Multiple Page/Post

குடும்ப நூலகத் திட்டம் ஒரு அறிமுகம்! : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Home_Libraryஅன்புடையீர்புகலிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பின்றி நல்ல பல வாசகர்களும் வாசிப்பில் நாட்டமில்லாது போய்விடுகின்றனர். அதே வேளையில் ஈழத்துத் தமிழ்நூல் வெளியீட்டுத்துறையும் உரமின்றி வாடும் செடிபோன்று ஆதரவின்றி அல்லல்படுகின்றது. இந்நிலையில் எனது கடந்த மாத இலங்கை விஜயத்தின்போது சில தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். குமரன் புத்தக இல்லம், மலையக வெளியீட்டகம், ஞானம் வெளியீட்டகம். சேமமடு புத்தகசாலை ஆகிய நிறுவனத்தினர் என்னுடன் தொடர்புகொண்டு தங்களது நூல்களில் 25 நூல்களையாவது புகலிடத்தில் விற்பனைசெய்து தந்தால் தமது வெளியீட்டுத்துறைக்கு அது ஆக்கபூர்வமாக உதவும் என்று கேட்டுக்கொண்டார்கள். புகலிட நாடுகளில் ஒரு நூலுக்கு 25 வாசகர்களைத் தேடுவது கடினமாக இருக்குமா என்று ஒரு கணம் சிந்தித்தேன்.

உள்ளுர் விலையுடன் விமானப்பொதியாக நூல்களை எனக்கு அனுப்பும் செலவையும் சேர்த்தால் சராசரி ஒரு நூல் 5 பவுண் வரையில் தான் வருகின்றது என்று அங்கு கணக்கிட்டோம்.

இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுவதன் நோக்கம் என்னவென்றால், நீங்களும் உங்கள் நண்பர்கள் ஒன்றிரண்டு பேரையும் இணைத்து மாதம் 5 பவுண்களை ஈழத்து நூல்களை வாங்க ஒதுக்குவீர்களாயின் ஒரு வாசகர் வட்டமாகச் சேர்ந்து என்னால் மேற்குறிப்பிட்ட பதிப்பாளர்களுக்கும் வாசகர் வட்டத்திற்குமான இணைப்பாளராகச் செயற்படமுடியும்.  உங்கள் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் மாதாந்தம் ஒரு நூலை அனுப்பிவைக்க முடியும். அதனை உங்கள் குடும்ப நூலகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது வாசிப்புப் பழக்கத்தை எம்மிடையே வளர்த்தெடுக்க ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம் பல அனுகூலங்கள் ஏற்படும்.
1. எம்மவரின் வீடுகளில் விரும்பியோ விரும்பாமலோ குடும்ப நூலகங்கள் உருவாகும்.
2. இலங்கைத் தமிழ்ப் படைப்புகளுக்கான வாசகர் சந்தை வளரும்
3. எம்மிடையே மறைந்துவரும் புத்தகக் கலாச்சாரம் துளிர்விடும்.
4 லண்டனில் நல்லதொரு புத்தகசாலை இல்லாத குறை நீங்கும்.(தற்காலிகமாகவேனும்)

இவை அனைத்தும் நீங்கள் உங்களது மாத வருவாயிலிருந்து ஒதுக்கும் 5 பவுண் பெறுமதியான பணத்தில் செய்யலாம் என்று நம்புகின்றேன். இது எவ்வித வர்த்தக நோக்கத்துடனும் மேற்கொள்ளப்படும் முயற்சியல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஈழத்துப் படைப்புலகத்துடனும், பதிப்புலகத்துடனும் மிக நெருங்கிய உறவைக் கொண்டவன் என்பதால் ஏற்பட்ட எதிர்காலம் பற்றிய பயம் காரணமாக இருக்கலாம்.

வாசகர் வட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன் என்.செல்வராஜா
(0044) 01582 703786
selvan@ntlworld.com

20-20 உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை – பிரித்தானிய அணிகள் மோதல்

sri-lanka.jpgமேற்கிந்திய தீவுகளின் நடைபெற்றுவரும் 20-20 உலகக்கிண்ண போட்டியின் காலிறுதியின் இறுதிப் போட்டியில் அரையிறுதி வாய்ப்பிற்கான இலக்குடன் இலங்கை இந்திய அணிகள் பலப்பரீட்சை கண்டன. மிகவும் விறுவிறுப்பாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கார்த்திக்இகம்பீர் இருவரும் களம் இறங்கினர்.கார்த்திக்13, கம்பீர்41, ரெய்னா63, டோனி23, யுவராஜ் சிங்1, பதான்13 ஒட்டங்களை பெற்றனர். இந்திய அணி உதிரிகளாக 09 ஓட்டங்களை பெற்றது. 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. இலங்கை அணியின் பந்து வீச்சில் துஷார, மலிங்க இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பெரேரா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் ஜயவர்த்தன4, ஜயசூரிய 0, இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். எனினும் இருவரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை .  பின்னர் களம் இறங்கிய ஏனைய வீரர்கள் டில்சான்33, சங்கக்கார46 ,  மத்தியூஸ்46, கப்புகெதர37, ஓட்டங்களை பெற்றனர். உதிரிகளாக 1 ஓட்டம் பெறப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டது.  இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் ஆகியோர் நெஹ்ரா இபதான் இருவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.வினய் குமார் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நேற்றுமுன்தினம் அவுஸ்திரேலியாவுட‌ன் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌‌தீவு அ‌ணி தோல்வி கண்டதால் மேற்கிந்திய தீவு அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.  இப்போட்டியில் பூவா தலையா வென்று முதலில் துடுப்பாடிய மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்றது.

கூடிய ஓட்டமாக சர்வான் 31 பந்துகளில் 26 ஓட்டங்களையும், சந்திரபோல் 18 ப‌ந்‌துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களையும் பெற்றனர்.  அ‌ணி‌த் தலைவ‌ர் கெ‌ய்‌ல் 4 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அவுஸ்திரேலியா தர‌ப்‌பி‌ல் ‌‌‌ஸ்‌மி‌த் 3 வி‌க்கெ‌ட்டு‌ம், ஜா‌ன்ச‌ன், ஹ‌ஸ்‌ஸி ஆ‌கியோ‌ர் தலா 2 வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌‌ற்‌‌றின‌ர்.  பின்னர் களம் இறங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் முதலாட்டம் விருவிருப்பாக நடைபெறுமென கிரிக்கட் இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை அவுஸ்திரேலியா அணியும் பாக்கிஸ்தான் அணியும் அரையிறுதியில் மோதவுள்ளன.

முதன்முறையாக நேற்று சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ஜெனரல் பொன்சேகா

sarath_.jpgமுன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா முதல் தடவையாக நேற்று புதன்கிழமை சிவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதுடன் வன்முறைகளைத் தூண்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகா வெவ்வேறான இராணுவ நீதிமன்ற விசாரணைகளையும் எதிர்கொண்டுள்ளார்.பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவர் கருத்துகளைத் தெரிவித்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொன்சேகா நேற்று கொழும்பு பிரதம நீதிவான் சம்பா ராஜரட்ண முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த வருடம் சரணடைந்த தமிழ் புலிகளைக் கொல்லுமாறு ஜனாதிபதியின் இளைய சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாகப் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டைப் பொலிஸ் விசாரணையாளர்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளனர். பத்திரிகை தன்னை தவறாக மேற்கோள் காட்டியிருந்ததாக பொன்சேகா கூறுகிறார்.  இந்த மனு மீதான விசாரணை மே 26 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் : சிவாஜிலிங்கம்

parwathy.jpgமலேசியா விலிருந்து கொழும்பை வந்தடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் நேற்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தார். இவரை முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றுக்காலை கொழும்பிலிருந்து அழைத்துச் செனறார்.

மத்திய மாகாண அமைச்சராக அனுஷியா பதவிப்பிரமாணம்

மத்திய மாகாண தமிழ்க் கல்வி, இந்துக் கலாசார கைத்தொழில் அமைச்சராக அனுஷியா சிவராஜா நேற்று புதன்கிழமை மத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இவ்வைபவத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.

அனுஷியா சிவராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி சங்க உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான அண்ணாமலையின் புதல்வியாவார். இவரது கணவர் சிவராஜா நுவரெலியா மாநகர சபைப் பிரதி மேயராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

வே.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றம் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து மத்திய மாகாண அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன் நேற்று புதன்கிழமை மத்திய மாகாண விவசாய அமைச்சராக நிமல் பியதிஸ்ஸவும் சுகாதார அமைச்சராக சுனில் அமரதுங்கவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

பலாலி ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு மக்கள் செல்ல 20 வருடங்களின் பின்னர் படையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருவிழா நடத்த அப்பகுதி மக்களுக்கு சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சுமார் 20 வருடங்களின் பின் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு திருவிழாத் திருப்பலி நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இருபது வருடங்களின்  பின்னர் இந்த ஆலயத்திற்குச் செல்ல மக்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மக்கள் கடற்கரை வீதியால் தொண்டைமானாறு ஊடாக பயணிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இத்திருவிழா உற்சவத்தில் பங்கு கொள்ள விரும்புகின்றவர்கள் அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு தொண்டைமானாறு சந்தியில் ஒன்று கூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் குற்றச்செயல்கள்!

வடமராட்சி மாணவி ஒருவர் இனந்தெரியாத சிலரால் வானில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். வல்லைவெளிப் பற்றையொன்றிற்குள் மயங்கிய நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி மகளிர் கல்லூரி ஒன்றில் உயர்தர வகுப்பில் பயிலும் மாணவியொருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அடி காயங்களுடன் நேற்று செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த மாணவியான சண்முகராஜா அனுசியா (வயது 18) என்ற மாணவிக்கே இந்நிலை ஏற்பட்டது. வான் ஒன்றில் வந்தவர்கள் இவரை பலவந்தமாக அதில் ஏற்றிச்சென்று, கடுமையாக தாக்கிய பின் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில்  தள்ளி விழுத்திவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் நால்வர் தொடர்பு பட்டிருப்பதாகவும், அவர்கள் அம்மாணவியின் வாயினுள் திராவகம் ஒன்றை பருக்கியதாகவும், மாணவி கூக்குரலிடவே அவரைத்  தள்ளி விழுத்தி விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது இது கடத்தல் சம்பவமா அல்லது தனிப்பட்ட பிரச்சினையா என்பது தெரியவரவில்லை.

இது இவ்வாறிருக்க, வல்லை வெளியில் பற்றை ஒன்றிற்குள் காயங்களுடன் மயங்கிய நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார். அவ்வழியால் சென்றவர்களின் தகவலையடுத்து அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் இப்பெண் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  குறித்த பெண் வழங்கிய தகவலில், தான் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி முகாமில் தங்கியிருந்து விட்டு பின் கரவெட்டிப் பகுதியில் வசித்து வந்ததாகவும்,  கடந்த திங்கள் கிழமை காலை வீதியில் தன்னை வழிமறித்த நான்குபேர் வான் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும், செவ்வாய்கிழமை கண்விழித்து பார்த்த போது பற்றையொன்றில் கிடப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரின் கழுத்து, பிடரிப் பகுதிகளில் சிறிய கத்தியொன்னிறனால் கீறப்பட்ட காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்  இப்பெண்மணி வழங்கிய முறைப்பாட்டில் அவரின் பெயர் வி.லங்காதேவி வயது 37 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரன்

britton-1.jpgபிரிட்டனின் புதிய பிரதமாராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரன் புதிய கூட்டணி அமைச்சரவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்சி தலைமையில் கூட்டணி அரசில் சேரும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக் க்ளெக் துணைப்பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியின் ஜார்ஜ் ஒஸ்போர்ன் நிதி அமைச்சராகவும், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹேக் வெளியூறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பெரும்பாலான அறிவிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் கன்சர்வேடிவ் கட்சி தலைவர்களுக்கே கிடைத்துள்ளன.

லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு துணைப்பிரதமர் உட்பட ஐந்து கெபினட் இடங்கள் கிடைக்கும் என்று தெரியவருகிறது 

கடற்கொள்ளையர் விடுவித்த 20 இலங்கையர்களுடன் இலங்கை அதிகாரிகள் சந்திப்பு.

somali_pirates.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பின்னர்  நேற்று விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் ஓமானிலுள்ள இலங்கை அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களுக்கான அனைத்து வசதிகளும் அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.

கடந்த மார்ச் 23ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த இக் கப்பலில் 20 இலங்கையர்கள் உட்பட 22பேர் பயணித்திருந்தனர்.

கடற்கொள்ளையர்களால் கேட்கப்பட்டிருந்த பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து கப்பலையும் கப்பலில் இருந்தவர்களையும் கடற்கொள்ளையர்கள் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ வெற்றி வாரம் : நியாயம் இல்லை – ஜயலத் ஜயவர்தன

dr-jayalat.jpg“ஆயிரக் கணக்கான மக்கள் நிவாரண கிராமங்களில் சுதந்திரம் இன்றித் தவித்துக்கொண்டிருக்க, மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. ஓர் இனம் அந்நியப்படுத்தப்பட்டிருக்கையில் நாட்டின் வெற்றி எனக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?” என ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்..  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டுக்குச் சுதந்திரம், விடுதலை கிடைத்து விட்டதாக அரசாங்கம் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் முழு நாட்டுக்குமான விடுதலை என எவ்வாறு கூற முடியும்?  தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்” என்றார்.