2020

2020

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

இலங்கை பாராளுமன்றத்தேர்தலுக்கான அனைத்து விதமான பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 6483 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (01.08.2020) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 249 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,79,99,273  -ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6,87,807- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1,13,18,851- ஆக உள்ளது.

தேர்தல் பாதுகாப்பிற்கென முப்படையினரும் கடமையில் – மஹிந்த தேசப்பிரிய

எதிர் வரும் 05.08.2020 நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் யாவும் இன்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகின்ற அதே நேரம் இன்று நள்ளிரவு முதல் அமைதிக்காலமாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்தல் தொடர்பான பாதுகாப்பிற்கென நாளை முதல் முப்படையினர் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளர் . பிரச்சினைகள் ஏற்படக்கூடுமென ஊகிக்கப்படும் பிரதேசங்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஒரு தொகை இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 373 பேர் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களுள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழிலுக்காக சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 332 பேர் இன்று (02) அதிகாலை இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அதேபோல் உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 41 இலங்கை மாணவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வணிகக் கப்பலில் பணிப்புரிவதற்காக 13 வெளிநாட்டு மாலுமிகளும் இன்று நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். அவர்கள் கட்டாரில் இருந்து இலங்கையை  வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை – சுரங்க ரணசிங்க

இலங்கையின் பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன நிலையில் இன்று நள்ளிரவுடன் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் யாவும் நிறுத்தப்படவேண்டும். அத்துடன் சமூக ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள பிரசாரங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முரண்பாடுகள் தீர்வுப்பிரிவின் உதவி ஆணையாளர் சுரங்க ரணசிங்கவின் தகவல்படி சமூக ஊடகங்களின் பிரசாரங்கள் ஆணைக்குழுவினால் இன்று நள்ளிரவுக்கு பின்னர் உடனடியாகவே அகற்றப்படும்.

இதேவேளை கடந்த ஒரு வாரக்காலப்பகுதிக்குள் சமூக ஊடக பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் 1லட்சம் 50ஆயிரம் டொலர்களை செலவிட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபற்றிய மக்கள் மீது தாக்குதல்.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார கூட்டம் நேற்று (01.08.2020) மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர். பளையில் நடைபெறுகின்ற பிரச்சார கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் குறித்த குழு உள்ளே புகுந்து பிரச்சாரத்தில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தேர்தல் கடமைக்காக நின்ற பொலிஸார் முன்நிலையிலேயே இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுடைய பிரச்சினை கௌரவத்துடன் தீக்கப்பட வேண்டும் – யாழில் இரா. சம்பந்தன்

இந்த நாட்டில் உரிமையில்லை மக்களுடைய இறையான்மை மதிக்கப்பட்டவில்லை பலவிதமான தவறுகள் இடம்பெறுகின்றன. சிறுபாண்மை மக்களை பொறுத்தவரையில் பிரஜை உரிமை, காணி, மொழி, கல்வி, வேலை வாய்ப்பு, அபிவிருத்தி, பலவிதமான அநீதிகள் ஏற்படுத்தப்படுகின்றனகின்றன. இவற்றினை திருத்த முனைகின்றோம். ஆனால், எமது கையில் அதிகாரம் இல்லை. அதனால் எதனையும் எம்மால் தமிழ் மக்களுக்காக செய்யமுடியவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (01.08.2020) மாலை நெல்லியடி, மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

ஒற்றையட்சி முறை சமஷ்டி ஆட்சி முறையாக மாற்றப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இறையான்மையின் அடிப்படையில் அதிகாரங்கள் ஏற்பட்டால் தான், மக்களுக்கு சமத்துவமான நிலை உருவாகும். அதுவே, எமது நிலைப்பாடு எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சுமார் 65 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சிறுபாண்மை தமிழ் மக்கள், அதனை அமோதித்து உள்ளனர். 13 ஆவது சீர்திருத்த யாப்பில் முன்னேற்றம் இருந்தது. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த கால அரசாங்கத்தில் உள்ள ஆட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கின்றோம். தமிழ் மக்களுடைய பிரச்சினை கௌரவத்துடன் தீக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாண இணைந்த ஒரு அலகு சேர்ந்த அதிகார பகிர்வு கிடைக்கப் பெறவேண்டும். எங்களை நோக்கில் பல சவால் இருக்கின்றது. அதிகாரபூர்வமாக நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அரசியல் சாசனம் இப்போது நாட்டில் இல்லை. நாடு இப்போது சட்டம் இல்லமால் செயற்படுகின்றது. இலங்கை பிளவு அடைந்த நாடு அந்த நிலையில் இருக்கின்றது.

இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு பலம் பொருந்திய அணியாக செயற்பட வேண்டும். ஒரு வருடத்திற்குள் புதிய அரசியல் சாசனத்தினை தீர்வுடன் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைக்கான தீர்வினை காண வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அ. சித்தார்த்தன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்குத் தடை..?

இந்திய எல்லைப்பகுதியான லடாக்  பகுதியில், கடந்த  ஜூன் மாதம் 15-ம் தேதி இந்திய – சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.

அதன்படி, தேச நலனுக்கு எதிராகவும் தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி டிக் டாக் உள்ளிட்ட பல  சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்த நிலையில்,  சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே,   டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – 24 மணி நேரத்தில் 50,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள்.

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தினம் தினம் உச்சத்தை எட்டி வருகிறது.  இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கடந்த  24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம்  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511- ஆக உள்ளது. 10 97,374  கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,93,58,659-பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டூவர்ட் பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது பவுலர் என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஸ்டூவர்ட் பிராட் பற்றி நான் எப்போது எழுதினாலும் நான் அவரது ஒரே ஓவரில் 6 சிக்சர் (2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில்) விளாசிய சாதனையை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பதை அறிவேன். இப்போது அவர் டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை என்னுடைய ரசிகர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 500 விக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், உறுதிமிக்க போராட்டமும் அவசியம். பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.