May

May

இலங்கையை தண்டிக்க தேவையில்லை பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் இணக்கம்

imf-international-monetary-fund.jpgஐ.நா சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் டொலர் கடன் உதவியை தடுத்துவைக்கும் நடவடிக்கையோ அல்லது வேறு நடவடிக்கைகளையோ மேற்கொண்டு இலங்கையை தண்டிக்க தேவையில்லை என்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உத்தியோகப்பற்றற்ற முறையில் அமர்வொன்று இடம்பெற்ற பின் செய்தியாளர்களிடம் இதனை பாதுகாப்பு சபையின் தலைவரும் மெக்ஸிக்கோவின் உறுப்பினருமான கிளாடி ஹெல்லர் கூறியதாக ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

யசூசி அகாசி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

akashi2.jpgஇலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (02.05.2009) காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புலிகளின் பிடியில் இருந்து வந்த மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைகுறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறுமி தினுஷிக்கா சடலமாக மீட்பு

thinu.jpgமட்டக்களப்பு நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மமான காணாமல் போலிருந்த கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8)  இன்று காலை கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

சடலம் இவரது தாயாரால்; அடையாளம் காணப்பட்டு தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது தந்தை எஸ். சதீஸ்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனந்தெரியாதோரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல போயிருந்தார். இதே பாணியில் கடந்த மார்ச் 18ஆம் திகதி திருகோணமலை சென் மேரிஸ் வித்தியாலய முதலாந்தர மாணவி ஜூட் வர்ஷா காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கிழக்கில் கடத்தப்பட்ட மாணவர்களை விடுவித்து சுமுகநிலை தோன்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் – கூட்டமைப்பு எம்.பி.க்கள் கோரிக்கை

கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டு, சிவில் நிர்வாகம் நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் கூறும் இவ்வேளையில் மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் காணாமல் போய் இருக்கும் சம்பவமானது பலத்த சந்தேகத்தையும், பேரதிர்ச்சியினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட மாணவர்கள் மனிதாபிமான முறையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட எம்.பி.க்களான த.கனகசபை, செல்வி.தங்கேஸ்வரி, பா.அரியநேத்திரன், எஸ்.ஜெயானந்த மூர்த்தி ஆகியோர் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்குத் தமது தாத்தாவுடன் பாடசாலைக்குச் சென்ற எட்டு வயது மாணவியான செல்வி சதீஸ்குமார் தனுஷா இதுவரை வீடுதிரும்பவில்லை. இவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்த மாணவியின் தந்தையான சதீஸ்குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இனம் தெரியாத ஆயுதக்குழுவினர் விசாரணைக்கென அழைத்துச் சென்று இதுவரை அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாத நிலையில் ஏக்கத்துடன் இரண்டு வருடங்களாகத் தனது அப்பாவைக் காணாமல் அல்லல் அடைந்திருந்த இம்மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் வள்ளுவன் மதிசுதன் (வயது 15) ஆகியோரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது எனவும் அறியமுடியாத நிலையுள்ளது.

இவ்வாறு மட்டக்களப்பில் மர்மமான முறையில் மாணவர்கள் காணாமல் போயிருப்பதால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதுடன், பாடசாலைகளுக்கும், பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கும் மாணவர்களை கல்வி கற்க அனுப்ப முடியாத பதற்ற நிலை தோன்றி இருப்பதைக் காணமுடிகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி புனித மரியாள் கல்லூரியில் கல்விபயிலும் ஆறுவயது மாணவியான யூட் ரெஜிஸ்ரா என்பவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு சரியாக 41 நாட்களின் பின் மட்டக்களப்பில் இவ்வாறு மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பது மீண்டும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.

உடைமை இழந்து, உயிர் இழந்து, உரிமை இழந்து தவிக்கும் தமிழ் சமூகம் எது இழந்தாலும் கல்வியை இழக்காமல் தொடர்ந்து கல்விக்காக உழைத்துவரும் வேளையில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் இன்று கல்வியையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் மாணவர்கள் காணாமல் போன செய்தி கேட்டவுடன் அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை, தனியார் கல்வி நிலையங்களுக்கும் மாணவர்களை அனுப்பப் பெற்றோர் அஞ்சுகின்றனர்.

ஒட்டு மொத்தமாக மாணவர் தொடக்கம் வயோதிபர் வரை சுதந்திரமாக நடமாட முடியாத நிலை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தோன்றி இருப்பதை இம்மாணவர்களின் கடத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, கடத்தப்பட்ட இம்மாணவனை உடனடியாக மனிதாபிமான முறையில் விடுதலை செய்யவேண்டுமெனவும், இது தொடர்பாக சட்டத்தையும் ஒழுங்கையும் கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அரசு இம்மாணவர்கள் கடத்தலுக்குப் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் இவ்வாறு செய்வதன் மூலமே தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தோன்றியுள்ள அச்சநிலை தணியும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

Wanni_Warமிகக் கொடிய மனித அவலத்தில் இருந்து மீண்டு தொடர்ந்தும் துயர்மிகு வாழ்வை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களுக்கு முடிந்த அளவு உதவிகளை மேற்கொள்வதற்கான சந்திப்பு ஒன்றினை தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் ஏற்பாடு செய்துள்ளனர். இச்சந்திப்பில் முக்கிய அம்சமாக வன்னியில் ஏற்பட்ட மனித அவலத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட உள்ளது. ஏற்கனவே ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் தனித்தனியாக முன்னெடுக்க முற்பட்ட உதவி நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளவும் எவ்வாறு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் கலந்துரையாடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் இணைந்து நடாத்தும் குறும்படக் காட்சிப்படுத்தலின் 5வது காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து இச்சந்திப்பு சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கலந்துரையாடலில் முக்கியமாக உடனடி மற்றும் நீண்டகால உதவி நடவடிக்கைகள், உதவ முன்வருபவர்களை நேரடியாக உதவித் திட்டங்களில் இணைப்பது, அனைத்து உதவி நடவடிக்கைகளிலும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பது இதன் மூலம் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது என்பன பற்றியும் ஆராயப்பட உள்ளது. குறிப்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதால் காத்திரமான உதவித் திட்டங்களை செயற்படுத்த முடியும்.

மே 2 குறும்படக் காட்சி நிகழ்வில் சந்திரியின் கதை மெமறிஸ் ஒப் பாஸ்ற் ஆகிய இரு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஜானகி விஸ்வநாதனின் சந்திரியின் கதை சாதிய ரீதியான சமூக ஒடுக்குமுறையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குறும்படம். மெமறிஸ் ஒப் பாஸ்ற் தேம்ஸ்வலி பல்கழைக்கழக மாணவர்களின் தயாரிப்பு. இவற்றுடன் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட துறூத வின்டோ – யன்னலினூடாக என்ற ஆர் புதியவனின் குறும்படமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சந்திப்பு விபரங்கள்:

6.30 pm on 2nd of May 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு யசூசி அகாஸி நேற்று நேரில் விஜயம்

akasi-vau.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள், உதவிகள் குறித்து ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காஸி பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை ஜப்பான் அரசு தொடர்ந்தும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

வவுனியா கதிர்காமர், அருணாசலம் நிவாரணக் கிராமங்களுக்கு ஜப்பானின் விசேட தூதுவர் நேற்று விஜயம் செய்த போது மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார். வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் நிவாரணக் கிராமங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும் விளக்கமளித்தார்.

அரசாங்கம் இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கிவரும் சுகாதாரம் மற்றும் கல்வி, நிவாரணம், தங்குமிட வசதிகள் குறித்து அதி கூடிய கவனத்தை ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

விசேட தூதுவர் யசூசி அகாசி மேலும் கூறியதாவது:- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்களுக்கு அரசாங்கம் செய்து வரும் பணிகளைப் பார்க்கின்ற போது அவர்களை பாராட்டவேண்டும்.

இம் மக்களின் நலனோம்பும் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை ஜனாதிபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் கூடிய கவனம் எடுத்து செயற்பட்டு வருகின்றமை வெகுவாக பாராட்டுக்குரியது. இலங்கையில் சமாதானம் ஏற்பட எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் அரசாங்கத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை ஜப்பான் அரசாங்கமும், இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகமும் பெற்றுக் கொடுக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸில் பெண்புலி உறுப்பினர் சரண்

ltte_.jpgகஞ்சி குடிச்சாறு பிரதேசத்தில் விடுதலை புலி இயக்கத்தில் உயர் பதவியினை வகித்து வந்ததாக கூறப்படும் பெண் ஒருவர் நேற்று (30) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அக்கரைப்பற்று கண்ணகி புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.

கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் நீண்டகாலமாக விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றியுள்ளதுடன் உயர் பதவிகளையும் வகித்து வந்துள்ள இவர் செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளின் உதவியுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவரிடமிருந்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளை அடுத்து அரச புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்பு வலயப் பகுதியில் எறிகணைத் தாக்குதலைக் காட்டும் செய்மதிப் படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன

_sri_lanka_sat_any.gifஇலங்கையின் வடகிழக்கே மோதல் நடக்கும் பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக இலங்கை அரசால் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எறிகணை தாக்குதல்களும் குண்டுத் தாக்குதல்களும் நடந்திருப்பதை காட்டக்கூடிய செய்மதித் தொலைக்காட்சிப் படங்கள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்தாக செய்தி வெளியிட்டுள்ளது

இலங்கை ராணுத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிய கடற்கரைபிரதேசத்தில் அடைபட்டு இருப்பதை, ஐநா மன்றத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படங்கள் காட்டுகின்றன.

இந்த எறிகணை மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு ராணுவம் பொறுப்பல்ல என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது. இது குறித்து விடுதலைப்புலிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.பாதுகாப்பு வலையப்பகுதிக்குள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சுடவேண்டாம் என்று ஐநா மன்றம் இலங்கை அரசை தொடர்ந்து கேட்டுக்கொண்டுவருகிறது.

இராணுவ இணையம் -நேற்றுப் பிற்பகலில் இருந்து மீண்டும் இயக்கம்.

army-crest.jpgபுலிகள் இயக்கத்தின் கணனி நிழல் வெளிப் பயங்கரவாதம் இராணுவ இணையத் தளத்தில் ஊடுருவியிருப்பதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான Army.lk இணையத்தை புலிகள் இயக்கத்தினரோ அல்லது அவர்களுக்குச் சார்பானவர்களோ சட்ட விரோதமாகத் துண்டித்துள்ளதுடன், சில கொடூரமான படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். புலிகளின் இந்தப் புதிய வடிவத்திலான பயங்கரவாதக் குற்றச் செயலுக்கு எதிராக சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்ப வழக்குத் தொடர முடியுமென்றும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இராணுவ இணையத் தளத்தைக் கூடுதலானோர் பார்வையிட்டு வருவதால், புலிகளுக்கும் அவர்களின் ஊது குழல்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புலிகளின் பயங்கரவாதத்திற்குப் பின்னால் உள்ள பல உண்மைகள் வெளிவந்ததுடன், அவர்களின் கொடூரச் செயல்களும் அம்பலத்துக்கு வந்தன. இதன் காரணமாக அவர்கள் நிழல்வெளிப் பயங்கரவாதத்தை மேற்கொண்டுள்ளார்களென்று தெரிவித்துள்ள பிரிகேடியர் நாணயக்கார, இராணுவ இணையத் தளத்தை வழமைபோன்று இயங்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இணையத்தின் ஆசிரியர் பீடம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய www. Army.lk இணையத்தளம் நேற்றுப் பிற்பகலில் இருந்து வழமைபோன்று இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மோதல் வலயத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்ற “முன்னுரிமை’ அவசியம் – நியூயோர்க்கில் ஹோம்ஸ்

john_holmes.jpgமோதல் வலயத்தில் தற்போதும் 50 ஆயிரம் பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் சாத்தியமான அளவுக்கு அவர்களை வெளியே கொண்டுவருவது அவசியம் என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான மோதல் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அவர் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபின் நியூயோர்க் திரும்பியிருக்கும் ஜோன்ஹோம்ஸ் செய்தியாளர்கள் மத்தியில் புதன்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இடம்பெறும் மோதலால் இந்த மக்கள் பாரிய அபாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  ஷெல் வீச்சு, சூடுகளால் மாத்திரமல்லாமல் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளும் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து திரும்பியிருக்கும் ஹோம்ஸ் “ஏமாற்றம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருக்கிறது. அவர் பாதுகாப்புச்சபைக்கு அறிக்கையிட வேண்டுமென சபையின் பல உறுப்பினர்கள் கருதுவதாகவும் ஆனால், நேற்று வியாழக்கிழமை நிகழ்ச்சி நிரலில் சைபிரஸ் விவகாரமே உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை இந்த விடயம் குறித்து பாதுகாப்புச் சபையில் அறிக்கையிடுவதற்கு சீனா எதிர்ப்பு காட்டியுள்ளதாக தகவலறிந்த உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. ஆயினும், ஏனைய விடயங்களுடன் இலங்கை விவகாரம் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிக்கை சமர்பிக்கப்படும் இடம் குறித்து சீனா ஆட்சேபனை தெரிவித்திருப்பதாகவும் அதனால், ஐ.நா. தலைமையக அடித்தளத்தில் இலங்கை விடயம் குறித்து ஹோம்ஸ் அறிக்கை சமர்ப்பிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் மிகவிரைவில் அதிஉச்ச நன்மைகளை அடைவர் – முசலியில் அமைச்சர் முரளிதரன்

flee0009.jpgபடையினரால் மீட்டெடுக்கப்பட்ட வடபகுதியும், அங்குள்ள மக்களும் வெகு விரைவில் உச்சக்கட்ட நன்மைகளை அடைவார்கள். இதற்கான சகல நடவடிக்கை களையும் அரசாங்கம் முன் னெடுத்துள்ளது என்று அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வெகுவிரைவில் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், கடந்த 25 வருடங்களாக தலைநகருடன் எந்த தொடர்புகளும் இல்லாமலிருந்த எமது மக்கள் மீட்டெடுக்கப்பட்டதன் மூலம் சிறந்த பலன்களை அடைவர் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவேரியர்புரம் கிராமசேவைப் பிரிவில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 409 பேர் நேற்றுமுன்திம் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்க்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தகவல் தருகையில்:-

பிரபாகரன் தனது சொந்த நலனுக்காகவும், தனது பாதுகாப்புக்காகவும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொது மக்களை பணயமாக வைத்திருந்ததை அனைவரும் கண்டோம். எஞ்சியுள்ள மக்களையும் எமது படைவீரர்கள் வெகுவிரைவில் மீட்டெடுப்பார்கள். நீண்டகால கொடிய யுத்தத்திலிருந்து நாங்கள் தற்பொழுது மீண்டு வந்துள்ளோம்.

நிச்சயமாக யுத்தத்தினால் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. எனவே யுத்தத்தை கைவிட்டு சிறந்த அரசியல் தீர்வு ஒன்றின் மூலம்எமது மக்களுக்கு தீர்வுகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொடுப்போம் என்று அன்று புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நானும் சிலரும் ஆலோசனைகளை முன்வைத்தோம். இதற்காக கடுமையாக முயற்சித்து பார்த்தோம். அன்று எமது கருத்தை மறுத்தார். ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையாவது பெற்றுக்கொடுக்க முயற்சித்தோம். ஆனால் அதனையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை.  யுத்த வெறியிலேயே அவர் இருந்தார். ஆனால் இதனால் பாரிய அழிவையே சந்திக்க நேரிடும் என்று கூறிவிட்டு நானும் எனது சகாக்களும் வெளியேறினோம்.

பிரபாகரன் அன்று அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று வன்னி மக்களை கொடுமையிலிருந்து பாதுகாத்திருக்க முடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். எனவேதான் கிளிநொச்சி நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். படையினரின் மனோ வலிமையை மேம்படுத்துவதுடன் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

வாகரைக்கு இப்போது சென்று பார்த்தால் அங்கு யுத்தம் நடைபெற்றதற்குரிய எந்த தடையமும் இல்லை. ஜனாதிபதியினதும், பசில் ராஜபக்ஷ எம்.பி.யினதும் வழிகாட்டல்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே நிலைமை வெகுவிரைவில் வடக்கிலும் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.