Multiple Page/Post

திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

tissanayaga000.jpgபயங்க ரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட திஸ்ஸாநாயகம், விசாரணைகள் ஏதுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tissanayagam333.jpg

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் கல்வி, சுகாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூ.160 கோடி

mullai-ga.jpgகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தில் துரிதமாகப் புனரமைக்கவென அரசாங்கம் 160 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு, வட மாகாண சபை மற்றும் அந்தந்தத் திணைக்களங்கள் ஆகியவற்றின் ஊடாக ஒதுக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், கிளிநொச்சி பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்நிதி ஊடாக 180 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல புனரமைப்பு வேலைகளையும் தாமதிமின்றி துரிதகெதியில் ஆரம்பிப்பதற்குத் தேவையான சகல அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிதி ஒதுக்கீடு இவ்விரு மாவட்டங்களினதும், கல்வி, சுகாதாரம், மின்சாரம் பொது வசதிகள் உட்பட சகல துறைகளையும் மேம்படுத்தவென மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதன்படி இவ்விரு மாவட்டங்களினதும் புனரமைப்புக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி விபரம் வருமாறு, சுகாதார துறைக்கு 487.4 மில்லியன், மின்சாரத்திற்கு 451 மில்லியன், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழான வீதிகளுக்கென 122. 7 மில்லியன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குக் கீழான வீதிகளுக்கு 150 மில்லியன், உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கீழான உள்வீதிகளுக்கு 130. 12 மில்லியன், கல்வி துறைக்கு 90 மில்லியன், கமநல சேவைக்கு 51 மில்லியன், நீர்ப்பாசனத்துறைக்கு 65 மில்லியன், விவசாய அபிவிருத்திக்கு 36.3 மில்லியன், நன்னீர் மீன்வளப்பு துறைக்கு 26.2 மில்லியன், கூட்டுறவு துறைக்கு 37 மில்லியன், மாவட்டங்களின் நிர்வாக கட்டடத்திருத்த வேலைகளுக்கென 29.5 மில்லியன், பிரதேச செயலக கட்டிட திருத்த வேலைகளுக்கென 22.7 மில்லியன் என்றபடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு துறைக்கென 11.6 மில்லியனும், தென்னை அபிவிருத்திக்கென 5.8 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கென மகநெகும திட்டத்தின் கீழ் 20 மில்லியனும், தளபாடக் கொள்வனவுக்கென 12 மில்லியனும், சிறுவர் பராமரிப்புக்கு 6.6 மில்லியனும் உள்ளூராட்சி கட்டிடத் திருத்தத்திற்கு 12 மில்லியனும், விவசாயத் திணைக்களத்திற்கு 6 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றி பெரும் – கருத்துக்கணிப்பு

japan.jpgஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி பெருவெற்றி பெரும் என்று கருத்துகணிப்புகள் காட்டுகின்றன.

கருத்துக் கணிப்புகளை ஒத்து தேர்தல் முடிவுகள் வருமானால் ஜப்பானில் கடந்த அரை நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட இடைவெளி இன்றி தொடர்ந்து ஆட்சியில் இருந்துவரும் தாராளவாத ஜனநாயகக் கட்சி பதவியகல நேரிடும்.

கடுமையான தோல்வி என்று குறிப்பிட்டு அப்படியான ஒரு தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக பிரதமர் டாரோ அஸோ தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் பதவியிலிருந்தும் தான் விலக எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் மிக மோசமான பொருளாதார வீழ்ச்ச்யை சந்தித்த நேரத்தில் ஆட்சி செயத அரசியல் தலைவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபமே தனது வெற்றிக்குக் காரணம் என, பிரதமராக வரக்கூடியவர் எனத் கருதப்படும் யுகியோ ஹடொயாமா தெரிவித்துள்ளார்.

தமிழ் பெண் ஒருவர் வீஸா இன்றி லண்டன் செல்வதற்கு அனுமதி

visa.jpgதமிழ் பெண் ஒருவர் வீஸா அனுமதியின்றி லண்டன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
 
40 வயதான அங்கயற்கண்ணி கிருஸ்ணபிள்ளை என்ற பெண்ணே இவ்வாறு வீஸா இன்றி லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
விமானம் மூலமாக குறித்த பெண் லண்டன் சென்றுள்ளதாகவும், அவருக்கு உரிய வீஸா அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
குறித்த பெண்ணுக்கு எந்த அடிப்படையில் வீஸா வழங்கப்பட்டதென்பது தமக்கு தெரியாது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பான தகவல்களை திரட்டியதன் பின்னர் விளக்கமளிக்க உள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹேஸ் தெரிவித்துள்ளார்.
 
குறித்த பெண்ணின் வீஸா அனுமதிக்காலம் காலாவதியாகியுள்ள நிலையில், வீஸா இன்றியே குறித்த பெண் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நேற்றுவரை பன்றிக் காய்ச்சல் பலி 99

swine.jpgநேற்று பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது.

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் நேற்றுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையான சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் இஷார் என்ற 20 வயது வாலிபர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். இவரையும் சேர்த்து புனேவில் இதுவரை 27 பேர் இறந்துள்ளனர். தேசிய அளவில் 99 பேராக பலி  எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சரணடைந்த – கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வுக்கென 200 கோடி ரூபா

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்டவர்களது புனர்வாழ்வுக்காக சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பினூடாக 150 கோடி ரூபா முதல் 200 கோடி ரூபா வரையிலான நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சும் சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பும் இவ்வாரமளவில் கொழும்பில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளன.

புலி பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கு இதுபோன்று பல்வேறு வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தினடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிதியை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா நாடுகளும் ஜப்பான், இந்தியா ஆகிய ஆசிய நாடுகளும் இணக்கம் தெரிவித்திருப்பதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எல். ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த அல்லது மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்ட குழுவினருக்கு புனர்வாழ்வு அளிக்குமுகமாக கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றி கற்பித்தல், தளபாடம் தயாரித்தல், தச்சுத் தொழில் செய்தல், ஆடை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

மக்காவுக்கு முஸ்லிம்கள் செல்வது போன்று அதாவுல்லா கட்சியை முன்னெடுக்கின்றார் – டக்ளஸ்

epdp9999.jpgமக்காவுக்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் பயணம் போன்றது நாட்டின் சமாதானப் பயணம். அதனைப் போன்று அமைச்சர் அதாவுல்லா இக்கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-

அமைச்சர் அதாவுல்லா பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் பேசிவருபவர். இலங்கைத் தீவில் அனைத்து மக்களினதும் அபிமானத்தை பெற்றவர்.  கடந்த யாழ் மாநாகர சபைத் தேர்தலில் அவர் அங்கு வந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை நாம் குறிப்பிட வேண்டும். அத்தகைய ஒருவரை நீங்கள் தலைவராகக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

வரலாறுகள் இரத்தத்தினால் எழுதப்பட்டவை. அந்த யுகம் முடிந்தது. நமக்கு இன்று ஒரு வரலாற்றுக் கடமையுள்ளது. நாம் ஒன்று திரண்டு இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சகல இன, மத மக்களும் சரிசமமாக வாழும் சூழல் நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு சிறந்த அரசியல் தீர்வொன்று அவசியம்.கிழக்கில் இன்று சிறந்த மாகாண சபை உருவாக்கப்பட்டு ஐக்கியம் நிலவுகிறது. இங்கிருந்து தொடங்கித்தான் நாம் எமது பயணத்தை நகர்த்த வேண்டும்.

எமது எண்ணங்களை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் கட்டியெழுப்பப்படுகிறது.

புலிகளின் தலைமை பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்பதை நன்கு உணர்ந்தவர் நமது ஜனாதிபதி. புலிகளின் யுகம் முடிந்து விட்டது. ஜனாதிபதியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்த வேண்டும். சகல தலைவர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நானாட்டான் அபிவிருத்திக்கு ரூ. 93 மில். அரசால் ஒதுக்கீடு

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கென 93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் வேலைத்திட்ட செயலணி தலைவர் பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் அமைச்சர் ரிசாத் பதியிதீன், அக்கிராம மக்களுடன் கலந்தாலோசித்து முன்வைத்த வேலைத் திட்டங்களுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 119 வேலைத் திட்டங்களுக்கு இந்த நிதி பெறப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் 57 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை 11.5 மில்லியன் ரூபா செலவில் நானாட்டான் அச்சங்கேணி கிராமத் திற்கான மின்விநியோகத் திட்டமும், அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் அண்மை யில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக இப்பிரதேச மக்களின் தேவையாக இருந்து வந்த கலாசார மண் டபத்தின் முதலாவது கட்ட பணிகளுக்கென அமைச்சர் ரிசாத் பதியுதீன் 50 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்ததுடன், அதற்கான பணிகளையும் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நவீன தொழில்நுட்பத்துடன் கடற்படை பலப்படுத்தப்படும் – கடற்படைத் தளபதி தெரிவிப்பு

29-sayura00.jpgநவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக கடற்படையை முன்னேற்றவும் கடற்படையை மேலும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று முன்தினம் தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 91 அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறினர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கடற்படை தளபதி மேற்கண்டவாறு கூறினார்.

கடற்படை தளபதி மேலும் கூறியதாவது :-வினைத்திறனும், ஒழுக்கமும் நிறைந்தவர்களாக கடற்படை வீரர்களை மாற்றுவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கடற்படை ஏனைய படைப் பிரிவுகளைவிட மாறுபட்டதாகும். ஏனைய படைப் பிரிவுகள் உள்நாட்டுக்குள்ளேயே இயங்குகின்ற போதும் கடற்படையினர் கடல் எல்லை தாண்டி வெளிநாடுகளிலும் செயற்படுகின்றனர். கடற்படையினர் இலங்கை தூதுவர்களாகவே செயற்படுகின்றனர்.

யுத்த காலத்தில் போலவே தற்பொழுதும் கடற்படையினருக்கு தொடர்ந்து கூடுதலான பயிற்சிகள் வழங்க உள்ளோம். அவர்களுக்கு துறைசார் பயிற்சி வழங்கவும் ஆங்கில அறிவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிகழ்வில் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியல் எட்மிரல் எஸ். எம். பி. வீரசிங்க இராணுவத்தின் 22 ஆவது படைப் பிரிவு கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். கண்கவரும் விதத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வாத்திய அணி வகுப்பு, நடனம், கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இலங்கை மீனவர்கள் ஐவரும் விடுதலை

இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததன் காரணமாக கைதாகி தமிழ் நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தெவிநுவரவுக்கு திரும்பி வந்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று கூறியது.

கடந்த ஏப்ரல் மாதம் தெவிநுவர மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் இருந்து இவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு நடுக்கடலில் வைத்து விபத்துக்குள்ளானதால் இவர்கள் 22 நாட்கள் கடலில் தத்தளித்துள்ளதோடு பங்களாதேஷ் கடற்படையினர் இவர்களை மீட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் படகு பங்களாதேஷில் வைத்து திருத்தப்பட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தியக் கடலுக்குள் நுழைந்தபோது இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மீன்பிடித் திணைக்களத்தின் தலையீட்டையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.