17

17

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசையின் இன்றைய வேண்டுகோள்!!!

Susaiகடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை இன்று (May 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோள்.

”சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மரணமடைந்து இருக்கின்றனர். படுகாயமடைந்த இந்த 25 ஆயிரம் பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டுவருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம்.

ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்த 25 ஆயிரம் மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணமடைந்திருக்கின்றனர். சுமார் இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்கா படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிக்கின்றனர் இல்லை. அந்த மக்களை சுட்டுக்கொன்றுவிடுவதற்குத்தான் அவர்கள் முற்படுகின்றனர்.

இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களைவிட மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கச் சொல்லி. காலத்தைத் தாமதித்தார்கள். தற்போது இன்னும் 20 ஆயிரம் மக்கள் வரையில் காயப்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர்.

போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்”

மே 17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம் World Information Society Day – புன்னியாமீன்

17may-special.jpgஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல்,  குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.

நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450 -களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.

தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால ஆரம்பித்து வைக்கப்படுகிறது.   கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி. தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும்,  மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875-ஆம் ஆண்டில்  ஏப்ரல் 6 ஆம் திகதி அரசாங்கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் திகதி ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.

இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி,  தொலைக்காட்சி, தொலைபேசி,  கையடக்கத் தொலைபேசி,  டெலக்ஸ்,  பெக்ஸ், மின்னஞ்சல்,  இணையம்,  முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள்,  செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும். தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி,  தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும்.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஊன்று கோலாக விளங்கும் இலத்திரனியல் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர் ஆவார் என்பது கண்கூடு. தொலைத் தொடர்பில் அந்நாடு காட்டிவரும் அரும் பெரும் சாதனைகள் மூலம் தொலைபேசியை இலத்திரனியல் மயமாக்கப்பட்டமை சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் கொள்ளப்படுகின்றது.

1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம்  International Telecommunication Union (ITU) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டு தொரும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதாகும்.

மனிதனின் தகவல் தொடர்புகள்,  செய்மதிப் பரிமாற்றம்,  கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு,  கலை வெளிப்பாடு,  வர்த்தகம்,  முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள்,  எரிமலைகள்,  பூகம்பம்,  வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும்,  போர்மூட்டம், பாதுகாப்பு,  தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பே‌சி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில்  4 பில்லியனைத் தாண்டியிருந்ததாக  என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது

அண்மைக்காலத்தில் கணனி முறைக்கும் தொடர்பில் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும்,  மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணனிகள் வழங்குகின்றன. இவை இணையம் எனப்படும் இன்டர்நெற் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெற் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப்படும் இணைய சேவையில்,  தொடர்பு சேவைகள்,  தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.

மின்னியல் தபால்,  மின்னியல் சஞ்சிகை,  மின்னியல் வெளியீடு, ரெல்நெட்,  தொடர் கலந்துரையாடல்,  உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.

எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது.

ஆரம்பத்தில்  இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம்,  அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக,  எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம் .

அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய்மதிகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. ‘நெவிகேடர்” மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும்.

இவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது.

அதேநேரம்,  தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொலைதொடர்பில் செய்மதியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும்,  நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0517-world-information-society-day.html

முல்லைத்தீவில் பணியாற்றிய 3 வைத்தியர்கள்,மேலதிக அரசாங்க அதிபர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை?

mullivaikaal-02.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மூன்றுமருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து வெளியேறி வவுனியா வந்து சேர்ந்த மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்திபன் வவுனியா இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அது தாக்கியழிக்கப்படும் வரையில் பணியாற்றிய மருத்துவ அத்தியட்சகர் சண்முகராஜாவும் அவரது குடும்பத்தினரும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் வரதராஜா, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று சனிக்கிழமை வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது 

ஜனாதிபதி நாடு திரும்பினார் -விமானநிலையத்தில் சூடான வரவேற்பு

he_2009-05-17.jpgஜோர்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார். நாடு மீட்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை அரசாங்கத்தின் அமைச்சர்கள்,  ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் வரவேற்றனர்.

விமானத்திலிருந்து இறங்கிய ஜனாதிபதி தரையைத் தொட்டு தாய்நாட்டை வணங்கினார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். இதனையடுத்து கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் ஜானாதிபதிக்கு ஆசிவேண்டி இடம்பெற்ற சர்வமத அனுஷ்டானங்களில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

ஜோர்தான் விஜயத்தின்போது அங்கு இடம்பெற்ற ஜீ-11 உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,  புலிகளிடமிருந்து விடுதலைபெற்ற நிலையிலேயே தான் இலங்கைத் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விவகாரம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இந்தியப் பிரதமர் ஆலோசனை

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

புதிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நாளை திங்களன்று புதுதில்லி செல்லும்போது, இந்தியப் பிரதமருடன் அவர் இலங்கை பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவார் என்று தெரிகிறது.

இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஜனநாயகத்தை வென்றது பணநாயகம்: ஜெயலலிதா

jeyalalitha.gifதமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தனது பணபலம், படைபலம் மற்றும் அதிகார பலத்தால் ஜனநாயகத்தை வென்றுவிட்டது என்று கூறியுள்ளார்.

தவறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், திமுக முறைகேடாக வென்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தோல்வியால் பாமக துவண்டுவிடாது என்றும், அரசியலில் அது மீண்டும் உத்வேகம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்: இராணுவம்

mili.jpg72  மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 50,000 பொதுமக்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகோடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பொமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது விடுதலை புலிகளின் நடமாட்டம் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் 400×600 சதுர மீற்றர் பரப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்கப் படையினர் 140 பேரைக் கொன்றதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது

ஆப்கானிஸ்தானில் இந்த மாத முற்பகுதியில் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை ஆய்வு செய்த ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சு, அந்த தாக்குதல்களில் அமெரிக்கர்கள், 140 பொதுமக்களை கொன்றுள்ளதாக உறுதி செய்துள்ளது.

அமெரிக்க மரைன் படையினரும், ஆப்கான் படையினரும் தலிபான்களுடன் மோதலில் ஈடுபட்ட வேளையில், அமெரிக்க விமானங்கள் ஃபாரா மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், அமெரிக்கா தனது வான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரும் நிலை உருவானது.

இந்த சம்பவத்தின் பின்னர், ஆப்கானிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதைப் பார்க்கிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனாலும், புலன் விசாரணைகளுக்கு முன்னதாக பலரது சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டதால், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை.

மட்டக்களப்பில் முதல்வர்கள் மாநாடு; 48 பிரேரணைகளில் பலவற்றுக்கு தீர்வு

25th-cm-con.jpg மட்டக்களப்பில் நேற்று நடந்த 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டில் 48 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதாக ஆறு முதலமைச்சர்களும் நேற்று தெரிவித்தனர். முதலமைச்சர்கள் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. 6 முதலமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் முடிவில் நேற்று பிற்பகல் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்கள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 48 பிரேரணைகளில் பெரும் பாலானவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. கூடுதலானவை நிர்வாகம் சார்ந்தவைகளாகவே இருந்தன. தீர்வு காணப்படாத விடயங்களுக்கு முதலமைச்சர்களின் செயலாளர்கள் பேசித் தீர்வு காண்பார்கள் என்றனர்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்குமிடையிலான பிரச்சினைகள் தொடர்பாக இருதரப்பும் பேசி முடிவெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, 26 வது (அடுத்த) முதலமைச்சர்கள் மாநாடு வடமத்திய மாகாண சபையில் இடம் பெறும். முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க மாநாட்டின் தலைவராக இருப்பார். மாநாடு செப்டம்பர் 18 ஆம் திகதி வட மத்திய மாகாண சபையில் நடைபெறும். மாகாண சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு நேற்றைய மகாநாட்டில் கலந்து கொண்ட திறைசேரி உட்பட சகல திணைக்கள அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நிருபரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் 25 வது முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இதற்குத் தலைமை தாங்கினார்.

இம் மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தென் மாகாண முதலமைச்சர்கள் சான்விஜய டி சில்வா, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம்லால் திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகிய ஆறு முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா ஆகிய இரண்டு முதலமைச்சர்களும் இம் மாநாட்டுக்கு வருகை தரவில்லை.மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு முதலமைச்சர்கள் ஊர்வலமாக மட்டக்களப்பு மாநகரசபையின் நகர மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

முதலமைச்சர்கள் மாநகர வளாகத்தைச் சென்ற டைந்ததும் அவர்களால் தேசியக் கொடிகளும் மாகாணக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன. தேசியக் கொடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கிழக்கு மாகாணக் கொடியை பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கமும் ஏனைய மாகாணக் கொடிகளை ஏனைய முதலமைச்சர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வின்சன் மகளிர் கல்லூரி மாணவிகளால் தேசிய கீதமும் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவிகளால் தமிழ் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. சமாதானப் புறாக்களும் பறக்கவிடப்பட்டன.

புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.