Multiple Page/Post

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக படையினரின் உதவி பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினையடுத்து படையினரின் உதவி பெறபட்டுள்ளது. 57வது படைப்பிரிவினரின் உதவி பெறப்பட்டுள்ளதோடு, திருகோணமலையிலிருந்து கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல பாதைகள் துண்டிக்கபட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்காக நிவாரணப் பொருட்கள் கடற்படையினரின் படகுகள் ஊடாகவே தற்போது கொண்டு செல்லப்படுகின்றன.

கிளிநொச்சியில் தட்டுவன்கொட்டி, கண்டாவளை ஆகிய கிராமங்களுக்கான ஒரேயொரு பாதையும் துண்டிக்கபட்டுள்ளது. தட்டுவன்கொட்டியில் சுமார் 80 குடும்பங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு நிர்க்கதியான நிலையிலுள்ளன. இவர்களுக்கான போக்குவரவு மற்றும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தற்போது கடற்படையினரின் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முல்லை மாவட்டத்திலும் பல வீதிகள் வெள்ளத்தால் துண்டிக்கபட்ட நிலையில் அப்பகுதி மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்கும் நோக்கில் நேற்று திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் அவசர உதவி வழங்கும் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. உதவி அரசாங்க அதிபர்கள், உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நேற்றும் இன்றும் மழை பெய்வது தணிந்து, காலநிலை ஓரளவு சீராகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் சீரான முறையில் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

வன்னியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு பல்வேறு பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீராகச் சென்றடைவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நெற்செய்கையாளர்கள். தோட்டச்செய்கையாளர்கள், கால்நடை வளர்ப்போர் என பலவேறு தரப்பினருக்கும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை குறிப்பட்ட சிலரே பெற்றுக்கொள்ள முடிவதாகவும,; எதுவித முன்னறித்தலும் இல்லாமல் இவை வழங்கப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, வீடமைப்பு வீட்டுச் சேதங்களுக்கான உதவிகள், குடிநீர்க்கிணறுகள் இறைத்துக்கொடுத்தல் போன்ற பணிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளபட்டு வருகின்றன இவை கூட தேவைப்படுவோருக்கு சரியான முறையில் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது கிராமசேவை அலுவலர்களின் அக்கறையின்மை மற்றும், கிராம அபிவிருத்திச்சங்களைச் சேர்ந்தவர்களின் சுயநலமான செயற்பாடுகள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த பரீட்சையில் தோற்றவிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்.

000stud.jpgஇலங்கையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஒழங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பூசா முகாமிலும் பரீட்சை நிலையம் அமைக்கபட்டுள்ளது. பூசா முகாமிலுள்ள 55 முன்னாள் புலி உறுப்பினர்கள் க.பொ.த பரீடசைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 153 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ளன. மேலும் 350 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பதிவு செய்துள்ளன.

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் 153 குடும்பங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 350 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளால் வெளியேற்றபட்ட முஸ்லிம் மக்கள் இதுவரை புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் பலர் இருப்பிட வசதிகளின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மக்களுக்கு கூடார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்குமாறும், யாழ்.முஸ்லிம்களின் மனிதஉரிமைகளுக்கான நலன் விரும்பிகள் என்ற அமைப்பு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் வெள்ளத்தால் பாதைகள் துண்டிப்பு. படகு மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்.

வடமராட்சியையும், வடமராட்சிக் கிழக்கையும் இணைக்கும் மருதங்கேணிப் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்வதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடமராட்சிக் கிழக்குப் பிரதேச மக்களுக்கு படகு மூலமே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அத்துடன் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள வடமராட்சிக்கிழக்கு மக்கள் மழையினால் எற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்துள்ளனர்.

ஆழியவளை, உடுத்துறை. வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, ஆகிய பகுதிகளில் குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தங்கள் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறி அண்மையிலுள்ள ஆலையங்களிலும், மேட்டுப்பகுதிகளிலுள்ள நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். வடமாராட்சிக் கிழக்குப் பகுதிகளுக்கான போக்குவரத்துக்களும் வெள்ளப்பெருக்கினால் தடைப்பட்டுள்ளதோடு அப்பிரதேசத்தின் பல வீதிகளும் சேதமடைந்துள்ளன.

காணாமல்போனவர்கள் தொடர்பாக கொழும்பில் 10ஆம் திகதி போராட்டம்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 10ஆம் திகதியன்று கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மனிஉரிமைகள் தினத்தையொட்டி காணாமல் போனோரைத் தேடியறியும் குழு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நண்பகல் 12 மணிக்கு இப்போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக பல போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை காலமும் அரசாங்கம் எதுவித பதிலும் வழங்காத நிலையில் அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலேயே இப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காணாமல் போனோரைத் தேடியறியும் குழு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களும், மனிநேய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.வந்துள்ள சிங்கள மக்கள் கோரிக்கை.

யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகளை அடுத்து வரும் புதிய ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர வேண்டியுள்ளதாகவும், அதற்கு வசதி செய்யும் வகையில் யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் இதுவரை 186 சிங்களக் குடும்பங்கள் கடியேறியுள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக தாங்கள் குடியேறியுள்ள பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாகவும், இது குறித்து தங்களுக்கு உதவிகள் வழங்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தங்களுக்கு மேலிட உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்கள மக்கள் தங்கள் குடியிருப்புக்களுக்கு முன்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அகியோரை வாழ்த்தும் பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர்.

நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியமர்ந்ததும் இப்பகுதிகளில் அதேபோல் குடியமர்ந்துள்ள தமிழ் குடும்பங்களில் சுமார் 330 குடும்பங்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறியுள்ளன. வெள்ளம் தணிந்த பின்னர் மீண்டும் அங்கு குடியமரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளியில் நல்லிணக்க ஆணைக்குழு. 146 சாட்சியங்கள் பதிவு.

திருகோணமலை குச்சவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றுள்ளது. குச்சவெளி பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற இவ்வமர்வில் 146 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதில் 53 பேர் நேரடியாகவும், ஏனையோர் எழுத்து மூலமாகவும் தங்கள் சாட்சியங்களை அளித்துள்ளனர். முற்பகல் 9.30 மணி தொடக்கம், பிற்பகல் 2மணிவரை சாட்சியங்கள் இடம்பெற்றன.

இச்சாட்சியங்களில் காணாமல் போனவர்கள் குறித்தும், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அதிகளவில் முறைப்பாடுகள் தெரிவிக்கபட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்து வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது.

யாழ். மாநகரசபை உறுப்பினரும், கிளிநொச்சி. யாழ்.மவாட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அலுவலகங்களின் தலைவருமான மௌலவி சுபியான் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளததாக மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபருடனான சந்திப்பிற்கு முன்னதாக கிளிநொச்சி பள்ளிவாசலில் வைத்து கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறியவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் திருநகர். கிளிநொச்சி நகர்ப்பகுதி, 55ஆம் கட்டை, நாச்சிக்குடா, பள்ளிக்குடா முதலான பகுதிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைவெள்ளதால் பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரிப்பு.

தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக யாழ். குடாநாட்டில் 3640 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. 750 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் சேதடைந்துள்ளன. யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். கடந்த நான்கு தினங்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடாநாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சங்கானை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, பருத்தித்துறை, நல்லூர், கரவெட்டி, காரைநகர், சாவகச்சேரி ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் வரை கிடைக்கப்பெற்றத் தகவல்களின் அடிப்படையிலேயே இப்புள்ளிவிபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக நேற்றுவரை 750 வீடுகளும் சேதமுற்றுள்ளன. இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்று நாட்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 2ஆயிரத்து 520 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை. கரைச்சி, ஆகிய பிரதேசச் செயலர் பிரிவுகளிலேயே கூடுதலான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். முல்லை மாட்டத்தில் ஆயிரத்து 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் அக்குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

வங்கள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.