Multiple Page/Post

நாணய நிதியத்தின் கடனுதவி – வடமாகாண மீள்குடியேற்றம், அபிவிருத்தியை மேலும் விரைவுபடுத்தும்

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் நிதியினால் வடக்கின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பன மேலும் விரைவுபடுத்தப்படும் என நிதி மற்றும் அரச வருவாய்த் துறை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகவே இதனைக் கருதுவதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியுடன் இலங்கையின் அந்நிய செலாவணி அதிகரிப்பதுடன் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளும் வரும் என்றும் தெரிவித்தார்.

கடனுதவியுடன் செல்மதி நிலுவைகள் வெகுவாக குறைவடைவதுடன் அந்நிய செலாவணி அதிகரிப்புடன் நிலையான பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் ரூபாவின் மதிப்பும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியுடன் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவு உள்வாங்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் ரஞ்ஜித்சியம் பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

இலங்கை அரசு கோரியதைவிட அதிகளவு கடனுதவியை சர்வதேச நாயண நிதியம் வழங்க முன்வந்தமை இலங்கை அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்தக் கடன் தொகை இலங்கைக்கு கிடைத்த பின்னர் ஐ. தே. கட்சியின் எதிர்பார்ப்புகள் பயனற்றுப் போய்விடும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஐ. தே. கட்சி இலங்கையின் பொருளாதார நிலையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பூகம்பத்தால் நியூஸிலாந்தின் தென்பகுதி அவுஸ்திரேலியா நோக்கி நகர்வு – விஞ்ஞானிகள் தெரிவிப்பு

new-zealand.jpgநியூஸி லாந்தின் தெற்குப் பகுதியிலுள்ள ரிசொல்யூஷன் தீவுக்கருகில் கடலுக்கடியில் கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தினால் தெற்கு நியூஸிலாந்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதி நோக்கி நகர்ந்துள்ளதாக பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிச்டர் அளவு கோலில் 7.8 என்று பதிவான இந்த பூகம்பத்தினால் தெற்குத் தீவு சுமார் 12 அங்குல (அதாவது 30 செ.மீ.) தூரம் மேற்காக நகர்ந்து அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சென்றுள்ளதாக பூகோள விஞ்ஞானி கென்கிளெட்ஹில் தெரிவித்துள்ளார்.

இந்த புவியியல் மாற்றம் பூமிக்கு அடியில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது என்று கூறியுள்ள கிளெட்ஹில் நியூஸிலாந்து அதனைத் தாக்கும் பெரும்பாறையின் எல்லையில் இருப்பதால் நாட்டின் நிலப்பகுதி அடிக்கடி மாறுதலுக்குள்ளாகிறதெனத் தெரிவித்துள்ளார்.

அதாவது 12 அங்குலம் ஒரு நாடு நகர்ந்திருப்பது என்பது ஏதோ ஆண்டாண்டு காலமாக நிகழவில்லை. ஒரு சில வினாடிகளில் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த புதனன்று ஏற்பட்ட இந்த பூகம்பம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பூகம்பம் என்பதும் நியூஸிலாந்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டள்ள கடுமையான பூகம்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே அளவில் உலகின் வேறு எந்த நாட்டிலாவது பூகம்பம் ஏற்பட்டிருந்தால் அது ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் நியூஸிலாந்தின் தெற்குத் தீவுப் பகுதியில் மக்கள் தொகை அதிகம் இல்லை என்பதால் அழிவு அவ்வளவாக இல்லையென கிளெட்ஹில் கூறியுள்ளார்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மற்றொரு விஞ்ஞானி மார்டின் ரெய்னர்ஸ், இரண்டு பெரும்பாறைகளுக்கு நடுவே உள்ள “மென் பாறைகளில்’ இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் ஆற்றல் கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையேல் பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

வவுனியா தேர்தல் : த.வி.கூட்டணி – இரு சுயேச்சை குழுக்கள் ஈபிடிபியை ஆதரிக்க முடிவு

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்புடன் முன்னர் கூட்டுச் சேர்ந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளை, அரசின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் இணைத்தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கட்சியின் நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. த.வி.கூ. நிர்வாகச் செயலாளர் ஜீ.வி.சகாதேவன் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் இந்த முடிவை அறிவிப்பதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

நடைபெறவுள்ள தேர்தலில் சுய உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ் மக்கள் வாக்கை பயன்படுத்த வேண்டும் – பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன்

election_cast_ballots.jpgநடை பெறவுள்ள ஊவா மாகாண சபைத்தேர்தலில் தமது சுய உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் வாக்கை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டுமென பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தால் மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

அதனையடுத்து, “எடு என்றால் எடுக்கவும் போடு என்றால் போடவுமாக’ இருந்த எமது தமிழினத்தின் நிலை மாறி வரலாற்றில் இடம்பெற்ற அகிம்சை வழிப்போராட்டங்களால் அதாவது மலையகத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் தாக்கங்களால் எமக்கு பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பன கிடைத்தது.

இதில் தமிழ் மக்கள் குறிப்பாக வாக்கு எனும் பலத்தை சரியான முறையில் பயன்படுத்துகின்றார்களா? என்றால் அது இல்லை. அதன் விளைவாகவே எமது தமிழினத்தின் சுய உரிமைகளை மற்றவரிடம் கேட்டுப்பெறும் அவசியம் ஏற்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளை சிறுபான்மையினருக்கே உரித்தாக்குவதற்குத்தான் கொண்டுவரப்பட்டது. இன்று அது விரிவாக்கப்பட்டு நாட்டின் எல்லோருக்கும் உரித்துரிமையாகிவிட்டது.

தமிழ் மக்கள் தொடர்பான முடிவுகளையோ தீர்மானங்களையோ எடுக்கும் அதிகாரம் வேறு எவருக்கும் வழங்காமல் அதனை நம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். இன்று முழு உலகமுமே இலங்கைத் தமிழர் நிலை பற்றி அவதானித்துவரும் நிலையில், எமக்கிடையிலான ஒற்றுமையை இலங்கைக்கும் உலகிற்கும் வெளிப்படுத்துவது சமகால தேவையாகும். அதற்காக நாம் வாக்கினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஏனைய இனத்தவர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றால் அது சாத்தியமற்றது. ஆனால், தமிழ் வாக்காளர்கள் ஏனைய இன வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதில் ஒருபோதும் பின் நின்றதில்லை. இதுவே உண்மைநிலை.

எனவே, தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அதாவது, தமிழர்களின் சுயஉரிமையை பாதுகாக்கும் ஆயுதமாக தமது வாக்கை எமது மக்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வாக்களிப்பதன் மூலம் எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய வகையில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியதுடன், வழுக்கள் ஏற்படாதவாறு சரியான முறையில் வாக்களிக்க வேண்டியதும் அவசியமாகும்.

இவை அனைத்தும் சுயநல அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து எமது மைந்தர்களே இம்மண்ணை ஆளக்கூடியவாறு ஊவா மாகாணசபைத் தேர்தலில் செயல்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவாரணக் கிராமங்களில் நாளை அதிபர்களுக்கான நேர்முகப் பரீட்சை

அதிபர்களுக்கான தரம்-1, தரம்-2, தரம்-3 பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நேர் முகப் பரீட்சைகள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் நாளை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறவுள்ளது. வவுனியா மாவட்ட அதிபர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் வவுனியா தெற்கு வலயத்திலும் இடம்பெயர்ந்துள்ள அதிபர்களுக்கு நிவா ரணக் கிராமங்களிலுள்ள பாடசாலைகள் இணைப்பு நிலையங்களில் நடத்தப்படும் என வவுனியா வலய உதவிப் பணிப்பாளர் திருமதி ரன்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றும் அதிபர்கள் தேவையான சகல ஆவணங்களையும் ஆயத்தமாக கொண்டுவரவேண்டும் என்றும் கேட்கப்படுகிறார்கள்.

அத்துடன் நிவாரணக் கிராமங்களிலுள்ள அதிபர்கள் தம்மிடமுள்ள ஆவணங்களையும் நேர்முகப் பரீட்சைக்கு கொண்டுவரவேண்டும். ஆவணங்கள் எதுவும் இல்லையேல் தேவையான ஆவணங்களின் பிரதிகளை பெற்றுக்கொடுக்க வவுனியா மாவட்ட கல்வி வலயப் பணிப்பாளர் அலுவலகம் அந்தந்த நிவாரணக் கிராமங்களின் இணைப்பு அலுவலகங்களில் ஆயத்த நிலையில் இருக்கும் எனவும் பணிப்பாளர் ரன்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

“டெஸ்ட் கிரிக்கெட் தனித்துவமானது அது இன்னும் மவுசை இழக்கவில்லை’

cricket1.jpgடெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுசை இழக்கவில்லையென இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.  சமீபகாலமாக ரி20 போட்டி ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் பாரம்பரியம் மிக்க டெஸ்ட் போட்டி மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது என்ற விமர்சகர்களின் கருத்தை கங்குலி மறுத்தார்.

சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள லண்டன் வந்த கங்குலி நிரூபர்களிடம் கூறியதாவது;

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு தனித்துவம் வாய்ந்தது.அதன் முக்கியத்துவம் நீடிக்க வேண்டுமென்பதற்காகவே டெஸ்ட் போட்டியுடன் மற்ற போட்டிகளும் இருக்கும்.கிரிக்கெட் விளையாட்டின் மூலவடிவமே டெஸ்ட் போட்டிகள்தான்.முன்னாள் வீரர்கள் பலர் அதில் சிறப்பு பெற்றுள்ளனர்.அதன் முக்கியத்துவத்தை யாரும் எப்போதும் மறக்கமுடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணி சமீபகாலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறது.கடந்த 2 ஆண்டுகளிலோ அல்லது அதற்கு முன்னரோ வெளிக்காட்டிய ஆட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பார்களேயானால் விரைவில் உலகில் முதல் அணியாக இந்தியா திகழும் என்றார் கங்குலி.

ஐ.தே.க. எம்.பி., பாலித ரங்கபண்டாரவை விசாரணைக்கு சி.ஐ.டி.அழைப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கபண்டாரவை விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்துள்ளனர்.

அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு வருமாறு கோரியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீரவை போன்று வாக்கு மூலங்களை பெறுவதற்கே அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மங்கள சமரவீர நேற்று முன்தினம் வியாழக்கிழமை வாக்குப்பெறப்பட்ட அதேவேளை,அவரது கட்சியின் செயலாளர் டிரான் அலஸும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தலைவராக பத்மநாதனின் நியமனம் முக்கியமற்றதொரு விடயம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

rambukella.jpgவிடு தலைப்புலிகளின் தலைவராக செல்வராசா பத்மநாதன் நியமிக்கப்பட்டிருக்கும் விடயம் முக்கியமற்றதொன்று என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் சேகரித்திருந்த பெருந்தொகையான பணத்துக்கு உரிமை கோருவதற்காக தலைமைப்பதவியை குமரன் பத்மநாதன் ஏற்பார் என்பது குறித்து தாங்கள் நன்கு அறிந்திருந்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். ஆனால், இயங்க முடியாத அளவுக்கு புலிகளின் பயங்கரவாதம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் பத்மநாதனின் நியமனம் தொடர்பாக அச்சுறுத்தல் குறித்து அரசு அச்சம் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தற்போதும் கடுமையான முறையில் அமுலில் இருப்பதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தளச் சேவைக்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று வெள்ளிக் கிழமை தெரிவித்துள்ளார்.

புத்தளம் அநுராதபுரம் வீதி புனரமைப்பு இன்று

25sri-lankan-road.jpgபுத்தளத் திலிருந்து அநுராதபுரம் வரையிலான ஏ12 வீதியின் 50 கிலோ மீற்றர் தூரத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் .ஏக்கநாயக்க வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கின்றார்.

கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான ஏ3 வீதியில் நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் வரையிலான பகுதி முழுமையாக கார்பட் போடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு அப்பால் உள்ள அநுராதபுரம் ஹொரவ்பத்தானை திருகோணமலை வரையிலான ஏ12 வீதி புனரமைக்கப்படவில்லை.இவ்வீதி ஊடான  வாகனப் போக்குவரத்து அதிக அளிவில் இடம்பெறுவதுடன் வாகன நெரிசலும் நிலவி  வருகின்றது.

இந்தப் பகுதியை புனரமைப்பதன் மூலம் மேற்கு, வடமத்தி, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்துக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்தரணி சிவானந்தன் லண்டனில் காலமானார்

பிரபல சட்டத்தரணியும் சிவானந்தன் அன்ட் அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தின் நிறுவுனருமான கந்தையா சிவானந்தன் அவரது 74 ஆவது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார்.  யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.