06

06

புதுமாத்தளன் – பாதுகாப்பு வலயம்: போதியளவு உணவு அனுப்பிவைப்பு – தட்டுப்பாடில்லை என்கிறது உலக உணவுத்திட்டம்

taking-to-green-ocean.jpgபுதுமாத்தளன் பகுதியில் எஞ்சியுள்ள மக்கள் சீரான முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை யென்ற புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டை உலக உணவுத் திட்டம் நிராகரித்துள்ளது. அங்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 3,328 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை காரியாலயம் தெரிவித்தது.

புதுமாத்தளனில் உள்ள மக்களுக்கு சீரான முறையில் உணவு அனுப்பப்படுவ தில்லையெனவும், இதனால் அங்குள்ள மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் புலிகள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் அசேட் அஸ்ரத், புதுமாத்தளனுக்கு சீராக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். அரசாங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளனுக்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் எதுவித தடங்கலும் செய்யவில்லை.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் பெருமளவு உணவுப் பொருட்களை அங்கு அனுப்ப முடியாதுள்ளது. உணவுப் பொருட்கள் பெரிய கப்பலில் எடுத்துச் சென்று அவை சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு மாற்றப்பட்டு கரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறிய படகுகளில் 30 தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இவ்வாறு அனுப்பப்படுகின்றன.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கிரமமாக எடுத்துச் செல்லப்பட்டு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை எதுவும் கிடையாது எனவும் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இது வரை 674 மெற்றிக்தொன் அரிசி, 1074 மெற்றிக் தொன் கோதுமை மா, 29 மெற்றிக்தொன் மரக்கறி மற்றும் சீனி, பருப்பு, எண்ணெய், சோயா கலன், சோளம் என்பன அனுப்பப்பட்டுள்ளன. இதேவேளை நேற்று (5) கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு மருந்து வகைகள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

இலங்கை அகதிகளுக்கான அவசர உதவிகளுக்காக ஐ.நா கோரிக்கை

fily-ap.jpg இலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து தப்பியோடி வரும் மக்களின் உடனடி மனித நேயத் தேவைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை 5 கோடி டாலர்கள் அவசர உதவி கோரியுள்ளது.

இலங்கை அரசும், உதவி நிறுவனங்களும் பெருமளவில் இடம்பெயர்ந்தோர்களின் தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கொழும்பில் உள்ள ஐ நா அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த மாதம் ஏராளமானோர் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வந்ததன் காரணமாக, முகாம்களில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்து தொண்ணூறாயிரமாக உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சோனியாகாந்திக்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை

india-election.jpgஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சென்னை தீவுத்திடலில் இன்று(புதன்கிழமை) நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். சினிமா டைரக்டர் பாரதிராஜா உள்பட ஏராளமான பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் – அமைச்சர் அநுர பிரிதர்ஷன யாப்பா

20090424063601srilanka4.jpgஇடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களும் இந்நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் இதில் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஊடக தகவல்துறை,  முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக கட்டுகம்பளை தேர்தல் தொகுதி மக்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை அப்பிரதேச மக்கள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

குறிப்பிட்ட பொருட்களைக் கையேற்று உரை நிகழ்த்திய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான  குடிநீர் போத்தல்கள், பிஸ்கட், பால்மா,  அரிசி, பருப்பு, சீனி மற்றும் துணிவகைகள் போன்றவை இந்நிகழ்வின் போது கையளிக்கப்பட்டன.

இடைநிறுத்தப்பட்ட வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக பூஜை வழிபாடுகளை நடத்த ஏற்பாடு

பெரும்பான்மை யினத்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக, சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாபெரும் பூஜை வழிபாடு நடைபெறவுள்ளது.

கோயில் நிர்வாக சபையினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை அவரது அமைச்சில் திங்கட்கிழமை காலை சந்தித்தபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. சித்திரா பௌர்ணமி தினமான 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு இப்பூசை நடைபெறுவதுடன், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சௌமிய இந்து கலாசார மண்டபமும் திறந்து வைக்கப்படும்.

இவ்வைபவத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. உபதலைவர் எம். மணிமுத்து, ஏ.எம்.டி. இராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10 ஆம் திகதி வரை இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உற்சவத்தை வெசாக் காலப்பகுதியில் நடத்தக்கூடாது என சில பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதனை மீறினால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால், இக்கோயிலின் உற்சவம் இடைநிறுத்தப்பட்டது. இது குறித்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோயில் நிர்வாக சபையினரை தமது அமைச்சுக்கு வரவழைத்து நிலைமையை கேட்டறிந்து கொண்டதுடன், இது குறித்து ஆலய வழிபாட்டுச் சபையினர் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அன்றைய தினமும் அதற்கு பின்னரும் இறக்குவானை பகுதியில் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அமைச்சர் பௌத்த தலைவர்கள் மற்றும் மல்வத்த பீடாதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

புதிய திட்டங்களை விரிவுபடுத்த கூடாது: நவீன் சாவ்லா

iindias-election.jpg தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா மற்றும் தேர்தல் கமிஷனர்கள் குரேஷி, சம்பத் ஆகியோர் சென்னை வந்தனர்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் நரேஷ் குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவீன் சாவ்லா,

தேர்தலையொட்டி புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவோ அல்லது விரிவுபடுத்தவோ கூடாது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அரசியல் நோக்கத்துடன் யாரையும் கைதுசெய்ய கூடாது என்றும் வலியுறுத்தினார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்று கூறினார்.

இலங்கையில் ஐ.நா.புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா – இரு தரப்புக்குமிடையே இராஜதந்திரப் போர்

_sri_lanka_sat_any.gif ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருப்பதையடுத்து இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான இராஜதந்திரப் போர் இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கின்றது.

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செய்மதி ஒளிப்படங்கள் சில ஐ.நா.வினால் வெளியிடப்பட்டதையடுத்தே இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எனக்கூறி செய்மதி ஒளிப்படங்கள் சிலவற்றை ஐ.நா.சபை கடந்த வாரத்தில் கசிய விட்டதையடுத்து இலங்கை அரசாங்கம் கடும் சீற்றமடைந்திருக்கின்றது.  இந்தச் செயற்பாட்டின் மூலமாக ஐ.நா.சபை தன்னுடைய வழமையான செயற்பாடுகளின் எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கின்றது என்ற குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கின்றது.

உறுப்பு நாடு ஒன்றின் தகவல்களை இரகசியமான முறையில் பெற்று, அந்த நாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அந்தத் தகவல்களை பின்னர் ஏனைய நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் கசிய விடுவதற்கான உரிமை ஐ.நா.வுக்கு உள்ளதா என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  “ஐ.நா.வின் ஒரு பிரிவோ அல்லது ஐ.நா.வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தனிநபரோ உறுப்பு நாடு ஒன்றில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சேகரித்து பின்னர் அவற்றைத் தெரிவு செய்யப்பட்ட சில தூதரகங்களுக்கு கசியவிடுவது அல்லது இணையத்தளத்தில் வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார்.  உலகில் போர்ப்பகுதிகளாக பல இடங்கள் உள்ளன எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கோஹன. இந்த இடங்களில் எல்லாம் உளவு பார்ப்பதற்கான உத்தேசம் ஐ.நா.சபைக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்துக்குச் சங்கடமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த செய்மதிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிடும் கோஹன, இவ்வாறான நடவடிக்கை சர்வதேச உறவுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதுடன், சக்தியற்ற மூன்றாம் உலக நாடகளுக்கு விடுக்கப்படும் ஒரு மிரட்டலாகவுமே கருதவேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.