Multiple Page/Post

சட்டவிரோதமாக இரு திருமணம் செய்தவருக்கு சிறைத் தண்டனை

நீர்கொழும்பு நிருபர்: சட்ட விரோதமாக இரண்டு திருமணங்களைச் செய்தவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடமும் 8 மாத சிறையும் 1500 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீர்கொழும்பு பிரதான நீதிபதி ஜயகி அல்விஸ் விதித்துள்ளார்.

தூனகஹ, கடவலயைச் சேர்ந்த ஜே.எம்.சன்ஜீவ சம்பத் என்பவருக்கே இத் தண்டவை வழங்கப்பட்டது. இவர் 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி மட்டக்குளி தேவஸ்தானத்தில் சட்டப்படி மட்டக்குளியை சேர்ந்த என்.சந்திமா நிலுகஷா என்வரே திருமணம் செய்துள்ளார்.

இவர் மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டுமொரு திருமணம் செய்துள்ளதாக முதல் முனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இவரின் வழக்கு விசாரணையின் போது இவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவே நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார்.

சூதாட்ட சட்டமூலத்துக்கு 81 மேலதிக வாக்குகளால் சபை அங்கீகாரம்

சபை நிருபர்கள்: சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பிரதியமைச்சர் சரத் அமுனுகம சமர்ப்பித்து உரையாற்றி அதனை நிறைவேற்ற சபையின் அங்கீகாரத்தைக் கோரினார். இதன் பின் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விவாத முடிவில் எதிர்க்கட்சிப் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க பெயர்கூறிய வாக்கெடுப்பைக் கோரினார். இதையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுடன் அரசதரப்பின் முன்வரிசை அமைச்சர்களில் 9 பேர் உட்பட இன்னும் சிலர் கலந்துகொள்ளவில்லை.

அத்துரலிய ரத்தின தேரர்,எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

யாழ். நூலகத்தில் என்ன நடந்தது என்ற சகலருக்குமான ஓர் உண்மை விளக்கம்!

தமிழ் மக்களை மறுபடியும் பதட்டமானதும், குழப்பமானதுமான சூழலுக்குள்  தள்ளிவிடவும், எமது மக்கள் மீது மறுபடியும் அவலங்களைச் சுமத்தி விடவும் வழி வகுக்கும் தவறான வழிமுறையில் செயற்படுவதை இனியாவது நிறுத்தி, எமது மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவும், கருத்து வெளியிடவும் முன்வருமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரை நோக்கியும் நாம் எமது மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் அ.இராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அரசியல் சுயலாபங்களுக்காக மட்டும்  கருத்து வெளியிட்டு தமிழ் மக்களிடையே தவறான தகவல்களை திணித்து அவர்களை தொடர்ந்தும் பதட்டமும் குழப்பமுமான ஒரு சூழலுக்குள் தள்ளி விடும் சூழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமை என்ற வகையில் யாழ். நூலகத்தில் என்ன நடந்தது என்ற உண்மை விளக்கத்தை நாம் சகலருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப்பயணிகளாக யாழ். நோக்கி வருகின்ற மக்கள் தெற்காசியாவின் சிறந்த நூலகமாக கருதப்படும் யாழ். நூலகத்தை தினமும் பார்வையிட்டு வருவது வழமை. நூலகத்தை பார்வையிடுவதற்கான நேரமும் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை என நூலக நிர்வாகத்தினால் வரையறுக்கப்பட்டிருப்பதையும் சகலரும் அறிவர். அந்த வகையில் கடந்த 21.10.2010 அன்றும் வழமைபோல் நூலகத்தை பார்வையிட தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

ஆனாலும், குறித்த தினத்தில் யாழ். நூலக மண்டபத்தில் அகில இலங்கை மருத்துவர் மாநாடு நடந்து கொண்டிருப்பதாகவும், 23 ஆம் திகதியே நூலகத்தை பார்வையிடுவது சாத்தியம் என்றும் நூலக நிர்வாகத்தால் கருத்து தெரிவிக்கபட்டதை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றிருந்தனர்.

இதேபோல், மறுதினமாகிய 22.10.2010 அன்றும் தென்னிலங்கை மக்களில் இன்னொரு பகுதியினர் நூலகத்தைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுக்கும் முதல் நாளன்று சொல்லப்பட்டது போல் 23 ஆம் திகதி மாலையில் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

நூலக நிர்வாகத்தினர் சொன்னது போல் ஏற்கனவே இரு தினங்களிலும் வந்திருந்த தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் 23 ஆம் திகதி மாலை யாழ். நூலகத்தை பார்வையிடும் ஆர்வத்தோடு மறுபடியும் நூலகம் நோக்கி வந்திருந்தனர். அவர்களோடு அன்றைய தினம் புதிதாகவும் இன்னொரு பகுதி மக்களும் அங்கு வந்திருந்தனர்.

ஆனாலும், அன்றைய தினம் மாலை 4.30 க்கு முடிவடைவதாக இருந்த அகில இலங்கை மருத்துவர் மாநாடு குறித்த நேரத்தில் முடிவடையாத காரணத்தினால் அந்த மாநாட்டின் நலன் கருதி, அன்றைய தினமும் குறித்த நேரத்தில் நூலகத்தை பார்வையிட அனுமதிக்க முடியாத ஒரு சூழலில் யாழ் நூலக நிர்வாகத்தினர் சுற்றுலாப்பயணிகளோடு பேசி தமது தவிர்க்க முடியாத சூழலை எடுத்து விளக்கியிருந்தனர்.

ஏற்கனவே நூலகத்தைப் பார்வையிட வந்து முடியாமல் போன தென்னிலங்கை மக்கள் மறுபடியும் குறித்த தினத்திலும் தம்மால் நூலகத்தை பார்வையிட முடியாத ஒரு சூழலில் தாம் ஏமாற்றப்படுவதாகவும், திட்டமிட்ட முறையிலேயே தமக்கு நூலகத்தை பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் தவறாக எண்ணி நூலக நிர்வாகத்தினர் மீது சந்தேகம் கொண்டவர்களாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளுக்கும், யாழ். நூலக நிர்வாகத்தினருக்கும் இடையில் நூலக வாசலில் நடந்து கொண்டிருந்தது. உள்ளே நடந்து கொண்டிருந்த அகில இலங்கை மருத்துவர் மாநாடும் முடிவடைந்து விட்டது.

இந்த இடைவெளிக்குள் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் யாழ். நூலக நிர்வாகத்தினரும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியிலும் சுமுகமானதொரு தீர்மானத்திற்கும் வந்திருந்தனர். குறித்த நேரம் கடந்த போதிலும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் நேரம் தாமதித்தாவது நூலகத்தினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். உள்ளே சென்ற சுற்றுலாப் பயணிகள் யாழ் நூலகத்தை பார்வையிட்ட மகிழ்ச்சியோடு வெளியேறிச் சென்றிருந்தனர்.

இதுவே உண்மையில் நடந்த சம்பவமாகும். ஆனாலும் நடந்ததை நடக்கவில்லை என்றும், நடந்திருக்காததை நடந்தது என்றும் வழமை போல் திட்டமிடப்பட்டு கட்டி விடப்பட்ட கட்டுக்கதைகள் காட்டுத்தீ போல் பரப்பட்டிருந்தன.

திட்டமிட்டு பரப்பி விடப்பட்ட செய்திகளால் தமிழ் மக்களை மறு படியும் பதட்டமானதும் குழப்பமானதுமான ஒரு சூழலுக்குள் தள்ளி விடும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளிவிடும் பொது நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். நூலகத்தில் சகல தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்.

இதில், யாழ். மாநகர முதல்வர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரி உட்பட ஆளும், மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த மாநகர சபை உறுப்பினர்கள், யாழ். நூலக நிர்வாகத்தினர். பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார், பொது அமைப்பு பிரதிநிதிகள், நலன் விரும்பிகள், மற்றும் சமூக அக்கறையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பதட்டமான சூழலை உருவாக்க முனையும் கபடத்தனங்களுக்கு எந்த தரப்பினரும் பலியாகி விடக்கூடாது என்றும், இதில் எவருடைய மனங்களாவது தவறான சந்தேகங்களால் காயப்பட்டிருப்பின், அது தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளின் மனங்களாக இருந்தாலென்ன, அல்லது யாழ். நூலகம் சார்ந்தவர்களின் மனங்களாக இருந்தாலென்ன, இரு தரப்பு மன உணர்வுகளையும் புரிந்து கொண்டு ஒரு சம்பவத்தை ஊதிப்பெருப்பிக்கும் சூழ்ச்சியை உடைத்தெறியும் நல்லெண்ணங்களோடு சகலரிடமும் ஒரு அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் பெருந்தன்மையோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்திருந்த அனுபவம் மிக்க அணுகுமுறையை அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்ததோடு பாராட்டியும் சென்றிருந்தனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வடக்காயும், கிழக்கு கிழக்காயும் இருக்க வட – கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டியது காலத்தின் தேவை! : இரா வி விஷ்ணு (swiss)

North_East_SLஅண்மைய சில நாட்களாக தமிழ் அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாலர்கக்கும் மட்டும் மெல்லக்கிடைத்திருக்கும் அவல் (பழசுதான் ) வட-கிழக்கு இணைப்பு. வட-கிழக்கு இணைப்பு என்பது இனப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டபோதே தமிழ் தலைமைகளினால் கையில் எடுக்கப்பட்ட தீர்வு கோரிக்கையில் ஒன்று அல்லது தாயக கோரிக்கை என்பது அறிந்ததே.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்த அரசியல், ஆயுத போராட்டம் பல விடையங்களை செய்து முடித்திருக்கிறது, ஒரு சில விடங்களை புரட்டி போட்டிருக்கிறது அரசியல் ரீதியில் மக்களின் மனங்களை பக்குவமடைய செய்திருக்கிறது (புலம்பெயர் தமிழர்?? ) எல்லாவற்றுக்கும் மேலாக போராட்டம் தொடர்பான படிப்பினையை அனுபவ ரீதியில் கற்றுத்தந்திருக்கிறது. இன்னும் சில அரசியல் வாதிகள் கொள்கைரீதியில் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என்பது எம் சமூகத்தின் பாரிய குறை என்பதே உண்மை .

வடக்கும் கிழக்கும் இணைத்திருக்க வேண்டுமா, பிரிந்திருக்க வேண்டுமா, சேர்த்து இயங்குவதா அல்லது நிர்வாக ரீதியில் செர்ந்தியகுவதா பிரிந்தியங்குவதா என்பது வடக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களும் அரசியல்வாதிகளும், கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விடையம் என்பது யதார்த்தம்.

இப்போதிருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் வட-கிழக்கு இணைப்பு என்பது பரவலாக வடமாகாணத்தை பிரதிநித்துவ படுத்துகின்ற பல தமிழ் தலைமைகளின் பக்கமிருந்து மட்டுமே இக்கோரிக்கை வருகின்றதே தவிர கிழக்கு தலைமைக்களும் சரி, கிழக்கு மக்களும் சரி இந்த விடையத்தை பெரிதாக கருதுவதாக இல்லை .

கிழக்கு மக்களை பொருத்தவரை விசேடமாக தமிழ் மக்களை பொறுத்தவரை தங்களுக்கென்றொரு சரியான தலைமை கிழக்கை பிரதிநித்துவப்படுத்துவதர்க்கு தேவை என கருதுகின்றனர். அதற்கு சான்றாகவே கிழக்கு மாகாண சபை தேர்தலின் பொது கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியை சார்ந்தவர்களுக்கு தமது பரவலான ஆதரவை தெருவித்திருந்தனர் . வடகிழக்கு இணைப்பை வலியுறுத்திய தமிழ் கட்சிக் கூட்டமைப்புக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைத்திருந்தது. இன்றைய நிலைமையில் வடகிழக்கு இணைப்பு என்பது வெறுமனே அரசியல் வாதிகள் முடிவு செய்ய வேண்டிய விடயமில்லை கிழக்கு மக்களும் கிழக்கு அரசியல் வாதிகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விடயம் என்பதை பெரும்பாலும் வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.சிங்கள ஆட்சியாளர்களை போல் கடந்த கால கசப்புனர்வுக்களும், நப்பிக்கைஜீனங்க்களும் தமிழ் தலைமகள் மீதும் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
 
வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதென்பது நிர்வாக ரீதியில் இரு மாகாணங்களுக்கு நன்மையே தவிர. அதிகாரங்கள் என்பதே இன்றைய பிரச்சனை இந்த அதிகாரங்களை எவ்வாறு நாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வது என்பதே நாம் இன்றைய சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய விடயம். தமிழர்களில் அரசியல், ஆயுதபோராட்டத்தில் நியாயம் இருக்கின்றது. இழப்புக்கள் நிறையவே இருக்கிறது அதனை வெறுமனே ஆயுத போராட்டம் என்றளவில் வெற்றி தோல்வி என்று கணக்கேடுத்துவிட முடியாது. தமிழர்களுக்கான பொதுவாக சொல்வதானால் சிறுபான்மையியருக்கான அரசியல் தீர்வு என்பது உடனடியாக பெற்றே ஆகவேண்டிய விடயம் . வட -கிழக்கு தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரான முஸ்லீம், மலையக தமிழர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய விடயம். அவற்றை சரியாக செய்தாலே சிறுபான்மையினருக்கான தீர்வென்பது நிரந்தரமான தீர்வொன்றுக்கு வழிகோலுமே தவிர வட- கிழக்கு இணைப்புதான் நிரந்தர தீர்வில் முக்கியமென சொல்லுவதெல்லாம் வெறுமனே தமிழ் தேசியத்தை மட்டும் கட்டிக்காக்க முயலும் கடும்போக்கு தமிழ் அரசியல் வாதிகள் தொடர்தும் தமது வண்டிகளை உருட்டுவதற்க்கும் தமிழர்களை உசுப்பேத்தி தம் பதவிகளை பாதுகத்துகொள்ளவே இன்றைய சூழ்நிலையில் உதவும் .

இலங்கையின் இன்றைய நிலைமை என்பது தமிழர்களின் பிரச்சனைகளை ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம். அந்தவகையில் தமிழ் கட்சிகள் பல ஒன்றிணைந்து ”கட்சிகள் அரங்கம்” நடத்துவது வரவேற்கத்தக்க விடயம். அதிலும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க, செல்வாக்கற்ற கட்சிகள் அனைத்துமே ஒன்றிணைந்து பேச எத்தனித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதுவரை தமிழர்களிடைய ஆயுதங்களே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. இனியாவது கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தட்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வரங்கத்தில் சேர்ந்து செயட்படுவதுபோல் சமீட்சை காட்டியிருப்பது வரவேற்கத்தக்க விடயம். ஒற்றுமை என்பதே இலங்கைத் தமிழர்க்கு விதிவிலக்கு போல் இருந்தது, இனியாவது பதவி மோகத்தை விட்டு வெளிவருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

North_East_SLதமிழர்களுக்கான தீர்வென்பது வருங்காலத்தில் இப்போதைய பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் வருங்காலத்தில் புதிய பிரச்சனைகளை உருவாக்காததாகவும் இருக்க வேண்டும். தீர்வென்பது தமிழ் பேசும் மக்களை மட்டுமின்றி சிங்கள மக்களையும் திருப்திபடுத்துவதாய் இருக்க வேண்டுமென்பது சிங்கள தலைமைகளின் கருத்தாக இருந்து வருகின்றது. அதேபோன்றே தமிழ் தலைமைகளும் வடமாகாண, கிழக்குமாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் திருப்திப்படுத்த கூடியவாறு தமது தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வட-கிழக்கு இணைப்பு என்பது வெறுமனே தமிழர்களின் கையில் இல்லை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ் கட்சி அரங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்த விடயம். இந்நிலையில் வடக்கும் கிழக்கும் சட்டரீதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தைப் போன்று விரைவில் வட மாகாணசபை தேர்தலும் நடத்தப்படும் நிலையில் இருக்கும் பொது வட- கிழக்கு இணைப்புபற்றி இன்றைய சூழ்நிலையில் பேசுவது சிங்கள மக்களை எமக்கெதிராக திருப்பிவிடக்கூடது.
 
வட – கிழக்கு இணைப்பு பற்றி பேசும் தமிழ் தலைமைகள் ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும். வட -கிழக்கு இணைப்பென்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தற்காலிகமானதே தவிர கிழக்கு மாகாண மக்கள் விரும்பினாலே தொடர்து இணைந்திருக்க முடியுமென்பது அன்றே மாகாணங்களுக்கிடையில் கசப்புனர்வுவர வாய்புகள் இருக்கலாமென்றே பாதுகாப்புக்காக இந்த விடயம் தெருவிக்க பட்டிருந்தது. தமிழ் தலைமைகளின் மீதுள்ள நம்பிக்கையீனம், பலவீனம், பிரதேசரீதியான கசப்புணர்வுகள் என இன்றைய எமது தமிழ் சமூகத்தின் பலவீனமான நிலையில் இந்தவிடையத்த கையில் எடுத்து வெற்றி காண்பதென்பது கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டுமென்பதில் பெரும்பாலானோர் நிலைபாடாக இருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் இணைப்புக்கு இணங்காதவரை சாத்தியமில்லாத விடயமே.

இந்த நிலையில் கிழக்கு மாகாண அரசியல் தலைமைகள் பலமாக உள்ளனவா என்கிற கேள்வி கிழக்குமாகாண மக்களிடையே பரவலாக காணப்படுகின்றன. இன்றைய நிலையில் சந்திரகாந்தன் , முரளிதரன், அரியநேந்திரன், சிவகீதா, துரைரெத்திணம் போன்ற தலைமைகள்தான் அல்லது அவர்களை சார்ந்தவர்கள்தான் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தப் போகின்றனரா? இன்றைய காலகட்டத்தில் இவர்கள் மீது இவர்கள் செயட்பாடுகள் மீதும் சரி பிழைகள் நிச்சயமாக இருக்கின்றன. இந்நிலையில் கிழக்கை பிரதிநிதுத்துவப்படுத்து இவர்களுக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. கிழக்குக்கான புதிய பல திறமையான அரசியல் வாதிகளை உருவாக்க வேண்டியதும் இனங்காட்ட வேண்டியதுமான பொறுப்பு கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும் இருக்கின்றது. இனி இலங்கையின் எதிகாலமேன்பது மாகாண சபைகளை மையப்படுத்தியதாகவே பொருளாதாரமும், நிர்வாகமும் செயட்படவேண்டி இருக்கும். அந்த நோக்கிலான கருத்துக்களே இலங்கை அரசு பக்கம் இருந்து
வந்து கொண்டிருக்கின்றன. கிழக்காக இருந்தாலும் சரி வடக்காக இருந்தாலும் சரி அவை நிர்வாக ரீதில் பிரிந்தே இன்ருப்பதே இன்றைய நிலையில் சாத்தியமானதாக தோன்றுகிறது. அதே நேரம் நிர்வாக ரீதியில் பிரிந்திருந்தாலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் வருங்காலத்தில் வடமாகாண சபையும் கிழக்குமாகாண சபையும் பல விடையங்களில் ஒன்றாக குரல்கொடுக்கவும், இணக்கப்படுகளுடன் பல விடயங்களில் செயற்படவும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அகவே மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடனான, இன உறவுகளை மேன்படுத்தகூடியதும், சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான அதிகாரங்கள், தீர்வுகள் பற்றி பேச ஆரம்பிப்பெதேன்பது இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான தீர்வாக அமையலாம்.
 
அடுத்த வருடம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையில். புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடென்ன?, யாரெல்லாம் போட்டியிட போகிறார்கலேன்று பார்க்கலாம். இதில் தற்போதைய அமைச்சர் டக்லஸ் தேவானந்தவா இல்ல சுரேஷ் பிரேமச்சந்திரனா, மாவை செனாதிராஜாவா, (சம்பந்தரையாவை விடுவார்களா?) , முன்னாள் வட – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாலா, இல்லை இவர்களையும் தாண்டி கே .பி எனும் குமரன் பத்மாநாதனா வட மாகாணசபையின் முதலமைசராகிராறேன்று பொறுத்திருந்து பார்போம்.

நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அனுமதியின்றி கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

தென்பகுதிகளிலிருந்து வந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் நேற்று நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியுள்ளனர். அக்காணியில் குடில்களை அமைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும், தங்கள் ஊர்களிலிருந்து கொண்டுவந்த மரந்தடிகளைக் கொண்டே தாங்கள் கொட்டில்களை அமைப்பதாகவும், யார் தடுத்தாலும் இங்கேயே தாம் குடியிருக்கப் போவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களால் நேற்று மாலைக்குள் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கொட்டில்கள் அமைக்கபட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இம்மக்கள் நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பட்டார். அது வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணி என்பதால் அவர்கள்தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் இது குறித்து தெரிவிக்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு அக்காணியில் குடியேற முயற்சிப்பதை நேற்றுப் பிற்பகல் அங்கு சென்று நேரில் அவதானித்ததாகவும், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான அக்காணியில் எவ்வித அனுமதியுமின்றி அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றமை குறித்து வீடமைப்பு அதிகாரசபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு தான் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமாக 90 எக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ஏனைய 60 ஏக்கர் அதிகாரசபையின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

”கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.” – இ. அங்கஜன்

Angajan_Ramanathanகிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இத்தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததாகவும், வடமாகாண அபிவிருத்திப்பணிகளில் இந்த ஆடைத்தொழிற்சாலை முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் அங்கஜன் தெரிவித்தார். இத்தொழிற்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள புலி உறுப்பினர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமையவுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்குவதற்கு ‘றை ஸ்ரார் அப்பறெல்’ நிறுவனத்தின் தலைவர் குமார் தேவபுர முன்வந்துள்ளதாகவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்.

படிப்பினைகள் மற்றும், ஜனாபதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்காக பிரிவு பிரிவாக இதன் அமர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ்.பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக முற்பகல் 11.30 மணி தொடக்கம் 1 மணிவரை அரியாலை சரஸ்வதி சனசமூகநிலையத்திலும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக பிற்பகல் 2மணி தொடக்கம் மாலை 5மணிவரை நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்திலும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வுகளில் தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்கு 80 வரையானோர் பதிவு செய்துள்ளதாகவும், இவ்வாறு பதிவு செய்யாதவர்களும் தங்கள் சாட்சியங்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன.

இலங்கை முழுவதும் 1000 பாடசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் நேற்று புதன்கிழமை யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலத்திற்குட்பட்டதாக அமையும் எனவும், ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆகக் குறைந்த தொகையாக 5 மில்லியன் ரூபா தொடக்கம் 60 மில்லியன் ரூபா வரைக்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன கல்வி முறைகளை சகல மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல், கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன இத்திட்டத்தின்’ நோக்கம் என நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் முதலானோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். மற்றும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன். கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னர் வடக்கில் 90 பாடசாலைகளை இத் தரமுயர்த்தலுக்காக தெரிவு செய்வதாக அறிவிக்கபட்டிருந்தமையும் வடமாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய 110 பாடசாலைகளைத் தரமுயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிஉறுப்பினர்களின் நலன்களுக்காக குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்தோடு இணைந்து இயல்பு வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கென தேசிய ரீதியிலான தலைமையின் கீழ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்துடன் இணைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சகல உதவிகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கம் எனவும். இக்குழுக்களின் செயற்பாடுகளுக்கென பல கோடிரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க நேற்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் போராளிகளில் 5,221 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 594 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு

parliament001.jpgகொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று புதன்கிழமை மாலை முதல் பெய்த கடும்மழை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புறக்கோட்டை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி,  கறுவாத்தோட்டம்,பொரளை மயானபிரதேசம், பாராளுமன்றம் வீதி உட்பட பல பிரதேசங்களும் வெள்ளத்தால் மூழ்கியிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் பல பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியதால் இன்று பிற்பகல் வரை கொழும்பின் பல பகுதிகளிலும் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் இன்று மாலையாகும் போது பல வீதிகளிலும் வெள்ளம் வழிந்தோடியிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஜயசேகர இன்று காலை 8.30 மணிவரையான பதிவுகளின் பிரகாரம் கொழும்பில் அதிகபட்சமாக 440.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாகவும் கூறினார்.