02

02

கதிர்காமம் வரும் யாத்திரிகர்களுக்கு டெங்கு நோய் குறித்து அறிவுறுத்தல்

தங்காலை பகுதியில் டெங்கு நோய் அதிகளவில் பரவிவருவதால் கதிர்காமம் வருகின்ற யாத்திரிகர்களுக்கு சுத்தத்தை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாத்தறையில் 65 பேருக்கும், காலியில் ஆறு பேருக்கும் டெங்கு நோய் பிடித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரையும் தென் மாகாணத்தில் 137 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஜே.பி. சேனரத் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளைச் சூழவுள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களின் வகுப்பறைகளிலும் நுளம்புகளைக் கொல்லும் மருந்து வீசப்பட்டுவருகிறது.

உணவுக் கடைகளில் சுத்தத்தை பேணுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதுடன், அவற்றை கண்காணித்து வருகின்றனர். தென் மாகாணத்தில் டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

வருடாந்த உற்சவத்தை கைவிட நேர்ந்தது இன,மத நல்லிணக்கத்திற்கு குந்தகமான செயற்பாடு -அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம்

நாட்டின் இன,மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் செய்யும் செயற்பாடாகவே இறக்குவானை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை வேதனையுடன் நோக்க வேண்டியுள்ளதாக அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அதன் பொதுச்செயலாளர் த.மனோகரன் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பௌர்ணமி தினம் பௌத்தர்களால் புனித தினமாகக் கொள்ளப்படுவதை போன்று ஆதி முதல் இந்துக்களும் அத்தினத்தை புனித நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

இவ்வாறிருக்கும் போது பல்லின பலமொழி, பலமதங்களைக் கொண்ட நாட்டில் இந்துக்களின் புனித தினமான பௌர்ணமி தினத்தில் சமய வழிபாடு செய்வதைத் தடுப்பதானது சமய உரிமையை தடுக்கும் செயலாகவே அமைகின்றது.

நாட்டு மக்களிடையே ஐக்கியமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமென்று பல தரப்பினராலும் குரல் கொடுக்கப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்வாறான இழிசெயல்கள் இனங்களுக்கிடையே பகைமை,வெறுப்பை ஏற்படுத்தும்.இச் செயல்கள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.பொறுப்பின்றி இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தல் நாட்டில் இனத்துவேஷம் மேலும் தீவிரமடைவதை எந்த மகானாலும் தடுக்க முடியாது.

ஹொங்கொங் பரவியது பன்றிக் காய்ச்சல்

swine-flue.jpg மெக்ஸிகோவில் இருந்து ஹொங்கொங்குக்கு வந்த மெக்ஸிகோ நாட்டு பிரஜை ஒருவரில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் காணப்பட்டதாக, ஹொங்கொங்குக்கான தலைமை அதிகாரி டொனால்ட் சாங் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோவில் 160க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான நோய்க்கிருமி என்று சந்தேகிக்கப்படும் இந்த வைரஸ், ஆசியாவுக்கு வந்த ஒருவரிலும் காணப்பட்டமை உறுதிசெய்யப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

சாங்காய் ஊடாக வந்த அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், அவர் தங்கியிருந்த விடுதி பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டுள்ளதாகவும் சாங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்கிய தாதிக்கும் இந்த நோய் தொற்றியுள்ளதாக, ஜேர்மனி கூறுகிறது. அவர் தற்போது உடல்நிலை தேறிவருகின்றார்.