வடக்கில் ஐந்து தொழில் பேட்டைகள் – புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றனர் யாழ் என்பிபி யினர் !
புலம்பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது குறித்து ஆர்வத்துடன் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை பாரளுமன்ற அலுவலகத்தில் நடத்தியிருந்தனர். அதன் போதே யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதன் போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் விஜித ஹேரத் பதிலளித்தார்.
அதே போன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள், தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பான ஆர்வத்தை பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.
இதேவேளை செய்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பா.உ செல்வம் அடைக்கலநாதன் புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் பேசிய போது பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையிலிருப்பதானது புலம்பெயர் மக்களின் முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் பாரிய தடையாக உள்ளது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.