23

23

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் தாழ்ந்த பிரதேசங்களில் நீர்நிரம்பி வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தாழ்ந்த பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். அத்தோடு, மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் என இனங்காணப்பட்டுள்ள இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக சில வீதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் பல மணிநேர போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டது. அத்தோடு வீதிகளில் ஆங்காங்கே சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

860 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை

teacher.jpg860 பட்டதாரிகளுக்கு நாடளாவிய ரீதியில் ஆசிரிய நியமனங்களை கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வழங்க அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் முகமாக இம்மாதத்திலிருந்து ஆசிரிய நியமனங்களை கல்வி அமைச்சு வழங்கவுள்ளது.

இவ்வாறு நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கான முன் ஆயத்த பயிற்சிக் கற்கைநெறி இம்மாதத்திலிருந்து இடம்பெறுகிறது. இதில் தமிழ்மொழிமூல பட்டதாரிகள் 259 பேர் மட்டக்களப்பு தாளங்குடா கல்வியியல் கல்லூரியிலும், சிங்கள மொழிமூல பட்டதாரிகள் 458 பேர் மகாவலி சியதே கல்விக்கல்லூரியிலும், பண்டுவஸ்நுவர கல்வியியல் கல்லூரியிலும், முஸ்லிம் பட்டதாரிகள் அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியிலும் பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப இந்த ஆசிரிய பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நியமனம் பெறும் பட்டதாரிகள் ஐந்து வருடங்கள் அதேபாடசாலையில் கடமையாற்றவேண்டும். பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் தரம் 31 பிரிவுகளுக்குள் உள்வாங்கப்படுவர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சலுக்கு இதுவரை 7 பேர் பலி

எலிக் காய்ச்சலால் இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 7 பேர் மரண மடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண சபை கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சிக்குன்குன்யா, டெங்கு போன்ற காய்ச்சல்களால் பல இழப்புகளைச் சந்தித்த இப் பிரதேசத்தில் இவற்றைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி இப் பகுதியில் அவசர நோய்த் தடுப்பு நிலைமையை பிரகடனப்படுத்தியதன் மூலம் நிலைமை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதை நினைவூட்டிய அவர், தற்போது எலிக்காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இலங்கைத் தமிழருக்கு அரசியலமைப்பில் சம உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் – ஜெயலலிதா கோரிக்கை

jayalaitha.jpgஇலங்கை அரசியல் அமைப்பில் தமிழர்களுக்கும் சம உரிமை வழங்கும் படி மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப்புலிகள் பெரும்பாலானவர்களை அழித்து விட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், இது எந்த வகையில் அந்த அரசு அங்கு வாழும் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு மருந்தாகும் என்பது கேள்விக்குறி. பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது அவசியம். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க ஆவன செய்ய வேண்டும்.

இலங்கையில் நடந்த போர் கசப்பான அனுபவங்களையே தந்துள்ளது. இந்தப் போரில் வெற்றி பெற்று விட்டோம் என யாரும் பெருமிதம் கொள்ள அவசியம் இல்லை. போர் முடிந்து விட்டதால், அங்கு ஐ.நா., மற்றும் ஐ.சி.ஆர்.சி., போன்ற சர்வதேச அமைப்புகள் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். இந்திய அரசும் மறு சீரமைப்பு பணிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது தனி ஈழம் கோரிக்கை வைத்த அவர், இப்போது அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரபாகரன் குறித்தும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

சமத்துவம், சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் தேசம் மலரவேண்டும் என்கிறார் கொழும்பு பேராயர்

ஒவ்வொரு குழந்தையும் இன, மத பேதமின்றித் தம்மை இலங்கையர்கள் எனப் பெருமையுடன் கூறிக்கொள்வதற்கு அவர்கள் சமத்துவமும் சுதந்திரமும் உடையவர்களாக இருக்கும் வகையிலான தேசமாக மலர வேண்டுமென கொழும்புப் பேராயர் அதி.வண. டுலிப் வி சிக்கேரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவன;

சகல இலங்கை மக்களாகிய நாம் இன்று அழகானதும் நாம் நேசிப்பதுமான இந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பு முனையில் நிற்கின்றோம்.

இப்போது யுத்தம் முடிவடைந்துவிட்டதென சகல சமூகத்தினரும் சந்தேகமின்றி ஆறுதலடைந்திருப்பர். அநேக காலமாக அதிகளவிலான உயிர்களை இழந்துள்ளோம். யுத்தத்தில் அநேக வாலிபர்கள் கொலையுண்டும் காயமடைந்தும் உள்ளமை அவர்களின் மிகப்பரந்தளவிலான தைரியத்தையும் தியாகத்தையும் எடுத்தியம்புகிறது. அவர்கள் கண்ணியத்துடனும் மேன்மை நிறைவுடனும் நினைவு கூரப்பட வேண்டும்.

அதேவேளை, ஆயுதமேந்தாத குற்றமில்லா பொதுமக்களில் அநேகரும் கொலையுண்டும் காயமடைந்துமுள்ளனர். அவர்களும் கண்ணியத்துடனும் மேன்மை நிறைவுடனும் நினைவு கூரப்பட வேண்டும். இம்மரணங்களினால் கடுந்துயரடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள், வாழ்க்கைத் துணையினர், பிள்ளைகள், சகோதர சகோதரிகளையும் நாம் ஒரு போதும் மறந்து போகக் கூடாது.

எம்மால் உணர்ந்து கொள்ள முடியுமானால் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து கடந்த காலத்தின் அநேக தவறுகளை அறிந்து கொள்வதற்கு இது உகந்த காலம், அமைதி நிறைந்த கூட்டு வாழ்வு, அரசியல் பேச்சுவார்த்தைக்கு இன்றியமையாத சமரச இணக்கத்தை உருவாக்கும் பலன், ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பு ஆகிய பாடங்கள் அவசியம். இவை எமது பிள்ளைகளுடன் கல்விச் சாலைகளில், வணக்கஸ்தலங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்களில் ஆரம்பிக்க வேண்டும். இப்பாடங்களை வயது வந்தவர்களும் மீளகற்றுக் கொள்வதுடன் குறிப்பாக தலைவர்களும் புதிய தராதரங்களை தமக்கென்று வகுக்க வேண்டும். இவ்வழிமூலமாகவே நாம் முழு அளவுடன் பொருத்தமான விழுமியங்கள், மனப்பான்மைகளை உருவாக்கி அதற்கூடால் மக்களை யுத்தம், வன்முறை என்ற பாதையிலிருந்து விலக்கி வழிநடத்த முடியும்.

இறுதியாக நாம் இவற்றை அங்கீகரிப்போமேயானால் தசாப்தங்களாக அடைய முடியாமல் போன முழு நிறைவான, ஒன்றிப்பான, நீதியுள்ள இலங்கையை கட்டியெழுப்ப நாம் ஜெபத்துடன் உள்நோக்கத்துடன் கூட்டான வழிகளை எடுக்க முடியும். ஒவ்வொரு பெண், ஆண் குழந்தை அவர் எம்மதத்தை, எவ்வினத்தை சார்ந்தவராயிருந்தாலும் தங்களை இலங்கையர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள சமத்துவமும் சுதந்திரமுடையவராய் இருக்க ஒரு தேசமாக மலர வேண்டும். இது நிறைவே வேண்டுமெனில் சகல சமூகத்தினரின் துயரங்களை கவனத்திற்கெடுக்க வேண்டும்.சமூகத்தின் திகில்கள். சந்தேகங்களை அகற்ற வேண்டும். சட்டம், ஒழுங்கு, நல்ல ஆளுகையில் மக்கள் நம்பிக்கை வளர நடவடிக்கை எடுத்தல், எம்முடன் வாழும் ஏழைகள், புலம் பெயர்ந்தவர்கள்,உதவியற்றவர்கள், அலைக்கழிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிந்து, தற்கால பொருளாதார அறை கூவல்களிற்கு பதில் தரும் வகையில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

கல்வி நிர்வாக அதிகாரி, அதிபர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பம்

teacher.jpgவடக்கு, கிழக்கு உட்பட 83 தேசிய பாடசாலைகளில் நிலவும் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்கள், அதிபர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதன்படி கல்வி நிர்வாக சேவையில் தரம்1, தரம்11, தரம்111 உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர் சேவையில் தரம்1, தரம்11 அதிபர்களும் விண்ணப்பிக்கலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரிகள் தாம் விரும்பும் மூன்று பாடசாலைகளின் பெயர்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட முடியும்.

கண்டி மதீனா தேசிய பாடசாலை, புத்தளம் சாஹிரா மத்திய மகா வித்தியாலயம். மட்டக்களப்பு புனித மைக்கல் மத்திய மகா வித்தியாலயம், கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி மத்திய மகா வித்தியாலயம், அக்குறணை அல்-அஸார் மத்திய மகா வித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம், கல்முனை கார்மேல் பாதிமா தேசிய கல்லூரி, மட்டக்களப்பு வின்சன்ட் உயர் மகளிர் கல்லூரி, திருகோணமலை சென்ட் ஜோசப் கல்லூரி, ஹந்தெஸ்ஸ அல்மனார் மத்திய மகா வித்தியாலயம், மல்வானை அல் முபாரக் மத்திய மகா வித்தியாலயம், கம்பொளை சாஹிரா கல்லூரி, மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்தா மத்திய மகா வித்தியாலயம், ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயம், கல்ஹின்ன அல்மனார் மத்திய மகா வித்தியாலயம், பேருவளை அல்-ஹுமெய்சரா மத்திய மகா வித்தியாலயம், சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை, நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை, வவுனியா மடுகந்த மகா வித்தியாலயம் உள்ளிட்ட 83 பாடசாலைகளின் பெயர்களையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக 180 நாள் நிகழ்ச்சித்திட்டம் – பசில் ராஜபக்ஷ

அரசாங்கத்தின் “வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 180 நாட்கள் நிகழ்ச்சித் திட்டமொன்றை செயற்படுத்த விருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற, வடக்கு மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் கூட்டத்திலேயே அதன் தலைவர் என்ற வகையில் பசில் ராஜபக்ஷ இதை தெரிவித்திருக்கிறார்.

இந்த சந்திப்பு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“இது, தொடர்பாக கலந்து பேசவென இரண்டு சுற்று பேச்சுகள் நடைபெற்றன. வடக்கு மாகாணத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஜீவனோபாய நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்துவது, முதல் சுற்றிலும், இரண்டாவது சுற்றில், சுகாதாரம், கல்வி, பொது நிர்வாகம் மற்றும் விவசாயம் ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாணத்தை மீட்டதன் பின்னர் கிழக்கின் உதயம் திட்டத்தை முன்னெடுத்தது போல், வடக்கு மாகாணத்திற்காக ‘வடக்கின் வசந்தம்’ அமுல்படுத்தப் பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் வடக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு அரசின் ஒவ்வொரு அமைச்சுகளும் யோசனைகளையும், திட்டங்களையும் கூடிய விரைவில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த திட்டங்களின் முதற்கட்டத்தின் கீழ் 180 நாட்கள் கொண்ட உடனடி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றும், இரண்டாவது கட்டத்தின் கீழ் 2009, 2010 காலப் பகுதிக்குள் அமுல்படுத்தவென மத்தியகால நிகழ்ச்சித் திட்டமொன்றும் முன்வைக்கப்பட வேண்டுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் அந்த பிரதேசங்களுக்கான பாதுகாப்பு குறித்து, அதிக முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீளக் குடியமர்வு நடவடிக்கையின் போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட வேண்டும்

Hasan Ali M T_SLMC Gen Secஇலங் கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுவினரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.  இச் சந்திப்பு வியாழக்கிழமை இந்திய இல்லத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.எம்.பாயிஸ் மற்றும் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் பங்கு பற்றினர்.

இச் சந்திப்புத் தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி கருத்துத் தெரிவிக்கையில்; இதன்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் துரித கதியில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கு சமாந்திரமாக வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களையும் குடியேற்ற வேண்டுமென நாம் கோரினோம்.

யுத்தம் முடிந்துள்ள நிலையில் மக்கள் மன நிம்மதியுடன் வாழ அச்சமற்ற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் மற்றும் குடியமர்த்தல் மீள் கட்டமைப்புக்கு அரசியல் வேறுபாடு களையப்பட்டு சகலரும் சேர்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.  இத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள தலைமைத்துவங்களை இனம் காணப்பட வேண்டும். இதற்கு அவர்கள் சுதந்திரமான ஜனநாயக வழியில் இயற்கையான தெரிவுக்கு வழி வகுக்க வேண்டும். இதன் மூலமே ஒற்றுமையுடன் சகவாழ்வையும் ஏற்படுத்த முடியுமெனவும் தாம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இவற்றுக்கு இந்தியா பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதரக உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஷாமும் கலந்து கொண்டனர்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணாவிட்டால் மீண்டும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவர் – வண. ஸ்ரீ சுமங்கல தேரர்

“பல உயிர்களையும் சொத்துகளையும் பல கோடி ரூபா பணத்தையும் இழந்து யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் இனிமேலாவது நிரந்தர சமாதானம் மலரவேண்டுமானால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்’.

இவ்வாறு ஸ்ரீ சுமங்கல தேரர் தொடலஸ்கந்த ரிதி விகாரையில் இரு மாடிக்கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது கூறினார்.

தொடர்ந்து பேசிய வண. சுமங்கல தேரர்;

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் நாமே மீண்டும் பாதிக்கப்படுவோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அதற்கான தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் நாடு பழைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும். அதன்பிறகு எந்தவொரு நன்மையுமே ஏற்படப்போவதில்லை என்பதை சகலரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

நாட்டில் ஏனைய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப்பணிகளை இடைநிறுத்தி அந்தப்பணத்தைக் கொண்டு வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுத்து அவர்களை வாழ வைக்கவேண்டும். இவற்றை எல்லாம் செய்யாமல் விட்டால் மீண்டும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை சகலரும் அறிந்துகொள்ளவேண்டும் என்றார்.

ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினம் World Turtle Day : மே 23ம் திகதி – புன்னியாமீன்

world-turtle-day.jpg உலக ளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும். சர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் சார்ந்ததாக மாத்திரமல்லாமல் சில முக்கியத்துவம் வாய்ந்த ஜீவராசிகள்; தொடர்பாகவும் இந்த விசேட தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் 2000 ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ஆம் திகதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உடலமைப்பைக் கொண்டது. இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சில இனங்கள் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை (leatherback sea turtle) என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்வதாகக் கூறப்படுகின்றது. 

ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினமானது கடலாமைகளின் பாதுகாப்பினை வலியுறுத்தவும் அவை எதிர்நோக்கும் பல்வேறு அழிவுப் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதாக உள்ளது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை இவை என்று நம்பப்படுகின்றது. எட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய,  இலங்கை கடல் பகுதிகளில் வாழ்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடலின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும்.

நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது.

கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும். பெரிய ஆமைகளின் எடை சராசரியாக 250 – 400 கிலோ கிராம்களாகும். சில இனங்கள் 900 கிலோ வரை வளர்ந்து காணப்படும்.

கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான். இவை டொல்பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும்.

பெருந்தலை ஆமைகளின் முக்கியமான உணவு நத்தைகள், ஜெலி மீன், சிப்பி போன்றவை. இவை நத்தை போன்ற உறுதியான ஓடுகளையுடைய உயிரினங்களை உட்கொள்ளத் தகுந்தாற் போன்ற வாயமைப்புடன் இருக்கும். கடல் ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடைகளை வைத்தே மென்று தின்ன முடியும். மிகக் குறைந்த தூரத்துக்கு மட்டுமே பார்க்க முடியும். நுகரும் திறன் இவற்றுக்கு மிகவும் அதிகம்.

கடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஆமைகள் முட்டையிட நிலத்துக்கு வரும். இதற்காக சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மைல்கள்கூட நீந்தி வரும். கடலின் விளிம்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அது மணலில் பெரிய பள்ளம் தோண்டும். பின்னர் அதில் முட்டையிடும். ஆண் ஆமைகள் ஒரு முறை கடலுக்கு சென்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அங்கேதான். ஒரு ஆமை 50 இலிருந்து 200 முட்டைகள் வரை இட்டாலும் சில மட்டுமே பொரியும். முட்டைகள் கோல்ப் பந்தின் வடிவத்தில் இருக்கும். முட்டையிட்ட பின்னர் குழியை மூடிவிட்டு, கடலுக்குள் இறங்கிச் சென்றுவிடும். கடலாமைகள் அருகிவரும் ஓர் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதனால் கடலாமை முட்டைகளை எடுப்பதோ, விற்பனை செய்வதோ குற்றமாகக் கருதப்படுகிறது. முட்டைகளின் மீது படிந்திருக்கும் மணற்படுகை சூரிய வெப்பத்தினால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும். குறித்த காலத்தில் ஆமைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியேறி மணலைத் துளைத்துக்கொண்டு அவை வெளிவரும்.

முட்டை பொரிந்த பின் (60-85 நாட்கள்) ஆமைக்குட்டிகள் இரவில் கடலுக்குள் சென்றுவிடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து முழு வாழ்நாளையும் கடல் ஆமையால் வாழ முடிந்தால்  120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும். டிஸ்கவரி சானலில் ஒரு முறை முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குட்டிகள் கடலை நோக்கி விரைவதையும் அவைகளை பிடித்து தின்ன கடல் பறவைகள் வானத்திலிருந்து வட்டமிட்டுக் கீழிறங்குவதையும் ஒளிபரப்பினார்கள். கடற்கரை முழுவதும் குட்டியாக ஆமைகள். ஐந்து ஆறு நிமிடத்துக்குள் அவை கடல் நீரில் புகுந்துவிட்டால் உயிர் தப்பும். கடலுக்குள் செல்லும்வரை ஆமைக் குஞ்சுகளின் நிலை கேள்விக் குறியே.

அலுங்கு ஆமை சில காலங்களில் நச்சுத்தன்மை உள்ள கடல் பஞ்சு போன்ற மிருதுவான தாவர வகையை உண்ணும். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவியிருக்கும். இவற்றை மனிதர்கள் உண்டால் உயிருக்கே ஆபத்து.

மனிதனால் கடலாமைகள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் பிடிக்கப்படுகின்றன. இவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்காக அதிக கவனமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. இத்தினத்தின் பிரதான குறிக்கோள் கடலாமைகளுக்கு அன்பு செலுத்துவதாகும். அவற்றின் நல்வாழ்விற்கு எவ்வாறு வகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

1975முதல் செல்லப்பிராணியாக இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடலாமைகள் செல்மொனல்லா எனும் பெக்டீரியாவைக்கொண்டது. இதனால் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதாலே இது தடை செய்யப்பட்டது. நோய்களைக் கட்டுபடுத்த மற்றும் தடுக்கும் மத்திய நிலையத்தின் கணிப்பீட்டின்படி வருடா வருடம் 74000பேர் சல்மொனல்லா பக்டீரியாவால் பீடிக்கப்பட்டுவருவதுடன்,  இதில் 6வீதம் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும், வயோதிபர்களும் ஆவர்.

கடலாமைகளின் வசிப்பிடங்களைப் பாதுகாத்தல் அவை பாதைகளை குறிக்கிடும் போது அவற்றின் மேலோட்டைப் பிடித்து பாத்திரமாக அகற்றுதல் அவற்றைப் பார்த்து ரசித்தல் அவற்றின் செயல்களை அவதானித்தல் அவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு கடலாமைகளை வாங்காதிருத்தல் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கடலாமைகளை கொண்டு போய் காட்டுக்குள் போடாமலிருத்தல் போன்றவற்றை நாம் செய்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0523-world-turtle-day.html