June

June

தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லா விட்டால் இந்தியாவுக்கு செல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ காட்டம் !

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, கொவிட் தடுப்பூசி போட மறுப்பவர்களை கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்நாட்டு  ‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கொவிட் தொற்று மோசமாகப் பரவி வருகிறது. கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய நேரிடும். கைது செய்து, தடுப்பூசி போடுவோம். ஏற்கெனவே பெருந்தொற்று பேரிடரால் அவதியுற்றிருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போட மாட்டேன் எனக் கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். இந்தியாவுக்குச் செல்லுங்கள், அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள், அமெரிக்காவுக்குக் கூட செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார விதிமுறைகளை மீறி முத்தமிட்டதால் வந்த அபத்தம் – பதவி துறந்தார் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் !

தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

Who Is Matt Hancock's Aide Gina Coladangelo? - Todayuknews

கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது சக ஊழியர்களில் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி இருந்தது.

இந்த காணொளி வெளியானதன் பின்னர் சுகாதார செயலாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவர் இவ்வாறு பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் மூலம் நாட்டின் உயர்மட்ட சுகாதார அதிகாரி பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டிநிற்பதாக பலர் குற்றம் சாட்டி இருந்தனர்.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது முக்கிய சகாக்களில் ஒருவரான ஜினா கோலாடங்கேலோ(Gina Coladangelo )உடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, உடனடியாக சுகாதார செயலாளரை பதவி நீக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

பிரித்தானியா மக்கள் சமூக ரீதியாக இடைவெளியை பேணி, முககவசம் அணிந்து, கடுமையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் நேரத்தில் சுகாதார செயலாளரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார செயலாளர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் மூலம் தான் பிரித்தானிய மக்களை அவமானப்படுத்தியதாகவும், அந்த சம்பவத்தின் மூலம் சமூக இடைவெளியை மீறியதாகவும் சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது

முடிவின்றி வேட்டையாடும் கொரோனா – 40 இலட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்திருந்தாலும் கூட உலகம் இன்று வரை முடங்கிப்போய்தான் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு உதவிய 50,000 ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டம் !

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் மாதம் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்  அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 50,000 பேரை அவர்களது குடும்பங்களுடன் மற்ற நாடுகளுக்கு நகர்த்துவது அடங்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.

துருப்புக்கள் திரும்பப் பெற்றப் பின்னர், அமெரிக்க படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

18,000 ஆப்கானியர்கள் அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அது நீண்ட கால செயல்முறை என்பதால் தாமதமாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், ‘எங்களுக்கு உதவியவர்களுக்கு உதவ நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த வேறு எவரையும் போலவே அவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ என கூறினார்.

இதேபோல முன்னதாக ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.

மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருச்சி முகாமில் 16வது நாளாகவும் தொடரும் இலங்கைத்தமிழர்களின் போராட்டம் – போராட்டக்காரர்களில் ஒருவர் மரணம் – அறிக்கை விட்டதை தவிர வேறு ஒன்றும் செய்திராத தமிழ்தலைமைகள் !

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடக்கோரி  தொடர்ச்சியாக 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

சிறப்பு முகாமில் 78 இலங்கைத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரி விடயத்திற்கு வருவோம்..,

அண்மையில் இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தயிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செ.அடைக்கலநாதன் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வருடன் பேசி விரைவில் தீர்வு பெற்று தருவதாக கூறியிருந்தார். பின்புஇதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,  அவசர கடிதம் அனுப்பி வைத்திருந்தார். மக்கள் ஓட்டுக்களில் தெரிவானாலும் அவரும் – கட்சிக்காரர்களும் ரொம்ப பிஸி.  சிறிய பேரணியை நடாத்தி எதிர்ப்பை கூட அவராலோ அல்லது அவருடைய கட்சியினராலோ மேற்கொள்ள முடியவில்லை – மேற்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை என்பதே உண்மை.

 

கூட்டமைப்பினரையோ – ஏனைய தமிழ்தேசிய கட்சிகளையோ  பொருத்தவரை எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் காலங்களில் பிரச்சார பீரங்கி போல முழங்கித்தள்ள ஏதாவது கிடைத்தால் போதுமானது. வேறு ஒருசெயலும் இவர்களிடம் இல்லை. கூட்டாக இணைந்து விடுதலை தொர்பாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியாதோர் தான் இவர்கள்.

 

இவர்கள் மக்களிடம் ஒரு விதமான மாய விம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதாவது அரசாங்கத்திலுள்ளோர் எல்லோரும் துரோகிகள். தாம் மட்டுமே உத்தமர்கள் என்ற ஒரு மாயத்தோற்றமே அது. தமிழ்தேசியம் பேசுகின்ற எல்லா கட்சிகளும் இதனை தவறாது செய்கின்றன – தொடர்ச்சியாக. இவர்களுடைய கருத்துக்களுக்கு இன்று வரை தமிழ் மக்கள் என்ன நம்பிக்கையில் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எல்லா தரப்பினருடனும் கட்டித்தழுவி கூடிக்குழாவுவர். இதற்கு ஆகச்சிறப்பான எடுத்துக்காட்டு 2010 ஜனாதிபதி தேர்தல் . “ பொன்சேகா – மகிந்த கூட்டணி இணைந்தே 2009 போரை முடித்து வைத்தனர். ஆனால் 2010 தேர்தல் களத்தில் மகிந்த மட்டுமே குற்றவாளி. பொன்சேகா உத்தமர் என பிரச்சாரம் செய்து அவரை வட – கிழக்கில் மகிந்த நெருங்க முடியாத வாக்குகளை பெற வைத்தனர். இதே பொன்சேகா தான்  பாராளுமன்ற அமர்வு ஒன்றின் போது புரவி புயல் வடக்குக்கு வீசியிருக்க வேண்டும் என்று கூறிய நல்லுள்ளம் கொண்டவர் .” இவ்வளவு தான் இவர்களுடைய அரசியல். யாரையாவது எதிர்த்து ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் போதுமே தவிர வேறு ஒரு செயலும் இவர்களிடமும் இல்லை.

அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் கூட இவர்கள் ஒன்றுமே செய்திருக்கவில்லை. பாவம் இவர்களை நம்பி முடியாது போய் ஒரு கட்டத்துடன் மக்களே போராட்டத்தில் இறங்கி தமக்கான தீர்வை தேட ஆரமபித்தனர். வெட்கமேயில்லாது அதிலும்  கலந்து கொண்டு அரசியல் லாபம் ஈட்ட இவர்கள் தயாரே தவிர ஆக்கபூர்வமான ஒரு செயலும் இல்லை. இவர்களிடம் இதில் எதையுமே எதிர்பார்க்கவும் முடியாது.

பாவம் மக்கள் தான் இவர்களுடைய தேர்தல் அரசியலை புரிந்து கொள்ளாது இவர்கள் கூறும் போலி வார்த்தைகளை நம்பி  ஏதோ ராஜபக்ஷக்களும் – வியாழேந்திரர்களும் – டக்ளஸ்களும் தங்களுடைய எதிரிகள் என்ற பிரம்மையிலேயே வாழ்ந்து அவர்களிடம் உதவி எதையும் எதிர்பார்க்காது இறந்தும் விடுகின்றனர். இதற்கும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு உள்ளது. யாழ்.மாநகர முதல்வராக பணியாற்றிக்கொண்டிருக்கும் வி.மணிவண்ணன் இறுதியாக நடந்த  பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது அமைச்சர் டக்ளஸ் கட்சி மீது சேறு பசிக்கொண்டேயிருந்தார். அது போல அவருடைய துரோகிகள் கட்சியுடனும் தொடர்புகளோ – கூட்டோ ஏதுமில்லை எனவும் கூறியிருந்தார்.  அவர் மட்டுமல்ல. அவருடைய கட்சிக்காரரும் தான். வழமையான அதே துரோகி கான்செப்ட் தான்.  ஆனால் அவர் யாழ்.மாநகர முதல்வராவதற்கு வாக்குகளை பெறும் போது மட்டும்  டக்ளஸ் தரப்பினர் நல்லவர்களாகி அவர்கள் ஆதரவுடன் தான் அவர் பதவியேற்றுக்கொண்டார். முன்னைநாள் துரோகிகள் அவருக்கு தேவை என்றவுடன் நல்லவர்களாகி விட்டனர். இது போலத்தான் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர்.

 

இதே விடயம் தான் திருச்சி முகாமிலும் நடந்துள்ளது. பாவம் தமிழ்தேசிய கட்சிகள் தங்களை மீட்கும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை மேற்கொண்டனர்.  அடக்கலநாதன் தொடர்பு கொண்ட போது கூட  போராட்டக்காரர்கள் அதை தான் நம்பியிருப்பர். அவர் எழுதிய கடிதத்தை தாண்டி வேறு எந்த நகர்வும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதே சமயத்தில் அண்மையில் இலங்கைக்கான இந்தியத்தூதுவருடன் சந்திப்பு இடம்பெற்ற போது கூட கூட்டமைப்பினர் இதனை வலியுறுத்தவில்லை.  தேவையில்லாத பழைய பல்லவிகளை பாடிவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டனரே தவிர வழமை போல இந்த சந்திப்பிலும் கடுகளவு கூட பயன்இல்லை. இவர்களுக்கும் ஓட்டு போட்டு தெரிவு செய்த மக்கள் பாவம்.

முடிந்திருக்குமாயின் அமைச்சராக உள்ள டக்ளஸ்தேவானந்தாவிடமோ – இராஜாங்க அமைச்சராகவோ உள்ள வியாழேந்திரனிடமோ அல்லது அங்கஜன் இராமநாதனிடமோ இவர்கள் பேசியிருந்தாலோ அல்லது தொடர்பு கொண்டிருந்தாலோ அரச ம்டத்தில் சரி பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்திருப்பார்கள் போலத்தோன்றுகிறது. சரி அவர்களால் முடியாது இங்கே இருந்து ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த அடைக்கலநாதனும் அவருடைய கட்சிக்காரரும் கூட மக்களுடைய பிரச்சினையை தீர்க்க மனதுள்ளோராக இருந்திருப்பின் தங்களுடைய கருத்துநிலைகளை கைவிட்டு அரச தரப்பிடம் அவர்கள் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்திருக்கலாம்.  அப்படி ஒரு முடிவுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தால் கூட  போராட்டத்தை தற்காலிகமாக கைவிடச்செய்து அந்த ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம்.  அவையொன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் பூகோள அரசியல்வியாக்கியானங்கள் எல்லாம் மணியாக பேசுவார்கள் . பயனற்ற தலைவர்களையே நாம் பாராளுமன்றம் அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்.

 

முன்னைய நிலையோடு ஒப்பிடும் போது மக்கள் ஓரளவுக்கு தங்களை சுதாகரித்து போலித்தேசியவாதிகளை தோலுரிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை அண்மைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன.  தமிழ்தேசிய கட்சிகளை விட அதிக வாக்குகளில் அரசு சார்பான வேட்பாளர்கள் பாராளுமன்றம் நுழைந்துள்ள தன்மையானது மக்கள் ஓரளவு மாயவிம்பத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளதையும் போலி அரசியலில் இருந்து மக்கள் வெளிவர துடிப்பதையும் காட்டுகின்றது.

மக்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசு சார்பானவர்கள் என்ன செய்கிறார்கள் என தமிழ்தேசிய கட்சியினர் குற்றஞ்சாட்ட தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டுமாயின் கொஞ்சமாவது தமிழ்மக்கள் போட்ட ஓட்டுக்களுக்காக அவர்களுக்காக இயங்க ஆரம்பியுங்கள்.  இல்லையேல் இம்முறை தேர்தலில்  மாவை தூக்கியெறியப்பட்டது போல நீங்கள் ஒவ்வொருவராக தூக்கியெறியப்பட்டு நீங்கள் துரோகிகள் எனக்கூறியோர் முழுமையாக உங்கள் வட்டாரங்களை ஆக்கிரமிக்கலாம்.

பழைய கதைகளை பேசிக்கொண்டு  சர்வதேசம் – இந்தியா போன்ற பழைய சரக்குகளை இனியும் விற்க முயற்சிக்காது மக்களை போராட தூண்டாது உங்களுக்கு பின்னால் மக்களை திரட்டுங்கள்.  மக்களுடைய பிரச்சினைகளுக்காக இதய சுத்தியுடன் செயலாற்ற முன்வாருங்கள் . மக்கள் தாங்கிப்பிடிப்பார்கள் உங்களை..!

 

 

இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் !

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தான் அனைவரும் பின்பற்றுகின்றனர்.

அதே நேரத்தில் முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் போடுகிறபோது, என்ன ஆகும் என்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இதுபற்றியும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.

இந்த தருணத்தில் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவரான ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (வயது 66) இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு கவனத்தை ஈர்த்து உள்ளார்.

இவர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக்கொண்டார். (இந்தியாவில் இந்த தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்கப்படுகிறது.)

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த ஜெர்மனி அதிகாரிகள் பரிந்துரை செய்த நிலையில்தான் அவர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

தற்போது அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். இதை அவரது செய்தி தொடர்பாளர் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தினார்.

இத்தாலி பிரதமர் மரியோ டிராகியும் (73) முதலில் ஒரு கொரோனா தடுப்பூசியையும், இரண்டாவது மற்றொரு தடுப்பூசியையும் போடுவதை ஆதரிக்கிறார். இவரும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் போலவே முதலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை செலுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக இவர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார் என்று இத்தாலியின் ‘கோரியேர் டெல்லா செரா’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை முதலிலும், 2-வது டோசாக பைசர் தடுப்பூசியையும் போட்டுக்கொள்கிறபோது அது பெரியவர்களிடம் லேசான அல்லது மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சில நாடுகள் குறிப்பிட்ட தடுப்பூசியின் வினியோக பிரச்சினைகள் காரணமாக இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு மேம்படுவதை கவனித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன்.” – ஈரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரைசி உறுதி !

ஈரான் அதிபா் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றவர்  தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி.  ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி விலகவுள்ளள்ள நிலையில் 60 வயதான இப்ராஹிம் ரைசி இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றியை தொடர்ந்து டெஹ்ரானில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது,
“இல்லை. ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன். ஈரானுக்கு எதிரான அனைத்து அடக்குமுறை தடைகளையும் நீக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மூடப்படுகின்றது ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி !

ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி, அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக சனிக்கிழமையன்று மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் ஆப்பிள் டெய்லி அலுவலகம் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட சொத்துக்கள் 18 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் பின்னர் முடக்கப்பட்டன. அதன் தலைமை ஆசிரியரையும் ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

செய்தித்தாள் நீண்ட காலமாக சீனாவின் பக்கத்தில் ஒரு எதிரியாக இருந்து வருகிறது, இது ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது. ஆப்பிள் டெய்லியின் வெளியீட்டாளரும் ஹொங்கொங் ஊடக அதிபருமான ஜிம்மி லாய் கடந்த ஆண்டு இதே சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் ஆப்பிள் டெய்லி முன்னதாக வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் வெளியீட்டை மூடலாமா வேண்டாமா என்று முடிவினை அறிவிப்பதாக கூறியது.

எனினும் அதற்கு முன்னதாகவே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவின் கோர தாண்டவத்தால் 38.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி !

சீனாவின் வுகான் நகரில் பரவ ஆரம்பித்ததாக கண்டறியப்பட்டுள்ள  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  இன்றுவரை புதிய பரிமாணங்களில் அதனுடைய வேட்டை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா-வைரஸ் பாதிப்பில் இருந்து 16.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா-வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி செலுத்தாவிட்டால் சிறைத்தண்டனை – பிலிப்பைன்சில் அதிரடி அறிவிப்பு !

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வரை 10 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 23 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு 4 கோடி டோஸ் பைசர் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு பொது மக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 11 கோடி பேர் கொண்ட பிலிப்பைன்ஸ் மக்கள் தொகையில் வெறும் 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே  நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.