09

09

இலங்கை இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தன் மகன் தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தாய் !

2009 போரின் இறுதி நாட்களில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவருடைய தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்றையதினம் (08) முல்லைத்தீவு  நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தாயார் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி ரட்ணவேல், “இந்த வழக்கு விசாரணையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பில் அவரது தாயார் மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

அதாவது தனது மகன் 2009 போரின் இறுதிக்கட்டத்தில்  இராணுவத்தினரின் முல்லைத்தீவு முகாமுக்குள் சரணடைந்ததாகவும் இராணுவ கட்டுப்பாட்டுக்குளேயே அவர் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன்பிறகு அவரை எங்கும் தான் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றும் தான் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அரசாங்க அதிகாரிகள், அரச ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களை அணுகியும் எதுவிதமான பலனும் தனக்கு கிடைக்காத படியினால் நீதிமன்றை நாடி இந்த வழக்கை தாக்கல் செய்ததாகவும் மன்றுக்கு கூறியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த தாயார் அரச தரப்பு வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு அவரது சாட்சியம் முடிவு பெற்றது. அடுத்த வழக்கு விசாரணை நவம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் தவணையிட்டுள்ளது“ என தெரிவித்தார்.

இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இருபது பேர் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல் உள்ளிட்டவர்களால் ஆட்க்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றம் உள்ளிட்ட வெவ்வேறு நீதிமன்றங்களில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இந்த இருபது பேரில் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறுவர்களிடையே அதிகரிக்கும் டிஜிட்டல் திரை உபகரண பாவனை – பாதிக்கப்படும் மூளை வளர்ச்சி வீதம் !

டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதற்கு இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் தெரிவித்தார்

டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதனால் சிறுவர்களின் மூளை வளர்ச்சி வீதம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

அதன்படி, பெரும்பாலான பெற்றோர் அதிக வேலைப்பளுவுக்கு மத்தியிலே தங்களது நேரத்தைச் செலவிடுவதால் தங்களது வேலைகளை இலகுவாக முன்னெடுப்பதற்காக அவர்கள் தங்களது குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசிகளை வழங்குகின்றனர்.

இந்நிலையில், குழந்தைகள் தொடர்ந்தும், கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தும்போது அவர்களின் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸை பொறுப்பேற்கிறார் ‘பரம ஏழைகளுக்கான வங்கியாளா்’ என பிறப்பிக்கப்படும் முகமது யூனுஸ்!

பங்களாதேஷின் க்ஷ இடைக்கால பிரதமராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, அவர் நேற்று (08) இரவு 8 மணியளவில் பதவியேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.

இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்ததுள்ளார்.

இதனால் இடைக்கால அரசு அமையும் என அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்திருந்த நிலையில், இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டுள்ளது.

பெரும்பாலும் மாணவர்களால் வழிநடத்தப்பட்ட ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான வெகுஜன எழுச்சிக்கு மத்தியில் நாட்டின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்கு முஹம்மது யூனுஸும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், யூனுஸ், வன்முறைகளையும் போராட்டங்களையும் விடுத்து கோரிக்கை முன்வைக்குமாறும் அமைதியான முறையில் ஆட்சி நடத்த வழிவகுக்குமாறும் மக்களிடமும் இராணுவ அதிகாரிகளிடமும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ‘பரம ஏழைகளுக்கான வங்கியாளா்’ என்று அழைக்கப்படும் முகமது யூனுஸ் சமூக அக்கறை கொண்ட தொழிலதிபருமாகவும் பொருளாதார நிபுணராகவும் நாட்டு மக்களிடையே பிரபலமானவா். மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் ‘குறுங்கடன்’ (மைக்ரோ-ஃபைனான்ஸ்) முறைக்கு முன்னோடியாக இருந்த ‘கிராமீன் வங்கி’யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

எனினும், முகமது யூனுஸின் வங்கி நடவடிக்கைகள் தொடா்பாக ஷேக் ஹசீனாவின் அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.