ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கொள்கை ரீதியான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் ஏற்பாட்டில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
பேச்சுவார்த்தை எப்போது இடம்பெறும் போன்ற விபரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது படையெடுக்கவிருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. இந்த நிலைமையை தவிர்ப்பதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்புத் திட்டத்தை கைவிட்டால் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி இந்த பேச்சுவார்த்தைக்கு வருவார் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
எவ்வாறாயினும், உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வேகமாக பரவியது. அங்கு உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் பரவியதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது.
சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்க பிரதமர் போரிஸ் ஜோன்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனிமைப்படுத்துதல் விதிகள் போன்ற மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா திடீரென மறைந்துவிடாது. இந்த வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
“எங்களுடைய மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. எங்களுடைய மொழி உரிமை பறிக்கப்படுகின்றது. எங்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இப்படியாக, தமிழர்களுடைய வாழ்வாதாரம் சகலதும் பறிக்கப்படுகின்றது.” என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – குமுழமுனை குருந்தூர்மலை விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குருந்தூர் மலை சம்மந்தமாக எங்களுடைய சைவ அடையாளங்கள், யாவும் அழிக்கப்பட்டிருப்பதை ஏற்கனவே 27.01.2021 ஆம் ஆண்டு அங்கு நானும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் மற்றும் சிறீதரன் ஆகியோர் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்ட போது எங்களால் காணக்கூடியதாக இருந்தது. உடனடியாக அன்றே நான் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துவிட்டு காவற்துறையினர் கேட்டு கொண்டதற்கிணங்க 29.01.2021 அன்று அந்த இடத்துக்கு காவற்துறையினரை அழைத்து சென்று எங்களுடைய சைவ அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதனை காண்பித்திருந்தேன்.
அந்த நேரம் புத்த விகாரை அந்த இடத்திற்கு அருகாமையில் இல்லை. தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு நடவடிக்கைக்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆய்வு செய்ய போவதாகத்தான் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் என்று கூறப்படும் நாள் அன்று 04.02.2022 ஆம் ஆண்டு அங்கே சென்ற போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் என்று சொல்லப்படும் நாளன்று சுதந்திரம் இல்லை என்ற நிலையில் எங்களுடைய மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. எங்களுடைய மொழி உரிமை பறிக்கப்படுகின்றது. எங்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இப்படியாக, தமிழர்களுடைய வாழ்வாதாரம் சகலதும் பறிக்கப்படுகின்றது. இவற்றை வெளிக்கொண்டு வரும் முகமாக நாங்கள் சென்றோம். இது சம்பந்தமாக ஒரு ஊடக அறிக்கையை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான, எம்.ஏ சுமந்திரன் 3ஆம் திகதி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதன்படி நாங்கள் 4ஆம் திகதி நூறு பேரளவில் அங்கு சென்று பார்வையிட்ட போது அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தோம். தாது கோபுரம் அதாவது விகாரை என்று சொல்லப்படும் அந்த தாது கோபுரம் முக்கால்வாசி அளவில் 75 வீதமான அளவு அது கட்டி முடிக்கப்பட்டிருந்தது.ஏற்கனவே நாங்கள் பார்க்கப்போகும் போது அந்த இடத்தில் ஒன்றுமே இல்லை. ஆனால் அதன் பின்னர் அந்த அடையாளங்கள் தோண்டி பார்க்கப்பட்ட போது எட்டுமுக சிவலிங்கம் அங்கே வெளிப்பட்டதாக, ஊடகங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.
அப்படியாக சைவ அடையாளங்கள், வெளிப்பட்ட இடத்தில் இன்று தாது கோபுரம் என்று கூறி புத்த சமயத்தை திணிக்கும் முகமாக 75 வீதமான கட்டுமான பணியை செய்திருக்கின்றார்கள். அதுவும் பழைய செங்கற்களாலான கட்டிடங்களாக தாது கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றன. சிலவேளை பழைய கற்களால் அப்போதே கட்டப்பட்டு இருந்தது என காட்டுவதற்காகவோ தெரியாது. புத்த சமயத்தை திணிக்கும் நோக்கத்தோடு தொல்லியல் திணைக்களம் ஈடுபடுகின்றதா? தொல்லியல் திணைக்களம் என்பது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பே ஒழிய அதற்கு நாங்களும் மறுப்பில்லை.ஆனால் ஆய்வு என்ற போர்வையில் தொல்லியல் திணைக்களத்தினர் அங்கே கட்டுமான பணி மேற்கொள்வதை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது.
இருந்தாலும் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் சட்டத்தரணியாக இருப்பதால் அவர் ஊடாக இதற்கான வழக்கு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.கடந்த எட்டாம் திகதி அந்த வழக்கு நடைபெற்றது. கொவிட்- 19 நடவடிக்கை காரணமாக நாங்கள் செல்லவில்லை. அடுத்த தவணைக்கு நாங்களும் செல்வோம். அந்த வழக்கில் ஏற்கனவே எங்களுடைய மத நடவடிக்கைகளுக்கு தாங்கள் இடையூறு விளைவிக்கவில்லை என்றும், அதே நேரம் அவர்கள் காட்டிய படங்களில் இவ்வளவு பெரிய ஒரு கட்டுமான பணி புத்த விகாரைக்காக நடைபெறுவதும் இல்லை என்பதையும் சுமந்திரன் தெளிவுபடுத்தினார்.
இது சம்பந்தமாக சத்தியக்கடதாசி மூலம் இணைப்பு செய்து நிச்சயமாக அடுத்த தவணைக்கு எங்களுடைய மத வழிபாடுகள் சம்பந்தமாகவும் அங்கே தொல்லியல் திணைக்களத்தின், ஆலோசனையோ அல்லது அனுசரணையோடு பௌத்த மதம் அங்கே வியாபித்திருப்பதையும் நிச்சயமாக உச்சநீதிமன்றத்திலே சமர்ப்பிக்க உள்ளார்.
நாங்கள் 4 ஆம் திகதி சென்றுவிட்டு வந்த பின், 5 ஆம் திகதி இரவு சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தபிக்குகளும், இரண்டு அமைச்சர்களும் அவ் இடத்துக்கு சென்று புத்த விகாரைக்கு முன்னால் பிரித்தோதல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதன் பின்னர் இரவு இரவாக வந்து வட்டுவாகலில் உள்ள கோத்தபாய கடற்படை முகாமில் இருந்துவிட்டு சென்றதாகவும், ஊடகங்களின் ஊடாக அறிய கூடியதாக இருந்தது.
நாங்கள் போய் ஒரு தடவை பார்வையிட அவர்கள் வந்து திரும்ப பார்வையிடும் நடவடிக்கையாக இது காணக்கூடியதாக இருக்கின்றது. ஏற்கனவே எங்களுடைய சமய அடையாளங்கள், இருந்த இடங்களை மறைத்து அதாவது, நாங்கள் கற்பூரம் கொளுத்தி சூலம் இருந்த இடம் அழிக்கப்படவில்லை. ஆனால் சூலம் யாவும் சிவனுடைய அடையாளங்கள் யாவும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தன. அப்படியான இடங்களுக்கு அப்பால் கிட்டத்தட்ட ஒரு முப்பது மீற்றர் தூரத்துக்கு அப்பால் இப்படியான ஒரு விகாரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை நாங்கள் உச்ச நீதிமன்றத்திலே நிச்சயமாக எங்கள் சார்பாக அது தெரிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 29 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 29:
தேசம்: கடந்த உரையாடலில் நீங்கள் அமைப்பை விட்டு வெளியேறி பிறகு ஈ.என்.டி.எல்.எப் ஆரம்பித்து அதில் இருந்து வெளியேறினது பற்றி எல்லாம் கதைத்திருக்கிறோம். இப்ப கிட்டத்தட்ட நீங்கள் ஒரு நீண்ட ஒரு அரசியல் இடைவெளி ஒன்றுக்குள் வாறீர்கள். கிட்டத்தட்ட 86 ஆம் ஆண்டு கடைசியில் இருந்து அரசியல் வெற்றிடம் ஒன்று வருது. அந்த ஐந்து ஆண்டுகள் 87 களில் இருந்து 92ஆம் ஆண்டு பரிசுக்கு வரும்வரைக்கும் எப்படி அந்த சூழல் இருந்தது தமிழகத்தில்.
அசோக்: நாங்கள் ஈ.என்.டி.எல்.எப் தொடர்பாக முரண்பட்டு வெளியேறும்போது மிகுந்த பொருளாதார நெருக்கடி இருந்தது. நாங்கள் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தானே இருந்தனாங்கள். பொருளாதார ரீதியாக மிக நொந்துபோன காலம் தான் அது. என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரிந்த தமிழகத்து இடதுசாரி தோழர்கள் பலர் எங்களுக்கு உதவிகள் செய்தாங்க. குறிப்பாக செம்பியன் என்றொரு தோழர். அடுத்தது ஏழுமலை என்றொரு தோழர்.
தேசம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களா?
அசோக்: செம்பியன் தோழர் அவர் கட்சி சார்ந்தவர் அல்ல. அந்த நேரத்தில் எக்ஸ்ரே ரிப்போட் என்ற வாராந்த சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு கொண்டிருந்தவர். அவர்தான் அதன் ஆசிரியர்.
அவருடைய உதவி கிடைத்தது. இவரும் தோழர் ஏழுமலையும் தோழர் டக்ளஸ் ஆட்களுக்கும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள். தோழர் ஏழுமலை எக்ஸ்ரே ரிப்போர்ட் சஞ்சிகையின் காரியாலய பொறுப்பாளராக இருந்தார். இந்த பத்திரிகை காரியாலயம்தான் எங்களுக்கு பல நாட்கள் தஞ்சம் கொடுத்தது. இந்த தோழர்களை எல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாது.
தேசம்: இது நீங்கள் எல்லோரும் ஒரு இடதுசாரி கருத்தியலில் இருந்தபடியால் அவர்களோடு தொடர்புகள் இருந்திருக்கு.
அசோக்: ஓம். அடுத்தது ஆரம்ப காலங்களிலேயே இந்தியாவுக்கு போன காலங்களிலேயே இலக்கிய அரசியல் நட்புகள் கூட இருந்தது.
தேசம்: பேனா நண்பர்களுக்கு ஊடாகவா?
அசோக்: இல்லை இல்லை. இந்தியாவில் ஏற்பட்ட உறவுகள். அரசியல் இலக்கிய உறவுகள். நிழல் திருநாவுக்கரசு…
தேசம்: இதெல்லாம் நீங்கள் மத்திய குழு கூட்டங்களுக்கு போகேக்கயா?
அசோக்: போகேக்க அந்தக் காலங்களில் ஏற்பட்ட உறவுகள். அப்போ அவங்களும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள்.
தேசம்: யார் அப்படி சொல்லக் கூடிய ஆட்கள்?
அசோக்: தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, ஜமாலன், காலக்குறி கான், சண்முகம், நீண்ட பயணம் சுந்தரம் நிறையபேர் இருந்தார்கள். நிறைய தோழர்கள் ஹெல்ப் பண்ணினார்கள். பத்திரிகையாளர் தீம்தரிகிட ஞாநி போன்றவர்களின் உறவுகள் இருந்தபடியால் எங்களுக்கு ஒரு ஆத்ம ரீதியான பலம் ஒன்று இருந்தது. தோழர் கேசவன், தோழர் பொதிய வெற்பன், எஸ்.வீ இராஜதுரை, வீரா.சந்தானம், போன்றவர்களின் உறவும் இருந்தது.
தேசம்: அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்குள்ள இந்தியாவிலையும் ஒரு இடதுசாரி கருத்தியல் வலுப்பெற்று கொண்டிருந்தது அல்லது மார்க்சிச கட்சிகள் தமிழகத்தில் ஒரு போராட்டத்தை தொடங்குவது மாதிரியான சிந்தனைப் போக்குகளும் இருந்தது தானே.
அசோக்: எம். எல் குரூப்புகள் இருந்தது. மாக்சிச ஐடியோலொஜியோடு அரசியல் இலக்கிய சஞ்சிகைகள் வெளி வந்தகாலம் அது.
தேசம்: அவர்களோடு நீங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தீர்களா?
அசோக்: நீண்ட காலமாகவே நான் போன காலத்தில் இருந்து மக்கள் யுத்த குரூப் – பீப்பிள்ஸ் வோரோடு (People’s War) எனக்கு உறவு இருந்தது. அதுல தான் எனக்கு நீண்ட பயணம் தோழர் சுந்தரம், தோழர் கேசவன் நிறைய தோழர்களின் உறவு எனக்கு இருந்தது. பெயர்கள் வேண்டாம். அந்த உறவுகள் ஒரு அரசியல் சார்ந்த உறவாக இருந்தது. அவர்கள் சின்ன சின்ன ஹெல்ப் எல்லாம் பண்ணினார்கள்.
தேசம்: இலக்கியம் சார்ந்த ஈடுபாடுகள் எப்படி இருந்தது அது எவ்வளவு தூரம்?
அசோக்: ஆரம்ப காலத்தில் எனக்கு இலக்கியம் தொடர்பான ஆர்வம் இருந்தபடியால் இலக்கியத் தொடர்பு நிறைய இருந்தது எனக்கு. என்னுடைய நண்பர்களும் இலக்கியவாதிகள் தான். அரசியல் சார்ந்தவர்கள் எல்லோரும் இலக்கியத்தோடு தொடர்பு கொண்ட தோழர்கள்தான். நாங்க அந்த நேரத்தில் பொங்கும் தமிழமுது என்ற சஞ்சிகை வெளியிட்டம் தானே டெசோவுக்கு. அந்த நேரம் நான் ஜெயகாந்தனை போய் பேட்டி கண்டேன். இலக்கிய ஆர்வத்தால்தான் அவரைப் பேட்டி கண்டேன். நீண்ட பேட்டி. அடுத்தது பொங்கும் தமிழமுதுதிற்காக அந்த நேரம் நான் நிறைய பேரை சந்தித்து எழுத வைத்தேன். அப்படி இலக்கிய உறவு ஒன்று இருந்தது. ஆனால் நான் இயக்கம் சார்ந்த இருக்கிறபடியால் அந்த உறவை என்னால் பேண முடியாமல் போய்விட்டது.
தேசம்: பிறகு அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த உறவுகள்…
அசோக்: அந்த உறவுகள் உதவிச்சு. அவங்க தான் எனக்கு துணையாக இருந்தவர்கள். நிழல் திருநாவுக்கரசு எல்லாம் மறக்க முடியாத தோழர்.
தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் தமிழக எழுத்தாளர்களுக்கும் புலம்பெயர்ந்த அல்லது இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பாடல் அல்லது உறவு இருந்தது…
அசோக்: ஓம் அப்படியான உறவும் சூழலும் இருந்திருக்கு. ஒரு பக்கத்தில் பார்க்கப்போனால் அவர்கள் தங்களை இழந்து எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். நாங்கள் அந்த நிலையில் இருந்தால் நான் நினைக்கல நாங்கள் உதவி செய்வோம் என்று. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், இடதுசாரி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கொடுத்த ஒத்துழைப்பு இருக்குதானே, அந்த மனநிலை நான் நினைக்கவில்லை எங்களுக்கு இருக்கும் என்று. தங்களுக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மாதிரி. தோழர் நிழல் திருநாவுக்கரசு எல்லாம் வசதியான தோழர் இல்லை. பிஎச்டி செய்வதற்கு பதிஞ்சுபோட்டு வசதி இல்லாமல் பிஎச்டியை விட்டவர். குடவரைக் கோயில் ஓவியங்கள் தொடர்பாக ஒரு ஆய்வு செய்தவர். அப்படியான நெருக்கடியான சூழலிலும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள். அவங்களை மறக்க இயலாது.
தேசம்: அதற்குப் பிறகு நீங்கள் பரிசுக்கு வந்த பிறகும் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள். அதற்கு அங்க ஆதரவு…
அசோக்: நான் ‘அசை’ என்ற சஞ்சிகை வெளியிட்டேன் தானே. அதுக்கெல்லாம் முழு உதவி. நானும் நாவலனும் நடாத்திய இனியொரு இணையத்தளத்திற்கும் இந்த தோழர்கள் எழுதினாங்க. இங்க தோழர் யமுனா ராஜேந்திரன் செய்த உதவிகள் நிறைய. நான் கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கவும், எழுதவும் மிகவும் துணை நின்ற தோழர் அவர். அடுத்தது கோட்பாட்டு ரீதியாக பிற்காலத்தில் வளர்வதற்கான பின்புலமாகவும் அவங்க இருந்தார்கள். காலக்குறி சஞ்சிகை எல்லாம் கோட்பாட்டு ரீதியான சஞ்சிகை. கான் கொண்டு வந்தவர். அவர் சமீபத்தில்தான் காலமானவர்.
தேசம்: இந்தியாவில் இருந்த அந்த நான்கு ஆண்டுகளில் நிறைய பேரை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அது எப்படி நடந்தது? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு பொருளாதார பலம் இல்லாத நிலையில் ஏற்கனவே வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த தோழர்கள் உங்களுக்கு உதவி செய்தவையா? அது எப்படி அந்த ஏற்பாடு நடந்தது? வெளிநாடுகளுக்கு ஒரு காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் 90, 91 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருந்தொகையான ஆட்கள் வெளிநாடுகளுக்கு வந்தவர்கள். அதில் குறிப்பாக புளொட் அமைப்பிலிருந்து வந்த ஆட்களும் நிறைய பேர் என்று நினைக்கிறேன். அது எப்படி நிகழ்ந்தது?
அசோக்: உருத்திரன் என்று ஒரு தோழர் இருந்தவர். அவர் புளொட்டில் இருந்தவர். அவர் சென்னையில் கம்யூனிகேஷன் சென்டர் ஒன்று வைத்திருந்தவர். அவர் குறைந்த செலவில் எல்லா தோழர்களையும் அனுப்பினார். அடுத்தது நாங்கள் வந்த பிறகு அங்க உள்ள தோழர்களை கூப்பிடுவது. முழுப் பணத்தையும் கொடுக்கத் தேவையில்லை. அப்போ குறிப்பிட்ட தொகைகளை கொடுத்து விட்டு பின் இங்கு வந்த பின் வேலை செய்து கொடுப்பது.
அசோக்: ஓம். நிறைய தோழர்கள் அப்படித்தான் வந்தவர்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வரக்கூடிய சூழல் எங்களுக்கு இருக்கவில்லை தானே. முதல் கொஞ்சம் காசு கொடுக்கறது பிறகு வந்து உழைச்சு மிச்சக்காசு கொடுக்கிறது. உருத்திரன் பக்கத்திலிருந்து அதற்கான உதவி கிடைத்தது.
தேசம்: உருத்திரன் அவர் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்…
அசோக்: இறந்திட்டார். தீவுப் பகுதியை சேர்ந்த தோழர். நிறைய பேரை அனுப்பி இருக்கிறார்.
தேசம்: புளொட்டில் இருந்த சிலபேர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வட இந்தியாவில் போயிருந்து இப்படியான உதவிகளை செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்படியா? உருத்திரன் போல வேறு சிலரும் அந்த அமைப்புக்குள் இருந்தவர்களா?
அசோக்: அப்படி இருந்த மாதிரி நான் கேள்விப்படவில்லை. நான் அறிந்தவரை உருத்திரன் தான் அந்த காலகட்டத்தில் நிறைய ஹெல்ப் பண்ணினது. வேற ஆட்கள் ஹெல்ப் பண்ணின மாதிரி தெரியல. சில வேளை எனக்கு தெரியாமல் இருக்கலாம்.
தேசம்: எத்தனை பேர் அளவில் உங்களுக்கு தெரிய அந்தக் காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருப்பார்கள்? நீங்கள் இருந்த அந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் ?
அசோக்: எனக்கு தெரிய வெவ்வேறு ஏஜென்சிக்கால வந்த தோழர்கள் இருக்கிறார்கள். உருத்திரனுக்கால வந்த தோழர்களா?
தேசம்: இல்லை இல்லை பொதுவாக…
அசோக்: பொதுவா நாங்கள் ஒரு 100 -150 தோழர்கள் வந்திருப்போம். சில தோழர்களை ஐரோப்ப நாடுகளுக்கு கூப்பிட முடியாமல் போய்விட்டது. அந்தத் தோழர்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். இலங்கைக்கு போன தோழர்களுக்கு அங்க இருக்க முடியாமல் போய்விட்டது. அவங்கள் கொழும்புக்கு போய் குறைந்த பயணச் செலவோடு ஏஜென்சிக்கு ஊடாக அப்படி நிறைய தோழர்கள் வளைகுடாவுக்கு போனவர்கள். வளைகுடாவுக்கு போனவர்கள் கூட சில தோழர்கள் ஐரோப்பாவுக்கு வந்து விட்டார்கள். ஏனென்றால் பெருந்தொகை காசு வேணும் தானே அந்த நேரம் வளைகுடாவுக்கு போறதுக்கு குறைந்த காசுதான்.
தேசம்: 87 ஆம் ஆண்டிலிருந்து 92 ஆண்டு அந்த இடைப்பட்ட காலம் வரைக்கும் நீங்கள் இலங்கைக்கு செல்லவில்லை…
அசோக்: பின்தள மாநாட்டுக்கு வந்ததற்கு பிறகு நான் இலங்கைக்கு செல்லவில்லை.
தேசம்: இன்றைக்கு வரைக்கும் செல்லவில்லை…
அசோக்: இன்றைக்கு வரைக்கும் போகவில்லை.
தேசம்: இந்த காலகட்டத்தில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வருது. விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடு வந்து ஒரு யுத்தம் நடக்கிறது இந்திய ராணுவத்தோடு. பிறகு 91 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் திருப்பி வருது. அதுக்குள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு இலங்கை அரசியலைப் பொறுத்தவரைக்கும் அது மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிற காலகட்டம். அதேநேரம் விடுதலைப் புலிகளின் கரங்கள் நாளுக்கு நாள் பலமடைந்து கொண்டு வருது. செல்வியும் அந்த நேரம் கடத்தப்படுறா…
அசோக்: அந்தக் கால கட்டத்தில் நாங்கள் ஒரு அரசியல் அனாதை தான். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் நாங்கள் எந்த அரசியலிலும் பெருசா ஆர்வம் காட்டவில்லை. எங்கட சொந்த வாழ்க்கை மிக மோசமாக இருந்த காலகட்டம் தானே. எங்களோட வந்த தோழர்களை காப்பாற்றுவது தான் எங்கட முயற்சியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் 91 ஓகஸ்ட் 30 செல்வி புலிகளால் கடத்தப்படுகிறார். யுனிவர்சிட்டிக்கு முன்னால இருந்த ஆத்திசூடி லேனில் எனக்கு தெரிந்த நண்பர்களுடைய வீட்டில் தான் இருந்தவா. அப்போ புலிகளின் பெண்கள் பிரிவால் விசாரணைக்கு என்று அழைக்கப்பட்டு பிறகு என்ன நடந்தது என்று தெரியாது.
தேசம்: அதற்குப்பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது…
அசோக்: பிறகு கொலை செய்யப்பட்டு விட்டார்.
தேசம்: செல்வியை மீட்பது சம்பந்தமா அல்லது விடுவிப்பது சம்பந்தமா நீங்கள் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டீர்களா?
அசோக்: கம்யூனிகேஷன் இல்லைதானே. கடத்தி ஒரு வாரத்துக்குப் பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரியும். இப்படி அரெஸ்ட் பண்ணி விட்டார்கள் என்று. அதற்குப் பிறகு பல்வேறு மட்டங்களில் சிவத்தம்பி தொடர்பாக ஒரு கதை இருந்தது தானே அவருக்கு புலிகளோடு உறவு இருக்கு என்று. அவரோடு உரையாடிய போது அவர் தன்ற பக்கத்தில் உள்ள இயலாமையை சொல்லிக் கொண்டிருந்தார். ட்ரை பண்ணுறேன் ஆனால் தெரியும் தானே பிரச்சினைகள் என்று சொன்னார். பிறகு நாங்கள் இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் சார்ந்த ஆட்களோடு எல்லாம் நாங்க நிறைய ட்ரை பண்ணினது. அந்த நேரம் பிபிசிக்கு தெற்காசிய பிரிவில் ஒருத்தர் இருந்தவர். விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமாக இருந்தவர். அவர் எல்லாம் சொன்னார் நாங்கள் தீவிரமாக முயற்சி செய்கிறோம் என்று. எதுவுமே சாத்தியப்படவில்லை. அந்த நேரத்தில் ஃபாதர் இமானுவேல் வந்தவர். அவரையும் சந்தித்து கதைத்தேன். அவர் ஒரு புலியாகத்தான் கதைத்தார்.
தேசம்: லண்டனில் இருக்கிறார் நாடுகடந்த தமிழீழத்தில்…
அசோக்: ஓம். அப்ப ஒரு சிஸ்டர் தான் ஏற்பாடு செய்து தந்தவர் எனக்கு. அவர் சொன்னார் புலிகள் செய்திருக்க மாட்டார்கள். புலிகள் ஒரு புனிதமான அமைப்பு. அப்படி எல்லாம் கதைக்க வெளிக்கிட்டார். பிறகு சொன்னார் அப்படி நடந்து இருந்தால் நான் முயற்சி செய்கிறேன் என்று. தெரியும் தானே…
தேசம்: அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…
அசோக்: அவர் அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…
தேசம்: அதை விட உங்களுக்கு தனிப்பட்ட முறையில் புலிகளிலிருந்த சில நண்பர்களையும் உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப ரவி அருணாச்சலம் போன்றவர்கள்…
அசோக்: ரவி அருணாச்சலம் அதற்கு பிறகுதான் புலிகளுக்கு போனவர். வெளிநாடு வந்த பின். அந்த நேரம் இந்தியாவில் புலிகளில் இருந்த நண்பர்கள் தொடர்பு கிடைக்கவில்லை. புலம்பெயர்ந்து வந்த பிறகு சந்தித்தேன். குறிப்பாக நோர்வே ரஞ்சித், இப்ப லண்டனில் இருக்கிறார். அவருக்கு எங்களைக் போலவே புலிகள் தொடர்பாக விமர்சனம் இருந்தது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சிலர் நினைத்திருந்தால் அந்த நேரத்தில் செல்வியை காப்பாற்றி இருக்கமுடியும். உதாரணமாக புலிகளின் மிக முக்கிய அதிகாரத்தில் இருந்தவர் நோர்வே சர்வேஸ்வரன். அவர் இப்ப கடைசியா 2009 வரைக்கும் புலிகளுடைய ஐரோப்பாவில் அதிகாரமிக்க தலைமையில் இருந்தவர். கே பி யோடு மிக நெருங்கிய உறவு. அவர் எல்லாம் நினைத்து இருந்தால் செல்வியை விடுவித்து இருக்கலாம் ஏனென்றால் புலிகளில் பவர்ஃபுல் ஆன ஆட்கள் இவர்கள்.
தேசம்: சிதம்பரநாதன், பத்மினி சிதம்பரநாதன் ஆட்கள்…
அசோக்: சிதம்பரநாதன் ஆட்கள் தொடர்பாக எல்லாம் நிறைய விமர்சனம் இருக்கு…
தேசம்: பல்கலைக்கழகங்களில் இருந்தவர்கள்…
அசோக்: அவங்கதான் பொங்குதமிழ் எல்லாம் செய்தவர்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் புலிகளுக்கு மறைமுகமாக வேலை செய்தவங்க. செல்வி கடத்தப்பட்டது தொடர்பாக புலிகள் பக்கத்தில் இருந்து யாரும் கதைக்க தயாரில்லை. இன்றைக்கும் கூட என்ன நடந்ததென கதைக்க தயாரில்லை . அந்த கால கட்டத்தில் புலிகளில் இருந்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.
பெண்கள் பிரிவு என்ற படியால் தமிழினிக்கு எல்லாம் தெரிந்திருக்கும். தமிழினி இறந்து விட்டாங்க. ஆனால் யாருமே கதைக்கத் தயாரில்லை புலிகள் பக்கத்திலிருந்து . செல்வி கடத்தப்பட்டு இருந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டி க்கு போன இடத்தில் எனக்கு தெரிந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருக்கிறார் தமிழ்ச்செல்வனிடம். அதற்கு தமிழ்ச் செல்வன் சொல்லி இருக்கிறது, அந்த கதையை விடுங்கள் என்று சொல்லி. மற்றது கவுண்டர் பாயிண்ட் பத்திரிகையாளரிடம் சொல்லுகிறார்கள் செல்வி இன்னும் கஸ்டடியில் தான் இருக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி அந்த நேரம் அன்டன் பாலசிங்கமே பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் புலிகள் பக்கத்திலிருந்து யாருமே கதைக்கத் தயாரில்லை.
இன்றைக்கு மனித உரிமை பேசுற நோர்வே சர்வே எல்லாம் மிகமோசமான ஆட்களா இருந்தவங்க. சர்வே புலிகளின் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் நானும் பரிசில் இருந்தன். ஊடகத் துறைக்கு எல்லாம் அவர்தான் பொறுப்பாக இருந்தவர். அதிகாரமிக்க நபர்களாகத்தான் இருந்தவர்கள். இன்றைக்கு ஜனநாயகம், மனித உரிமை பற்றி நோர்வேயில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தேசம்: செல்வி கடத்தப்பட்டது கொலை எப்ப நடந்தது என்பதும் தெரியாது…
அசோக்: 91 ஓகஸ்ட் கடைசி காலம் 30 ஆம் திகதி மட்டில. முப்பது வருஷம் வருது.
தேசம்: அதற்கு பிறகு எந்த தகவலும் இல்லை? உத்தியோகபூர்வமாக புலிகள் அறிவிக்கவும் இல்லை.
அசோக்: ஒரு கட்டத்தில் செல்வியின் வீட்டுக்கு போய் சொல்லி உள்ளார்கள். செல்வி வீட்டார் அடிக்கடி புலிகளிடம் சென்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது புலிகள் ஒரு கட்டத்தில் வரவேண்டாம் முடித்தாச்சு என்று சொல்லிட்டாங்க.
தேசம்: ஆனால் என்ன காரணத்துக்காக என்று தெரியல. அவா ராணுவ ரீதியாக எந்த செயலிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை முழுக்க கலை இலக்கிய ஈடுபாடு தான்?
அசோக்: ஒன்றுமே இல்லை. அந்தக் காலத்தில கவிதைகள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் எல்லாம் செய்துகொண்டிருந்தவங்க… ரவி அருணாச்சலம் போன்றவர்களெல்லாம் செல்வி புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவ அதனால தான் புலிகள் கொலை செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தாங்க.
தேசம்: ரவி அருணாச்சலம் புலிகள் பற்றி விமர்சித்த ஒரு ஆள் தானே…
அசோக்: பிற்காலத்தில் புலிகளுடைய ஆதரவாளராக வந்த பிறகு இந்தக் கதைகள் சொன்னவர். செல்வி அந்த நேரம் மொழிபெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறா. அதிகாரத்துக்கு எதிரான மொழிபெயர்ப்பு நாடங்களை யாழ்ப்பாணம் யுனிவர்சிட்டியில் போட்டிருக்கிறா. தியேட்டர் சயன்ஸ் தானே செய்தவ செல்வி. அதிகாரத்துக்கு எதிரான நாடகங்கள் போடும்போது புலிகள் இயல்பாகவே தங்களுக்கு எதிரானது என்று கருதிக்கொண்டாங்க. அந்தத் தகவல்களை செல்விக்கு எதிராக புலிகளுக்கு பரிமாறினதில குறிப்பிட்ட ஆட்கள் இருந்திருக்காங்க.
தேசம்: குறிப்பிட்ட அந்த ஆட்கள் யா ர் சொல்ல முடியுமா?
அசோக்: எனக்கு சிதம்பரநாதன் மீது சந்தேகம் இருக்கு. அவரோட மிக நெருக்கமாக இருந்த பல பேர் இது பற்றி அவர்களோடு கதைத்துப் போட்டு மறுத்திருக்கிறார்கள். அவர் அப்படி அதில் சம்பந்தப் படவில்லை என்று சொல்லி.
தேசம்: யார் இந்த தகவல்களை புலிகளுக்கு கொடுத்தது என்பதில்…
அசோக்: இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தபோது அவர் மறுத்ததாக அவரோடு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள், சொல்லி இருக்கிறார்கள்.
தேசம்: கிட்டத்தட்ட இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களை நடத்தியிருக்கோ கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் எங்க பக்கத்திலும் நடந்திருக்கு. இல்லை அதிலும் பார்க்க மோசமாக நடந்திருக்கு.
அசோக்: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். கேட்கலாம். புலிகளுடைய படுகொலை தொடர்பாக எதுவும் செய்யமுடியாது. குறைந்தபட்சம் இதுதொடர்பான வருத்தம் கூட யாரிடமும் இல்லை. இன்றைக்கு புலிகளின் மிக விசுவாசிகளாக படைப்பாளிகளாக, கவிஞர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். பெண்கள் மீது புலிகள் செய்த படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்ச மனவருத்தத்தை கூட வெளிப்படுத்தக் கூட தயாரில்லை. அவங்களும் பெண்கள் தான். படைப்பாளிகள், கவிஞர்கள் சொல்லப்படுகிற பெண்கள் கூட பெண்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்சமாக மனவருத்தத்தை வெளிப்படுத்தவில்லை. இன்டைக்கு பேஸ்புக்ல பார்க்கலாம் புலிகள் உத்தமமானவர்கள், பிரபாகரன் மிக உத்தமமானவர் என பிழைப்பு இலக்கியம் செய்பவர்களை. அது அவங்கட சுதந்திரம். ஆனா குறைந்தபட்சமாக இந்த மனிதாபிமான கண்டனங்களை, மனவருத்தங்களைக் கூட வெளிப்படுத்த தயாரில்லை தானே. கொலை செய்த புலிகளை விட கொடிய மனநிலை கொண்டவங்க இவர்கள்.
தேசம்: ரவி அருணாச்சலத்தை விட வேறு யாராவது இப்படியான சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக கருத்துகள் சொல்லி இருக்கிறார்களா?
அசோக்: இல்லை. நண்பர்கள் என்ற அடிப்படையில் ரவி அருணாச்சலம் கொலையை கண்டிக்கின்ற நபராக இல்லை. ஆரம்பத்தில் இருந்தவர். சரிநிகர் பத்திரிகையில் வேலை செய்யும்போது புலிகள் தொடர்பாகவும், பிரபாகரன் தொடர்பாகவும் மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததில் ரவி அருணாச்சலமும் ஒராள். பல்வேறு புனை பெயர்களில் நிறைய விமர்சனங்களை வைத்தவர். காலப்போக்கில் ஐரோப்பாவுக்கு வந்தபிறகு அவருடைய முகம் மாறிவிட்டது. அவர் மட்டும் இல்லை கடந்த காலங்களில் புலிகளுடைய செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை வைத்த பலர் காலப்போக்கில் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காக மாறிவிட் டார்கள்.
பிரித்தானியாவும் – அமெரிக்காவும் உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பிற்கு சகுனம் பார்த்துக்கொண்டிருக்க இன்று காலை முதல் ஈயுனிஸ் புயல்காற்று மணித்தியாலத்திற்கு 125 கிமீ வேகத்தில் பிரித்தானியாவை தாக்கிக் கொண்டுள்ளது. இச்செய்தி எழுதப்படும் வரை லண்டன், இங்கிலாந்து, வட அயர்லாந்து ஆகிய பிரதேசங்களில் மூவர் கொல்லப்பட்டு உள்ளனர். தலைநகர் லண்டனில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் வீசப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஈயுனிஸின் தாக்குதல் மோசமாக இருந்தது. மூன்று தசாப்தங்களுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரும் புயலாக ஈயுனிஸ் வர்ணிக்கப்படுகின்றது. அதிவேக வீதிகளில் பயணித்த இரு பெரும் லொறிகள் அருகருகே புரட்டிப் போடப்பட்டது. ஈயுனிஸ் புயல்காற்று மணிக்கு 70கிமீ முதல் 122 கிமீ வேகத்தில் நாடு முழுவதும் பரந்த தாக்கத்தைக் கொடுத்துள்ளது.
பிரித்தானியாவில் அம்பர், யலோ, ரெட் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது. முதற் தடவையாக லண்டன் ரெட் எச்சரிக்கைப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,250,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவற்றில் 750,000 வீடுகளுக்கு மீளிணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 500,000 வீடுகள் இன்றைய இரவை இருளிலேயே களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
லண்டனின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஓற்று அரினாவின் கூரை பிய்த்தெறியப்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி உள்ளது. விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தள்ளாடிய காட்சி காணொலியாக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சில ரெயில் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டது. வேல்ஸில் விமான, ரெயில் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டது.
ஈயுனிஸ் எவ்வளவு மோசமான நட்டத்தினை ஏற்படுத்தியது என்ற கணக்கை அரசு கணக்கிட ஆரம்பித்துள்ளது. இவ்வாறான புயல்களுக்கு பிரித்தானியா தயார் நிலையில் இருக்கின்றதா என்ற கேளிவியும் எழுப்பப்படுகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் வாகனப் போக்குவரத்தும் சக்தியும் மின் இணைப்பிலேயே தங்கியுள்ளதால் மின்வெட்டுக்கள் துண்டிக்கப்படும் பட்சத்தில் அதனை துரிதகெதியில் சீரமைக்க வேண்டிய அவசரமும் அவசியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இயற்கை அழிவுகள் மேற்கு நாடுகளிலும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது. வெள்ளம், புயல், கோவிட் என்று இயற்கையின் சீற்றத்துக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும் அதனைவிடுத்து மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் யுத்த தளபாடங்களுக்கும் இராணுவ விஸதரிப்புகளுக்குமே அரசுகள் முன்னுரிமை தருகின்றன.
ஆயிரக்கணக்கான சொகுசு மகிழுந்துகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே நேற்று திடீரென தீப்பற்றியது.
இந்நிலையில், போர்த்துக்கீச கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் கருகிய மகிழுந்துகளின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பல் சுமார் 3 காற்பந்து விளையாட்டு மைதானம் அளவிலான இடப்பரப்பை கொண்டதாகும்.
இதில் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யவிருந்த லம்போர்கினி, போர்ஷே, ஓடி உட்பட சுமார் 3,965 சொகுசு மகிழுந்துகள் இருந்தன.
100க்கும் மேற்பட்ட மகிழுந்துகள் டெக்சாஸில் உள்ள துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படவிருந்தன.
இந்நிலையில், கப்பலில் இருந்த சொகுசு மகிழுந்துகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
பிரித்தானியாவை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று வீசுவதுடன், புழுதி மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்கள் காற்றில் பறக்கின்றன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த புயலானது கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் வீசும் மிக மோசமான புயல் என கருதப்படுகிறது. புயல் தாக்கியபோது வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன. பேருந்து மற்றும் ரெயில் சேவைகள், விமானங்கள் மற்றும் படகுப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்கு தேவைப்பட்டால் இராணுவம் தயார் நிலையில் உள்ளது. வானிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில், 10 கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பெருமளவில் சேதம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று வடக்கு ஜெர்மனியைத் தாக்கும் என்றும் இரவில் கிழக்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியின் வடக்கு கடலோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொரி சாரதிகளும், அமெரிக்காவில் இருந்து கனடா வரும் லொரி சாரதிகளும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டது.இதற்கு லொரி சாரதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக லொரி சாரதிகள் கனடாவில் போராட்டத்தில் குதித்தனர். பாராளுமன்றத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். மேலும் கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலத்தையும் மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். லொரி சாரதிகள் போராட்டத்தை ஒடுக்க கனடாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஒப்பிட்டு உலகின் நம்பர்-1 பணக்காரர் எலன் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் படத்தை வெளியிட்டு அதில், ஹிட்லர் கூறுவது போல் என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் டுவிட் பதிவை நீக்கினார்.
ஏற்கனவே கனடாவில் நடக்கும் லொரி சாரதிகள் போராட்டத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கனடா அமைச்சர் பிலிப் ஷாம்பெயின் கூறும்போது, ‘எலான் மஸ்க்கின் கருத்துக்கள் வெளிப்படையாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது’ என்றார்.
புதிய வகைகளாக உருமாறுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் உலகில் ஒருபோதும் ஒழியாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழக நிபுணா்கள் இதுகுறித்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
வைரஸ்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய தன்மைகளுடன் கூடிய அவதாரமெடுத்து தமது பரவலைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும்.
பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிவிட்டு, அதனை ஏராளமானவா்களுக்கு செலுத்திவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, புதிய வகை கொரோனாக்கள் உருவாவதை நாம் மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரோன் வகை கொரோனா ஏராளமானவா்களுக்குப் பரவி, அதிக உடல்நல பாதிப்பை ஏற்படுத்தாமல் மறைந்து விடுவதால், சமூக நோய்த் தடுப்பாற்றல் கிடைத்துவிடும் என நினைப்பது தவறான கணிப்பு என ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி நிபுணா்கள் கூறியுள்ளனர்.
ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்.
அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் கோரி அகிம்சை வழியில் போராடி வந்த இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தி, ஜெர்மனியில் யூதர்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த வலியுறுத்தி 1939-ம் ஆண்டு ஹிட்லருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
காந்தி, ஹிட்லருக்கு எழுதிய அந்த கடிதம் தற்போது ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் வருகிற மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும். இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக அருங்காட்சியக நிர்வாகம் அறிவித்துள்ளது.