குடும்ப நூலகத் திட்டம் ஒரு அறிமுகம்! : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Home_Libraryஅன்புடையீர்புகலிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பின்றி நல்ல பல வாசகர்களும் வாசிப்பில் நாட்டமில்லாது போய்விடுகின்றனர். அதே வேளையில் ஈழத்துத் தமிழ்நூல் வெளியீட்டுத்துறையும் உரமின்றி வாடும் செடிபோன்று ஆதரவின்றி அல்லல்படுகின்றது. இந்நிலையில் எனது கடந்த மாத இலங்கை விஜயத்தின்போது சில தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். குமரன் புத்தக இல்லம், மலையக வெளியீட்டகம், ஞானம் வெளியீட்டகம். சேமமடு புத்தகசாலை ஆகிய நிறுவனத்தினர் என்னுடன் தொடர்புகொண்டு தங்களது நூல்களில் 25 நூல்களையாவது புகலிடத்தில் விற்பனைசெய்து தந்தால் தமது வெளியீட்டுத்துறைக்கு அது ஆக்கபூர்வமாக உதவும் என்று கேட்டுக்கொண்டார்கள். புகலிட நாடுகளில் ஒரு நூலுக்கு 25 வாசகர்களைத் தேடுவது கடினமாக இருக்குமா என்று ஒரு கணம் சிந்தித்தேன்.

உள்ளுர் விலையுடன் விமானப்பொதியாக நூல்களை எனக்கு அனுப்பும் செலவையும் சேர்த்தால் சராசரி ஒரு நூல் 5 பவுண் வரையில் தான் வருகின்றது என்று அங்கு கணக்கிட்டோம்.

இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுவதன் நோக்கம் என்னவென்றால், நீங்களும் உங்கள் நண்பர்கள் ஒன்றிரண்டு பேரையும் இணைத்து மாதம் 5 பவுண்களை ஈழத்து நூல்களை வாங்க ஒதுக்குவீர்களாயின் ஒரு வாசகர் வட்டமாகச் சேர்ந்து என்னால் மேற்குறிப்பிட்ட பதிப்பாளர்களுக்கும் வாசகர் வட்டத்திற்குமான இணைப்பாளராகச் செயற்படமுடியும்.  உங்கள் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் மாதாந்தம் ஒரு நூலை அனுப்பிவைக்க முடியும். அதனை உங்கள் குடும்ப நூலகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது வாசிப்புப் பழக்கத்தை எம்மிடையே வளர்த்தெடுக்க ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம் பல அனுகூலங்கள் ஏற்படும்.
1. எம்மவரின் வீடுகளில் விரும்பியோ விரும்பாமலோ குடும்ப நூலகங்கள் உருவாகும்.
2. இலங்கைத் தமிழ்ப் படைப்புகளுக்கான வாசகர் சந்தை வளரும்
3. எம்மிடையே மறைந்துவரும் புத்தகக் கலாச்சாரம் துளிர்விடும்.
4 லண்டனில் நல்லதொரு புத்தகசாலை இல்லாத குறை நீங்கும்.(தற்காலிகமாகவேனும்)

இவை அனைத்தும் நீங்கள் உங்களது மாத வருவாயிலிருந்து ஒதுக்கும் 5 பவுண் பெறுமதியான பணத்தில் செய்யலாம் என்று நம்புகின்றேன். இது எவ்வித வர்த்தக நோக்கத்துடனும் மேற்கொள்ளப்படும் முயற்சியல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஈழத்துப் படைப்புலகத்துடனும், பதிப்புலகத்துடனும் மிக நெருங்கிய உறவைக் கொண்டவன் என்பதால் ஏற்பட்ட எதிர்காலம் பற்றிய பயம் காரணமாக இருக்கலாம்.

வாசகர் வட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன் என்.செல்வராஜா
(0044) 01582 703786
selvan@ntlworld.com

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *