May

May

பாதுகாப்பு வலயத்திற்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பின் பாதுகாப்பு உத்தரவாதம் தேவை: ஐ.சி.ஆர்.சி

medical_lorry.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேதச மக்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவது மிகவும் கடினமான பிரச்சினையாக உள்ளது. “5000 தொன் உணவை அனுப்பவதற்கு அரசாங்கம் தயாராகவிருந்தாலும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அதனை எடுத்துச் செல்ல ஒத்துழைக்கவில்லை” என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பாகவே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என தனது கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் நிம்மதியும் சுதந்திரமும் கிடைக்கும் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpg“சரியான வாழ்க்கை வழிமுறையானது புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனுகூலமாக அமைவதனாலாகும், நான்கு தீய குணங்களில் இருந்து விடுபட்டு பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினசெய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் கூறியதாவது, புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறு தல், இறப்பு, முதலானவற்றை நினைவுகூரும் வெசாக் பண்டிகையை இம்முறையும் அரச அனுசரணையில் கெளரவத்துடனும், தூய்மையுடனும், கொண்டாடக் கிடைத்துள்ளதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன். மேலான பெளத்த போதனைகள் எமக்கு சரியான வாழ்க்கை வழிமுறையைக் காட்டித்தருகின்றன. எமது அரச கொள்கைகளின் பிரகாரமும் அம் மதத்தை பெருமதித்தே செயலாற்றப்படுகின்றன.

இதற்குக் காரணம் சரியான வாழ்க்கை வழிமுறையானது புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனுகூலமாக அமைவதனாலாகும். நான்கு தீய குணங்களில் இருந்து விடுபட்டு பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

“ஜயங் வேறங் பசவதி-துக்கங் சேதி பறாஜினோ
உபசன்னோ சுகங் சேதி- ஹித்வா ஜய பறாஜயங்”

“வெற்றியடைபவர், தோல்வியடைவோரின் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்துகிறார். தோல்வியடைபவர் துக்கத்துடன் வாழ்கின்றார். நடுநிலையாக செயற்படும் சாந்த குணமுடையவர் வெற்றி தோல்வியில் இருந்து விடுபட்டு சுகமாக வாழ்வார்” என புனித பெளத்த போதனைகள் குறிப்பிடுகின்றன.

தீவிரவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு குரோதமில்லாது எம்மை மனிதாபிமான அடிப்படையில் பலப்படுத்தியதும் புனித பெளத்தத்தைக் கடைப்பிடித்துவருவதனாலேயாகும். எம்மை குரோதத்துடன் நோக்கிய எதிரிகளை வெற்றிகொண்டதன் பின்னர் அன்புடன் செயலாற்றுவதற்கு வழிகாட்டியதும் எமது சமய ஒழுக்கநெறிகளாகும்.

தீவிரவாதத்தின் மூலம் இலட்சக்கணக்கான எமது சகோதர மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தானம் வழங்குவதும், நல்ல வார்த்தைகள் மூலம் ஆறுதல் கூறுவதும், சமத்துவமாகக் கவனிப்பதும் இந்த புனித வெசாக் காலத்தில் நன்மை பயக்கக்கூடிய வழிமுறை என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.

புனித பெளத்த போதனைகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே எமது இலட்சியமாக இருக்கவேண்டும். இந்த வெசாக் காலம் அதற்கு வழிவகுக்கும். அதன் பிரகாரம் எமது வீரத்தைப் பயன்படுத்தி தோல்வியடையச் செய்யவேண்டிய எதிரிகளாக இருப்பது, பேராசை, பாகுபாடு, மடமை என்பவையாகும். பெளத்த கொள்கையை மதிக்கும் நம் எல்லோரினதும் எதிரிகள் இவையேயாகும்.

நாம் வெற்றி கொள்ளவேண்டியது அன்பு, கருணை, காருண்ணியம் என்பவற்றையேயாகும். அப்போது தோல்வியும் இல்லை, பொறாமையும், குரோதமும் இல்லை. நாம் அந்த செம்மையான இலட்சியப் பாதையை நோக்கி அணி திரள்வோமாக. உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இவ்வாறு ஜனாதிபதி தனது வெசாக் தினத்தையொட்டிய ஆசிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மன்னார் – பூநகரி வீதி புனரமைப்பு

sri-lankan-road.jpgமன்னார் – பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் 83 கிலோமீற்றர் நீளமான ஏ-32 பிரதான வீதியை மூவாயிரம் மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிரி தெரிவித்தார்.

எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள முதற்கட்ட பணியின்போது 48 கிலோ மீற்றர் நீளமான வீதியே புனரமைக்கப்படவுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்டதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் எஞ்சியுள்ள வீதியை வெகுவிரைவில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டிற்கு இலகுவாக செல்லும் 280 மீற்றர் நீளத்தைக் கொண்ட சங்குப்பிட்டி பாலம் நிர்மாணிக்கும் பயணிகள் இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வட மாகாணத்தில் வெகு விரைவில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏ-32 பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள அதே சமயம், யாழ் – கண்டி- கொழும்பு ஏ-9 பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகளும் 12 கிலோ மீற்றர் நீளமான சிலாவத்துறை- முருங்கன் வீதி, 40 கிலோ மீற்றர் நீளமான புத்தளம் – மன்னார் வீதியின் புனரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், மேலும் இந்தப் பகுதியிலுள்ள வீதிகளும், பாலங்களும் புனரமைப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிறி மேலும் தெரிவித்தார்.

செல்வி ஜெயலலிதாவின் தமிழீழம் தொடர்பான நிலைப்பாட்டிற்கு பிரித்தானியத் தமிழர் வரவேற்பு

british_tamil_forum.jpg இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்கின்றனர். அத்துடன் இது எம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் 60 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் முதலமைச்சராக இரண்டு தடவைகள் இருந்த தழிழ்த் தலைவரின் இந்தக் கூற்று எமது பிரச்சனை தொடர்பாக வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, மிகமுக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.

தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட காலமாக உணர்வுபூர்வமாக ஆதரவளித்து வரும் தமிழகத்தின் தமிழ் தலைவர்களுக்கு எமது நன்றியறிதலை வெளிப்படுத்தும் இதேவேளை, தமிழரின் போராட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ள இந்த தருணத்தில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் வெளியிட்ட இந்த கருத்து எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இந்தநிலையில் சர்வதேச அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியின் இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுகின்றது.

முதலாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. : ஜெயபாலன் & புன்னியாமீன்

01.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரி நிலையங்களினுள்ளே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஏப்ரல் 01ஆம் திகதி புள்ளிவிபரப்படி மேற்படி நலன்புரி நிலையங்களில் 13 பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி சில கல்வி செயற்பாட்டு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்துள்ளது.

செட்டிக்குளம் ம.வித்தியாலயத்தில் இயங்கும் விசேட கல்வி அலுவலகத்தின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின் கீழ் நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் கல்வி பயிலும் 1057 மாணவர்களுக்கு முதல் கட்டமாக பின்வரும் மாதிரிவினாத்தாள்களும்,  வழிகாட்டிப் புத்தகங்களும் திரு. த. மேகநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Letter_01_Mehanathan_06May09

Letter_02_Mehanathan_06May09

மாதிரி வினாத்தாள் இலக்கம் 01 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 02 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 03 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 04 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 05 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 06 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 07 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 08 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 09 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 10 – 1100 பிரதிகள்

இவ்வினாத்தாள்கள் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு பரீட்சையாக நடத்தப்பட்டு மாணவர்கள் வழிகாட்டப்படுகின்றனர்.

மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 01 எனும் நூலின் 1100 பிரதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி, பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி, காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி.

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 20 மாதிரி வினாத்தாள்களையும் (இலக்கம் 11 – 30 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன்,  தரம் 06,07,08,09,10,11 மாணவர்களுக்காக வேண்டி ஒரு தொகுதி செயல் நூல்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாத இறுதியில் வன்னி பிரதேசத்திலிருந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அதிகளவில் மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இந்தநிலையங்களில் தரம் 5 இல் பயிலும் மாணவர்கள் மாத்திரம் 1860 பேர் கடந்த இரண்டு வாரத்துக்குள் இடம் பெயர்ந்துள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின்  கற்றல் நடவடிக்கைகளில் உதவுவது  குறித்தும்  சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் ஆலோசித்து வருகின்றது.

02.jpg 03.jpg 04.jpg

புலிகளை தடை செய்த நாடுகள் தமது சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டன – விமல் வீரவன்ச

parliament-of-sri-lanka.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்த உலக நாடுகள் பலவும், புலிகளுக்கு எதிராக தத்தமது சட்டங்களை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி.தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இலங்கை விடயத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்கென சபைக்கு சமர்ப்பித்து பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “படையினர் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில் சர்வதேச சமூகம் தற்போது அதை தடுத்து நிறுத்தும் வகையில் அழுத்தங்களை கொடுக்கின்றது. உதவிகளை நிறுத்துவோமென கூறியும், போர் குற்றங்களை சுமத்தியும் விடுதலைப்புலித் தலைவர்களை இவர்கள் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

நாம் உண்மையில் இந்த நாட்டை ஆதரிக்கின்றோமென்றால், இந் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்திற்கு ஒன்றுபட்ட செய்தி ஒன்றை கூறவேண்டும். அதாவது, இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள தடை ஏற்படுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு இதை முடிவுக்கு கொண்டுவர இடமளித்து ஒதுங்கியிருக்குமாறு நாம் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்துக்கு கூறவேண்டும். எனினும், இந்த தீர்க்கமான தருணத்திலும் கூட துரதிர்ஷ்டவசமாக எமக்கு அந்த ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

உலகில் பல நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளன. எனினும் தடை செய்யப்பட்ட நாடுகளிலேயே இன்று புலிக் கொடியுடன் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமது சட்டங்களை உரிய முறையில் அமுல் படுத்த தவறிவிட்டன. நோர்வே அரசாங்கமோ அங்குள்ள இலங்கை தூதுவராலயத்தை புலி ஆதரவாளர்கள் தாக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே இவையனைத்தையும் நாம் கண்டிக்க வேண்டும்’ என்றார்.

சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கிவிட்டனர் புலிகள்: இலங்கை ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgஇலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார்.

எந்தவிதமான வழியும் இல்லாத நிலையில், ஒரு இறுதி நடவடிக்கையாகவே விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பேசுகையில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  முந்தைய சமரச முயற்சிகளை விடுதலைப் புலிகள் நகைப்புக்கிடமானவையாக மாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்கும் வகையில், மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தம் ஒன்று அமலுக்கு வரவேண்டும் என்று கோரும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்த கருத்து வந்துள்ளது.

ரூ. 8 இலட்சம் பெறுமதியான உணவு பொருட்கள் பிரதமர் அலுவலகத்தினால் கையளிப்பு

Wanni_War_IDPsவவுனியா காமினி வித்யாலய நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் சார்பில் உதவிச் செயலாளர் மங்கள திஸ்ஸ தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று சந்தித்ததோடு 8 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் கையளித்தது. வவுனியா மாவட்ட அராசங்க அதிபர் திருமதி சார்ஸ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேற்படி பொருட்களைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வு வவுனியா இடர் முகாமைத்துவ அலுவலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.

பிரதமர் அலுவலகத்தின் சமூகப் பணிப் பிரிவு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் மேற்படி நலன்புரி நிலையத்தைப் பார்வையிடுவதற்கென ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். முகாமிலுள்ள மக்களுக்கான மதிய உணவினையும் வழங்கினர்.

வவுனியா காமினி மகா வித்தியாலய நலன்புரி நிலயைத்தில் 781 குடும்பங்களைச் சேர்ந்த 1820 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை வவுனியா மாவட்டச் செயலகம் பெற்றுக்கொடுப்பதுடன் சுகாதாரம், தொலைத்தொடர்பு சேவைகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று மேற்படி நலன்புரி நிலையத்தில் வெசாக் சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கொழும்பிலிருந்து பிரபல பாடகர்களான சூரியகுமார் முத்தழகு, கலாவதி சின்னச்சாமி, மேர்ஸி எதிரிசிங்க ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் தமிழ், சிங்களப் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.

நலன்புரி நிலையத்தில் உள்ள மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கம் தமக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக் கொடுத்ததற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன் புதுமாத்தளன் பகுதி உட்பட ஏனைய பகுதிகளில் அகப்பட்டுள்ள தமது உறவினர்களை விரைவாகத் தம்மோடு சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை பரிசீலிக்கிறார் ஐ.நா. தலைமைச் செயலர்

ban_ki_moon_.jpgபோர் நடக்கும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்பதா என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்.

“உயிர்கள் பலியாவதைத் தடுக்க முடியுமானால் அவர் அங்கு செல்வார்” என்று பான் கீ மூன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார். போர் பகுதிகளில் இருந்து தப்பி வந்துள்ள 2 லட்சம் மக்கள் தங்கியுள்ள முகாம்களை வந்து நேரடியாக பார்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரை தற்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைத்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்தி, அங்கு மோதல் பகுதியில் திண்டாடும் மக்களுக்கு உணவு மற்றும் உதவிகள் செல்வததற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை திரும்பத் திரும்ப பான் கி மூன் கோரி வந்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் சேர்த்து போர் முனையில் ஓர் மூலையில் கொண்டு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐம்பதிதாயிரம் பேர் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படும் மக்களை அங்கிருந்து வெளியேற விடுமாறு பான் கீ மூன் அவர்கள் விடுதலைப்புலிகளையும் கேட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் சமைத்து உண்ண வசதி செய்யப்படுகிறது

vavuniyatents.jpg
வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் தாமே சமைத்து உண்ணக்கூடிய புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அனர்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் யூ எல் எம் கால்தீன் தெரிவித்துள்ளார்.

இதற்கான வசதிகள் அனைத்தும் இந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த 20ம் திகதிக்கு பின்னர் வந்த பொதுமக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமைத்த உணவை வழங்கும் போது பலசிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் இதனை தவிர்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.