வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கென முழு அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். 19 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதன் செயலாளராக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய அமைச்சர்களின் செயலாளர்கள், பிரதான பாதுகாப்பு அதிகாரி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஆணைக்குழு, நிறுவனங்களின் முக்கியஸ்தர்களைக் கொண்டதாக இச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஜனாதிபதி செயலணியின் முதலாவது அமர்வு நேற்று அதன் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியினூடாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் புனர்வாழ்வளித்தல், வடமாகாண பொருளாதார, சமூக, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுத்தல், அவற்றை செயற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புகளை செய்தல். மேற்படி நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அரச பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளல்.
குறிப்பிட்ட மாகாண அதிகாரிகள், உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களை கண்காணித்தல்.முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அரச தனியார், மற்றும் தனிப்பட்ட நபர்களின் சமூகத்தின் ஒத்துழைப்பை பெறுவதும், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதலும்.
மேற்படி செயலணியின் உத்தியோகபூர்வ பணிப்புரைகளை, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், தடைகளுக்கு உடனடி தீர்வு காணவும் உடனடியாக மாற்று வழிகளை கண்டறியும் விதத்தில் ஜனாதிபதி செயலணி செயற்படும். வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்னெடுப்பதில் ஏற்படும் முன்னேற்றங்களை அவ்வப்போது ஆராய்தலுடன் தேவையேற்படும் பட்சத்தில் உடனடியான மாற்றங்கள், திட்டங்களை நடை முறைப்படுத்துவதும் மேற்படி செயலணியின் கடமையாகும். இதேவேளை செயலணியின் நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அவ்வப்போது அறியத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன் மேற்படி செயலணியின் நடவடிக்கைகளின் போது உதவிகள் அல்லது சரியான தகவல்கள் கேட்கப்படும் பட்சத்தில் தவறாது சரியான தகவல்களையும் தாமதமின்றி வழங்க வேண்டுஎனவும் சகல அரச ஊழியர்களுக்கும் இத்தால் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு அரச ஊழியரோ அல்லது எந்தவொரு அமைச்சிலோ, அரச திணைக்களமோ, அரச கூட்டுத்தாபனமோ, அல்லது இவ்வாறான நிறுவனங்களிலுள்ள ஊழியர் எவரோ நியமிக்கப்பட்ட செயலணியின் மூலம் வழங்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புக்களையும், தவறவிடுவாராயின், அவ்வாறு அவர் தவறவிட்ட சந்தர்ப்பங்களை உடனடியாக தமக்கு அறியத்தர வேண்டும் என்றும் செயலணிக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு வழங்கப்பட்ட ஆணைக்கமைய செயற்பட்டு தனது செயற்பாடுகளை பூர்த்தி செய்த பின்பு ஒருவருட காலத்தினுள் தமக்கு அறிக்கையிடுமாறும் ஜனாதிபதி செயலர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலணி குழுவில் அங்கம் வகிப்போர் விபரம் வருமாறு:- 1. பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் 2. லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலாளர் 3. கோத்தாபய ராஜபக்ஷ செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு 4. சுமித் அபேசிங்க செயலாளர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு 5. யூ.எல்.எம். ஹால்தீன் செயலாளர் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு 6. டபிள்யூ.கே.கே. குமாரசிறி செயலாளர் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு 7. எஸ். அமரசேகர செயலாளர் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு 8. எம்.எம்.சி. பேர்டினன்டோ செயலாளர் மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு 9. ஜே.ஆர்.டபிள்யூ. திஸாநாயக்க செயலாளர் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு 10. டாக்டர் அதுல கஹந்தலியனகே செயலாளர் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் போஷாக்கு அமைச்சு
11. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா பிரதான பாதுகாப்பு அதிகாரி 12. லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதி 13. வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதி 14. எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க விமானப் படைத் தளபதி 15. ஜயந்த விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபர் 16. ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் 17. மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இராணுவ பிரதான அதிகாரி வட மாகாணத்திற்கான தகுதிவாய்ந்த அதிகாரி 18. எஸ். பி. திவாரத்ன அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் 19 டீ. அபேயகுணவர்தன முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேசிய திட்டமிடல் திணைக்களம்