Multiple Page/Post

17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு – 16 மில்லியன் டொலர் வழங்க சம்மதித்துள்ள இங்கிலாந்து இளவரசர் !

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இளவரசர் -  Tamonews

ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டில் முறையிட்டார். ஆனால் அவர் தன்மீதான பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணையை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என கடந்த மாதம் நியூயார்க் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.

இதனிடையே ராணி 2-ம் எலிசபெத் அரியணை ஏறியதன் 70-வது ஆண்டை அரச குடும்பம் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், அரச குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கை சுமுகமாக தீர்க்க இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ராணி 2-ம் எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டொலர் வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை தொடர்ந்து, சட்டநடைமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதன் கிழமை ரஷ்யப் படையெடுப்பு ஒரு அமெரிக்க – பிரித்தானிய Sexed Up Intelligence செக்ஸ்டப் இன்ரலிஜன்ஸ்

எங்களுடைய சாத்திரிகளையும் மிஞ்சிய அமெரிக்க – பிரித்தானிய உளவுப் பிரவுகள் இன்று புதன் கிழமை பெப்ரவரி 16 சுக்கிரன் உக்ரைனில் நிற்கும் என்றும் சனி பகவான் ஏழு அரையின் உச்சத்திற்கு வரும் என்றும் அதனால் ரஷ்யா படையெடுக்கும் என்றும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்திருந்தனர். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்களது படையணிகளை ரஷ்யாவை நோக்கி நகர்த்தி இருந்தனர். லண்டனிலும் நியூயோர்க்கிலும் இராஜதத்திரிகள் மத்தியில் ஒரே அல்லோல கல்லோலம். ஆமெரிக்க மற்றும் மேற்கு நாட்டு தூதரகங்கள் தங்களுடைய மக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறும் யுத்தம் ஆரம்பித்தால் விசேட விமானங்களை அனுப்பியெல்லாம் காப்பாற்ற முடியாது என்று சர்வதேச பதட்டத்தையே ஏற்படுத்தி இருந்தன. மேற்கு நாட்டு ஊடகங்களில் யுத்தம் வெடிக்கப் போகின்றது, இதோ ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழையப் போகின்றன என்ற பாணியில் செய்திகளுக்கு தயாராக இருந்தனர்.

தாங்களும் ஒரு சமநிலையில் நின்று செய்திகளை வழங்குகின்றோம் என்பதைக் காட்ட மேற்கு ஊடகங்கள் ரஷ்ய உத்தியோகபூர்வ பிரதிநிதி ஒருவரையும் அழைத்து “நீங்கள் புதன் கிழமை உக்ரைனுக்கு படையெடுக்கப் போகின்றீர்களா? நேட்டோ படையணிகள் ஆயத தளபாடங்களை குவிப்பதால் பின் வாங்குவீர்களா?” என்று கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஷ்ய பிரதிநிதிகள், “நாங்கள் ஒரு போதும் படையெடுப்பது பற்றி பேசவே இல்லையே. இது அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பிரச்சாரமே அல்லாமல் வேறொன்றுமில்லை” என்று பதிலளித்தனர். ரஷ்ய பிரதிநிதியின் கூற்றைப் பிரதிபலிப்பது போல் மேற்கு நாட்டு ஊடகங்களே உக்ரைனில் மக்கள் எந்தவொரு யுத்தப் பதட்டமும் இல்லாமல் வழமைபோல் தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர் என்று செய்திகளை வெளியிடுகின்றன.

படையெடுப்பிற்கு தயாராகி விட்டதாக சொல்லப்பட்ட ரஷ்யாவிலும் பதட்டமில்லை. யுத்தம் நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்த்த உக்ரைனிலும் பதட்டமில்லை. ஆனால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் மட்டும் பெரும் பதட்டம். அதிஸ்ரவசமாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் ஜனாதிபதி ஜோ பைடனதும் கதையைக் கேட்டு லண்டனில் மக்கள் ரோய்லற் ரோலை வாங்கிக் குவிக்கவோ அல்லது பெற்றோல் ராங்குகளை நிரப்பவோ முற்படவில்லை.

“சதாம் ஹூசைனிடம் பேரழிவு ஆயதங்கள் இருக்கின்றது. சதாம் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் டமார் என்று லண்டனிலும் நியோர்க்கிலும் பேரிழவுக் குண்டுகள் வெடிக்கும் என்று 2003 இல் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ஒரு மெகா ரீல் விட்டார். அதன் விளைவால் ஈராக் யுத்தம் தொடங்கி 500,000 பேர் வரை கொல்லப்பட்டு இன்றும் யுத்தம் வேறு வடிவில் தொடர்கிறது. ஜோர்ஜ் புஸ்ஸிற்கு தன்னுடைய இருப்பை தக்க வைக்க ஒரு யுத்தம் தேவைப்பட்டது. அதற்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போட பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ரெடியானார்.

அதற்குப் பின் டேவிட் கமரூன் லிபியாவுக்குள் மூக்கை நுழைத்தார், சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தார். அந்நாடுகளை சின்னா பின்னமாக்கி இப்போது உக்ரைனில் வந்து நிற்கின்றனர்.

தன்னுடைய வீட்டு சுவருக்கு பெயின்ற் அடித்த கணக்கில் இருந்து தப்பவும் கோவிட் காலத்தில் சனங்கள் சாக இங்கால் குடித்து கும்மாளம் அடித்த கதையை மறைக்கவும் உக்ரைனில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைக்கின்றார் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன். அவர் மட்டுமல்ல ஜோ பைடனுக்கும் ரேற்றிங் ரொம்ப படான்.

கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மேற்கு நாடுகளில் விலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 7.5 வீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் இன்றைய கணிப்பின்படி 5.5 வீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. வரும் ஏப்ரலில் இது 7.5 வீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை ஈடுகட்டும் அளவுக்கு சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சம்பளங்களை கூட்டிக் கேட்க வேண்டாம் என பாங்க் ஒப் இங்லன்ட் கவர்னர் அன்ரூ பெய்லி தொழிலாளர்களைக் கேட்டுள்ளார். அதிகரிக்கும் விவாசியோடு ஒப்பிட்டால் குடும்ப வருமானம் இரண்டு வீதத்தால் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்படுகின்றது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு குறிப்பாக எரிபொருட்கள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. மறுபக்கம் குடும்ப வருமானம் வீழ்ச்சியடைகின்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு வட்டிவீதத்தை அதிகரிக்கின்றது. வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுக்கு செலுத்தும் மோட்கேஜ் அதிகரிக்கும். வாடகைக்கு இருப்பவர்களின் வாடகை அதிகரிக்கும். மக்களின் கையிருப்பில் உள்ள பணம் வறண்டு போய்விடும். மக்கள் நெருக்கடிக்கு உள்ளானால் அது அரசுக்கு எதிராகத் திரும்பும். இந்த அபாயநிலை மேற்கில் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு யுத்தம் வந்தால் மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியும். அதற்கு மேற்குலகிற்கு ஒரு யுத்தம் அவசியமாகின்றது.

அமேரிக்காவும் அதன் நேச நாடுகளும் இன்றும் தாங்கள் உலகைக் கோலோச்ச முடியும் என்ற பழைய நினைப்பிலேயே செயற்பட்டு வருகின்றன. கோவிட் அவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தியதை கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட சீனாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் தான் வந்தன. மேற்குநாடுகளின் விலைவாசி உயர்வுக்கு மாறாக சீனாவின் விலைவாசி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அவர்களது விலைவாசி உயர்வு தசம எண்ணிலேயே இருக்கின்றது. அது ஒன்றைக்கூட எட்டவில்லை. அதனால் சீனா மேற்கு நாடுகளுக்கு மாறாக வட்டி வீதத்தை குறைக்க உள்ளது. அந்நாடு கோவிட்டை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி இருப்பதுடன் கோவிட் மரணங்களை முற்றாக இல்லாமல் அல்லது ஒற்றை இலக்கத்துக்குள்ளேயே வைத்துள்ளது. பிரித்தானியாவில் இவ்வளவு வக்சீன் ஏற்றப்பட்டும் மரணங்கள் தினமும் 300 வரை செல்கின்றது. அமெரிகாவில் இதனிலும் அதிகம்.

ரஷ்யா ஒன்றும் பாலும் தேனும் ஓடும் நாடு கிடையாது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஒன்றும் புனிதரும் அல்ல. ரஷ்யாவுக்கு உக்ரைனில் கண் இருப்பதும் மீண்டும் பரந்த சோவியத் குடியரசை கட்டமைக்கும் கனவு விளாடிமீர் பூட்டினுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இதில் மேற்கு நாடுகள் குளிர்காய முற்படுகின்றனர் என்பது தான் உண்மை.

இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு !

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற செய்தி பரவி வருவதால், போர் பதற்றம் நீடிக்கிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா, படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. இந்த நெருக்கடி குறித்தும், எல்லையில் படைகள் குவிப்பு  குறித்தும் விவாதிப்பதற்கு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷியாவுக்கு உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஏவுகணைகளை நிறுத்துவதற்கான வரம்புகள் மற்றும் இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் சான்சலருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு புதின் கூறியதாவது:-
உக்ரைன் மற்றும் பிற முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், ரஷ்ய எல்லைகளுக்கு அருகே ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டு படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நிராகரித்தன. அதேசமயம், ரஷ்யா முன்பு முன்மொழிந்த பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இவ்வாறு புடினின் கூறினார்.
உக்ரைன் எல்லையை ஒட்டி ராணுவ பயிற்சிக்கு பிறகு படைகளின் ஒரு பகுதியினர் திரும்ப பெறப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் புடினின் இந்த பேட்டி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவர், பதின்ம வயதினருக்கான லிற்றில் எய்ட் இன் ஆக்க இலக்கியப் போட்டி! முதற் பரிசு 5,000 ரூபாய்!!!

லிட்டில் எயிட் திறன்விருத்தி மையம் நாடாத்தும் ஆக்க இலக்கியப் போட்டி மார்ச் மாதம் முதலாம் திகதி நிறைவடைகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் ஆக்கங்கள் படைப்புகளை மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இப்போட்டிகளில் உலகின் எப்பாகத்தில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, நேர்காணல்கள், ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் கீழ்வரும் கருப்பொருளில் அமைய வேண்டும்.

கருப்பொருள்:
1. தொழிநுட்பம்
2. கல்வி
3. பொருளாதாரம்
4. சமூகம்
5. வாழ்வியல்

மேற்குறிப்பிட்ட கருப்பொருளுக்கமைவாக 250-300 சொற்களுக்கு மேற்படாமல் ஆக்கம் இருத்தல் வேண்டும். மேலும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்கு பெற்றலாம். வயதெல்லை 18 வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும். ஆக்கங்கள் தெளிவான எழுத்துக்களில் கையெழுத்து பிரதியாகவோ கணினிப்படுத்தியோ ஆக்கங்கள் 01.03.2022 ற்கு முன்னதாக எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்ப வேண்டும். ஆக்கங்களோடு ஆக்கத்தை அனுப்பியவரின் முழுப்பெயர் வயது அவருடைய படம் ஒன்றையும் இணைக்கவும்.

போட்டிகளில் தரமானதாக தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் லிற்றில் பேர்ட்ஸ் – சின்னப் பறவைகள் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும். நடுவர்களின் தீர்பே இறுதியானதாகக் கொள்ளப்படும். வெற்றிபெறும் முதல் மூன்று ஆக்கங்களுக்கு சான்றிதழ்களும் பரிசுத் தொகையும் அனுப்பி வைக்கப்படும். பரிசு பெற்றவர்கள் சஞ்சிகை வெளியீட்டுவிழாவில் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு லிற்றில் பேர்ட்ஸ் சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

முதலாம் பரிசு:     5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு:   1000 ரூபாய்

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர் குழு,
லிற்றில் பேர்ட்ஸ்,
லிற்றில் எட்ய்,
கனகராசா வீதி,
திருநகர்,

Editorial Team,
Little Birds,
Little Aid,
Kanagarasa Veethy,
Thirunagar,
Killinochie.

அல்லது

littleaidsl@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

கைபேசி இலக்கம்: 0094 7773 78556

தகவல்: லிற்றில் எய்ட்

“ரஷ்யா எங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கும்.” – உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பால் பெரும் பதற்றம் !

ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன.உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 லட்சம் வீரர்களை நிறுத்தி இருந்த ரஷ்யா தற்போது அந்த எண்ணிக்கையை 1.30 லட்சமாக உயர்த்தி உள்ளது.

இதையடுத்து, அமெரிக்கா கீவ் உள்ளிட்ட உக்ரைன் நகரங்களில் உள்ள தூதரக அதிகாரிகள், அமெரிக்கர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் 3000 அமெரிக்க இராணுவத்தினர் உக்ரைன் எல்லையில் இருந்து 100கிமீ தொலைவில் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா படைகளும் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன. இதனால், 3ம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கொல்ஸ் இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் எனத் தெரிகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ரஷியா – உக்ரைன் இடையேயான போர் பதற்றம் !

ரஷியா – உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு இராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளன. தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன. முக்கியமாக உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பாக தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் 40 இலங்கையர்கள் தற்போது உக்ரைனில் உள்ளனர் என்றும் அவர்களில் 7 பேர் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக அங்கு சென்றுள்ளனர் என்றும் உத்தியோகப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.உக்ரைனில் இலங்கை தூதரகம் இல்லாத போதிலும் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பாக துருக்கி – அன்காராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவதானம் செலுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதே நேரம் போர் மூண்டால் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறுவார்கள். அவ்வாறு வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றிய நாடான போலந்து நாடு தயாராக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.
மற்ற நாடுகள் உக்ரைனில் தங்கள் தூதரக பணிகளைக் குறைக்கும் நிலையில், உக்ரைன் மக்கள் அதிக அளவில் வெளியேற்றும்போது ஏற்படும் சிரமத்தை போக்குவதற்காக தனது தூதரக நடவடிக்கைகளை தொடர்வதாக போலந்து கூறுகிறது.
அதேசமயம் உக்ரைனில் நிலைமை மோசமடையாது என்று நம்புவதாக போலந்து வெளியுறவுத்துறை துணை மந்திரி பிரசிடாக்ஸ் தெரிவித்தார். உள்துறை அமைச்சகம் பல வாரங்களாக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பரீட்சையில் குறைவான புள்ளி – குடும்பத்தினரை சுட்டுக்கொலை செய்த 15 வயது பள்ளி மாணவன் !

ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான அலிகாண்டேவில் இருந்து   20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
15 வயது பள்ளி மாணவன் தேர்வில்  குறைவான மதிப்பெண் பெற்றது தொடர்பாக அவனது தாய் சத்தம் போட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் இருந்த வேட்டையாடும் துப்பாக்கியால் முதலில் தாயையும், பின்னர் தனது 10 வயது சகோதரரையும், தொடர்ந்து தனது தந்தையையும் அந்த சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான். தொடர்ந்து 3 நாட்கள் சடலங்களுடன் வீட்டில் அந்த சிறுவன் தனியாக இருந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து வெளியே யாருக்கும் தெரியவில்லை.
3 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டிற்கு சென்ற உறவுக்கார பெண்ணிடம் அந்த சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றியதுடன் சிறுவனை கைது செய்தனர்.

புனித நூல் பக்கங்களை கிழித்த மனநலம் குன்றியவரை மரத்தில் கட்டி கல்லால் அடித்துக் கொலை செய்த கும்பல் !

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நபர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியதை அடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் உடலை மரத்தில் அவர்கள் தொங்க விட்டனர்.
அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மரத்தில் இருந்து உடலை கீழே இறக்க முயன்ற இரண்டு போலீசார் மீது அந்த கும்பல் கற்களை வீசியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார். சட்டத்தை பொது மக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தமது அரசு சகித்துக் கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இது குறித்து பஞ்சாப் காவல்துறைத் தலைவரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் இம்ரான்கான் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

“இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படவில்லை.” – கொரியாவில் மைத்திரிபால

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகின்ற போதிலும் எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச தராதரத்திலான முழுமையான நல்லிணக்கம் ஏற்படவில்லை உறுதியான அதிகாரப்பொறிமுறை ஏற்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

கொரிய தலைநகரில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கிமூனின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பான்கி மூன் தன்னாலான அனைத்தையும் செய்தார். நான் சமாதானத்திலும் யுத்தத்தை தவிர்ப்பதிலும் நம்பிக்கை கொண்டவன். எந்த பிறழ்வுகளிற்கும் மோதல் பதிலாக அமையக்கூடாது.

சம்பந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதும் பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்புவதுமே அவ்வாறான தருணங்களில் அவசியமான நடவடிக்கை.  இதன்காரணமாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லிணக்கத்தின் நான்கு தூண்களை அடிப்படையாக வைத்து இலங்கை நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டது.

சர்வதேச சமூகம் மிகவும் தீவிரமான உடனடி தீர்வாக அமையக்கூடிய நடவடிக்கைகளை எதிர்பார்த்தது – வேண்டுகோள் விடுத்தது. அவைஉயர்ந்த எதிர்பார்ப்புகள் ஆனால் துரதிஸ்டவசமாக எதிர்பார்க்கப்பட்ட வேகம் நல்லிணக்கப்பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் பிரதிபலிக்கவில்லை.

கொரிய தீபகற்பத்தின் மோதல் 70 வருடங்களாக நீடிப்பது. மோதலில் ஈடுபட்ட தரப்பினரின் நலன்கள் குறித்தும் கடந்த காலங்கள் குறித்தும் சமரசம் செய்வது விரைவாக முன்னெடுக்ககூடிய நடவடிக்கையில்லை. காயங்கள் ஆழமானவையாக காணப்படுவதே இதற்கு காரணம்.

எங்கள் மோதல் 2009 இல் முடிவிற்கு வந்தது. 12வருடங்களின் பின்னர் நாங்கள் இன்னமும் உறுதியான அதிகாரப்பொறிமுறையை உருவாக்கவில்லை – எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச தராதரத்திலான நல்லிணக்கம் நிறைவேறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உயிர்கள் வாழ தகுதியான புதிய கோள் கண்டுபிடிப்பு !

உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:-

“ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கோள் நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக்காது.

பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 60 மடங்கு குறைவாகும். உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழ்நிலையை கொண்டிருக்கும். எனவே உயிர்கள் வாழ இது உதவும்.

நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள கோள் இருக்கும் மண்டலம் உயிர்கள் வாழ மிக சரியாக இருக்கும் பகுதியில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஜேபரிகி கூறும்போது, “இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது” என்றார்.