Multiple Page/Post

இலங்கையில் இலத்திரனியல் நுட்ப முறையிலான அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

மோசடி செய்யப்படாத வகையில் நவீன இலத்திரனியல் நுட்பத்துடனான அடையாள அட்டைகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ.விஜேவீர தெரிவித்துள்ளார். பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த அடையாள அட்டைகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நபரின் தகவல்கள் நுண்இலத்தரனியல் பொறிமுறையில் பதிவு செய்யப்படுவதால் இதில் மோசடிகள் மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே அடையாள அட்டைகள் வைத்திருப்போருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை தொடர்பான மோசடிகள், போலியான அடையாள அட்டைகளை தயாரிக்கும் முயற்சிகள் யாவும் இப்புதிய அடையாள அட்டை நடைமுறைக்கு வரும்போது அற்றுப்போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day: புன்னியாமீன்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் “மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி “சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. “சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.

இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.

மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட ‘நோக்கப் பிரகடனமும்,’ கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட ‘அசோகனின் ஆணையும்” கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட “மதீனாவின் அரசியல் சட்டமும்” விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்” (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்”, 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்”. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்”, 1789ம்ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்” அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் “லீபர் நெறிகள்” 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் “சர்வதேச சங்கம்” உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது, என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல், நாடுகளிடையேயான முரண்பாடுகளை கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.

மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

சர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

உறுப்புரை 1: சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

உறுப்புரை 2: ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!

உறுப்புரை 3: வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு

உறுப்புரை 4: அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல ‘யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.

உறுப்புரை 5: சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

உறுப்புரை 6: சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை
. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு

உறுப்புரை 7: சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.

உறுப்புரை 8: ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

உறுப்புரை 9: சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.

உறுப்புரை 10: நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

உறுப்புரை 11:
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.

2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.

உறுப்புரை 12: அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.

உறுப்புரை 13: ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை

உறுப்புரை 14: ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு

(1.) வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

(2.) அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

உறுப்புரை 15:
(1.) ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.

(2.) எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

உறுப்புரை 16: விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை

(1.) பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும், ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
(2.) திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.

(3.) குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.

உறுப்புரை 17: சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
(1.) தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
(2.) எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.

உறுப்புரை 18: மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம் சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.

உறுப்புரை 19: கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.

உறுப்புரை 20: எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
(1.) சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.

(2.) ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 21: அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
(1.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
(2.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

(3.) மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 22: சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை – .

உறுப்புரை 23: தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை

(1.) ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.

(2.) ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.

(3.) வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
(4.) ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.
உறுப்புரை 24 இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை – இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.

உறுப்புரை 25: நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
(1.) ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
(2.) தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.

உறுப்புரை 26: கல்விக்கான உரிமை
(1.) ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கன வாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.

(2.) கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 27: தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும் உரிமை –
(1.) சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
(2.) அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.

உறுப்புரை 28: மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.

உறுப்புரை 29: ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
(1.) எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
(2.) ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
(3.) இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.

உறுப்புரை 30: இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.

தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே.

இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர்பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது ‘ சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய், சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப்பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்.”

1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது.

இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.

http://puniyameen.blogspot.com/2010/12/international-human-rights-day.html

கல்முனை மின்சாரஅதியட்சகர் சடலமாக மீட்பு.

கல்முனை மின்சார சபைக்கட்டத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் மின் அதியட்சகரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபையின் கல்முனைக்கிளையில் கடமையாற்றி வந்த சிரேஸ்ட மின்அத்தியட்சகரான பிரேமதாச (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைப்பட்டுள்ள நிலையில் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடாநாட்டில் ரயில் பாதைகள் அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

யாழ்.குடாநாட்டிற்கான ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகள் மற்றும், ரயில் நிலையங்கள் இருந்த இடங்கள் நில அளவை செய்யப்பட்டு அடையாளமிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ருயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான இடங்களில் அத்துமீறி குடியேறியிருக்கும் மக்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் யாழ்.குடாநாட்டிலுள்ள ரயில் பாதைகளை மீளமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போதே அதன் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் பாகங்கள் களவாடப்பட்டு வருகின்றன.

இறுதிக்கட்டப் போரின் போது வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உதிரிப்பாகங்கள் நாளுக்கு நாள் களவாடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கைவிடப்பட்ட வாகனங்களில் மோட்டார் சைக்கிள்களே பெருமளவில் காணப்படுகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் உதிரிப்பாகங்கள் கழற்றப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

பொது மக்கள் தங்களின் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றை எடுத்துச் செல்வதற்கான பொலிஸ் முறைப்பாட்டுக் கடிதம் பெறுவது தொடக்கம் பல்வேறு ஆவணங்களை ஒழுங்கு படுத்துவதற்கிடையில் குறித்த வாகனங்களின் பாகங்கள் கழற்றப்பட்டு விடுவதாக தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டு கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சுமார் ஏழாயிரம் மோட்டார் சைக்கிள்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூவாயிரம் மோட்டார் சைக்கிள்களின் விபரங்கள் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் மோட்டார் வாகனப்பிரிவில் கணனியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனைய வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசம்நெற்லீக்ஸ்: சரணடைந்த பிரபாவின் இறுதி நிமிடங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது!

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த பின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டமை ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவருகிறது. சம்பவத்தின் போது யுத்தப் பகுதியில் கடமையில் இருந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இதனைப் பதிவு செய்ததுடன், ஆர்வ மேலீட்டினால் இதனை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அனுப்பி வைத்தும் உள்ளனர் எனத் தெரியவருகிறது. அண்மைக்காலமாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சரணடைந்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான ஒளிப்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்கள் இன்னமும் முயற்சி எடுத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் இறுதி நிமிடங்களும் அவர்களுக்குக் கிடைக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சில நிமிடங்களே நீளமான இப்பதிவில் பிரபாகரன் சரணடைந்த இடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதும் அங்கு அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. காட்சிகள் மிகக் கோரமானதாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சிலர் இப்பதிவினைப் பார்வையிட்டு உள்ளனர்.

வே பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் சரணடைந்ததும் அதன் பின்னரே கொல்லப்பட்டது பற்றியுமான தகவலை தேசம்நெற் மே 21 2009ல் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன் ஆனால் அச்சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு சிலருடைய கணணிகளிலும் தொலைபேசிகளிலும் பாதுகாக்கப்பட்டு உள்ளமை இப்போது தெரியவந்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கும் இலங்கை அரசுத் தலைமைக்கு இடையேயான முரண்பாடுகளும் அதனை அடுத்து முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சி உடன் கூட்டமைத்துக் கொண்டதும் இப்பதிவுகள் பொதுத் தளத்திற்கு வருவதைத் துரிதப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இன்னமும் உயிருடன் உள்ளதாகக் கூறி கிழக்கு லண்டனில் உள்ள பிரியா உணவகத்தில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டும் சிறு வைபவம் நவம்பர் 26ல் இடம்பெற்றது. ரூட் ரவி என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் லண்டன் ஆதரவுத் தலைமைகளில் ஒருவரான இவர் கேக் யை வெட்ட முயற்சித்த போது, இலங்கை அரசினால் பிரச்சினை வரும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு சிறுமியைக் கொண்டு கேக் வெட்டப்பட்டு ‘தேசியத் தலைவர்’ இன் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனது இறுதி நிமிடங்கள் அடங்கிய ஒளிப்பதிவு அதன் ஆதரவு அமைப்புகளுக்கோ அல்லது சனல் 4 தொலைக்காட்சிக்கோ ஏற்கனவே கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தும் அவர்கள் அதனை ஒளிபரப்பவில்லையா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு.

பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ்கட்சிகளின் அரங்கம் பலதடவைகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்ததை நடத்த வருமாறு தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் கட்சிகள் ஒருமித்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Jaffna_Hospitalயாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஆறு அம்சக்கோரிகிகயை முன்வைத்து மீண்டும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2ஆம் திகதி ஒரு மணி நேரம் பணிப்பறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று வியாழக்கிழமையும் ஒருமணித்தியாலம் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல், 11.30 மணியிலிருந்து 12.30 வரை அவர்கள் மிண்டும் தங்கள் கோரிக்கையை முன்வைத்து ஒரு மணிநேரம் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக உணவுத்திட்ட அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்தில் மூடப்படுகின்றன.

உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணத்தில் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள அதன் அலுவலகங்களையும் அது மூடியுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும், மொனராகலை அலுவலகங்கள் இதற்கமைய மூடப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்ட நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்ததிட்டங்கள் தொடர்பாக எஞ்சிய தகவல்களை சேகரிப்பதற்கு மட்டும் மட்டக்களப்பில் அதன் உப அலுவலகம் ஒன்றை வைத்திருப்பதற்கு உலக உணவத்திட்ட
நிறுவனம் தீர்மானித்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத்திட்டத்தின் கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கி வந்த நாடுகள் தற்போது உதவிகளை நிறுத்தியுள்ளமையினாலேயே இவற்றை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உலக உணவுத்திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக உலக உணவுத்திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.

யாழ்.குடாநாட்டில் மழையினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குடாநாட்டில் மட்டும் 8,363 குடும்பங்களைச் சேர்ந்த 30,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 744 குடும்பங்களைச் சேர்ந்த 5 760 மக்கள் பொது இடங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் காரணமாக யாழ்.குடாநாட்டில் 156வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

2,138 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நெடுந்தீவிலும் நல்லூரிலும் இருவர் வெள்ளப்பெருக்கில் அகப்பட்டு காயமடைந்துள்ளனர். இத்தகவல்களை யாழ். மாவட்டச்செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நிலவுவதால் இம்மாதம் நடுப்பகுதிவரை மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.