இரானின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் நான்கு ஊழியர்களை இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் கோரியுள்ளார். இரானின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் நியாயமற்றவை என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த நால்வரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள இரானிய அரசின் பேச்சாளர், பிரிட்டிஷ் தூதரகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக முன்னதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இரானியப் பிரஜைகள். நாட்டில் சர்ச்சைகுரிய அதிபர் தேர்தலை அடுத்து அங்கு ஏற்பட்ட கலவரங்களில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனிடையே நாட்டில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதியுயர் சபையான கார்டியன் கவுன்சில், அங்கு பதிவான வாக்குகளில் ஒரு பகுதியை மீண்டும் எண்ணும் பணிகளை தொடங்கியுள்ளது. எதிர்கட்சித் தலைவரான மிர் ஹொசை முசவி தேர்தல்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.