Multiple Page/Post

தாய்நாட்டுக்கு துரோகமிழைத்தால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் – ஜனாதிபதி

slpr080909.jpg“எனக் கெதிரான அவதூறுகளை நான் பொறுத்துக் கொள்ள முடியும். எனினும் நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எவருக்கெதிராகவும் உரிய நடவடிக்கை எடுப்பதில் நான் பின்நிற்கப்போவதில்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிறந்த நாட்டுக்குத் துரோகம் செய்வதற்கான உரிமை எவருக்கும் கிடையாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட மகளிர் அமைப்புகள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று மெதமுலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்றரை இலட்சம் வாக்குகளை வழங்கி என்னை ஜனாதிபதியாக்கியதில் பெரும் பங்களிப்பு தென் மாகாண மக்களுடையது. ஏனைய பகுதிகளில் எமக்குக் கிடைத்த வாக்குகளோடு ஒப்பிடும் போது நீங்கள் வழங்கிய ஆதரவு பெருமைப்படக்கூடியது. முப்பது வருடகால இந்த நாட்டின் சாபமாயமைந்த பயங்கரவாதத்தை ஒழித்து துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஒன்றிணைக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கினர்.

அம்பாந்தோட்டை, மாத்தறை என நான் என்றும் பிரித்துப் பார்த்ததில்லை.  இரண்டும் எனக்கு ஒரு மாவட்டத்தைப்போன்றது. என்னைப் பெற்ற எனது தாய் மாத்தறையிலிருந்து வந்தவரே.  இந்த நாட்டை மீட்க தமது உயிரைப் பணயம் வைத்த படைவீரர்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோரும், உறவுகளும் எமது கெளரவத்திற் குரியவர்களே. நாம் இந்த நாட்டை எளிதாக மீட்டெடுக்கவில்லை. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இருந்து பல்வேறு தடைகளும் அழுத்தங்களும் வந்தன. பலர் எமது காலை வாரமுயன்றனர். இத்தகைய தடைகளுக்கு மத்தியிலேயே நாம் இந்த நாட்டை மீட்க முடிந்தது.

இதற்கான நடவடிக்கையில் எமது படையினர் 26,000 பேர் பலியாகினர். மேலும் 5,000 ற்கு மேற்பட்டோர் உடல் ஊனமுற்றனர். அத்தகைய படையினருக்கு எதிராக குற்றஞ் சுமத்தி அவர்களை சர்வதேச இராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு நம்மவர்களே முயற்சிக்கின்றனர்.

சர்வதேச இராணுவ நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க சாட்சியங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தை இல்லாதொழித்த எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இடம்பெற்றவைகளைப் பற்றி கவனத்திற்கொள்ளவோ விசாரணைக்குழு அமைக்கவோ முன்வரவில்லை. கொடூர பயங்கரவாதத்தை ஒழித்த எம்மீது குற்றஞ்சுமத்த வருகின்றனர்.

மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றம் சென்றவர்களே இன்று நாட்டை மீட்ட படையினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் செல்ல தலைப்பட்டுள்ளனர். சுனாமி முதல் எனக்கெதிராக அவதூறுகளை எதிர்க்கட்சி மேற்கொண்டது.  அதனை நான் பொருட்படுத்தவில்லை. எனினும் தாய்நாட்டுக்கு எதிராக துரோகமிழைத்தால் அதற்குப் பதிலடி கொடுக்க நான் தயங்கமாட்டேன்.

நாட்டில் தற்போது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  கொழும்புக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி இன்று கிராமிய ரீதியில் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச சேவையில் தற்போது 12 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கான சம்பளம், மக்களுக்கான நிவாரணம், விவசாயிகளுக்கான மானியம், அத்தியாவசியப்பொருட்களுக்கான வரிச் சலுகைகள் என மக்கள் நலனைக் கருத்திற்கொண்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களைப் பொறுத்தவரை முழுமையான அபிவிருத்திக் குள்ளாக்கப்பட்டு வருகின்றன. வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 10ம் திகதி நடைபெறும் தேர்தலின் மூலம் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் திருப்திகரமானது என்பதை உலகிற்கு காட்ட முடியும் எனவும் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு கண்டனம்

ramadan-mosque.jpgகிழக்கு மாகாண பள்ளி வாயல்கள் சம்மேளனம் என்ற பெயரில், சம்பந்தப்பட்ட பள்ளிவாயல்களுக்கோ, பள்ளி வாயல்களின் தலைமைகளுக்கோ தெரியாதவாறு அறிக்கைகளும், செய்திகளும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருப்பதனை அவதானித்து வருகின்றோம்.

குறிப்பாக, கடந்த வருடம் பாராளுமன்ற பஜட் விவாதத்தின் போது கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்ற கடிதத் தலைப்பில் அரசாங்கத்தின் பஜட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்ற பெக்ஸ் செய்தியின் மூலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 22.09.2009ம் திகதி தமிழ் தினசரி பத்திரிகை ஒன்றில் கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் ஹனீபா கடத்தப்பட்டு விடுவிப்பு என்று செய்தி வந்திருந்தது. இச் செய்தியில் பள்ளிவாயல் ஒன்றின் தலைவராகவே இல்லாத ஹனிபாவை கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்று அடையாளப்படுத் தப்பட்டிருக்கின்றது. இவ் அடையாளப்படுத்துகையானது பள்ளிவாயல்களின் பேரில் சுயலாபம் தேடுவதற்கோ அல்லது அரசியல் இலாபங்களைப் பெறுவதற்காகவோ எடுக்கப்படும் முயற்சியென நாம் திடமாக நம்புகின்றோம்.

மெளலவி ஹனிபா என்பவர் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயலின் தலைவராக இருந்த போது அதன் பதவி வழியாக அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனத்திலும், கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனத்திலும் சில பதவிகளில் இருந்திருக்கிறார்., அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயல் தலைமைப் பதவியில் இருந்து அவர் நீங்கிக் கொண்டது 2007.09.12ம் திகதியாகும்.

இதன்படி பள்ளவாயலின் புதிய தலைவரே மேற்படி சபைகள் கூடுகின்றபோதோ அல்லது உருவாக்கப்படுகின்றபோதோ அங்கம் வகிப்பதுவும் பதவி வகிப்பதுவும் நடைமுறை வழக்கமாகும். ஆகவே, கடந்த 02 வருட காலங்களுக்கு மேலாக பள்ளிவாயலின் தலைவராகவே இல்லாத மெளலவி ஹனீபா கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்றும், இயங்காத அச்சபையின் பெயரை பாவிப்பதிலிருந்தும், தவிர்ந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இத்தால் வேண்டுகோள் விடுத்துக் கொள்கின்றோம்.

இவ் வேண்டுகோளினை அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சார்பில் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல், அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளி வாயல், அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளி வாயல் ஆகிய வற்றின் தலைவர்கள் கூட்டாக இணைந்து வெளியிடுகின்றோம்.  தவறும் பட்சத்தில் இவ்விடயத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியை நாடவேண்டியதையும் தவிர்க்க முடியாமலாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த 16.09.2009ம் திகதி மெளலவி ஹனிபாவிற்கு நடந்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறியவேண்டியிருக்கிறது என நமது உலமாக்கள் கருதுகின்றனர்.

நமது பிராந்தியம் தொடர்பிலும் சமுதாய நலன்கள் தொடர்பிலும் மெளலவி ஹனிபாவைப் பற்றிய கருத்துக்கள் வித்தியாசமாகப் பேசப்படுகின்றது. அவருக்குப் பின்னால் அரசியல் பின்னணிகள் இருப்பதாகவும் அறியக்கிடைக்கின்ற காரணத்தினால் உலமா சபையினையும் அவ்வரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதனை தடுக் குமாறு நமது உலமாக்கள் கேட்டுக் கொள்கின் றார்கள்.

எனவே 23.09.2009ம் திகதி நடைபெற்ற அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமாக சபைக் கூட்டத்தில் மெளலவி ஹனிபா பேசிக் கொண்ட ஒருதலைப்பட்ச விடயம் தொடர்பாக நாம் எவ்வித தீர்மானத்திற்கும் வரக்கூடாது என உலமாக்கள் எழுத்து மூலம் கேட்டிருக்கின்றனர்.

எனவே, அவர் ஒரு தலைப்பட்சமாக பேசிய விடயம் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் ஊடகங்களுக்கோ நமது உயர் சபைகளுக்கோ, தீர்மானங்கள் என்றோ அறிக்கைகள் என்றோ வெளியிடக்கூடாது எனவும் உலமாக்கள் மேலும் கேட்டுக் கொள்கிறார்கள்.

இன்னும் இவற்றையெல்லாம் மீறி இது தொடர்பில் ஏதாவது அறிக்கைகள் வெளியிடப்படுமானால் அவற்றிற்கு அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையினர் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றாமல் டமிஃபுளு உட்கொள்ளக் கூடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

16-swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் தொற்றுவதை தவிர்க்கும் வகையில் வைரஸ் எதிர்ப்பு மருந்தான டமிஃபுளு மாத்திரையை பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி தென்படுவதற்கு முன்னதாகவே, இந்த மாத்திரரையை பயன்படுத்தினால், அது வீரியத்துடன் பயந்தரமாட்டாது என்பதே இந்த விடயத்தில் இருக்கின்ற பெரிய அபாயம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

இந்தக் காய்ச்சலுக்காக இந்த மருந்து பயன்படுத்தப்படும் 28 தடவைகளில், 12 தடவைகள் காய்ச்சல் தொற்றுவதை தடுப்பதற்காக முன்கூட்டியே அது பயன்படுத்தப்படுகின்றது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இதற்குப் பதிலாக பலவீனமான நோய் எதிர்ப்புத் திறனுடன் இருப்பவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு, பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அதன் பின்னர் தாமதிக்காமல் இந்த மருந்தை உட்கொள்வதே சிறந்தது என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

260909srilanka.jpgவட மாகாணத்திலிருந்து (1990ம் ஆண்டு) இடம்பெயர்ந்து முகாம்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்து வருகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மீளக்குடியேறவிருக்கும் மன்னார் மூர்வீதி மக்கள் தொடர்பான விபரங்களை மீள்குடியேற்ற அமைச்சிற்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இவ்விடயம் சம்பந்தமாக மன்னார் மூர்வீதி மக்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம், 126/1 ஏர்னோல்ட் ரட்நாயக்கா மாவத்தை, கொழும்பு-10 (டீன்ஸ் றோட் சந்தி) யுனிக் சர்வதேச பாடசாலையில் இதற்கான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதால் இந்த கலந்துரையாடலில் அனைத்து மன்னார் மூர்வீதி மக்களம் தவறாது கலந்து கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுள்ளனர்.

இதன்போது, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சால் கோரப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவுள்ளது. கீழ்வரும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைப்பினர் கேட்டுள்ளனர். தொலைபேசி இல: 0774162311, 0773223930, 0714293668, 0777330928

தில்லியில் இலங்கைத் தமிழர் ஆதரவு கருத்தரங்கம்

16-vaiko.jpgஇலங் கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் வகையில், இந்தப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில்  வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக இலங்கை அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.

டெல்லி தமிழ் மாணவர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், பத்திரிகையாளர் எம். நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க உலக நாடுகள் முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார் பழ. நெடுமாறன்.

இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இந்திய அரசு இலங்கைக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளைச் செய்ததாகவும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐ.நா.வின் முயற்சியை முறியடித்ததும் இந்தியாதான் என்று வைகோ குற்றம்சாட்டினார்.

கிழக்கின் முழக்கம் – 2009

மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கின் முழக்கம் – 2009 மாபெரும் விழா இன்று காலை முதலில் நள்ளிரவு வரை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெறுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகள் பங்குகொள்ளவுள்ள இவ்விழாவில் நீச்சல் போட்டி, ஓட்டப் போட்டிகள், உதைபந்தாட்டம், பீச்போல் மற்றும் தோணி ஓட்டம், அலங்காரப் போட்டி, மெஜிக் காட்சி மற்றும் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுவோருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இறுதி நிகழ்வாக இசைக் கச்சேரியும், வாண வேடிக்கைகளும் நடைபெறவுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் இன, மத, பேறுபாடுகள் இன்றி ஒரே இடத்தில் சங்கமிக்கும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நிலவிய போர்ச் சூழல்கள் காரணமாக இனங்களுக்கிடையேயான உறவுகளில் விரிசல், மக்கள் மத்தியில் ஒருவித அவநம்பிக்கை, பயம், உயிர்வாழ்வது பற்றிய எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இருந்த நிலை இப்போது மாறியுள்ளது.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் அச்சமின்றி வாழ்வதற்கானதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண அமைச்சு கிழக்கு முழக்கம் – 2009 விழாவை நடத்துகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து இவ்விழாவை நடத்த கிழக்கு மாகாண சபை திட்டமிட்டுள்ளது. கிழக்கு மக்களின் வாழ்க்கை முறையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழி அம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாகுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவிற்கான ஊடக அனுசரணையை ஸ்ரீ டி.வி. வழங்குகிறது. இத்தாலி ரோம் நகரை மையமாகக் கொண்டு 152 நாடுகளில் ஒலிபரப்புச் சேவைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

260909tamilnadugovtlogo.jpgஹெச். ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு 18 மாத கால ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போன்றதொரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று அரசு ஆணை கூறுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்கனவே இது போன்று விடுப்பு கொடுக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சுகாதாரச் செயலர் சுப்புராஜ் BBCதமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழக அரசு ஊழியர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விபரம் அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

. ஜனாதிபதியின் மகனுக்கு ரிக்கற்: முன்னாள் அமைச்சர் வெளியே

மகாராஷ்டிர மாநில சட்ட சபைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நிதி இணை அமைச்சர் சுனில் தேஷ்முக்குக்கு இடமளிக்கப்படவில்லை இவர் அமராவதித் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். அந்தத் தொகுதி ஜனாதிபதி பிரதிபா பட்டேலின் மகன் ராஜேந்திர ஷெகாவத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.

தனது வழமையான தொகுதி தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதை ஆட்சேபித்து அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக சுனில் தேஷ்முக் கூறுகின்றார்.

மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டாகப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 174 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 114 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு சர்வதேச விருது

Tissanayagam_S_J20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு சர்வதேச ஊடக விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பாதுகாப்புப் பேரவையினால் திஸ்ஸநாயகம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சோமாலியா, டுயுனிசியா, அஸர்பய்ஜான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளது ஊடகவியலாளர்களுக்கு 2009ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருது வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள விருது வழங்கும் வைபவத்தில் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிரைப் பணயமாக வைத்து கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்ட இந்த ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளதென ஊடகவியலாளர் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் போல் ஸ்டிகர் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், அடக்குமுறைகள் போன்றவற்றினால் குறித்த ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட்டர் என்று குற்றஞ்சாட்டி ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு இருபதாண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர் திறைசேரி சொத்துக்களில் முதலீடு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு சாதகமான பதில் – சியம்பலாபிட்டிய

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களில் சுமார் 202 பேர் இலங்கையில் திறை சேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி சொத்துக்களில் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் 322 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்வதற்காக பதிவு செய்துள்ளனர் என அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

திறைசேரி உண்டியல்கள், சொத்துக்களில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 01ஆம் திகதி புலம் பெயர்ந்தோரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இத் தொகை முதலீடு செய்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள தாக குறிப்பிட்டார்.

வெளிநாட்டினர் 150 பேரும் இலங்கையர் சுமார் 65,000  பேரும் திறைசேரி உண்டியல்களை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கேட்ட வாய் மொழி மூல விடைக்கான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்