கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று புதன்கிழமை மாலை முதல் பெய்த கடும்மழை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புறக்கோட்டை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம்,பொரளை மயானபிரதேசம், பாராளுமன்றம் வீதி உட்பட பல பிரதேசங்களும் வெள்ளத்தால் மூழ்கியிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.
கொழும்பு மாநகர எல்லைக்குள் பல பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியதால் இன்று பிற்பகல் வரை கொழும்பின் பல பகுதிகளிலும் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் இன்று மாலையாகும் போது பல வீதிகளிலும் வெள்ளம் வழிந்தோடியிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஜயசேகர இன்று காலை 8.30 மணிவரையான பதிவுகளின் பிரகாரம் கொழும்பில் அதிகபட்சமாக 440.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாகவும் கூறினார்.