சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. “ஷெல்” சமையல் எரிவாயுவின் விலை 191 ரூபாவாலும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை 238 ருபாவாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன்படி 1309 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட “ஷெல்” சமையல் எரிவாயு நேற்று நள்ளிரவு முதல் 1500 ருபாவுக்கும் 1069 ரூபாவுக்கு விற்கப்பட்ட “லாப்” சமையல் எரிவாயு 1307 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது. உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றமே இவ் அதிகரிப்புக்கு காரணமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.
சமையல் எரிவாயு விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஒரு வருடத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒர தடவையாக ஆறு முறை அதன் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதனடிப்படையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையான காலப் பகுதியில் “ஷெல்” மற்றும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை அடுத்தடுத்து குறைவடைந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 358 அமெரிக்க டொலர்களாகவிருந்த ஒரு மெற்றிக் தொன் உலக சமையல் எரிவாயுவின் விலை தற்போது 480 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேமாத்துக்கான விலைதிருத்தத்தில் தவிர்க்க முடியாத அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
“ஷெல்” நிறுவனம் 337 ரூபா வரையிலும் “லாப்” நிறுவனம் 250 ரூபா வரையிலும் விலையதிகரிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் பாவனையாளர்கள் நன்மை கருதி முறையே 191 ரூபா மற்றும் 238 ரூபா விலையதிகரிப்பை மேற்கொள்ளவே நுகர்வோர் அதிகார சபை அனுமதித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சீனி, பருப்பு ஆகியவை ஆகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தன.
அதற்கான சுற்று நிருபமும் நேற்று நள்ளிரவு முதல் காலாவதியாகியிருப்பதால் மீண்டும் அவை பழைய விலைக்கே விற்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். பால்மா, சீனி, பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்து விநியோகிப்பதற்காக உலகச் சந்தையில் ஆகக் குறைந்த விலைகளில் அவற்றை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.