Multiple Page/Post

இரத்துச்செய்யப்பட்டது முருகேசு சந்திரகுமாரின் கட்சிப் பதிவு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான அரசியல் கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி 3 வருடங்களுக்கு முன்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் முதல் இன்று வரை அந்தக் கட்சியின் கணக்கு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை.

 

கணக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு 3 தடவைகள் கடிதம் அனுப்பியும் பதில் அளிக்காத காரணத்தினாலேயே தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு சமத்துவக் கட்சியின் பதிவை நீக்கியுள்ளது.

 

எம்பிலிப்பிட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பின் பின்னர் 2024.08.26ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிட்ட 2399/14 இலக்க அரச இதழில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் சமத்துவக் கட்சியின் பெயர் நீக்கப்பட்டு 77 அரசியல் கட்சிகளின் பெயர்ப்பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, சந்திரகுமாரின் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் வெடித்த பட்டாசு – 08 பேர் படுகாயம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு சார்பாகக் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசுகள் வெடித்ததால் பொலிஸ் அதிகாரிகள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிக்கும் போது அங்கிருந்த நபர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடிக்க வைத்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களை முஸ்லீம்களை உள்ளடக்கிய 25 பேர் மட்டும் கொண்ட ஊழலற்ற அமைச்சவை நாட்டை ஆளும்!!! – கலாநிதி சிவதாசன்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களை முஸ்லீம்களை உள்ளடக்கிய 25 பேர் மட்டும் கொண்ட ஊழலற்ற அமைச்சவை நாட்டை ஆளும்!!! – கலாநிதி சிவதாசன்

தேசிய மக்கள் சக்தியின் மலையகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான கலாநிதி பிச்சைமுத்து சிவதாசன் அவர்களுடனான கேள்வி பதில் உரையாடல் நிகழ்வு லண்டனில் செப்ரம்பர் 7 அன்று நடைபெற்றது. லண்டன் தமிழ் புத்தகச் சந்தை ஏற்பாட்டாளர் பௌசர் மற்றும் மறுநிர்மாணம் குழவினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

லண்டன் மோர்டனில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழகத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்பட்ட பன்முக ஆளுமையான பவா செல்லத்துரையின் நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் தேசம் ஜெயபாலன், எம்என்எம் அனஸ் மற்றும் பௌசர் மற்றும் சிலரும் கேட்ட கேள்விகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் என்பிபி இன் பிரதிநிதி கலாநிதி பிச்சைமுத்து சிவதாசன் பதிலளித்தார். தேசிய மக்கள் சக்தி என்பிபி இன் ஆதரவாளர் கணபதி சுரேஸ் கேள்வி பதில் நிகழ்வைத் தொகுத்து வழங்கி இருந்தார்.

 

ஆதரவு யாருக்கு ..? – இறுதியாக முடிவு செய்ய நாளை கூடுகிறது தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு நாளை செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கூடவுள்ளதுடன் இந்த கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் கூடி கலந்துரையாடவுள்ளனர்.

இந்த சந்திப்பு தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் வவுனியா அலுவலகத்தில் கூடவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து அறிக்கை வெளியிடும் நோக்கில் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த குழு நாளை கூடி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் ஒவ்வொரு விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான விசேட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டிலுள்ள செல்வந்தர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், நாட்டிலுள்ள சாதாரண மக்கள் மீதே அதிக வரிசுமைகளை சுமத்தியிருந்தாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

வெலிமடை நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஜக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் சகல விவசாயிகளும் பாதுகாக்கப்படுவார்கள். வெலிமடை பகுதியிலுள்ள கிழங்கு செய்கையாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உர மானியங்களை வழங்கி, நாட்டின் மொத்த கேள்வியை, பூர்த்தி செய்யும் அளவுக்கு விவசாயிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதிக்கு கிழங்கு செய்கையாளர்களின் நாடி துடிப்பு தெரியாது. எனினும், அவர் அனுரகுமார திசாநாயக்கவின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்துள்ளார். உள்நாட்டில் கிழங்குகளை அறுவடை செய்யும்போது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

பசுமை திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்படும். 50 கிலோகிராம் உர மூடைகளை 5,000 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரணில் மற்றும் அனுரவினால் இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியாது.

அவர்களால் செல்வந்தர்களின் கடன்களை தள்ளுபடி செய்து, சாதாரண மக்கள் மீது வரிசுமைகளை சுமத்த மட்டுமே முடியும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியில் ஒவ்வொரு விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான விசேட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்ய கோரி ஓவல் முன்பு தமிழர்கள் போராட்டம்!

இலங்கை – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (08) இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை  தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இதன்போது அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் தங்களின் தமிழ் சமூகத்துக்கு உரிமை இல்லை என்றும், அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இலங்கை போர்க்குற்றம் இழைத்த நாடு என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனவும், இலங்கையின் தற்போதைய அரச தலைவரை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் ஏற்கனவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கிவிட்டதால் நான் பதிலளிக்க தேவையில்லை – அனுர குமார திசாநாயக்க

யாழ்ப்பாணத்தில் தான் ஆற்றிய உரை குறித்த விமர்சனங்களிற்கு பதிலளித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஏற்கனவே தகுந்த பதிலை தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் சரியான பதிலை ஏற்கனவே வழங்கியுள்ளதால் நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை கிளறியமைக்காக ரணில்விக்கிரமசிங்கவே மன்னிப்பு கோரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம்” – அங்கஜன் இராமநாதன் காட்டம் !

 

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகமல்லவா,  வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் சூழ்ச்சிகளுக்கு தமிழ் மக்கள் அகப்பட கூடாது. செய்நன்றி மறவாமல், ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (07)  இடம்பெற்ற சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘இயலும் ஸ்ரீ லங்கா’ தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமல்ல, ஜனாதிபதிக்கு யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. நன்றிக்கான கூட்டம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ்வதற்கு நம்பிக்கையளித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கான கூட்டமாகவே இதனை கருத வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை மென்மேலும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற வேண்டும்.இல்லையேல் நாடு மீண்டும் பின்னடையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலதடவைகள் ஆதரவளித்துள்ளார்கள்.  ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முதல் மேடை இதுவென்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் தலைவர்கள் இருந்த போது மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இரண்டு வருடங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வந்துள்ளார். நாங்கள் சந்தர்ப்பவாதிகளல்ல, நன்றியுள்ளவர்கள்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் இருந்திருந்தால் இலங்கை சோமாலியாவை போன்று மாறியிருக்கும். பொருளாதார மீட்சிக்கு சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எழுச்சிப் பெறுவதா?  அல்லது வீழ்ச்சியடைவதா ?  என்பதை செப்டெம்பர் 21 திகதி தீர்மானிக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழரசு கட்சியின் ஒரு தரப்பினர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரைவாக சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஜனாதிபதியை என்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை எழுத்துமூலமாக அவரிடம் வழங்கினேன். இதனை ஏற்றுக் கொண்டதன் பின்னரே நான் அவருக்கு ஆதரவு வழங்கினேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம்,

தமிழ் மக்களின் வாக்குகள் எம்மிடம் என்ற மாயையில் இருந்துக் கொண்டு செயற்படும் இவர்கள் தமிழர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். தமிழர்கள் இந்த சூழ்ச்சியில் அகப்பட மாட்டார்கள். யார் உண்மையானவர்கள் என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதியை இனவாதி என்று குறிப்பிடுகிறார்கள். நல்லாட்சியில் அவர் தமிழர்களுக்கு செய்த அபிவிருத்திகளை மக்கள் நன்கு அறிவார்கள்.வடக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் தொடர்வோம் என்றார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு !

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

 

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம் (6) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

 

யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர் களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

 

இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் அனுரகுமார திசாநாயக்க பேசியிருக்க மாட்டார் – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வடக்கில் உள்ள மக்களிடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறையை மாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தென்னிலங்கை மக்கள் பின்பற்றும் அதே முறையை வடக்கு மக்களிடமும் பின்பற்றுமாறு கடந்த நாள் கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச“2010 இல் சரத் பொன்சேகாவுக்கு  நீங்கள் வாக்களித்தீர்கள், தென்னிலங்கை மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு  வாக்களித்தார்கள், ஆனால் உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை, 2015 இல் நீங்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தீர்கள் தென்பகுதி மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள்.எனினும்,  உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை.

2019 இல் நீங்கள் சஜித்துக்கு வாக்களித்தீர்கள் ஆனால் தென்பகுதி மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள். எனினும், கோட்டாபய ராஜபக்ச உங்களை துன்புறுத்தவில்லை. இந்த முறையை கடைப்பிடியுங்கள், உங்களுக்கு எதுவும் நடக்காது என்று நான் உத்தரவாதம் தருகிறேன்” என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அநுரகுமார கூறினார்.

இதற்கு பதிலளித்த ரணில்,அநுர குமார திஸாநாயக்க, தேவையற்ற செல்வாக்கை ஏற்படுத்தியதற்காக வடமாகாண மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக அவர்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும். மேலும் உங்கள் வாக்குரிமையை வீணாக்காதீர்கள், எனவே சஜித்துக்கும் வாக்களிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அனுர குமார திசாநாயக்க யாழில் இனவாதமாக பேசியது கண்டிக்கப்பட வேண்டியது என பலரும் தங்கள் எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தி வரும் நிலையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது “இனவாதத்தை தூண்டும் விதமாக அனுரகுமார திசாநாயக்க பேசியிருக்க மாட்டார். அதை நான் நம்பவில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.