Multiple Page/Post

வடமராட்சி கிழக்கில் விரைவில் 4000 குடும்பங்கள் மீள் குடியேற்றம் – யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாளாயிரம் குடும்பங்கள் விரைவில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார்.

கண்ணி வெடிகள் அகற்றும் பணி இங்கு நிறைவடைந்துவிட்டதாகவும், மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் கட்டளைத் தளபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்வதற்கான திகதி விரைவில் நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுமென்றும் யாழ். அரச அதிபர் கணேஷ் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இதுவரை 80 ஆயிரம் பேர் மீளக் குடியம ர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர் பெரும்பாலும் மீள்குடியேற்றம் நிறைவுறும் தறுவாயை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மீளக்குடியேறுவோருக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் வீடுகளைத் திருத்திக்கொள்ளவும் ஒத்துழைப்பு நல்கப்படுகிறது.

யாழ். பொது நூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்த அரசு நடவடிக்கை

computer.jpgயாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நேற்று தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஏனைய பொது நூலகங் களுடன் தகவல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தவும் மேலும் நவீன மயப்படுத்தவும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்ப டவுள்ளது என்றார்.

மனோகணேசன் – ரணில் முரண்பாடு தொடர்கின்றது

ஐ.தே.க தலைவருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித மான முடிவும் எட்டப்படவில்லையென பிரபாகணேசன் எம்.பி தெரிவித்தார்.

இதனால் இன்று (29) மாலை 5 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து முடிவெடுக்கவுள்ளதாக பிரபா கணேசன் எம்.பீ. தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்னமும் கட்சியின் தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க. தலைவரைச் சந்திக்கவில்லையெனக் கூறிய அவர், இன்றைய தினமே நேரடிச் சந்திப்பு இடம் பெறுவதாகக் கூறினார்.

நேற்று முடிவு எட்டப்படாததால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர எம்.பி. ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கிறார்.

சிவராம் – 5வது ஆண்டு நினைவு: இலங்கையின் ஊடகத்துறையின் தற்போதைய நிலை : த ஜெயபாலன்

Sivaram_Tharaki(படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் சிவராம் நினைவாக இலங்கை ஊடகத்துறையின் இன்றைய நிலை மற்றும் சிவராமது போராட்ட கால செயற்பாடுகள் பற்றிய இரு பதிவுகள் இங்கு பிரசுரமாகின்றது. முதலாவது பதிவு இனறு தேசம்நெற்றில் பிரசுரமாகின்றது. பின்னுள்ள இரு பதிவுகளும் 2005ல் தேசம் சஞ்சிகையின் இதழ் 23இலும் இதழ் 25இலும் பிரசுரமாகி இருந்தன அவற்றை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.)

இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பதை கேலிக் கூத்தாக்கி உள்ளது இலங்கை அரசு. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே வந்துள்ளது. பிரான்சைத் தயமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு 2004ல் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை 109வது இடத்தில் வைத்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் மிக வேகமாக 162வது இடத்திற்குத் தாவியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுவதில் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்சவினதும், பாராளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வாவினதும் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்பதனை ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

Media Minister MR and his deputy Mervin Silvaஇருந்தும் புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு எதிரான தனது அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதனை மேர்வின் சில்வாவை பிரதி ஊடக அமைச்சராக நியமித்ததன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இதனை ‘Gang boss known for hostility towards journalists appointed deputy media minister – ஊடகவியலாளருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் என அறியப்பட்ட காடைக்குழுத் தலைவர் பிரதி ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்’ என்று தலைப்பிட்டு கண்டித்துள்ளது Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு. ஏப்ரல் 26ல் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘In what country do you appoint an arsonist to put out fires? – எந்த நாட்டில் தீ வைப்பில் ஈடுபடும் ஒருவரை தீயை அணைப்பதற்கு நியமிப்பார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆளும் கட்சியின் வெற்றியை இவ்வாறான நியமனங்கள் பாதிப்படையச் செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடகங்களுக்கான அவ்வமைப்பு இவ்வாறான நியமனங்கள் மீளுறவையும் மீள்கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இந்த ஊடக சுதந்திரத்தின் பின்னணியில் ஊடகவியலாளர் தாராக்கி என்று அறியப்பட்ட தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நிறைவு லண்டனில் நினைவு கூரப்படுகின்றது. Tamil Legal Advocacy Project (TLAP) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு : April 29, 2010 – from 6:30 PM – 9:30 PM,
Conway Hall
25 Red Lion Square
WC1R 4RL London
United Kingdom இல் நடைபெறுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது கொலையாளிகளையும் குற்றவாளிகளையும் தண்டிக்காது சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்ற நாடுகளின் வரிசையில் இலங்கையை நான்காவது இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists – CPJ ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கின்ற குழு. உள்நாட்டு யுத்தம், மனித உரிமைகள், அரசியல், ஈராணுவ விடயங்கள், ஊழல் – மோசடிகள் பற்றி தகவல்கள் வெளியிட்டமைக்காக கடந்த ஒரு தசாப்த காலத்தில் 24 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் இப்படுகொலைகள் தொடர்பாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்றும் ஊடகவியலாளரைப் பாதுகாப்பதற்கான குழு தனது 2010 அறிக்கையில் தெரிவித்தள்ளது. இதே காலப்பகுதியில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் எண்ணற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இவற்றின் காரணமாக 2008 யூன் முதல் 2009 யூன் வரையான ஓராண்டு காலப்பகுதியில் 11 ஊடகவியலாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேறி உள்ளதாக அவ்வூடக சுதந்திரத்திற்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதமே படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களில் 90 வீதமானவர்கள் உள்ளுர் ஊடகவியலாளர்களாகவே உள்ளனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதன் முக்கிய நோக்கம் அனைத்து ஊடகங்களுக்குமே ஒரு பயங்கரமான அச்சுறுத்தலை வழங்குவதே. சிவராம் உட்பட 1999 முதல் இலங்கையில் 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 18 பேருடைய கொலைக்கான நோக்கம் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஆறு பேருடைய கொலைக்கான நோக்கத்தை உறுதிப்படுத்த முடியவில்லையென ஊடகவிளலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவிக்கின்றது.

இலங்கை ஊடகத்துறையின் மீதான தாக்குதல்களுக்கு அரசு மட்டுமல்ல விடுதலை கோரிப் போராடிய அமைப்புகளும் பொறுப்பாக இருந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களும் ஊடகங்கள் மீதான வன்முறைக்கு பொறுப்பாக இருந்தள்ளனர். குறிப்பாக இலங்கை ஊடகத்துறை ஆயுதம் ஏந்திய அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய சூழல் கடந்த காலங்களில் இருந்தது. தற்போதும் இந்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக ஊடகங்களில் சுயதணிக்கை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழமையாகவே இருந்து வந்தள்ளது. இந்த அரசியல் அதிகாரத்தின் செல்வாக்குக் காரணமாக ஊடகவியலாளர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களாக அல்லாமல் அரசியல் சார்ந்த கட்சி சார்ந்த ஊடகவியலாளர்களாகச் செயற்படுகின்ற போக்கு இலங்கையில் பொதுவாகக் காணப்படுகின்ற ஒரு அம்சமாகவே உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 2010 பாராளுமன்றத் தேர்தலில கூட வீரகேசரி செய்தி ஆசிரியர் சிறிகஜன் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர் ரெங்கா உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவன் மற்றும் சிங்கள பத்திரிகையாளர் சிலரும் அரசியற் கட்சிப்பட்டியலில் தேர்தலில் நின்றமை குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் சுயாதீனத்துடன் முரண்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.

மேலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்ற கலாச்சராம் இலங்கையில் ஏற்பட்டு இருக்கவில்லை. கொல்லப்படுபவரின் அரசியல் சார்ந்தே அதனைக் கண்டிப்பதா? இல்லையா? என்கின்ற முடிவு எடுக்கப்படுகின்றது. இப்போக்கு குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையான அம்சமாக உள்ளது.

இதற்கு சிவராமின் படுகொலையும் விதிவிலக்காக இருக்கவில்லை. சிவராமின் படுகொலைக்கான கண்டனங்கள் அவரது அரசியலின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டது. சிவராம் என்ற ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டதை தமிழ் ஊடகத்தறையின் ஒரு சிறுபகுதியினர் கண்டிக்கத் தவறினர். அல்லது கடமைக்காகக் கண்டித்தனர். சிவராமின் கொலையை கண்டிக்க முற்பட்டவர்கள் ஒரு ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்டதற்காகத் தமது கண்டணத்தை முன்வைத்தனர் என்பதிலும் பார்க்க தங்கள் அரசியலின் பக்கம் சிவராம் என்பவர் நின்றதனால் தங்கள் கடுமையான கண்டனங்களை சரியாகவே முன்வைத்தனர்.

Media Minister MR and his deputy Mervin Silvaஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமல்ல எந்தவொரு மனித உரிமை மீறலையும் அதனை யார் யாருக்கு எதிராக மேற்கொண்டாலும் கண்டிக்கின்ற வன்முறைக்கு எதிரான அரசியல் கலாச்சாரம் தமிழ் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்படுபவர்கள் தியாகிகள் ஆக்கப்பட்டு பூசிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான குரல்கள் அழுத்தமாக வரவேண்டும். அதன் பின் அவர்கள் மீதான அவர்களது அரசியல் தொடர்பான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். ஆனால் அந்த மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அவர் மீதான வன்முறையை நியாயப்படுத்துவதாக இருக்க முடியாது.

1999 முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தகவல் மூலம் – CPJ

நோக்கம் உறுதிப்படுத்தப்பட்ட கொலைகள்:
Puniyamoorthy Sathiyamoorthy, freelance
     February 12, 2009, in Mullaitheevu district, Sri Lanka
Lasantha Wickramatunga, The Sunday Leader
     January 8, 2009, in an area outside Colombo , Sri Lanka
Rashmi Mohamed, Sirasa TV
     October 6, 2008, in Anuradhapura, Sri Lanka
Paranirupasingham Devakumar, News 1st
     May 28, 2008, in Jaffna, Sri Lanka
Suresh Linbiyo, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
T. Tharmalingam, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Isaivizhi Chempiyan, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Selvarajah Rajeewarnam, Uthayan
     April 29, 2007, in Jaffna, Sri Lanka
Subash Chandraboas, Nilam
     April 16, 2007, in an area near Vavuniya, Sri Lanka
Subramaniyam Sugitharajah, Sudar Oli
     January 24, 2006, in Trincomalee, Sri Lanka
Relangi Selvarajah, Sri Lanka Rupavahini Corp.
     August 12, 2005, in Colombo, Sri Lanka
Dharmeratnam Sivaram, TamilNet and Daily Mirror
     April 29, 2005, in Colombo, Sri Lanka
Lanka Jayasundara, Wijeya Publications
     December 11, 2004, in Colombo, Sri Lanka
Bala Nadarajah Iyer, Thinamurasu and Thinakaran
     August 16, 2004, in Colombo, Sri Lanka
Aiyathurai Nadesan, Virakesari
     May 31, 2004, in Batticaloa, Sri Lanka
Mylvaganam Nimalarajan, BBC, Virakesari, Ravaya
     October 19, 2000, in Jaffna, Sri Lanka
Anura Priyantha, Independent Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka
Indika Pathinivasan, Maharaja Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka

நோக்கம் உறுதிப்படுத்தப்படாத கொலைகள்:
Sahadevan Nilakshan, Chaalaram
     August 1, 2007, in Jaffna, Sri Lanka
Sinnathamby Sivamaharajah, Namathu Eelanadu
     August 20, 2006, in Jaffna, Sri Lanka
Sampath Lakmal, Sathdina
     July 1, 2006, in Colombo, Sri Lanka
Vasthian Anthony Mariyadas, Freelancer
     December 31, 1999, in Vavuniya, Sri Lanka
Atputharajah Nadarajah, Thinamurusu
     November 2, 1999, in Colombo, Sri Lanka
Rohana Kumara, Satana
     September 7, 1999, in Colombo, Sri Lanka

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 23 (மே – யூலை 2005)

சிவராம் : வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர்கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் : அசோக்

Sivaram_Tharakiசிவராம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இன்றைய தமிழ் ஊடக உலகத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. இது இன்னும் சில நாட்களுக்கே. மீண்டும் இன்னுமொரு ‘மாமனிதர்’ பட்டம் சூட்டும் கதை தொடங்க இவன் கதை முடிந்து போகும். நாம் காணும் துதிபாடும் சார்பு நிலை தமிழ் ஊடக வரலாறு இதுதானே. ஆனால் தவிர்க்க முடியாத இந்த காலகட்ட நாட்களுக்குள் சிவராமைப் பற்றி ஒரு சாரார் கட்டமைக்கும் விம்பங்கள் அச்சார்பு நிலையாளர்களின் அரசியல் மனோ நிலையை புரிந்து எமக்கு ஆச்சரியத்தை தராவிட்டாலும் அவை சில வேளைகளில் நகைச்சுவை உணர்வை அதிகம் தந்துவிடுகிறது.

சிவராமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதியுயர் நம்பிக்கைக்குரியவனாகவும் அவர்களின் ‘அனைத்து’ வகை அரசியலையும் ஏற்றுக் கொண்டவனாகவும் அவனைச் சுற்றி கட்டமைக்கும் புனைவுகள் சிவராமை நன்கு தெரிந்த – புரிந்த நண்பர்கள் மட்டத்தில் கேலிக்குரிய ஒரு நகைச்சுவைத் தனம் எழுந்து வருவதை தவிர்க்க முடியாததாக்கிவிடுகின்றது. சிவராம் உயிர் கொண்டு எழுவானானால் தமிழீழ விடுதலைப் புலிகள் தன் தலையில் மாட்டிய அந்த மாமனிதர் பட்டம், அவனுக்கு அவனுடைய மட்டக்களப்புத் தமிழில் அவன் அடிக்கடி கூறும் அந்த எள்ளல் மொழியோடு இணைந்து மாபெரும் பகிடியாக தென்பட்டிருக்கும்.

சிவராம் என்ற அந்த மனிதன், மார்க்சியத்தின் வழிகாட்டலோடு அரசியல் களம் புகுந்ததாக அறிக்கைவிடும் பலரில் ஒருவன்தான். ஆனால் சிவராம் ஒரு இனவாதி என்பதில் நாம் யாரும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. மார்க்சியம் பேசப்போய் மறுபுறம் இனவாதம்கக்கும் போலிகளிடையே சிவராம் தன்னை கடைசி ஒரு தமிழ் தேசியவாதியாகவாவது காட்டிக் கொண்டவன் என்ற வகையில் நாம் அவனைப் பாராட்டியே தீரவேண்டும்.

கொழும்பு வாழ் சூழல், அதன் நெருக்கடி, இலங்கை அரசின் கண்ணோட்டம் அனைத்தும் சேர்த்து சிவராம் போன்ற நபர்களை இன்னொரு பக்க இனவாதிகளாக மாற்றிவிடும் பரிதாபத்தை செய்து வருகின்றது. அரசின் இனவாதம் அதன் பின்னணி, வர்க்க சார்பு நெருக்கடிகள், சமூகத் தாக்கங்கள் இவை பற்றிய எந்த அவதானிப்பும் – விமர்சனக் கண்ணோட்டமும் அற்று தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட அனுபவ வெறுப்புகளிலிருந்து இவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு வருவதும், இனவாத சேற்றுக்குள் மூழ்குவதுமான பரிதாப தற்கொலை அரசியலை இவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். மார்க்சியவாதியாக எம்மிடம் அடையாளம் காண்பித்த பேராசிரியர் சிவத்தம்பியே கொழும்பில் சொகுசாய், பாதுகாப் பாய் அனைத்து சௌக்கியங்களோடும் வாழ்ந்து கொண்டு பச்சை இனவாதம் பேசும் போது பாதிப்புக்குள்ளாகும் சிவராம் போன்றவர்கள் இனவாத அரசியலை தேர்வு செய்வது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

அதேவேளை சிவராம் போன்ற@ புலிகளின் கொடூரமான வன்முறைகளை எதிர்கொண்ட, புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட விடுதலை அமைப்புகளில் இருந்து வந்தவர்களில் புலிகளின் கடந்தகால, நிகழ்கால வன்முறை அரசியலை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர். அதனால் தங்களின் நிகழ்கால அரசியலை நடத்துவதற்கு தங்குமடங்களாக புலிகளைப் பயன்படுத்திக் கொள்வதோடு தங்களின் சில நோக்கங்கள் நிறைவேறும் வரையிலாவது புலிகளோடு தங்களை இனம்காட்டிக் கொள்ளவும் வேண்டியவர்களாகி விடுகின்றனர். இதற்கு நல்லுதாரணம் சிவராம் என்பேன்.

சிவராமுக்கும் எனக்குமான உறவு ஓரளவு நீண்டது. 1978க்களில் இருந்தே அவன் எனக்கு நண்பனானவன். எங்கள் இருவரையும் இணைத்தது இலக்கியமே. அதன்பின் 1981ல் நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் – புளொட்டில் இணைந்து கொள்ள சிவராம் 1983ம் ஆண்டில் நான் சார்ந்த விடுதலை அமைப்பினுள் தன்னை இணைத்துக் கொண்டவன். ஒரு காலத்தில் புலிகளின் வன்முறையை ஒடுக்குவதற்கு ஆயுதத்தின் உதவியை நாடுவதில் எவ்வித தயக்கமும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான். புலிகளின் பாஸிசப் போக்கும் வளர்ச்சியும் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு வேட்டு வைப்பதில் தான் போய் முடியும் என்றும் அவர்களின் பாஸிசப் போக்கு மௌனம் கொண்ட ஒரு அடிமைத் தமிழ் சமூகத்தை உருவாக்குவதையே தலையான கடமையாக கொண்டிருக்கும் என்னும் முன் ஆருடம் கூறியவன் அவன்.

சிவராமுக்கும் எனக்கும் கருத்தியல் சார்ந்த அரசியல் முரண்பாடுகள் ஏராளம். அதில் குறிப்பானது அவனது தீவிர பிரதேசவாத நிலைப்பாடு. கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வில் சமூக முன்னேற்றத்தில் அவன் கொண்டிருந்த அக்கறையானது அவனை யாழ் மேலாதிக்க மையவாத சிந்தனைக்கு எதிரானவனாக மாற்றியிருந்தது. இந்த சிந்தனையானது புலிகளில் மலிந்து காணப்பட்ட மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு எதிரானவனாக, அவர்களின் செயற்பாடுகளில் கடும் விமர்சனம் கொண்டவனாகவும், புலிகளுக்கு மாற்றாக கிழக்குப் பிரதேசத்தில் ஒரு அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவது கால அவசியம் என்ற கருத்தில் கடும் முனைப்பும், அதற்காக எந்தவிதமான செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாரானவனாக அவனை ‘ரகசியமாக’ உருவாக்கி இருந்தது. இந்த சிந்தனை வழித்தடங்களின் நீட்சியே விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட கருணா முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற முறைமையும் அதில் ஏற்பட்ட சிக்கலும். இது பலரும் அறிந்த இரகசிய விடயங்களாகிவிட்டன இன்று.

அவனது மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய கடைசிப் பயணத்தின் சந்திப்பின் போது கூட கிழக்கு மாகாணம் பற்றிய அதீத வெறி யை வெளிப்படுத்தினான் சிவராம். கருணாவின் உடைவின் மீதான விமர்சனங்களோடு கிழக்கின் தனித்துவ செயற்பாட்டின் மீதான அவனின் விருப்பும் வெளிப்பட்டது. சிவராமின் கடைசிக் கால செயற்பாட்டின் மீதான நம்பிக்கையின்மையே கருணா, இவனை புறந்தள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். கருணாவின் இந்த தள்ளி வைப்பே புலிகளிடம் இருந்து சிவராம் உயிரைக் காப்பதற்கான தற்காப்புக் காரணியாக அமைந்திருக்கும். எனினும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் சிவராமின் ‘அனைத்தும்’ அறிந்த புலிகளுக்கு சிவராமின் இறுதி முடிவு துயரைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகமே. சிவராமின் மரணம் புலிகளுக்கு மதிப்பிடவியலா அறுவடையை கொடுத்துவிட்டது என்பது தான் உண்மை.

இத்தோடு இப்பத்தி எழுத்தை நிறுத்திக்கொண்டு பின்வரும் சுவரொட்டி வாசகத்தோடு நிறைவு செய்கிறேன்.
‘புலிகளின் மேலாதிக்க வன்முறையை பிடித்து இன் னொரு வரலாற்றை உருவாக்க முயன்றவன் வாழ்வு மாமனிதப்பட்டத்தோடு முடிவுற்றது. வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர் கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் இது என்பேன்.’

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005)

சிவராம்: இரத்தக் கறைபடிந்த கரங்கள் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Sivaram_Tharakiவிடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.
 
சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.
 
 (1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.
 
 (2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும்  PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.
 
மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.
 
1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான  ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.
 
2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்
சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)
 
3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.

வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.

தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர்  பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.
 
சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார்
 
“உங்களை நம்பேலாது மச்சான்”
 
இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.
 
இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.
 
சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.
 
மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.
 
ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.

அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.
 
மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – கரு ஜயசூரிய எம்.பி

unp_logo_.jpgஅரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம். பாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.

இலங்கையில் செனட்சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது

rajitha.jpgமிக விரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவி காலத்திற்கான சத்தியபிரமாணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளும் தருணத்திலேயே செனட் சபையையும் அமைக்கப்படவுள்ளது.

அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் மாகாண சபைகளின் ஊடாக இதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்கள் குறித்து ஏதேனும் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அதற்கு செனட் சபையின் அனுமதி அத்தியாவசியமாக்கப்படவுள்ளது.

அத்துடன் செனட் சபையின் பெரும்பான்மை அதிகாரம் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..

ஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளுடன் ஊடகக் கிராமம் ‘எனது நீண்ட காலக் கனவு இது’ – அமைச்சர் மேர்வின்

m-silva.jpgஊடகவி யலாளர்களுக்காக சகல வசதிகளையும் கொண்ட ஊடகக் கிராமம் ஒன்றை அமைப்பதே தனது நீண்டகால கனவுயென பதில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்:-

பேனாவை கையில் எடுத்த அனைவரையும் ஊடகவியலாளர்கள் என கூறிவிட முடியாது. ஊடகவியலாளர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பலர் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தை முழு நாடும் அறியும். வெளிநாட்டுக்குச் சென்று குடியிருப்பதற்காக சிலர் தம்மைத் தாமே தாக்கிக்கொண்டனர்.

சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பழிவாங்குதல், கோபம் என்பவற்றை புறந்தள்ளி, தமது பேனாவை பயன்படுத்த வேண்டியது சகல ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். இதன் மூலமே உண்மையான ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும். ஊடகவியலாளரின் குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே சிறந்த ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும்.

குடும்ப பிரச்சினை, மனதில் இருக்கையில் தனது கருத்தை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சமூகத்துக்கு முன்வைக்க முடியாது. அதனால் அனைத்துக்கும் முன்பாக ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த மதத்தால் போசிக்கப்பட்ட தலைசிறந்த தலைவர். அத்தகைய தலைவரின் கீழ் பணியாற்ற கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பூட்டான் சென்றதையடுத்து பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் தி.மு. இன்று கடமை பொறுப்பேற்பு

dm-jayaratna.jpgஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமர் டி. எம். ஜயரத்ன இன்று தமக்கான பொறுப்புக்களைக் கையேற்கிறார். இவ் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 7.30 மணி சுபவேளையில் புதிய பிரதமர் தமது பதவிப் பொறுப்புக்களைக் கையேற்கவுள்ளார். இந்நிகழ்வில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்தது.

ஐ.தே.க..உயர்பதவிகளில் அடுத்த வாரம் பாரிய மாற்றம் செயற்குழு கூடித் தீர்மானிக்கும்

unp_logo_.jpgஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்காக கட்சியின் செயற்குழு அடுத்த வாரம் கூடவிருப்பதாக தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க அப்போது கட்சியின் உயர் மட்டப் பதவிகளில் பாரிய மாற்றம் ஏற்படலாமெனவும் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னர் கட்சித் தலைமைத்துவம் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இவ்வாரத்தில் கூடி ஆராயவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த வாரத்திலேயே கூடவிருக்கின்றது. தேர்தல் தோல்வியையடுத்து கட்சிக்குள் உருவாகி இருக்கும் நெருக்கடி நிலை வலுவடைந்திருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேற வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே கட்சியின் செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரத்தில் கூடவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

சார்க் மாநாட்டையொட்டி திம்பு நகர் விழாக்கோலம்: உச்சி மாநாடு இன்று ஆரம்பம்;

saarc-logo.jpgபூட்டான் தலைநகர் திம்புவில் இன்று (28) ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலைமைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார்.

சார்க் மாநாடு இன்று ஆரம்பமாவதையிட்டுத் திம்பு நகர் கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 16வது உச்சி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சார்க் கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் பூட்டான் பிரதமர் தின்லேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பூட்டானுக்கு முதன் முதலாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூட்டான் மன்னரின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பிரதமர் தின்லே உற்சாகமான வரவேற்பை தெரிவித்துக்கொண்டார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்த பிரதமர் தின்லே, இது பிராந்தியத்தில் அமைதியைப் பலப்படுத்து வதற்கு வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அடைந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுதல்களையும் பூட்டான் பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பூட்டான் பிரதமர் மக்களின் பேராதரவுடன் நாமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியத்திலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

‘சார்க்’ ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டில் உச்சி மாநாட்டை நடத்துவதையிட்டு பூட்டான் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை, 16 ஆவது உச்சி மாநாட்டில் அவதானிப்பாளராக ஓர் இடம் கிடைத்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஹாபர் ஒ பிளக்கை, நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

‘சார்க்’ கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.