பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்ளை இலக்குவைத்து கடந்தவாரம் முதல் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பாக இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை தடுத்து வைப்பதற்காக 500 க்கும் மேற்பட்ட மேலதிக சிறை அறைகள் ஒதுக்கபட்டுவருவதாகவும் வன்முறைகளை கட்டுப்படுத்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறப்புகாவற்துறையினர் களமிறக்கப்படுவார்கள் என அரசாங்கம் இன்று(6) அறிவித்துள்ளது.
கடந்தவாரம் முதல் தலையெடுத்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு முதலாவது கடுமையான நெருக்கடியாக உருவாகியுள்ள நிலையில் நேற்றிரவு(5) பெல்ஃபாஸ்ற் நகரில் நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதலில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேர்மிங்காம் நகரில் அதிதீவிர வலதுசாரிகள் குடியேறிகளுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக நேற்று அணிவகுப்பு பற்றிய வதந்திகளையடுத்து பல வாகனங்களும் ஒரு மதுபானசாலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சவுத்போர்ட் நகரத்தில் கடந்தவாரம் மூன்று சிறுமிகள், 17 வயதான ஆயுதாரி ஒருவரால் கத்தியால் குத்திகொல்லப்பட்ட பின்னர் குறித்த தாக்குதலை செய்தவர் ஒரு முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர் என பரப்பட்ட வந்தியை அடுத்து வெடித்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எதிர்நோக்கும் முதலாவது கடுமையான நெருக்கடியாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில் லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை நாளை(7) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்பொதான தகவல்கள் கிட்டியுள்ளதாக ஹரோ சட்ட மையத்தின் இயக்குனர் பமீலா ஃபிட்ஸ்பட்றிக் ஒரு தகவலை வெளியிட்டுள்ளாதால் அது குறித்த முன்னெச்சரிக்கைகள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன.
நேற்றிரவு பிளைமவுத் பகுதியில் காவற்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உட்பட்ட வன்முறை தாக்குதல்கள் நடத்தபட்டதால் பல அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். பிளைமவுத் வன்முறைகள் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிதானியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இதுபோன்ற மிக மோசமான வன்முறைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.