August

August

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (Ai) உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளுக்கு காப்புரிமை வழங்கமுடியாது – அமெரிக்கா

மனித ஈடுபாடு இல்லாமல் Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளுக்கு அமெரிக்க சட்டத்தின் கீழ் காப்புரிமை பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் உருவாக்கும் கலைப் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்க முடியும் என மாகாண நீதிபதி பெரில் ஹோவெல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டாபுஸ் (DABUS) என பெயரிடப்பட்ட Ai அமைப்பின் சார்பாக விஞ்ஞானி ஸ்டீபன் தாலர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான அமெரிக்க காப்புரிமை அலுவலக தரப்பு எடுத்த முடிவை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஸ்டீபன் தாலரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பை அமெரிக்க காப்புரிமை அலுவலகம் வரவேற்றுள்ளது.

முன்னதாக, மிட்ஜெர்னி Ai துணையுடன் உருவாக்கப்பட்ட படைப்புக்கு படைப்பாளி ஒருவர் அமெரிக்காவில் காப்புரிமை கோரி விண்ணப்பித்தார். அது நிராகரிக்கப்பட்டது. தான் அந்தப் படைப்பை உருவாக்க Ai தொழில்நுட்பம் ஒருங்கிணைத்ததாக அவர் வாதம் செய்தார். இருந்தும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இலக்கியம், இசை, படம் மற்றும் பிற கலை வடிவங்களை உருவாக்க Ai அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மனிதர்கள் உருவாக்கும் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் அரேபியா !

யெமென் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்து தொழில்வாய்ப்பு தேடி அரேபியாவுக்குள்  நுழைபவர்கள் மீதே இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சவுதி அரேபிய இராணுவத்தினர் அவர்களை கண்மூடித்தனமானச் சுட்டு கொல்வதாகவும், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 430 பேர் இரக்கமின்றிக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்னில் பௌத்தமதகுரு மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் !

மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பௌத்தமதகுரு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

மெல்பேர்னின்  தென்கிழக்கில் உள்ள தம்ம சரண ஆலயத்தின் மடாதிபதியான நாவோடுன்ன விஜித நாணயக்கார தேரர்  16வயதிற்குட்பட்டவர்களுடன்  உடலுறவில்  ஈடுபட்டது அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டது உட்பட 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

காவல்துறையினர் இந்த வாரம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.மூவர் பௌத்தமதகுருவிற்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் 1996 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட மதகுரு கெய்ஸ்பொரோ ஆலயத்தில் இருந்தவேளை இடம்பெற்றுள்ளன.

தேரர் பல சிறுமிகளிடம் அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டார் என காவல்துறையின் விசாரணை பிரிவினர்  தெரிவித்துள்ளமை  நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பௌத்தமதகுரு காவி உடையுடன் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அடாவடித்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் – மேடைகளில் இலவச வைத்தியத்தை காப்போம் என பேசிக்கொண்டிருக்கும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியும் !

அண்மைய நாட்களில் இலங்கையின் இலவச மருத்துவம் தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் துர்பாக்கிய நிலை நீடித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில் மக்கள் பலரும் இலவச மருத்துவத்தின் மீதான தங்களுடைய நம்பிக்கையை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் மருந்துப்பற்றாக்குறையாலும் – மருந்துப்பொருட்களின் தீவிர விலையேற்றத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களை இந்த வைத்தியசாலைகளின் நிர்வாகமும் – தாதியர்களுமாக சேர்ந்து “மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தாற் போல” கொடூரமாக வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் நீட்சியாகவே நேற்றையதினம் வவுனியா பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள துயரமாகும். வைத்தியசாலைக்கு தமது சிசுவுக்கான சிகிச்சைக்கு சென்ற தம்பதியினரிடம் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்கள் வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் (மருத்துவர்கள் உட்பட) இது தொடர்பில் பாதிக்கபட்ட நபர் தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“04.08.2023 அன்று மாலை எமக்கு குழந்தை கிடைத்தது.

வைத்தியசாலையில் சிங்கள மொழி பேசும் Malki அல்லது Dilshaani என அழைக்கப்படும் தாதியர் ஒருவருக்கும் எமக்கும் இடையில் கடந்த 10 நாட்களாக முறுகல் நிலை ஏற்பட்டு வந்தது. அது கடந்த சனிக்கிழமை மாலை அன்று வாக்குவாதமாக மாறியது. நான் அவருடைய பெயரைக் கேட்ட போது அவர் கூறிவிட்டு பின்னர் என்னை மீண்டும் அழைத்து கடும் உரத்த தொனியில் என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு எனக் கேட்க நான் உங்களைப் பற்றிய முறைப்பாடு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினேன்.

அதற்கு அதிக கோபம் அடைந்த அந்த தாதியர் மருத்துவ சிட்டையை முடிவுறுத்தி எங்களை வைத்திய சாலையை விட்டு வெளியேறுமாறு கூற நான் அதற்கு இது அரச மருத்துவமனை உங்களுக்கு அதனை கூற உரிமை இல்லை. நாங்கள் இருவரும் அரச உத்தியோகத்தர்கள் தான் எங்களுக்கும் சட்டங்கள் தெரியும் எனக் கூறி விட்டு நான் வீடு திரும்பிகொண்டிருந்தேன். இதனை பெரிசுபடுத்தவில்லை. ஏனெனில் எனது குழந்தை அந்த தாதியரின் கீழ் சிகிச்சை பெற்று வருவதால்….

சுமார் 15 நிமிடங்களின் பின்னர் நான் தாண்டிக்குளத்தை அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எனது மனைவியார் அழைப்பு எடுத்து 7th Ward இல் உள்ள தலைமைத் தாதியர் அங்கு வந்து நான் சொன்னால் தான் இங்கு உள்ள தாதியர்கள் உங்கள் பிள்ளைக்கு மருத்துவம் செய்வார்கள். உங்கள் கணவர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் நாங்கள் செய்ய மாட்டோம் எனக் கூறினாராம்.

அத்துடன் அந்த நேரத்தில் குழந்தை பகுதி 7th Ward இல் கடமையில் இருந்த வைத்தியர் அஸ்ரா (Training period உள்ளவர்) மனைவியை அழைத்து உங்கள் கணவரை எங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் இல்லை எனில் நாங்கள் உங்கள் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் எனக் கூறினாராம்.

நான் உடனடியாக மீண்டும் மருத்துவமனை சென்று 7 ஆம் விடுதிக்கு பொறுப்பான VP Doctor இடம் முறையிட்ட போது அவர் உடனடியாக வைத்திய சாலையில் Director அவர்களுக்கு தெரியப்படுத்த அவரும் உடனடியாக அங்கு வந்து நடந்தைக் கேட்டார். எனக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் நான் உங்களால் எப்படி மருத்துவம் பார்க்க முடியாது இது அரச மருத்துவமனை நீங்கள் அப்படி கூற முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் எனது குழந்தைக்கு சேவை வழங்காத இந்த மருத்துவமனையிலும், உங்கள் தாதியர் இடத்திலும் எனது 10 நாட்களான பச்சிளம் குழந்தையை விட்டு செல்ல எனக்கு நம்பக தன்மை இல்லை.

நீங்கள் தானே சேவை வழங்க மாட்டீர்கள் எனக் கூறினீர்கள் ஆகவே எனக்கு லாமா முறை அடிப்படையில் எனது குழந்தையை விடுவித்து தருமாறு Director அவர்களை கேட்டுக் கொண்டேன்.

அதனை ஏற்றுக் கொண்ட அவர் தாதியர்களிடமும், வைத்தியர் அஸ்ரா அவர்களிடமும் உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு கூறினார். அதன் பின்னர் லாமா படிவத்தில் எனது மனைவியார் 12.08.2023 இரவு 10.28 மணிக்கு கையொப்பமிட்டார். அதன் பின்னர் குழந்தையின் மருத்துவ படிவங்களை கோரிய போது இந்த நேரத்தில் இந்த வேலை தங்களுக்கு செய்ய முடியாது அதற்கான நேரம் வரும் போது மாத்திரமே நாங்கள் அதை செய்வோம் என உரத்த தொனியில் மிகவும் கடுமையாக கூறினார்கள்.

மீண்டும் நான் Director அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற போது அது மூடப்பட்டு இருந்தது. பின்னர் அவருக்கு வேறு ஒரு வழியாக தொலைபேசி ஊடாக கதைத்தபோது தான் Off இல் சென்றுவிட்டேன் எனக் கூறினார். பின்னர் நான் மீண்டும் 7 ஆம் விடுதிக்கு வந்து தொலேபேசி ஊடாக வைத்தியர்களை தொடர்பு கொள்ள பல முயற்சிகள் செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஏனெனில் நேரம் நள்ளிரவு 12 மணியை கடந்திருந்தது. தாதியர்களும் 10 நாட்களான பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் தங்களது அதிகாரத்தை கைவரிசையாக வைத்து எங்களை பழிவாங்கினார்கள். அவர்களது சேவை துஸ்பிரயோகமே இது.

வைத்தியசாலையின் தலமை அதிகாரி கூறியும் அதை கொஞ்சம் கூட மதிக்காமல் தமது வைத்திய மற்றும் அரச சேவையை துஷ்பிரயோகம் செய்தனர். சற்று கூட இரக்கம் அற்ற பெண்கள் தாய்மையின் வலியை அறியாத ஓர் பிறப்புகளாக கூட இருக்கலாம்.

நீண்ட நேரமாக முயற்சிகள் செய்து ஏதும் பலன் அளிக்காமல் போய் அவ்விடத்தில் தந்தையாகவும், ஓர் அரச உத்தியோகத்தராகவும் தோற்றுபோய் நின்றிருந்தேன். அப்போது நேரம் 13.08.2023 அதிகாலை 2 மணி ஆகிவிட்டது. அப்போது மகப்பேறு விடுதியில் கடமையில் இருந்த சகோதர மொழி பேசும் வைத்தியர் (எனது மனைவிக்கு அறுவைச் சிகிச்சை செய்தவர்) எல்லா வழிகளிலும் தோற்று போய் நின்ற என்னைத் தேற்றி நீங்கள் நம்பிக்கையுடன் வீடு செல்லுங்கள் உங்கள் குழந்தைக்கு நான் பொறுப்பு என என்னிடம் சத்தியம் கூறினார். அவருடைய நம்பிக்கையில் மனைவிக்கும் ஆறுதல் கூறி விட்டு நான் வீடு திரும்பினேன். அந்த உயர்ந்த வைத்தியரிடம் உள்ள இரக்க குணம் கூட அந்த ஈனர் தாதியரிடம் இல்லை.

அதன் பின்னர் மீண்டும் காலை 6 மணிக்கு மீண்டும் வைத்தியசாலை வந்து மனைவியை பார்வையிட்ட பின்னர் 7 ஆம் விடுதிக்கு அந்த வேளையில் கடமையில் இருந்த வைத்தியரிடம் முறையிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் தாதியர்களிடம் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார். ஆனாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

சற்று நேரத்தின் பின்னர் அந்த விடுதிக்கு பொறுப்பான VOG Doctor Kunawardena Sir அவர்கள் அங்கு கடமைக்கு சமுகமளித்தார் நான் அவரிடம் இது பற்றி முறையிட்ட போது நான் அவர்களுக்கு கட்டளை இட்டிருக்கின்றேன் இப்போது உங்களுக்கு விடுவித்தல் பத்திரம் கிடைக்கும் நீங்கள் செல்லாம் என பணிவுடன் கூறினார். அப்போது நேரம் 9.30 மணி

மீண்டும் காத்து கொண்டு இருந்தேன். எந்த வித முடிவுகளும் இல்லை. மகப்பேறு விடுதி என்பதால் பார்வை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஆண்கள் உள்ளே செல்ல முடியாது.

ஆத்திரம் அடைந்த நான் வைத்திய சாலையின் Director இடம் சென்று எனது மனைவியார் கடந்த இரவு 10.28 pm இற்கு லாமாவில் கையொப்பம் இட்டார் ஆனால் தாதியர்கள் இன்னும் அவர்களை விடுவிக்கவில்லை எனக் கூறினேன். அதற்கு உடனடியாக அவர் அந்த விடுதிக்கு அழைப்பு எடுத்து அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார்.

ஆனால் எந்த விடுவிப்புகளும் இடம் பெறவில்லை.

இவ்வாறு வெளியில் மணிக்கணக்காக காத்திருந்த போது நேரம் 12 மணி ஆகி இருந்தது அடுத்த பார்வை நேரமும் வந்தது. அப்போது அங்கு கடமைக்காக பிரசன்னமாகி இருந்த குழந்தை பிரிவுக்கான VP Doctor Ranjith Sir அவர்களிடம் மீண்டும் முறையிட்ட போது நான் உங்களை நேற்று இரவு விடுவிக்குமாறு தாதியர்களுக்கு பணித்தேன் எனக் கூறினார். மீண்டும் அவர் அவர்கள் காலதாமதம் இன்றி உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார்.

ஆனால் பிற்பகல் இரண்டு மணியாகியும் எந்த விடுவிப்புகளும் இடம் பெற வில்லை. மிகவும் ஆத்திரம் அடைந்த நான் மீண்டும் Director இடம் சென்றேன் அங்கு அவர் இல்லை. அங்கு கடமையில் இருந்த மற்றுமொரு பதவிநிலை உத்தியோகத்தர் இடம் சென்று விடையத்தை கூறி நான் Director ஐ சந்திக்க வேண்டும் என கூற அந்த உத்தியோகத்தர் தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்டு விடையத்தை கூறினார். அதற்கு Director 10 நிமிடத்தில் உங்களை விடுவிக்கிறேன் என கூறினார். மீண்டும் நான் விடுதிக்கு வரும் போது குழந்தை பிரிவுக்கான VP அவர்களும் விரைவாக விடுதிக்கு வந்தார் அதன் பின்னரே மாலை 3 மணிக்கே எங்களை விடுவித்தார்கள்.

குழந்தைக்கு infection இருந்ததால் Antibiotics ஊசி தினமும் மூன்று முறை வழங்கப்பட்டு கொண்டு இருந்தது. அந்த தாதியர்கள் 2 மணிக்கு வழங்க வேண்டிய ஊசி வழங்கவில்லை. மாறாக நான் வைத்தியரை வேண்டிநின்ற போது 2.50 மணிக்கே ஊசி வழங்கினர்.

அத்துடன் அங்கு மதிய நேர மருந்து வில்லைகள் மனைவிக்கு வழங்காமல் புறக்கணித்தனர். இது ஒரு மிகவும் கேவலமான சேவை துஸ்பிரயோகம் அவர்களது சேவை சத்திய பிரமாணம் எங்கே போனது இதுவா உங்கள் உயிரைக் காப்பாற்றும் மருத்துவ சேவை?10. நாளான பச்சிளம் குழந்தைக்கு செய்யும் வேலையா இது நீங்கள் எல்லாம் ஓர் பெண்களா? உங்களுக்கு தாய்மை உணர்வு இல்லையா? ஈனப்பிறவிகளா நீங்கள்? உங்களை என்ன வார்த்தைகளை கொண்டு அழைப்பது என எனக்கு தெரியவில்லை…..

விடுதிக்கு பொறுப்பான வைத்தியர்,

VOG

VP

Director என பல வைத்திய அதிகாரிகள் கட்டளை இட்டும் கொஞ்சம் கூட செவி சாய்காத தாதியர்கள்.

உங்கள் மருத்துவமனையின் நிர்வாக கட்டமைப்புகள் தான் என்ன? உங்கள் பணிப்புக்கு கட்டுப்படாதவர்களுக்கு என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தீர்கள்?

தாதியர்கள் என்ன வைத்தியர்களை விட பெரியவர்களா? எவ்வளவு படித்த வைத்தியர் இவ்வாறு கண்ணியமாக எவ்வளவு பணிவுடன் பொறுப்பாக கதைக்கிறார்கள். இந்த அரைவேக்காடு சில்லறைகள் போடும் கூத்துக்கள் தான் இங்கு பெரியதாக இருக்கிறது.

உங்கள் மருத்துவமனையின் Quality Management System தொடர்பான ஆய்வுகள் யாவும் பொய்த்து தான் போகும்.

உங்கள் Vision and Mission களை எப்படி நீங்கள் அடைய முடியும்?

அந்த இலக்குகளை நோக்கி இந்த தாதியர்களைக் கொண்டு எவ்வாறு பயணிக்க முடியும்?

ஒன்றுக்கும் விடைகள் கிடையாது….

சக மனிதர்களை மனிதர்களாக மதிக்காத ஒர் நாடு நம் நாடு தான்……

இன்னும் பல சகிக்க முடியாத கசப்பான சம்பவங்கள் பல இருக்கின்றன. அதை எல்லாம் ஏழுத பல நாட்கள் எடுக்கும்.” என.

குறித்த பதிவின் முகநூல் இணைப்பு https://www.facebook.com/balasubramaniampavithan

மேற்குறித்த பதிவை எழுதியவர் ஒரு அசர அதிகாரியாவார் . ஒரு அரச அதிகாரியே இலங்கையின் இலவச சேவையை நுகர்வதில் இவ்வளவு தடை இருக்குமாயின் இலங்கையில் வைத்தியசாலைகளில் மருத்துவத்திற்காக செல்லும் பாமரமக்களின் நிலை இன்னமும் மோசமானதாகவே இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. மேலும் வவுனியா வைத்திஜயசாலையில் நடைபெறும் அடாவடிதட்தனம் தொடர்பில் பலரும் சமூக வலைத்தளங்களில் தமது அனுபவங்களையும் எழுத ஆரம்பித்துள்ளனர் .

அண்மையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் ஒரே வாரத்தில் பிறந்த ஐந்து சிசுக்கள் வைத்திய பராமரிப்பு இன்றி இறந்த சம்பவமும் நாம் அறிந்தததே. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தந்தை ஒருவர் நீதிக்காக போராடிய போதும் கிளிநொச்சி வைத்தியசாலை அவரை அட்டையை தூக்கி வீசுவது போல கவனத்தில் எடுக்காது விட்டுவிட்டது.

இதனைப்போலவே முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இலங்கை மருத்துவ சங்கமோ – இலங்கை சுகாதார அமைச்சோ நேரடியாக தலையிட்டு இந்த மருத்துவத்துறையை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துர்பாக்கியமான மருத்துவ சூழல் பற்றி பேசவவேண்டிய நாடாளுமன்ற அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்தில் இராவணன் தமிழனா..? சிங்களவனா ..? என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி தீவிர கவனம் செலுத்த வேண்டிய வடமாகாண சுகாதார பணிப்பாளர் கலாநிதி த. சத்தியமூர்த்தி இன்னமும் செயற்படவே ஆரம்பிக்கவில்லை. பாவம் அவரும் யாழ்ப்பாணம் மட்டுமே தனது பகுதி என ஓய்வெடுத்துவிட்டார் போல. யாழப்பாணத்து முருத்துவத்தை கண்காணிப்பதிலுள்ள அதே அக்கறை அவரிடம் ஏனைய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை கவனிப்பதிலும் இருக்கவேண்டும். ஆனால் அவர் கூட்டங்களில் கலந்து கொண்டு “வைத்தியர்கள் நம்நாட்டின் கண்கள். இலவச மருத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” என பேசுவதுடன் சரி. அந்த இலவச மருத்துவத்தை தூக்கி நிறுத்த – நியாயமானதாக மக்களுக்கு வழங்க அவர் எதுவித நடவடிக்கைகளையுமே எடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த விடயத்திலும் அதுதான் நீடிக்கும் என தோன்றுகிறது.

இலங்கையில் இன்னமும் மக்கள் தன்னம்பிக்கையுடன் நகர்வதற்கு இலவசமாக கிடைக்கும் கல்வியும் – இலவசமாக கிடைக்கும் மருதா்துவமுமே காரணமாகும். அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டிய தேவை அனைத்து சுகாதார துறை ஊழியர்களுக்கும் உண்டு. மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக படித்துவிட்டு – மக்களின் வரிப்பணத்தில் மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலை நிர்வாகிகளும் – ஊழியர்களும் மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டும் ஏன் இத்தனை அவதானமின்மையுடனும் – அடாவடித்தனத்துடனும் நடக்கிறார்கள் எனத்தெரியவில்லை.

அண்மைய நாட்களில் இலங்கையின் இலவச மருத்துவம் தொடர்பிலும் அது தரங்கெட்டு போய்க்கொண்டிருப்பது தொடர்பிலும் தேசம் இணையதளம் தொடர்ச்சியான பல தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது.

அரச வைத்தியசாலையில் மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் தரையில் வீழ்ந்து இறந்த சிசு !

சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால் நாட்டில் அண்மைக்காலமாக பல மரணங்கள் பதிவாகி வரும் நிலையில் மற்றுமொரு மரணமும் பதிவாகியுள்ளது. மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) உயிரிழந்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர்; பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் குழந்தையைப் பிடிக்க முடியாமல் தரையில் வீழ்ந்துவிட்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரேதப் பரிசோதனையில் குழந்தை கீழே வீழ்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பெலரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகள் கைது !

பெலரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் வார இறுதியில் போலந்திற்குள் செல்ல முயன்றன என போலந்து ஊடகம் தெரிவித்துள்ளது.

நான்கு சிரிய மற்றும் மூன்று பங்களாதேஷ் குடிமக்களை போலந்திற்கு கொண்டுசெல்வதற்கு உதவ முயற்சித்த மூன்று உக்ரேனிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்கனவே 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத எல்லைக் கடப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அடையாளங்களோ மேலதிக விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.

தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (05)  சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.