01

01

தொழிலாளர் ஐக்கியம் பிளவு படாமலிருக்க இம் மேதினத்தில் உறுதியெடுப்போம் -ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம்

may-day.jpgஉலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உயிர்ப்புத் தினமும் உரிமைத் தினமுமான உன்னத மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் இன்னல்களையும் எதிர்ப்புகளையும் கண்டுவரும் காலகட்டத்திலேயே மீண்டுமொரு மே தினம் இன்று வந்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் ஏ.பி.கணபதிப்பிள்ளை விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

திசைமாறிப்போகும் மேதினம் களியாட்டங்களுக்கு கைகொடுக்கின்றதே தவிர, தொழிலாளரின் அவஸ்தைகளை தூரவைத்தே பார்க்கின்றது. உழைப்புக்கேற்ற ஊதியமில்லாத நிலையில், விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வும் அமைதியற்ற சூழலும் தொழிலாளர் நசுக்கப்படுவதை நிரூபணமாக்கிறது. அரசியல்மயப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே தொழிலாளரின் ஒற்றுமை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன. தொழிலாளரின் சீர்குலைவானது அவர்களைச் சுரண்டும் கம்பனிகாரர்களுக்கு மாத்திரமல்லாமல் அரசுக்கும் கூட இலாபமாக அமைகின்றது.

கூட்டு ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிந்து அடுத்த கட்ட நகர்வு என்னவென்று பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், நியாயமான சம்பள உயர்வு கிடைக்கவென போராடியும் வீண்வாத பிரதிவாதங்களால் தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் ஐக்கியம் பிளவுபடாமல் போவதையும் தடுத்து நிறுத்த இம் மே தினத்தில் உறுதிபூணுவோமாக. தொழிலாளர் வர்க்கத்திற்கும் அவர்களது போராட்டத்திற்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள்.

ஷெல் – 191/=, லாஃப் – 238/= சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.  “ஷெல்” சமையல் எரிவாயுவின் விலை 191 ரூபாவாலும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை 238 ருபாவாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன்படி 1309 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட “ஷெல்” சமையல் எரிவாயு நேற்று நள்ளிரவு முதல் 1500 ருபாவுக்கும் 1069 ரூபாவுக்கு விற்கப்பட்ட “லாப்” சமையல் எரிவாயு 1307 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது. உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றமே இவ் அதிகரிப்புக்கு காரணமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

சமையல் எரிவாயு விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஒரு வருடத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒர தடவையாக ஆறு முறை அதன் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதனடிப்படையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையான காலப் பகுதியில் “ஷெல்” மற்றும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை அடுத்தடுத்து குறைவடைந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 358 அமெரிக்க டொலர்களாகவிருந்த ஒரு மெற்றிக் தொன் உலக சமையல் எரிவாயுவின் விலை தற்போது 480 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேமாத்துக்கான விலைதிருத்தத்தில் தவிர்க்க முடியாத அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

“ஷெல்” நிறுவனம் 337 ரூபா வரையிலும் “லாப்” நிறுவனம் 250 ரூபா வரையிலும் விலையதிகரிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் பாவனையாளர்கள் நன்மை கருதி முறையே 191 ரூபா மற்றும் 238 ரூபா விலையதிகரிப்பை மேற்கொள்ளவே நுகர்வோர் அதிகார சபை அனுமதித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சீனி, பருப்பு ஆகியவை ஆகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தன.

அதற்கான சுற்று நிருபமும் நேற்று நள்ளிரவு முதல் காலாவதியாகியிருப்பதால் மீண்டும் அவை பழைய விலைக்கே விற்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். பால்மா, சீனி, பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்து விநியோகிப்பதற்காக உலகச் சந்தையில் ஆகக் குறைந்த விலைகளில் அவற்றை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.