நடை பெறவுள்ள ஊவா மாகாண சபைத்தேர்தலில் தமது சுய உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் வாக்கை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டுமென பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தால் மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.
அதனையடுத்து, “எடு என்றால் எடுக்கவும் போடு என்றால் போடவுமாக’ இருந்த எமது தமிழினத்தின் நிலை மாறி வரலாற்றில் இடம்பெற்ற அகிம்சை வழிப்போராட்டங்களால் அதாவது மலையகத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் தாக்கங்களால் எமக்கு பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பன கிடைத்தது.
இதில் தமிழ் மக்கள் குறிப்பாக வாக்கு எனும் பலத்தை சரியான முறையில் பயன்படுத்துகின்றார்களா? என்றால் அது இல்லை. அதன் விளைவாகவே எமது தமிழினத்தின் சுய உரிமைகளை மற்றவரிடம் கேட்டுப்பெறும் அவசியம் ஏற்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளை சிறுபான்மையினருக்கே உரித்தாக்குவதற்குத்தான் கொண்டுவரப்பட்டது. இன்று அது விரிவாக்கப்பட்டு நாட்டின் எல்லோருக்கும் உரித்துரிமையாகிவிட்டது.
தமிழ் மக்கள் தொடர்பான முடிவுகளையோ தீர்மானங்களையோ எடுக்கும் அதிகாரம் வேறு எவருக்கும் வழங்காமல் அதனை நம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். இன்று முழு உலகமுமே இலங்கைத் தமிழர் நிலை பற்றி அவதானித்துவரும் நிலையில், எமக்கிடையிலான ஒற்றுமையை இலங்கைக்கும் உலகிற்கும் வெளிப்படுத்துவது சமகால தேவையாகும். அதற்காக நாம் வாக்கினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஏனைய இனத்தவர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றால் அது சாத்தியமற்றது. ஆனால், தமிழ் வாக்காளர்கள் ஏனைய இன வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதில் ஒருபோதும் பின் நின்றதில்லை. இதுவே உண்மைநிலை.
எனவே, தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அதாவது, தமிழர்களின் சுயஉரிமையை பாதுகாக்கும் ஆயுதமாக தமது வாக்கை எமது மக்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வாக்களிப்பதன் மூலம் எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய வகையில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியதுடன், வழுக்கள் ஏற்படாதவாறு சரியான முறையில் வாக்களிக்க வேண்டியதும் அவசியமாகும்.
இவை அனைத்தும் சுயநல அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து எமது மைந்தர்களே இம்மண்ணை ஆளக்கூடியவாறு ஊவா மாகாணசபைத் தேர்தலில் செயல்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.