May

May

புல்மோட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோரில் ஒரு பகுதியினர் தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றம்

icrc.jpgபுல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து தம்புள்ள வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களின் உதவிக்கென வந்த 66 பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.  புதன் 28 பேரும் செவ்வாய் 38 பேரும் இவ்வாறு கொண்டுவரப்பட்டதாக தம்புள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 27 ஆம் திகதி பதவியா வைத்தியசாலையிலிருந்தும் 52 நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட 118 பேரும் தம்புள்ள வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், காயமடைந்த 34 ஆண்களும் 26 பெண்களும் 9 குழந்தைகளும் காணப்படுகின்றனர். இக்குழந்தைகளில் ஒன்று மட்டுமே ஆண் குழந்தையாகும். ஏனைய 49 பேரும் அவர்களுக்கு உதவிக்கென வந்த குடும்பத்தவர்களாவர்.

இவர்கள் நெடுங்கேணி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, சண்டிலிப்பாய் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது. புதன் காலையும் செவ்வாய் இரவும் இந்நோயாளருக்கு உணவுகள் ஏதும் வழங்கப்படாமையால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் சில தனியார் ஸ்தாபனங்கள் தம்புள்ள நகர உணவகங்களிலிருந்து அவர்களுக்கான உணவைப் பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தம்புள்ள வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதியில் நோயாளர்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் வைத்திய உதவிகளை விஸ்தரிக்க பிரான்ஸ் உதவி

france.jpgவடக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு வைத்திய உதவிகளை விஸ்தரிக்கும் வகையில் பிரான்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பொன்றும் உதவ முன் வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 100 மில்லியன் ரூபா செலவில் செட்டிக்குளத்தில் 35 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையொன்று பிரான்ஸ் அரசாங்கத்தினாலும், எம்.எஸ்.எப். எனப்படும் எல்லைகள் அற்ற பிரான்ஸ் வைத்திய அமைப்பு 100 படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை மெனிக் பார்ம் முகாமிலும் அமைக்க முன் வந்துள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் டபிள்யு.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்..

மன்னார் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள், தாதிகள் ஆகிய துறையினருக்கும் மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

ரத் தோட்டை பல்லேதென தோட்டத்தைச் செர்ந்த 14 வயது பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரத்தோட்டை பொலிஸார் சந்தேக நபர்களை தேடிவருகின்றனர். கடந்த 27 ஆம் திகதி புதன்கிழமை இம்மாணவி பாடசாலைக்கு சென்றபோது இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை வீட்டிற்கு முன்பாக கொண்டுவரப்பட்டு விடப்பட்டார்.

இதேவேளை, மாணவி புதன்கிழமை இரவு வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் ரத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். வியாழக்கிழமை காலை வீடு வந்த மாணவியிடம் எங்கே போனாய், என்று கேட்டபோது, தன்னை சிலர் கடத்தியதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் கூறினார்.

கடத்தியவர்களையும் தெரியாது எனவும் எங்கே கடத்திச்சென்றனர் என்றும் தெரியாது என்றும் மாணவி தெரிவித்தார். மனநிலை பாதிக்கப்பட்ட இம் மாணவி முதலில் ரத்தோட்டை ஆஸ்பத்திரியல் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாத்தளை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இம்மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதில் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இவரின் தாயார் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணி புரிந்துவருகிறார்.

உனது உரிமை எனது மூக்கு நுனி மட்டும்… :ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திகழும் ஊடகங்கள் – புன்னியாமீன் –

iworld-press-freedom-day.jpgஇன்று மே -3 உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day)

சம்பவங்களையும், புதினங்களையும், நிகழ்ச்சிகளையும், படங்களையும் தொகுத்துத் தரும் அச்சடித்த தாள்களாக மாத்திரம் பத்திரிகைகளை கருதமுடியாது. அவை ஒரு நாட்டின் நலன்களுக்கும், அபிவிருத்திக்கும் அவசியமான சமுதாய மேம்பாட்டிற்கு வேண்டிய கருத்துக்களை வழங்கும் அதே வேளை ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகின்றது.

ஒரு நாட்டின் ஜனநாயக மேன்மைக்கும், ஜனநாயக விரோதிகளினதும் அடக்கு முறையாளர்களினதும் வீழ்ச்சிக்கும் பேருதவி புரிகின்றதென்பதை வரலாறு உலகிற்கு பலமுறை எடுத்துக்காட்டியுள்ளது. பத்திரிகையானது ஒரு நாட்டினை கட்டியெழுப்பும் அல்லது நிர்மாணிக்கும் சாதனமாகவும் விளங்குகின்றது. நவீன காலத்தில் இலத்திரனியல் ஊடகங்களின்அபரிமிதமான வளர்ச்சியின் பின்னணியில் பத்திரிகை சுதந்திரம் என்பது இன்று ‘ஊடக சுதந்திரம்’ என்ற நிலையில் விரிவுபட்டுள்ளது.

மனிதனின் ஒரு அடிப்படை உரிமையாக பத்திரிகைச் சுதந்திரம் காணப்படுகிறது. இச்சுதந்திரமானது ஒருவரின் சொந்தக் கருத்துக்களை மாத்திரமன்றி, ஏனையோரின் கருத்துக்களையும் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தையும் தெளிவுபடுத்துகின்றது. பத்திரிகையின் பங்களிப்பானது மனித உரிமைகளின் பாதுகாவலனாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் சுயாதீனமானது சுதந்திரம், பொறுப்புணர்வு, தார்மீகம் ஆகிய முத்தூண்களில் சார்ந்திருக்கிறது. இப்பண்புகள் பத்திரிகைகளுக்கு தேசத்தின் வாயில் காப்போன் எனும் அந்தஸ்தையும் வழங்குகின்றன.

பத்திகைச் சுதந்திரத்துக்காக அடிப்படை ஐ.நா.வின் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தில் 19உறுப்புரையில் குறிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குடியியல், அரசியல் உரிமைகள் சாசனத்திலும் 19வது உறுப்புரிமையில் இதற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் அரசியல் யாப்புக்களிலும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நடைமுறையில் அரச கொள்கைகளுக்கமைய இந்த பத்திரிகைச சுதந்திரத்திற்குஅச்சுறுத்தல் ஏற்பட்டு வந்துள்ளது. அமெரிக்க நீதியரசர் கார்டோஸோ மற்றைய சுதந்திரத்திற்கெல்லாம கருவாக திகழ்வது சிந்தனை, மற்றயது பேச்சுச் சுதந்திரம் என்றார். informed public is the Essence of working democracy எனக்கூறப்படும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இக்காலத்தில் வலியுறுத்தப்படுகிறது.

இதுபற்றிய மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் உலக பத்திரிகை சுதந்திர (World Press Freedom Day) சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பத்திரிகை மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவியற்கலையாகும். மனிதனையும் சமூகத்தினையும் பற்றியறியும் ஒரு சாரளமாகும். சமுதாய மேன்மைக்காக சகலதுறைகளையும் சேர்த்து எண்ணப்படும் ஒரு தொழிற்துறையாகும். ஒரு நாட்டின் அல்லது அரசின் நான்காவது கூறாக வைத்து இத்துறை எண்ணப்படுகிறது. அரசுத் தலைவர், பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகைத்துறை போன்ற நான்கும் மக்களாட்சியின் கூறுகளாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வகையில் பத்திரிகைத் துறையின் முக்கியத்துவம் காலம் காலமாக உணரப்பட்டு வந்தது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு வருடாவருடம் யுனெஸ்கோ நிறுவனத்தினர் விருது (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது 1986 டிசம்பர் 17 இல் கொல்லப்பட்ட கொலம்பியஸ பத்திரிகையாளர் “கில்லெர்மோ இசாசா” (Guillermo Cano Isaza) என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை சுதந்திரம் என்பது மக்களின் தகவல் பெறும் உரிமை, தகவல் வழங்கும் உரிமை, பேச்சு, எழுத்து, கருத்து வெளிப்பட்டு உரிமை என்பவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட அடிப்படைச் சுதந்திரமாகும். பத்திரிகைச் சுதந்திரம் 4 சுவர்களைக் கொண்டு கட்டியெழுப்பட்டுள்ளது. அவை

1.உண்மைக்கு பாதுகாப்பு
2.சனநாயகத்துக்குப் பாதுகாப்பு
3.மக்கள் சுதந்திரத்திற்குப்பாதுகாப்பு
4.பொது நலன்களுக்குப்பாதுகாப்பு என்பனவாகும்.

இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் 3 இல் 14 (1) (அ) உறுப்புரிமையாக எழுத்து, பேச்சு, வெளிப்பாட்டுச்சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் நலன், நாட்டு நலன், பொதுப்பாதுகாப்பு, பொதுச்சுதந்திரம், பிறர் உரிமை பாதுகாக்கப்படல் போன்ற பல்வேறுகாரணங்களுக்காக இந்த அடிப்படைச்சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் பல சட்டதிட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம், தேசிய பத்திரிகைப் பேரவைச் சட்டம், தண்டனைச் சட்டக்கோவை, பாராளுமன்ற அதிகாரங்கள், சிறப்புரிமை சட்டம், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் என்பன பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

கி. பி. 10ம் நூற்றாண்டில் சீனாவில் ஒரு செய்தி ஏடு அரச சார்பாக தொடங்கப்பட்டுள்ளதை பிரித்தானியக் கலைக்களஞ்சியம் உறுதிப்படுத்துகின்றது. 1609ம் ஆண்டில் ஜேர்மனியில் பல நகரங்களில் செய்தித்தாள்கள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்திப் பத்திரிகைகளின் தோற்றம் உலகளாவிய ரீதியில் வியாபித்தது. 1832ல் கொழும்பு ஜேர்னல் எனும் நாளிதழ் இலங்கையில் வெளியிடப்பட்டது.

உலகில் எவ்விடத்திலும் நிகழும் எவ்வகையான செய்திகளையும் உடனுக்குடன் அறிய சமூகம் ஆவலோடுள்ளது. நம்பகத்தன்மையான, உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வழங்குவது பத்திரிகையின் பொறுப்பாகும். இதன் மூலமே சமூகத்தில் மறுமலர்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். 16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சி இத்தாலி, ஜேர்மன் ஆகியவற்றின் ஐக்கியம், பிரான்சியப் புரட்சி, ரஷ்ய புரட்சி மற்றும் அமெரிக்க சுதந்திரப் புரட்சி போன்றவற்றுக்கு பத்திரிகைகள் வழங்கிய பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறந்த செயற்றிறன் கொண்ட ஜனநாயகத்திற்கு பத்திரிகைச் சுதந்திரம் அத்தியாவசியமானதும் உண்மையான ஜனநாயகத்தின் பண்பும் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனினும் பத்திரிகைச் சுதந்திரத்தை மீறும் வகையிலான தடைகளும் பத்திகையாளர்கள் துன்புறுத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை, சிறைவைக் கப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கப் பட்டமை போன்ற சம்பவங்கள் பற்றியும் சர்வதேச அறிக்கைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும் அவமானமாகவும் உள்ள சட்டங்கள் பண்டைய ஆங்கிலக் கோட்பாட்டில் அடிப்படையில் பிறந்தவையாகும்; அதாவது மன்னன் தவறு செய்வதில்லை என்ற அடிப்படையாகும்.பிரித்தானியப் பாரளுமன்றத்தில் மன்னனின் செலவீன ஒதுக்கீடுபற்றிய விமர்சித்த ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது தண்டிக்கப்பட்டார்கள். மன்னரின் இத்தகைய எதேச்சாதிகாரப் போக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் சட்டரீதியாகப்பட்டுள்ளது.

இன்றையவுலகில் மிக ஆபத்துள்ளதாக பத்திரிகைத் தொழிலும் பத்திரிகையாளன் பணியும் மாறியுள்ளன. சர்வதேச பிராந்திய மற்றும் தேசிய ரீதியாகவும் பத்திரிகையாளர் சங்கங்கள் தமது பாதுகாப்புக்காகப் போராட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. 1992ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை சர்வதேச ரீதியில் 734 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோக பூர்வமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண்டு ரீதியாக ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் வருமாறு: 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை 11, 2008: 41, 2007: 66, 2006: 56, 2005: 48, 2004: 60, 2003: 42, 2002: 21, 2001: 37, 2000: 24, 1999: 36. 1998: 24, 1997: 26, 1996: 26, 1995: 51, 1994: 66, 1993: 57, 1992: 42

1992ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை சர்வதேச ரீதியில் நாடுகள் ரீதியாக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட விபரம் வருமாறு: இப்பட்டியலில் ஈராக் முதலாம் இடத்திலும், இந்தியா 6ம் இடத்திலும், இலங்கை 11ம் இடத்திலும் இருப்பதை அவதானிக்கலாம். 1) Iraq: 138, 2) Algeria: 60, 3) Russia: 50, 4) Colombia: 41, 5) Philippines: 34, 6) India: 26, 7) Somalia: 25, 8) Pakistan: 21, 9) Bosnia: 19, Turkey: 19, 11) Afghanistan: 18, Sri Lanka: 18, 13) Rwanda: 16, Sierra Leone: 16, Tajikistan: 16, Brazil: 16, 17) Mexico: 15, 18) Bangladesh: 12, 19) Israel: 9, 20) Angola: 8, Cambodia: 8, Georgia: 8, Yugoslavia: 8 (தகவல் – நன்றி : the Committee to Protect Journalists )

சுதந்திர ஜனநாயகக் கொள்கை நிலைநாட்டப்பட வேண்டுமாயின் அந்நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் மேலோங்க குரல் கொடுக்க வேண்டியுள்ளது. அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு என்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. நிலையான வளர்ச்சி வீதம், துரித அபிவிருத்தி வறுமை ஒழிப்பு என்பன மூலம் மூன்றாம் மண்டல நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தங்கியுள்ளன. இவற்றைப் போக்க பத்திரிகைகளின் பங்களிப்பு அவசியமாகும். பத்திரிகைகளினதும் பத்திரிகையாளரினதும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த உன்னத தினத்தில் திட்சங்கற்பம் கொள்வோம்

செய்தியாளர்களை தாக்குவோரை சட்டத்தின் முன் நிறுத்த சகலவித முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்- உலக பத்திரிகை சுதந்திர தின செய்தியில் பான் கீ மூன் 
 
உலகெங்கிலும் செய்தியாளர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். உலக பத்திரிகை சுதந்திர தினமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவும் இவ்வருடம் கொண்டாடப்படும் நிலையில், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சகலவித முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து சமுதாயங்களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு சமூகத்தின் மிக இளம் உறுப்பினர்களில் இருந்து முழுமையான பிரஜைகள் வரை அவர்களது அரசியல் தலைமைத்துவத்துடன் அனைவரும் தகவலை அறிந்து கொள்வதற்கான வசதிகள், உயிர் வாழ்வுக்கு நீர் எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு அவசியமானவை. அறிவானது எதையும் கற்பனை செய்வதற்கும் மாற்றியமைப்பதற்குமான எமது ஆற்றலை நிலைநாட்டுகிறது.

தகவல் தாராளமாக பரப்பப்படும் போது, மக்கள் அவர்களது வாழ்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சகல அம்சங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தகவல் பிரவாகம் தடைப்படுத்தப்படும் போது அரசியல் காரணமாக இருந்தாலும் தொழில்நுட்பக் காரணங்களாக இருந்தாலும் செயற்பாட்டுக்கான எமது ஆற்றல் முடக்கப்படுகிறது.

60 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை வரைந்தவர்கள் 19ஆவது சரத்தை அதில் புகுத்திக் கொண்டார்கள். அபிப்பிராய மற்றும் கருத்து வெளியிடுவதற்கான ஒவ்வொருவரினது சுதந்திரத்திலும் எதுவித குறுக்கீடுகளும் இன்றி அபிப்பிராயத்தை வெளியிடுவதற்கும் கேட்டறிவதற்கும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பூரண உரிமை உண்டு என்று இந்த 19ஆவது சரத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. துரித உலக மயமாக்கலின் பயனாக சுதந்திரமானதும் பன்முகமானதும், தாராளமானதுமான தொழிற்புலமைப் பெற்று ஊடகத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைந்துள்ளது.

தாராளமானதும், பாதுகாப்பானதும், சுதந்திரமானதுமான ஊடகம் சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான அத்திபாரங்களில் ஒன்றாகும். பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கும் மனிதநேயத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரான தாக்குதல்களாகும். ஐக்கிய நாடுகள் ஆதரிக்கும் அனைத்து விடயங்களுக்கும் எதிரான தாக்குதல்கள் ஆகும். இன்று செய்தியாளர்கள் உலகெங்கிலும் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். மேலும், இத்தகைய குற்றச்செயல்கள் விரிவாக விசாரணை செய்யப்பட்டு பொறுப்பானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படாதமை எனக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

உலக பத்திரிகை சுதந்திர தினமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60ஆவது ஆண்டும் இந்த வருடம் கொண்டாடப்படும் இவ்வேளையில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சகலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சகல சமுதாயங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தாராளமான, பாகுபாடற்ற தகவல்களை எங்களுக்குத் தருவதற்காக மிக சிரமமானதும் அபாயகரமானதுமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தப் பகுதியிலும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை கோட்பாடுகளை கொண்டதாகும்.

இதேவேளை, பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பிடுவதற்கும், ஊடகங்களின் சுதந்திரம் மீதான தாக்குதல்களில் இருந்து அவற்றை காப்பாற்றுவதற்கும் கடமையின் போது உயிர்துறந்த பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் உலக பத்திரிகை சுதந்திர தினம் சந்தர்ப்பமளிக்கிறது. 1991ஆம் ஆண்டின் யுனெஸ்கோ பொது மாநாட்டின் 26ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதப்புரையை தொடர்ந்து 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உலக பத்திரிகை சுதந்திர தினத்தை பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

thinu.jpgதிருமலையில் சிறுமி வர்ஷா கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டதும் பின்னர் படுகொலை செய்யப்பட்டதும் இப்போது மட்டக்களப்பில் சிறுமி தனுசிகா கடத்தப்பட்டதும் கப்பம்  பின்னர் படுகொலை செய்யப்பட்தும் அருவருக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் மத்தியில் ஒருவகைப் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி வர்ஷாவின் படுகொலையோடாவது முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதானது மக்களின் பாதுகாப்பு அமைதி மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாகவே இருக்கின்றது.

கொலை கொள்ளை கப்பம் கோருதல் தொடர்பாக பல முறைப்பாடுகள் தொடர்பில் எமது கண்டனத்தையும், உரிய நடவடிக்கையையும் நாம் கோரியிருந்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த அசமந்தமான போக்கே மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் தொடர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

புலிப் பயங்கரவாதம் போல் இவ்வாறான சமூக விரோதிகளின் செயற்பாடுகளும் எமது மக்களின் நிம்மதியான, அமைதியான வாழ்வுக்கும்  பிள்ளைகளின் சுமூகமான கல்விச் செயற்பாட்டுக்கும் தடையாகவே இருக்கின்றது. எனவே சமூக விரோதிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் தாமதத்தையும் நியாயமற்ற காரணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போல் குடும்ப உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்புத் தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் எமது மக்கள் வாழுகின்ற கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இதே வேளை பாடசாலை சிறுவர்களான ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் (13 வயது) வள்ளுவன் ஜீவகுமார் ஆகிய சிறுவர்களும் கடத்தப்பட்டிருப்பதாக அறிகின்றோம். இவர்கள் கவனமாக காப்பாற்றப்பட  வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் இயல்புச் சூழலைக் குழப்பியிருக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

ஊடகச் செயலாளர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி)

ஒட்டுமொத்த தலித்துகளும் அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும் : திருமாவளவன்

thirmavala.jpg“ஒட்டு மொத்த தலித்களும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும்” என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

மக்களவை தேர்தலுக்கான திமுக பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்றிரவு நடந்தது. முதல்வர் கருணாநிதி இதற்குத் தலைமை வகித்தார்.இப்பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் தொல்.திருமாவளன் பேசுகையில்,

“ஒட்டுமொத்த தலித்களுக்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். ஏன் தெரியுமா? அதிமுக, தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தலித்துகள் வளர்வதிலும் அதிமுகவுக்கு விருப்பமில்லை.

எத்தனையோ தலித் அமைப்பினர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தார்கள். ஆனால் அவர் கண்டுகொள்ளவேயில்லை. திமுக தலைவர் கலைஞரோ தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனம் உள்ளவர். அதனால்தான் தலித் அமைப்பான விடுதலை சிறுத்தைகளுக்கு 2 சீட் கொடுத்திருக்கிறார். அதனால் திமுக கூட்டணியை ஆதரியுங்கள்; அதிமுகவைப் புறக்கணியுங்கள்” என்றார்.

‘மாத்தையா`வின் மனைவி பிள்ளைகள் இராணுவத்திடம் சரண்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலச்சாமி மகேந்திரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் நேற்று (மே. 1) இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளதாக கொழும்பு இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கையான `ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய புலனாய்வு துறைக்கு புலிகளின் தலைமை குறித்த தகவல்களை வழங்கியதாக மாத்தையா மீது குற்றஞ் சாட்டிய புலிகள் 1994 டிசம்பர் 25 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றினார்கள்.

இடம்பெயர் மக்களுக்கு உலக நாடுகள் உதவி

fily-ap.jpgயுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன.

நோர்வே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் ஊடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நோர்வே உயர் ஸ்தானிகராலயப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்படின் மேலும் உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நோயாளர்களுக்குத் திருப்தியான சேவையை வழங்க குறைந்தது 1000 படுக்கைகள் தேவைப்படுவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே திருகோணமலை புல்மோட்டையில் தள வைத்தியசாலையொன்றையும், மருத்துவர்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி உதவியுள்ள இந்தியா, மேலும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க முன் வந்துள்ளது .இதன் பிரகாரம் 40 ஆயிரம் குடும்பங்களுக்குரிய உதவிப் பொதிகள் ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 50 ஆயிரம் பொதிகள் விரைவில் வந்தடையவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம் பெயர்ந்துள்ள மக்களின் உடனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் 4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க முன் வந்துள்ளது. அதனை யு.என்.எச்.சி.ஆர் ,ஐ.சி.ஆர்.சி., யுனிசெப், புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் ஊடகவே வழங்கத் தீர்மானித்துள்ளது.

அவசர மனிதாபிமான உதவிகளுக்காக 1.23 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க சுவிஸ் முன்வந்துள்ளது. ஐ.சி.ஆர்.சி., உலக உணவுத் திட்டம், மற்றும் யு.என்.எச்.சி.ஆர். ஆகியன ஊடாகவே இதனை வழங்கப் போவதாக அது அறிவித்துள்ளது

முசலிப் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் : ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் வரவேற்பு

UN_Logoமன்னார் மாவட்டம் முசலிப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ள குடும்பங்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் வரவேற்றுளள்து. இப் பிரதேசத்திலுள்ள சவேரியாபுரத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ள 400இற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு வருடங்களின் பின்பு நேற்று மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 கிராமங்களை உள்ளடக்கிய மேலும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடு சிறிய அளவிலேயே இருந்தாலும், இது வரவேற்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு நிகழ்வு என்று உயர் ஸ்தானிகராலயம் மேலும் கருத்து வெளியிட்டுள்ளது. இதே போன்று வடபகுதியில் இடம் பெயர்ந்த நிலையில் இருக்கும் மக்களும் மீண்டும் தமது இருப்பிடங்களுக்குச் செல்வார்கள் எனத் தாங்கள் நம்புவதாக உயர் ஸ்தானிகராலய இலங்கைப் பிரதிநிதி அமின் அவாத் கூறுகின்றார்.

முல்லைத்தீவிலிருந்து 355 பேர் ஐ.சி.ஆர்.சி. கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வருகை

icrc.jpgமுல்லைத் தீவிலிருந்து ஒரு தொகுதியினர் ஐ.சி.ஆர்.சி. கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 92 ஆண்கள் ,149 பெண்கள், 114 சிறுவர்கள் என மொத்தம் 355 பேர் இப்படி அழைத்து வரப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 55 ஆண்கள், 54 பெண்கள் என 109 பேர் நோயாளர்களும் காயமடைந்தவர்களும் ஆவர் .ஏனையோர் அவர்களது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது