August

August

ஷேக் ஹசீனா அரசு ஆட்சி கவிழ்ப்பின் பின் பங்களாதேஷில் சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் !

பங்களாதேஷில் வாழும் இந்துக்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை  கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பங்களாதேஷில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டன பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இந்து, பௌத்த, கத்தோலிக்க ஒற்றுமை குழுவொன்று இந்த பேரணியினை ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில்  ஷேக் ஹசீனா  அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் ஆட்சிகவிழ்ப்பு கலவரம் – அமெரிக்காவே பின்னணியில் என்கிறார் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா !

பங்களாதேஷை அமெரிக்காவை  ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பதவி விலகுவதற்கு முன்னர் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற அவர் முடிவு செய்தார். ஆனால், அவரது வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டதால், உடனடியாக கிளம்பும்படி பாதுகாப்பு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் உரையாற்றாமல் அவர் அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்தார். இந்நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்ற இருந்த குறிப்பு தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஷேக் ஹசீனா கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “பங்களாதேஷில் சவ ஊர்வலம் நடப்பதை பார்க்க விரும்பாததால் நான் பதவி விலகினேன். மாணவர்கள் உடல் மீதேறி ஆட்சிக்கு வர எதிராளிகள், விரும்பினர். அதனை நான் அனுமதிக்கவில்லை.

நான் தடுத்து நிறுத்தி இருக்கிறேன். வங்கக்கடலை அமெரிக்காவை ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன்.

பிரிவினைவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். நான் தொடர்ந்து பதவியில் நீடித்து இருந்தால், இன்னும் பல உயிர் பறிபோயிருக்கும்.

என்னை நானே அகற்றிக் கொண்டேன். நீங்கள் தான் எனது பலம். என்னை நீங்கள் வேண்டாம் என்றீர்கள். நான் வெளியேறிவிட்டேன். அவாமி லீக் கட்சியினர் நம்பிக்கை இழக்க வேண்டாம். விரைவில் நான் மீண்டும் வருவேன். நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால், எனது குடும்பம், எனது தந்தை யாருக்காக உயிர் தியாகம் செய்தார்களோ, அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸை பொறுப்பேற்கிறார் ‘பரம ஏழைகளுக்கான வங்கியாளா்’ என பிறப்பிக்கப்படும் முகமது யூனுஸ்!

பங்களாதேஷின் க்ஷ இடைக்கால பிரதமராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, அவர் நேற்று (08) இரவு 8 மணியளவில் பதவியேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.

இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்ததுள்ளார்.

இதனால் இடைக்கால அரசு அமையும் என அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்திருந்த நிலையில், இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டுள்ளது.

பெரும்பாலும் மாணவர்களால் வழிநடத்தப்பட்ட ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான வெகுஜன எழுச்சிக்கு மத்தியில் நாட்டின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்கு முஹம்மது யூனுஸும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், யூனுஸ், வன்முறைகளையும் போராட்டங்களையும் விடுத்து கோரிக்கை முன்வைக்குமாறும் அமைதியான முறையில் ஆட்சி நடத்த வழிவகுக்குமாறும் மக்களிடமும் இராணுவ அதிகாரிகளிடமும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ‘பரம ஏழைகளுக்கான வங்கியாளா்’ என்று அழைக்கப்படும் முகமது யூனுஸ் சமூக அக்கறை கொண்ட தொழிலதிபருமாகவும் பொருளாதார நிபுணராகவும் நாட்டு மக்களிடையே பிரபலமானவா். மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் ‘குறுங்கடன்’ (மைக்ரோ-ஃபைனான்ஸ்) முறைக்கு முன்னோடியாக இருந்த ‘கிராமீன் வங்கி’யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

எனினும், முகமது யூனுஸின் வங்கி நடவடிக்கைகள் தொடா்பாக ஷேக் ஹசீனாவின் அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

பிரித்தானிய குடியேறிகளுக்கு எதிராக தொடரும் போராட்டம் – 400க்கும் மேற்பட்டோர் கைது !

பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்ளை இலக்குவைத்து கடந்தவாரம் முதல் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பாக இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை தடுத்து வைப்பதற்காக 500 க்கும் மேற்பட்ட மேலதிக சிறை அறைகள் ஒதுக்கபட்டுவருவதாகவும் வன்முறைகளை கட்டுப்படுத்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறப்புகாவற்துறையினர் களமிறக்கப்படுவார்கள் என அரசாங்கம் இன்று(6) அறிவித்துள்ளது.

கடந்தவாரம் முதல் தலையெடுத்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு முதலாவது கடுமையான நெருக்கடியாக உருவாகியுள்ள நிலையில் நேற்றிரவு(5) பெல்ஃபாஸ்ற் நகரில் நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதலில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேர்மிங்காம் நகரில் அதிதீவிர வலதுசாரிகள் குடியேறிகளுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக நேற்று அணிவகுப்பு பற்றிய வதந்திகளையடுத்து பல வாகனங்களும் ஒரு மதுபானசாலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சவுத்போர்ட் நகரத்தில் கடந்தவாரம் மூன்று சிறுமிகள், 17 வயதான ஆயுதாரி ஒருவரால் கத்தியால் குத்திகொல்லப்பட்ட பின்னர் குறித்த தாக்குதலை செய்தவர் ஒரு முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர் என பரப்பட்ட வந்தியை அடுத்து வெடித்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எதிர்நோக்கும் முதலாவது கடுமையான நெருக்கடியாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை நாளை(7) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்பொதான தகவல்கள் கிட்டியுள்ளதாக ஹரோ சட்ட மையத்தின் இயக்குனர் பமீலா ஃபிட்ஸ்பட்றிக் ஒரு தகவலை வெளியிட்டுள்ளாதால் அது குறித்த முன்னெச்சரிக்கைகள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன.

நேற்றிரவு பிளைமவுத் பகுதியில் காவற்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உட்பட்ட வன்முறை தாக்குதல்கள் நடத்தபட்டதால் பல அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். பிளைமவுத் வன்முறைகள் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிதானியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இதுபோன்ற மிக மோசமான வன்முறைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் கலவரம் – 30ற்கும் அதிகமான குழந்தைகள் பலி !

பங்களாதேஷில் அண்மையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது முப்பத்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டம் இடம்பெற்ற இடங்களை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த குழந்தைகள் ஐந்து வயது நிரம்பாதவர்கள் எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அரசு நிர்ணயித்த இட ஒதுக்கீடு முறை குறைக்கப்பட்டது, ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பொலிஸ் காவலில் உள்ளவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்களில் 266 பேர் உயிரிழந்ததோடு, 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பதவி விலகினார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா !

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதேவேளை, தன்மோண்டியில் உள்ள அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து இராணுவ உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவுக்குப் (India) புறப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது.

 

 

இந்த நிலையில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டது.

 

அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டு இராணுவம் கோாிக்கை விடுத்திருந்தது.

இன்ஸ்டாகிராமை தடை செய்த துருக்கி!

மத்திய கிழக்கு நாடான துருக்கி இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால் இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக ஐந்து கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், துருக்கியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.5 கோடி ஆகும் அதேவேளை துருக்கிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? – ட்ரம்ப் சர்ச்சை கேள்வி !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்வி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.

 

இந்நிலையில் சிகாகோவில் அண்மையில் இடம்பெற்ற குடியரசு கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ” கமலா ஹாரிஸ் ஆரம்பத்தில் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்ததாகவும், தற்போது தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருவதாகவும் விமர்சித்திருந்தார்.

அத்துடன் ” கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என்பது தெரியவில்லை எனவும் அவர் வெளிப்படையாக இல்லை எனவும்” குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ”வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்,குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கமலா தன்னை எப்படி அடையாளப்படுத்துகிறார் என்பது குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும், அது அவரது சொந்த முடிவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் ”கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும் எனவும், அவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்பதால் அவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“பெண் பிணத்துடன் புணர்ந்தார் திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி” மருத்துவ மாபியாக்கள் சோடித்த குற்றச்சாட்டு! “வைத்தியர்கள் பணிக்குச் செல்லாமல் ஊதியம் பெற்று மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டினர்!” சாவகச்சேரி நீதி மன்றில் சட்டத்தரணி செலஸ்ரின்

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவத் தவறுகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி, தன் மீது “பெண் பிணத்துடன் புணர்ந்தேன்;” என மருத்துவ மாபியாக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என ஓகஸ்ட் முதலாம் திகதி தெரிவித்துள்ளார். மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் நீதி மன்றத்துக்கு முன் யூலை 31 அன்று சென்றுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகராக கடமையாற்றிய ராமநாதன் அர்ச்சுனா தங்களது கடமையைச் செய்யவிடவில்லை, அச்சுறுத்தல்களை விடுத்தார், மிரட்டினார், விடுதியைத் தொடர்ந்தும் மீள ஒப்படைக்க மறுக்கின்றார் போன்ற குற்றச்சாட்டுக்களை வைத்தியர்கள் ராஜீவ், பிரணவன், கமலா, மதிவாணன், மயூரன் ஆகியோர் முன்வைத்திருந்தனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வைத்தியர்களாக இருப்பதால், அவர்களுடைய பெறுமதியான நேரத்தையும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ராமநாதன் அர்ச்சுனாவினதும் நீதிமன்றத்தினதும் பெறுமதியான நேரத்தையும் கருத்தில் எடுத்து இவ்வழக்கை இணக்க சபையூடாக தீர்க்குமாறு பிரதிவாதி ராமநாதன் அர்ச்சுனாவைப் பிரதிநிதித்துவம் செய்த சட்டத்தரணி செலஸ்ரியன் நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார். அதனை வாதிகளான மருத்துவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குமாரவடிவேல் திருக்குமரன் மறுத்துவிட்டார். ராமநாதன் அர்ச்சுனாவை வழக்கிலிருந்து தப்பிக்கொள்ள அனுமதிக்க முடியாது என திருக்குமரன் வாதிட்டார். அர்ச்சுனாவுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் திருக்குமரன் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி செலஸ்ரியன், அப்படியானால் “வேலை நேரத்தில் பணியில் இல்லாது, தனியார் வைத்தியசாலைக்குச் சென்று பணிபுரியும் இம்மருத்துவர்கள் ஒவ்வொருவர் மீதும் பப்ளிக் சேர்விஸ் கொமிஸன் விதிகளை மீறியதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடும்போம்” எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் நீதிமன்றில் தனது வாதத்தை வைத்த போது இந்த வைத்தியர்கள் பணிநேரத்தில் பணியில் ஈடுபடாமல் வைத்தியசாலையில் ஒவர்ரைமையும் பதிந்துபெற்றுவிட்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளனர். மக்களின் வரிப்பணத்தை இந்த வைத்தியர்கள் சுரண்டி உள்ளனர் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் சாவகச்சேரி நீதிமன்றில் தெரிவித்தார்.

வழக்கை விசாரணை செய்த நிதிவான் அ யூட்சன் ‘இதுவொரு மிரட்டல் எனத் தெரிவித்தார்’. ‘அவர்கள் தான் பிரதிநிதித்துவப் படுத்துபவர் மீது மேலதிக நடவடிக்கை எடுப்போம் என மிரட்டியாதால் தான், தான் அவ்வாறு கூறவேண்டியேற்பட்டதை சட்டத்தரணி செலஸ்ரியன் சுட்டிக்காட்டினார். வைத்தியர் பிரவணனுடைய பிரபல்யமான மேற்கோளாக மாறிய ‘கோள் மீ ஆஸ் சேர்’ என்பது பற்றி குறிப்பிடுகையில் ‘கோள் மீ அண்ணா’ என்பது எப்படி மிரட்டலாகும் எனக் கேட்டார் சட்டத்தரணி செலஸ்ரியன். ‘எதிர்தரப்பு சட்டத்தரணி சயந்தனை எனக்குத் தெரியும். அவருடன் சட்டவிடயங்கள் பற்றி பேச இருந்தது. அதற்காக நான் அவருக்கு போன் பண்ணிணேன். மசேஜ் விட்டேன். அதற்கு என் மீது மிரட்டல் வழக்குப் பதிவு செய்ய முடியுமா’ எனக் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி செலஸ்ரியன். மேலும் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு வழங்கப்பட்ட விடுதியில் அர்ச்சுனாவிற்கு தேவையான ஆதாரங்கள் பல உள்ளது. அதனை விட்டால் ஆதாரங்கள் காணாமல் போய்விடும் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் அங்கு சுட்டிக்காட்டினார்.

காலை ஒன்பது மணியளவில் நீதிமன்றம் வந்த வாதிகளான மருத்துவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தின் இடதுபுறம் சுவரோடு ஒட்டியவாறு இருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர். பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்தவர்கள் மத்தியில் இந்த வைத்தியர்களும் அங்கு வந்து காத்திருந்தனர். பிரதிவாதியான ராமநாதன் அர்ச்சுனா பார்வையாளர்களின் இருக்கையில் நடுவே போடப்பட்ட இருக்கையில் இருந்தார். இந்த வழக்கு மேலதிக தகவல்கள், விசாரணைகளுக்காக செப்ரம்பர் 11க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதே போல் வைத்தியர்களுக்கு எதிராக அர்ச்சுனாவால் கொண்டுவரப்பட்ட, தன்னைத் தாக்கியது, தனது மொபைல் போனை பணத்தைப் பறித்தது சம்பந்தப்பட்ட வழக்கில் மேலதிக சாட்சியங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் இவ்வழக்கும் செப்ரம்பர் 11 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதி மன்றில் வைத்தியர்களால் தொடரப்பட்ட இந்த வழக்கு வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா தங்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்திவிட்டார் அதற்கான ஆதாரங்களையோ மான நஸ்டத்தையோ கோரும் வழக்குகளாக இருக்கவில்லை. வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மிரட்டுகிறார், பயப்படுத்துகின்றார், கடமையைச் செய்யவிடவில்லை, விடுதியை வைத்திருக்கின்றார் போன்றவற்றுக்காகவே வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. தற்போது இணக்கசபையூடாக தீர்ப்பதற்கு வைத்தியர்கள் மறுத்துள்ளதால் இவ்வழக்கு எதிர்காலத்தில் தீவிரமடையும் என்றும் மேலதிக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டி வரலாம் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் தெரிவித்தார்.

அடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ அசட்டையீனம் காரணமாக நிகழ்ந்த பல உயிரிழப்புகளை அம்பலப்படுத்தியதற்கு பழிவாங்கும் வகையில் 2018இல் தன்னுடைய பதவியை பறித்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி குற்றம்சாட்டியுள்ளார். 15 வரையான குழந்தைகளின் உயிரிழப்புக்கு மருத்துவ அசட்டையீனமே காரணம் எனத் தெரிவித்த உதயசிறி, இக்குழந்தைகள் வாட் அருகில் சுவாசத் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு இருந்துள்ளது. அதிலிருந்து வந்த வைரஸ் கிருமிகளே குழந்தைகளில் தொற்றை ஏற்படுத்தி மரணத்தைச் சம்பவித்ததாக அவர் தெரிவித்தார். இதனை ஆரம்பத்திலேயே ஆபத்து கணிப்பீடு செய்து தடுத்திருக்க முடியும் என்றும் அதிகாரி உதயசிறி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் துர்க்கா இல்லத்தில் வளர்ந்து மணம் முடித்த பெண் தனது மூன்றாவது குழந்தைப் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு 28 நாட்கள் இருந்த நிலையில் திடீரென நடுநிசியில் சிசேரியன் ஒப்பிரேசன் செய்யப்பட்டதில் தாயும் சேயும் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இவ்வாறான தவிர்க்கக் கூடிய மரணங்களைச் சுட்டிக்காட்டி அவற்றை வெளிக்கொண்டு வந்ததற்காக தனது பதவி பறிக்கப்பட்டதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்த உதயசிறி தெரிவிக்கின்றார்.

தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதற்கான காரணத்தை தனது தேடலினூடாகக் கண்டுபிடித்ததாகக் கூறும் உதயசிறி, யாழ் போதனா வைத்தியசாலை வழங்கிய குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடிப்படையிலேயே 2018இல் தனது பதவி பறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக சுகாதார அமைச்சு அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அண்மையில் உதயசிறி அமைச்சில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரூடாக தன்மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றிய ஆவணத்தை பார்த்தபோது அதிர்ச்சியான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டு இருந்தது.

இறந்த பெண்ணின் உடலோடு உதயசிறி உறவு கொண்டதாகவும் பாலியல் லஞ்சம் பெற்றார் என்றும் இது போன்ற 37 வரையான குற்றச்சாட்டுக்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்த உதயசிறி மீது சுமத்தப்பட்டு இருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவுமே உதயசிறிக்கு தெரிவிக்கப்படவும் இல்லை. அவை தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் தண்டணை வழங்கப்பட்டு விட்டது. அவருடைய பதவி பறிக்கப்பட்டு விட்டது. மீண்டும் தன்னுடைய பதவியை மீளப் பெறுவதற்கான போராட்டம் தொடர்கின்றது.

வைத்தியர் ஜெயக்குமரன், வைத்தியர் நாகநாதன், வைத்தியர் கெங்காதரன், உதயசிறி என யாழ் போதனா வைத்தியசாலையில் பலர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவரின் கரங்களில் புலம்பெயர் தேசங்களின் நிதிப்பங்களிப்பு வலைப்பின்னல் இருப்பதாகவும், மத்திய அரசின் கீழ் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்து கொண்டே மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் இருக்கும் அளவுக்கு மாகாணத்திலும் மத்தியிலும் அரசியல் அதிகாரங்களோடு நெருக்கமாக இருக்கின்றார் என்றும் ஜிஎம்ஓஏ உடன் செயற்படுவதாகவும் ஜிஎம்ஓஏ இன் மருத்துவ மாபியாவின் பங்காளிகளில் இவரும் ஒருவர் என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.

தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்காக அவர்களைப் பாதுகாப்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் நிகழும் மருத்துவத் தவறுகளை மூடிமறைப்பதிலும் யாழ் போதனா வைத்தியசாலை பயன்படுத்தப்படுவதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாகச் செயற்பட்ட உதயசிறி தெரிவிக்கின்றார். மருத்துவத் தவறுகள் மற்றும் சிக்கலான காரணங்களால் உயிரிழந்தவர்கள் கூட அவசர சிகிச்சைக்கு அனுப்பப்படுவது என்ற பெயரில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு உயிருடன் இருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் எவ்வித மருத்துவக் குறிப்புகளும் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுவதாக உதயசிறி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வைத்தியர் அர்ச்சுனாவைக் காட்டிலும் தீவிரமாக மோசடிகளை வெளிக்கொண்டுவந்த டொக்டர் சிவரூபன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்து போலியான காரணங்களால் விசாரணையின்றிப் பணி நீக்கம் செய்யப்பட்ட உதயசிறி, கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்ச்சியில் யூலை 1 இல் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக சமூக வலைத் தளங்களில் மருத்துவர்கள் த சத்தியமூர்த்தி, பிரணவன் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்த தன்னை, முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மனித உரிமைக்காப்பாளர் த கிருஷ்ணா தேசம்நெற்க்கு இன்று யூலை 2இல் அனுப்பி வைத்த ஒலி வடிவமான குறும்செய்தியில் தெரிவித்துள்ளார். மருத்துவமனை தனக்கு உயிராபத்தான இடமாக மாறி இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகின்றார். த கிருஷ்ணா தேசம்நெற்க்கும் சில நேர்காணலைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாபியாக்கள் பற்றி ராமநாதன் அர்ச்சுனா கொழுத்திப் போட்ட தீ இன்று அர்ச்சனாவை மீறியும் சுவாலை விட்டு எரிந்துகொண்டு உள்ளது. இத்தீயைப் பரப்பி இந்த மருத்துவ மாபியாக்களையும் ஏனைய துறைகளில் உள்ள மாபியாக்களையும் சுட்டெரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும் என்ற கோசங்கள் பரவலாக எழுந்துள்ளது.

பிரிட்டனின் சௌத்போர்ட்டில் சூறையாடப்பட்ட இலங்கையரின் வர்த்தக நிலையம்!

பிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையை சேர்ந்த ஒருவரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று சூறையாடி பெரும் சேதத்தையும் நஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.சானகபலசூரிய என்பவரின் வர்த்தக நிலையம் சூறையாடப்பட்டது என பிபிசி தெரிவித்துள்ளது.

 

வின்ட்ஸர் மினிமார்ட்டின் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்த வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் நிகழ்வின் பின்னர்மெனேசைட் பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

அந்த பகுதி பாதுகாப்பனதாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக தனது வர்த்தக நிலையத்தையை மூடிக்கொண்டு அன்று மாலை வீடு திரும்பிய இலங்கையரான பாலசூரிய வீட்டில் உள்ள சிசிடிவி கமராவின் மூலம் தனது வர்த்தக நிலையம் சூறையாடப்படுவதை பார்த்துள்ளார்.

 

அவர்களிற்கு வர்த்தக நிலையத்தை உடைத்து உள்ளே செல்வதற்கு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மாத்திரமே தேவையாகயிருந்தது அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை காலால் உதைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக நிலையத்தின் வெளியே தீயை பார்த்தேன் அவர்கள் கார்ட்போர்ட்டினை கொழுத்தினார்கள் நான் அவர்கள் எனது வர்த்தக நிலையத்தை தீயிடப்போகின்றார்கள் என அச்சமடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

நான் 999 அழைத்தேன் சிசிடிவியில் எனது பிள்ளைகளும் அதனை பார்த்தார்கள் அலறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.மறுநாள் காலையே சேதங்களை பார்த்தேன் என தெரிவித்துள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தை,அது பயங்கரமானதாக காணப்பட்டது அனைத்து பொருட்களும் தரையில் காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

 

அவர்கள் அனைத்தையும் எடுத்துச்சசென்றுள்ளனர் அவர்கள் வர்த்தக நிலையத்திற்குள் சாப்பிட்டார்கள் அது பெரும் பயங்கரம் நான் காப்புறுதி செய்யவில்லை என இலங்கையரான சானக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

 

இதுமிகவும் மோசமான விடயம் ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நிதி திரட்டி எனக்கு உதவப்போகின்றார்கள் – குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.