புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே ! உள்ளுராட்சித் தேர்தலில் கிராமங்களும் சுத்தமாக்கப்பட வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர், ஆய்வாளர் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம்
புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே ! உள்ளுராட்சித் தேர்தலில் கிராமங்களும் சுத்தமாக்கப்பட வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர், ஆய்வாளர் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம்
யாழ் டிப்பர் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம் தின்னவேலிப் பகுதியில் டிப்பர் சாரதியின் கவனயீனத்தால் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியோரத்தில் டிப்பர் வாகனத்துக்கு அருகாக நடந்து சென்ற மூதாட்டியை அவதானிக்கமால் சாரதி டிப்பரை எடுத்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல் ஏற்றிவந்த ரிப்பர் வாகனமொன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ரிப்பர் மீது மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளது.
கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் வடக்கில் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. ஆனாலும் செலுத்துனர்களோ, பொதுமக்களோ இவை தொடர்பில் அவதானமற்று அசமந்தமாக செயற்படுவதால் தொடர்ந்தும் இழப்புகள் பதிவாகி வருகின்றன. இதேவேளை போக்குவரத்துப் பொலிஸார் கனரக வாகனங்கள் தொடர்பில் சட்டங்களை உரியமுறையில் நடைமுறைப்படுத்த தவறுவதே இவற்றுக்கான அடிப்படைக்காரணம் என மக்கள் குற்றஞ்சாடுகின்றனர்.
நாட்டில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்து மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் 10,000 முதல் 12,000 பேர் வரை வருடாந்தம் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் நரிகள் எங்கள் பரப்புரைகளைத் தடுக்க முடியாது ! அமைச்சர் சந்திரசேகர்
நீர்வேலி வாய்க்கால் தரை பிள்ளையார் கோவில் வளாகத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டம் தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய வேட்பாளருமான தியாகாராஜா நிரோஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆலய வளாகத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியமை, அரச திணைக்களங்களுக்குரித்தான வாகனங்களை பயன்படுத்தியமை, ஆலய வளாகத்தில் பரப்புரைக்கான பதாதைகளை ஒட்டியமை போன்ற குற்றச்சாட்டுகள் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை பரப்புரைக் கூட்டத்தில் இது குறித்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், இங்கிருக்கும் அரசியல் நரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். நாங்கள் நேர்மையான அரசியல்வாதிகள். நிரோசின் மீது எனக்கு மரியாரை இருந்தது. ஆனால் அவரது அரசியல் பாதை சாக்கடையானது. கூட்டத்தை தடுக்க கீழ்த்தரமான வேலைகளை செய்ய வேண்டாம் என்றார்.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் !
இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு உட்பட 19 மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்துள்ளது. அந்தவகையில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி 13வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 12வது தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பாரதிய ஜனதா கட்சியில் தேசிய மட்டத்திலான பதவி கிடைக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினூடாக இரு தடவைகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அத்துடன் அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் தொழிற்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் அதிமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். எப்படியாயினும் வருமானத்திற்கு மீறி சொத்துக் குவித்த வழக்கு, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சர்ச்சை மற்றும் ஓடியோ றிலீஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நயினார் நாகேந்திரன் எதிர்கொண்டுள்ளார். தற்போது சர்ச்சைகளின் நாயகன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தப் போகிறார்.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கார் சிலை அகற்றல் !
“வேற்றுமையில் ஒற்றுமை “ என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை வடித்த சிற்பி அம்பேத்கார். அம்பேத்கார் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பெண்கள் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காகவும் பெரும் பங்களிப்பைச் செய்த தலைவர். ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் தலித் மக்களின் வழிகாட்டியாக விளங்கியவர். இந்தியாவின் முதாலவது சட்ட அமைச்சரும் இவரேயாவார். இந்தியா முழுவதும் மக்கள் அம்பேத்கார் சிலைகளை நிறுவியுள்ளார்கள்.
அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பதோஹி என்ற கிராமத்தில் அம்பேத்காருக்கு 4 அடியில் அக்கிராம மக்கள் சிலையை நிறுவியுள்ளார்கள். இச்சிலையானது முறையான அனுமதியின்றி நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. அளித்த புகாரையடுத்து பொலிஸார் சிலையை அகற்றியுள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சிறுபான்மை இனமக்களும், தலித்துக்களும் மற்றும் சிறுபான்மை மதங்களும் இன்ன பல ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்பேத்கார் சிலை அகற்றியதை கண்டித்து அக்கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிராமே கொந்தளித்து போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாகவே யாழ் கொக்குவிலில் அம்பேக்கர் மற்றும் பெரியாருக்கு சிலை எழுப்பப் போவதாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக் குரல்கொடுத்து வருகின்ற அருண் சித்தார்த் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிவப்புச் சித்திரை: புலிக்குள் ஏற்பட்ட பூகம்பம் கருணாவின் பிரிவு – அதன் விளைவு வெருகல் படுகொலை !
1986 மே 6 தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ மீது நடத்திய படுகொலைத் தாக்குதலிற்குப் பின் இடம்பெற்ற மிக மோசமான சகோதரப் படுகொலைத் தாக்குதல் 2004 ஏப்ரல் – சிவப்புச் சித்திரை வெருகல் படுகொலை. இந்தப் பிளவிற்குப் பல்வேறு காரணங்கள் அவரவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட போதும் இதன் பின்னணியில் பிரதேசவாதத்தின் கூறுகள் ஊறியிருந்தமை தவிர்க்க முடியாதது. யாழ் மையவாதவேளாள ஆணாதிக்க கருத்தியலுடனேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் பொதுப் புத்தியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. தமிழ் – சிங்கள இன முரண்பாடு முன்நிறுத்தப்பட்டு ஏனைய முரண்பாடுகள் துப்பாக்கியின் நிழலில் தூங்கிக் கொண்டிருந்தது.
ஆங்காங்கே வெளிக்கெம்பிய ஏனைய முரண்பாடுகளில் கிழக்குப் பிரிவினை மிக முக்கியமானதாக மாறியது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கிடையேயும் வெளிப்பட்டது. வடக்கின் தலைவராக வே பிரபாகரனும் கிழக்கின் தலைவராக கருணா அம்மானும் உருவகப்படுத்தப்பட்டனர். இந்த கிழக்குச் சித்தாந்தத்தை கருணாவுக்கு அறிமுகப்படுத்தி அதற்கு அரசியல் வடிவம் கொடுத்தவர் பின்னாட்களில் மாமனிதராக்கப்பட்ட சிவராம். இதனை சிவாரம் தன் நெருங்கிய நண்பருடன் பகிர்ந்துகொண்டமை தேசம்நெற் அறிந்திருந்தது.
அதேவேளை இணைத் தலைமை நாடுகளை முகாமைத்துவம் செய்ய நியமிக்கப்பட்ட நோர்வே புலனாய்வுத் துறை, பிரபாகரனையும் பொட்டம்மானையும் அணுக முடியாததால் அதன் அடுத்த கட்டத் தலைமைகைளை, திசைதிருப்பி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்குச் செல்ல வற்புறுத்தினர். பேச்சுவாரத்ததைக் காலத்தில் கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
புலம்பெயர் நாடுகளில் இருந்த புலிகளின் அனைத்துக் கட்டமைப்புகளும் பெரும்பாலும் வடக்கின் யாழ்ப்பாணத்தாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதுவும் கிழக்குப் பிரிவினையை வலுப்படுத்திய விடயம். கருணா ஐரோப்பிய சுற்றுப் பயணம் செய்த போது விடுதலைப் புலிகள் அல்லாத பல கிழக்குப் பிரதிநிதிகளையும் சந்தித்தார். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கல்வி மற்றும் பொருளாதார வசதியால் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்ட, மண் மீட்புக்காக கிழக்கு போராளிகள் பலிகொடுக்கப்படுகின்றனர் என்ற எண்ணக்கரு இந்த விஜயத்தின் போது கருணாவின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது.
‘பேச்சுவாரத்தைகள் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு யாழ்ப்பாணம் போன்று கிழக்கும் கல்வி, மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும்’ என்ற எண்ணம் கருணா அம்மானிடம் வெளிப்பட ஆரம்பித்தது. அதற்கு தராக்கி சிவராம் அரசியல் வடிவம் கொடுத்தார்.
அதற்குப் பின் 2004 யூலையில் கருணாவின் பிளவு உலகறிந்தது. அன்றைய ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்கவின் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவாரத்தைகள் இடம்பெற்ற காலகட்டம். விடுதலைப் புலிகளுக்கள் ஏற்பட்ட இப்பிரிவினையை சந்திரிகா தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. வடக்கிலிருந்து கிழக்குக்குள் விடுதலைப் புலிகள் நுழைவதைத் தடுத்து, கருணா அம்மானோடு உள்ள ஆயிரக்கணக்கான போராளிகளை காப்பாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி சந்திரிகா அதனைச் செய்ய முன்வரவில்லை. அப்படிச் செய்தால் அரசுக்கும் புலிகளுக்குமான பேச்சுவாரத்தை முடிவுக்கு வந்துவிடும். மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் என்பதால் சமாதானப் புறாவாக ஆட்சிக்கு வந்த சந்திரிகாகுமாரதுங்கா புலிகளின் உட்பிரச்சினையிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய போராளிகள் கொல்லப்படும் அபாயத்தை உணர்ந்த கருணா பல ஆயிரம் போராளிகளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். கிழக்கு மக்களின் உயிர்கள் வீணாக இழக்கப்படக் கூடாது என்ற உணர்வு அங்கு இருந்தது. கிழக்குப் போராளிகளை வைத்தே கிழக்குப் போராளிகள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சம் என்று வெளிப்பட்டு இருந்தது.
இந்த அச்சம் இறுதியில் நடந்தேறியது. வெருகல் கடல்பரப்பினூடாக புலிகள் நுழைந்து சரணடையுமாறு கோரி சரணடைந்தவர்களைப் படுகொலை செய்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கும் மேற்பட்டது எனக் கருணா அம்மான் வெருகல் படுகொலை நினைவு நிகழ்வில் தெரிவிக்கின்றார்.
கருணாவின் வெருகல் படுகொலை நினைவுரையை மறுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன், கருணாவின் போராளிகளையும் தாங்கள் மாவீரர் பட்டியலில் இணைத்திருக்கின்றோம் என்றார். இது பற்றிய அரியநேந்திரனின் குறிப்பு:
“இந்த மோதல் ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணாதான். 2004, மார்ச், 03இல் விடுதலை புலிகளில்
இருந்து தாம் விலகிவிட்டதாக ஊடகத்தில் கருணா அறிவித்தார். 2004 மார்ச் 06 இல் விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை நீக்கிவிட்டதாகவும் அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதன்பின்னர் தாம் கிழக்கு புலிகள், வன்னி புலிகள், என்ற பிரதேசவாத கருத்தை கருணா தரப்பினர் பரப்பி மட்டக்களப்பு நகர்பகுதி, செங்கலடி பகுதி எங்கும் யாழ்ப்பாண வர்த்தகர்கள், பொதுமக்கள் மீது பிரதேசவாதக் கருத்தை பரப்பி அவர்களை வெளியேற்றும் காடைத்தனத்தை புரிந்தனர்.
2004 ஏப்ரல் 04 பாராளுமன்ற, பொதுத்தேர்தல் முடியும் வரை விடுதலைப் புலிகள் கருணா குழுமீது எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை. 2004 ஏப்ரல் 09, இரவு தொடக்கம் 2004 ஏப்ரல் 10 வரை வாகரைக்கும், வெருகல் பாலத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கருணா தரப்பை சேர்ந்த போராளிகள் சிலர் உயிரிழந்தனர்.
2004 ஏப்ரல் 20இல் கிளிநொச்சியில், தலைமைச் செயலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலானாய்வு பொறுப்பாளர் பொட்டம்மான் மற்றும் புலிகளின் தளபதிகள் உள்ளிட்டவர்கள் 22, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தினர். அதுதான் 22, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தலைவரின் முதல் சந்திப்பு.
இந்த சந்திப்பின்போது நான் தலைவரிடம் கேட்டேன், “கடந்த 2004 ஏப்ரல் 10ஆம் திகதி கருணா குழுவினருடன் இடம்பெற்ற மோதலில் கருணா தரப்பில் மரணித்த போராளிகளை மாவீரர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் இனவிடுதலைக்காக போராடவே இயக்கத்தில்
இணைந்தார்கள் அவர்களை தவறாக கருணாதான் பயன்படுத்தினார்”, என்றேன். தலைவர் பதில் கூறுவதற்கு முன்னம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்னிடம் கூறினார், “அண்ணர் இந்த விடயங்களை எல்லாம் நாம் இங்கு கேட்கக் கூடாது”, என்றார்.
அப்போது உடனே தலைவர் தமது கையால் செ. கஜேந்திரனை பேசவேண்டாம். என சைகை காட்டிவிட்டு “அரியம் அண்ணர் கேட்டதில் என்ன தவறு உள்ளது அந்த போராளிகள் இன விடுதலைக்காகத்தானே போராட்டத்தில் இணைந்தவர்கள் அவர்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது உண்மை. அரியம் அண்ணர் கேட்டது சரி – அந்த போராளிகள் அனைவரையும் மாவீரர் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன்” என்றார்.”
வரலாற்றில் துரோகிகளாகப் பதியப்பட இருந்தவர்களை மாவீரர்களாகப் பதிய வைத்தி பெருமையை அரியநேந்திரன் வெளியிட்டு இருந்தார். இதற்குப் பிரதியுபகாரமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக பா அரியநேந்திரன் நிறுத்தப்பட்டார். தங்களுடைய போராளிகளின் படுகொலையை மூடிமறைத்துவிட்ட பா அரியநேந்திரனை மட்டு மக்கள் முற்றாகப் புறக்கணித்தனர். பா அரியநேந்திரன் மட்டக்களப்பில் குறைந்த வாக்ககளையே பெற்றார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புளொட் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் உமா மகேஸ்வரன் மற்கும் ஈரோஸ் ஈழ மக்கள் புரட்சிகர அமைப்பு பாலகுமாரன் தவிர்ந்த ஏனைய தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளே படுகொலை செய்தனர். உமா மகேஸ்வரன் பின்நாட்களில் அவருடைய மெய்ப்பாதுகாப்பாளராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பாலகுமாரான் சரணடைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டாரா, மாவீரர் ஆனாரா அல்லது இன்னமும் உயிருடனிருக்கின்றாரா? அவருக்கு அஞ்சலி செய்வதா இல்லையா என்ற குழப்பத்தில் காலங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நீண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் சகோதரப்படுகொலைகளின் கொலைக்களமாகவே அமைந்தது. இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் எவ்விதத்திலும் குறைவில்லாத ஈவிரக்கமற்ற படுகொலைகள் நிறைந்த போராட்டமாவே அது முடிவுக்கு வந்தது. மோசமான யுத்தக் குற்றவாளிகள் எம்மத்தியிலும் உள்ளனர் என்பதை மறந்து நாங்கள் மனித உரிமைநாடகம் ஆடுகின்றோம். இனிமேலாவது சகோதரப்படுகொலை செய்யாத மனிதப்படுகொலை செய்யாத உரிமைக்கான மற்றவர்களின் ஜனநாயகத்தையும் உரிமையையும் மதித்துப் மற்றவர்களோடும் இணைந்து அனைவரது உரிமைக்காகவும் போராடுவோம்
மனித புதைகுழிகளை தோன்றுவதற்கு அரச ஆதரவு இல்லை – சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் குற்றச்சாட்டு
மனித புதைகுழி விவகாரங்களை இலங்கையின் எந்த அரசாங்கமும் இதுவரை முழுமையான அரசியல் உறுதிப்பாட்டுடன் அணுகவில்லை என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரை தேடியறியும் குழுவினர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
செம்மணி, மன்னார், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விசாரணைகள் அரசாங்கத்தின் ஊக்கமின்மையால் தடைப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு இல்லாமை, பொலிஸாரின் ஒத்துழைப்பு பஞ்சம், மற்றும் நிபுணர்களின் ஒருங்கிணைவு பற்றாக்குறை ஆகியவை அகழ்வுப் பணிகளை தடை செய்யும் முக்கிய காரணிகளாக உள்ளன.
மீட்கப்படும் எச்சங்கள் எந்த காலத்துக்கு உரியவை என்பதனை உறுதிப்படுத்த வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் நிதியளிக்க அரசாங்கங்கள் தயாராக இல்லை. சந்திரிகா, ரணில் போன்ற ஆட்சியாளர்களின் காலகட்டங்களிலும் இந்த விடயத்தில் 100% அரசியல் உறுதிப்பாடு காணப்படவில்லை என்பதே மிக முக்கியமான உண்மை என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழில் பிரதமர் ஹரிணியின் சூறாவளிப் பயணம் !
மே ஆறாம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், வடக்கிற்கு படையெடுக்கும் என்பிபியின் முக்கிய அமைச்சர்கள் என யாழ்ப்பாணம் களைகட்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு என்பிபி கொடுத்த வாக்குகளான காணி விடுவிப்பு, பாதை திறப்பு, அபிவிருத்தி என படிப்படியாக பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ நிறைவேற்றி வருகின்றது.
அந்த வகையில் ஏப்பிரல் 11 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தாசுவாமி கோயிலுக்கு வருகை தந்த இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவொரு பிரதமர் வடக்கில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டமை முதல் தடவை எனக் கூறப்படுகிறது. அப்போது கருத்து தெரிவித்த ஹரிணி வடக்கினதும் தெற்கினதும் காலாச்சாரம் மற்றும் ஆன்மீக அமைப்புகளை சமமாக பாதுகாக்கும் பொறுப்பை தாம் மறக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
எப்படியாயினும் கடந்த அரசாங்கங்களில் இந்து மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சுக்கள் பெயரளவிற்குத்தானும் இருந்துள்ளன. ஆனால் என்பிபி அரசாங்கத்தில் பௌத்த விவகார அமைச்சு மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுவதையும் பிரதமர் ஹரிணி கருத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
“வளமான மற்றும் ஒன்றுபட்ட நாட்டில் மதம் மற்றும் கலாச்சார சுதந்திரத்தை உறுதி செய்வதும், பன்முகத் தன்மை கொண்ட எமது நாட்டில் இவ்வாறான ஆன்மீக இடங்களில் எவ்வித அடக்குமுறையும் இன்றி பாதுகாப்பதும் நமது கடமை“ என ஹரிணி மாவிட்டபுரத்தில் குறிப்பிட்டார். பிரதமரின் வருகையால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் யாழ் வந்த பிரதமர் நீர்வேலி மற்றும் காரைநகர் என இரு இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பங்கேற்றிருந்தார். மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பேச்சை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்ததிலும் குழறுபடிகள் காணப்பட்டன. மொழி பெயர்ப்பாளர் ஒரு சில விடயங்களைத் தவிர பிரமரின் உரையைத் தவறாக மொழி பெயர்த்திருந்தார். இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பரிகசிப்புக்குள்ளாகியுள்ளது.
அத்துடன் உள்ளூராட்ச்சித் தேர்தல்ப் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் யாழ் வருகின்றார் என என்பிபி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாதம் 19 ஆம் திகதியில் ஜனாதிபதியும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழ் தலைவர்களிடம் சொன்ன கருத்து போட்டுடைத்தார் புளொட் கஜதீபன் !
தமிழ் தேசியத் தலைமைகள் தாங்கள் பிரதமர் மோடிக்கு சொன்ன கருத்துக்கள் வெளிவந்தது. ஆனால் பிரதமர் மோடி தமிழ் தலைமைகளிடம் என்ன சொன்னார் என்பதை அவர்கள் வெளியிடவே இல்லை. தற்போது புளொட் கஜதீபன் அதனைப் போட்டுடைத்துள்ளார். “இரா சம்பந்தன் இருந்த போது எல்லொரும் ஒன்றாக வந்து சந்தித்தீர்கள். தற்போது தனித் தனியாக வந்து சந்திக்கின்றீர்கள்” என இந்தியப் பிரதமர் மோடி தன்னைச் சந்தித்த தமிழ் தரப்பிடம் கருத்து வெளியிட்டதாக தெரியவருகின்றது. அண்மையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் பிரதிநிதி பா கஜதீபன் தாய் ரிவி என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலும் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெறுவது கடினம் எனத் தெரிவித்தார் அவர்.
இந்நிலையில் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் தாங்கள் இன்னுமொரு தமிழ் தேசியக் கட்சியை ஆட்சி அமைப்பதற்கே உதவுவோம் எனத் தெரிவித்தார். அதாவது தேசிய மக்கள் சக்தியை ஆட்சியமைக்க விட மாட்டோம் எனச் சூளுரைத்தார். அதேசமயம் தமிழ் தலைமைகள் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் ராஜதந்திரத்தோடு ஒப்பிடும் போது பலவீனமாகி இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதையும் புளொட் கஜதீபன் தெரிவித்தார்.
இந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதே தங்களது பிரதான நோக்கம் என்பதையும் புளொட் கஜதீபன் அந்நேர்காணலில் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜேவிபி கட்சியின் கொள்கைகளை மீறி தமிழ் மக்களுக்காக நிற்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார் பா கஜதீபன். அதனால் தமிழ் தேசியக் கட்சிகள் வெற்றி பெறாதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாகாண சபையை தமிழரசுக்கட்சி வெற்றி பெற்ற போது ஜனநாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் அங்கம் வகித்து இருந்தது. தாங்கள் மாகாண சபையைக் கைப்பற்றியது ஈபிடிபி அதனைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக எனத் தெரிவித்து இருந்தனர். அதனால் மாகாண சபையால் இவர்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்கவில்லை.
தற்போது உள்ளுராட்சி சபைகளிலும் தங்களுடைய நோக்கம் ஜேவிபி வருவதைத் தடுப்பதே எனத் தெரிவித்து வருகின்றனர். ஜேவிபி ஆட்சி ஆட்சி அமைக்க விடாமல் தடுத்துவிட்டு இந்தக் கட்டமைப்பில் அதிகாரம் இல்லை எங்களை சிங்கள பேரினவாதம் இயங்கவிடாமல் தடுக்கின்றது என்று சொல்வார்களோ என்ற அச்சம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.
வடக்கில் தொடரும் சட்டவிரோத மரக்கடத்தல்
வவுனியா- மன்னார் வீதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்று சிக்கியுள்ளது. சோதனைச் சாவடியில் நிறுத்தாமல் சென்ற வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. வாகனச் சாரதி உட்பட இருவர் விபத்திற்குள்ளான வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 5 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.