வன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் ஏற்படுத் தப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் பி.பி.ஸியிடம் இதுகுறித்து பி.பி.ஸி. வெளியிட்ட செய்தி வருமாறு:
மற்றுமொரு தீவிரவாத எழுச்சியை ஒடுக்குவதற்கும் அபிவிருத்தித் திட்டங்களில் உதவுவதற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்க அரசுஎண்ணியுள்ளது எனப் பாதுகாப்பு அமைச்சுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்தவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கும் அரசு, அதற்குப் பிறகும் குறிப்பிட்ட காலம் வரை இராணுவம் அவர்களுடன் தங்கியிருக்கும் எனவும் கூறுகின்றது. வடக்கில் இரண்டு இராணுவத் தளங்கள் அமைக்கத் தாங்கள் எண்ணியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
“தற்போது முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் இரு இராணுவத் தலைமையகங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தலைமையகங்களின் கீழ் முகாம்கள் அமைக்கப்படும். இதன் அர்த்தம் மக்கள் அங்கு மீளக் குடியேற முடியாது என்பது அல்ல. மக்கள் மீளக் குடியேறலாம். எனினும், அந்தப் பகுதியில் நடைபெறும் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணிக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்”என்றார்.