிலிருந்து பணங்களை திருடியவர்களும், இதர தமிழ் முஸ்லீம் அமைப்பினரையும் அமைப்புக்களையும் துரோகிகள் என் முத்திரை குத்தியவர்களும், முஸ்லீம்களை தமிழ் இன விரோதிகள் என வர்ணித்து புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் பேசியவர்களும், இதர கட்சிகள், சமூக அமைப்பினர், இயக்கங்கள், சங்கங்களின் மீது பயங்கரவாத்தினை கனடா, ஜரோப்பாவிலும் இலங்கையிலும் நடாத்தியவர்களுமேயாகும்.

இதைவிட வன்னி மக்கள் வன்னி போரின்போது வன்னி மண்ணைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் தலைவுடன் இருந்து பேராட வேண்டியவர்கள் என்றும் போர் கொடுமைகளிலிருந்து தப்பி ஓடியவர்கள் இனத்துரோகிகள் என்றும், தலைவனை விட்டுவிட்டு அரச முகாமிற்கு வந்தவர்களுக்கு (குழந்தைகள், விதவைகள் வயது வந்த முதியவர்கள்) உதவிகள் செய்யக்கூடாது என்றும் இவர்களை அரச முகாம்களிலிருந்து சாக வேண்டியவர்கள் என்றெல்லாம் இந்த நாடு கடந்த தமிழிழத்திறகான வேட்பாளர்களில் பலர் நேரடியாக ஜபிசி, ஜிரிவில் கருத்துக்களை முன்வைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான இவர்கள் தமது கடந்தகால தவறுகளையும் மக்கள் விரோதங்களையும் ஒன்று சேர கூட்டி அள்ளி தமது தலையில் வைத்துக்கொண்டு மீண்டும் மக்கள் முன் பசுத்தோல் போர்த்துக்கொண்டு அப்பாவிகள் போன்று நிற்கிறார்கள் தமிழ், சிங்கள, முஸ்லீம்மக்கள் இவர்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் கடந்தகால புலி ஆதரவு பற்றிய ஒரு முழுமையான விமர்சனமேயாகும். இவர்கள் தமது கடந்தகால புலி ஆதரவு பற்றிய சுய விமர்சனத்தை பொதுவாக மக்கள் முன்வைக்காது மக்கள் முன்வந்து நிற்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை கொடுத்துள்ளது.

‘புலிகள் அமைப்பும் மக்கள் அமைப்பு ஜனநாயக அமைப்பு’ என்று அடிக்கடி கூறும் உருத்திரகுமாரன் ஏன் புலிகளின் கடந்தகாலம் பற்றியோ புலிகளின் நிதிகள் பற்றியோ புலிகளின் சொத்துக்கள் பற்றியோ ஏதும் பேசாமல் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்களின் ஜனநாயகப் பண்பும் வெளிநாடுகள் தம்மை தமது நலனுடன் இணைத்தே ஆதரிப்பர் என்பதும் இந்த அமைப்பு எந்த விடயங்களையும் தமிழ் மக்களின் நலனில் இருந்தோ நாட்டிலுள்ள அரசியல் சூழ்நிலைகிளிலிருந்தோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த நாடு கடந்த அமைப்பின் பேராசிரியர் ஒருவர் தனது கட்டுரையில் இது மக்கள் அமைப்பு என்றும் மக்களிடமிருந்து பணம் வந்தால் மட்டுமே இந்த அமைப்பு இயங்க முடியும் என்றும் எழுதியதும் இந்த அமைப்பும் அமைப்பின் முன்னிணயாளர்களது நோக்கமும் சந்தேகத்தை வளர்த்து விட்டுள்ளது.

கடந்தகால புலிகளின் ‘மக்கள் போராட்டத்தின்’ போது காயப்பட்ட, தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் இந்த நாடு கடந்த தமிழீழத்தவர்கள் செய்த பணி என்ன? இந்த நாடு கடந்த வேட்பாளர்களின் பிரசுரங்களில் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவிகள் பற்றி என்ன இருந்தது? தாம் முள்ளிவாய்க்கால் வரையிலான தமது பங்களிப்பின் புலிகளுக்கான ஆதரவின் மதிப்பீடு என்ன? என்ற ஏதாவது கருத்துக்கள் உண்டா? எல்லாமே தமது சுய புராணமும் தமிழர்களின் உரிமைப்போராட்டம் பற்றிய ஆழுமையற்ற கருத்துக்களும் வசனங்களுமேயாகும். இவையாவும் இவர்களில் பலர் போராட்டம் மக்களுக்கான சேவை பற்றிய தப்பான அபிப்பிராயமும் இந்த நாடுகடந்த தமிழீழம் என்ற வாகனத்தில் ஏறி தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிதி சேர்த்துக்கொண்டு தப்பிவிடுவார்கள் என்ற பலமான சந்தேகம் புலம்பெயர்நாடுகளில் தமிழர்களிடையே வளர்ந்து விட்டது – இதே போன்ற சம்பவங்களால் புலிகளின் கடந்தகால போராட்ட வரலாறு நிறைந்துள்ளதும் இதன் அனுபவ அடிப்படையில் தாமும் பணம் திருடும் நோக்கம் இதில் நிறையவே உள்ளதை புலம்பெயர்மக்களில் பலர் உணர்கிறார்கள்.

இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள மக்கள் என்றுமே தலைவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகியதும் அவர்களைத் தூக்கியெறிந்த வரலாறு கொண்டவர்கள். வன்னி யுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் மக்கள் அவர்களைத் தூக்கியெறிந்ததே. அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்களால் தூக்கியெறியப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாடு கடந்த தமிழீழத்தின் தாயகக் கட்சியாக உருவாக்கப்பட இருந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தாயக மக்களால் நிராகரிக்கப்பட்டனர். கொங்கிரஸ் கட்சியில் நின்று புலம்பெயர்ந்த மக்களின் தயவில் போட்டியிட்ட இவர்களை மக்கள் முற்றாக நிராகரித்தனர். உருத்திரகுமாரன் தலைமையில் உள்ள நாடு கடந்த தமிழீழத்தவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.

மானிடம் வெல்லும்.

இந்திய, பாக்., பங்களாதேஷ் பிரதமர்களுடன் ஜனாதிபதி மஹிந்த பேச்சுவார்த்தை

m-r.jpgஇந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவியதாகவும் இதனால் கிடைத்த முன்னேற்றம் தெற்காசிய வலயத்துக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்துக்கும் முன்மாதிரியாகுமென்றும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் கூறினர்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை ஜனாதிபதி பெற்ற அமோக வெற்றி தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சார்க் வலய பாராளுமன்றமொன்றை அமைக்கும் நடவடிக்கை அடுத்த வருடத்துக்குள் செயற்படுத்தப்பட வேண்டுமென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு சுட்டிக்காட்டினார். அதற்காக பாகிஸ்தான் – இலங்கை மற்றும் பங்களாதேஷ் – இலங்கை என கூட்டு ஆணைக் குழுக்களை ஏற்படுத்துதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தாகும். அதேபோன்று இந்த நாடுகளுக்கிடையே விமான சேவைகளை மேலும் அபிவிருத்தி செய்யவும் பேச்சு இடம்பெற்றது.

பங்களாதேஷ் தலைநகரான டாக்காவுக்கு மிஹின் எயார் விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதியுடன் ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் எதிர்காலத்தில் பணியாற்ற பாகிஸ்தானிய மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

சிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்

mervyn2.jpgஊடகத் துறை அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களுக்கு “கேக் ஊட்டி” மகிழ்வித்தார். தகவல் ஊடகத்துறை பதிலமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுக்காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாகக் கையேற்றார்.

அந் நிகழ்வில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த “கேக்”கை அவர் ஊடகவியலாளர்களை அழைத்து வெட்ட வைத்ததுடன் அவர்களுக்கு “கேக்” ஊட்டியும் மகிழ்வித்தார்.

கடந்த காலங்களில் சில ஊடக நிறுவனங்களுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அத்தகைய கசப்பான சம்பவங்களை மறந்து சகோதரத்துவத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர் “சிரச” ஊடகவியலாளரைக் குறிப்பிட்டு “கேக்” வெட்ட அழைத்தார். அவ்வாறு வெட்டப்பட்ட “கேக்”கை சிரச ஊடகவியலாளர் அமைச்சருக்கு ஊட்ட அமைச்சரும் அவ்வூடகவியலாளருக்கு திருப்பி ஊட்டினார். அத்துடன் “திவயின” ஊடகவியலாளருக்கும் அமைச்சர் ஊட்டினார். இதன் போது ஊடகவியலாளர்கள் கரங்களைத் தட்டி ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா அடுத்த வாரம் செய்தியாளரை சந்திப்பார்- விஜித ஹேரத்

sarath_.jpgபாராளு மன்றம் அடுத்த வாரம் கூடும்போது அமர்வுகளில் பங்கேற்கவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளார். இதனை ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. விஜித ஹேரத் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற முதலாவது கூட்டத்தின் போது ஜெனரல் பொன்சேகாவை ஊடகவியலாளர் சந்திக்க முடியவில்லை. அத்துடன், அவருடைய உரையை சில ஊடகங்கள் இருட்டடிப்பு செய்திருந்தன. இப்போது அவருக்குக் கிடைத்திருக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் பிரகாரம் அவர் செய்தியாளர் மாநாட்டை நடத்துவார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதேவேளை, அவசர சபைச்சட்ட நீடிப்புத் தொடர்பான விவாதம் மே மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற விருப்பதாகவும் அந்த விவாதத்தில் எதிரணியின் பிரதான பேச்சாளராகப் பொன்சேகா உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜித ஹேரத் கூறினார்.

நாட்டிலுள்ள மனித உரிமைகள் துஷ்பிரயோகம் குறித்து பொன்சேகா பேசுவார். தனிப்பட்ட முறையில் இப்பிரச்சினைகளை பொன்சேகா எதிர்கொண்டுள்ளார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார். அதேவேளை, எதிர்காலத் தேர்தல்களில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணத்தின் கீழேயே ஜே.வி.பி. போட்டியிடுமெனவும் ஹேரத் கூறியுள்ளார்