Multiple Page/Post

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 317 கோடிரூபாவில் புதிய வீடுகள் – திட்டம் ஆரம்பம் !

தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துரையாடி, தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு 317 கோடிரூபாவில் புதிய வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்தார்.

முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமிலுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.

விளாத்திகுளம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மார்பகங்கள் பற்றி ஆபாசமாக கிண்டல் செய்த சமூக வலைத்தளவாசிகளுக்கு என் மார்பகங்கள் தொடர்பில் பெருமைப்படுகிறேன் என பதிலளித்த ஹிருணிகா!

நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்  ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டம் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தில் ஏற்பட்ட  கைகலப்பில் ஹிருணி பிரேமச்சந்திரவினுடைய மார்பகங்கள் வெளித் தெரிந்ததாக  காணொளி ஒன்றை பதிவேற்றி சமூக வலைத்தளங்களில்  இளைஞர்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளவாசிகள் பலரும் பகிர்ந்து அதனை கேலியும் கிண்டலும் செய்திருந்தனர்.

 

இதுபோன்றுதான பதிவுகளை தமிழ் இளைஞர்கள் சிலரும் பகிர்ந்திருந்ததை  என்னுடைய முகநூல் கணக்கிலும் காண முடிந்தது. இன்றைய காணொளியை பகிர்ந்து – கிண்டலடித்த இளைஞர்கள் பலரும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் தொடர்பிலும் அப்போது அரங்கேற்றப்பட்டிருந்த பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் தொடர்பிலும் அதிகம் கோவப்பட்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். இது போக வித்யா படுகொலை நடந்தபோது கோவப்பட்டது போல தங்களை  காட்டிக்கொண்டவர்களாக கூட இவர்கள் இருக்கலாம்.  இதேபோன்றுதான் கேலியும் கிண்டலும் தன்இன பெண்ணுக்கு – தன் குடும்ப பெண்ணுக்கு நடந்தால் மட்டும் துடித்துப் போகும் நம்மவர்கள் அடுத்த வீட்டுப் பெண்களுக்கு என்ன நடந்தால் எங்களுக்கு என்ன என கிண்டல் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கேட்டால் அனைத்தையும் நகைச்சுவை என கடந்து போகின்றனர். இப்படியான சின்னச்சின்ன நகைச்சுவைகள் தான் பெண்கள் மீதான அடக்கு முறைகளின் ஒட்டுமொத்தமான வடிவம் என்பேன்.

இதற்கு நான் அளிக்கும் பதிலை விட ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வழங்கியுள்ள பதில் இவர்களுக்கு சாட்டையடி போல இருக்கும் என நம்புகிறேன். அவருடைய பதில்.

“I am proud of my breasts! I breastfed three beautiful kids. I nurtured them, comforted them and dedicated my whole body for them. I am sure people who make fun of my exposed breasts ( due to the clash with the police) also sucked thier mothers nipples until its raw when they were infants.

Anyway when you are done talking, making memes and laughing about my breasts , there was ANOTHER civilian died in a queue… Just so you know!

#ආසියාවේආශ්චර්‍ය් #GoHomeGota2022”

“எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!
அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!”

– ஹிருணிகா பிரேமச்சந்திர

 

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழப்பு 920ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

 

இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். ஆனால் சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

 

இதன் இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி கொண்டனர். அதேபோல் கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களிலும் வீடுகள் இடிந்தன. இதையும் படியுங்கள்: உக்ரைன் கார்கிவில் ரஷிய ஷெல் தாக்குதலில் 15 பேர் பலி- ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தகவல் இந்தநிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 255 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி நிறுவனம் தெரி வித்திருந்தது. இது தற்போது 920ஆக உயர்ந்துள்ளது. இதில் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

“இன்றைய உணவுக்கு அரிசி இல்லாவிட்டால் இதிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.” – யாழில் கடை முதலாளியின் நெகிழ்ச்சியான செயல் !

இலங்கையில் நாளுக்கு நாள் உணவு தொடர்பான நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  சில இடங்களில் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு உணவு பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் மாதமளவில் இலங்கை இதை விட பாரிய உணவு நெருக்கடியை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு சேமிப்பு தொடர்பில் இலங்கை மக்கள் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

 

இந்த கடினமான நேரங்களில் சில சில மனிதர்கள் இன்னொருவரினை புரிந்து கொள்வதே கடினமான விடயம் என்ற நிலை இருக்கையில் அடுத்தவருக்காக உதவிக்கரம் நீட்டுவது எல்லாம் பாராட்டப்பட வேண்டியவை.

 

பொருட்களின் விலை நாளுக்கு உயர்கிறதோ இல்லையோ – பல கடை முதலாளிகள் தங்களுடைய உழைப்புக்காக பொருட்களின் விலையை மலையளவுக்கு உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இவர்களுக்குள் சிலரிடம் இன்னமும் மனிதாபிமானம் உயிரப்புடன் உள்ளது என்பதை காட்டுவது போல சாவகச்சேரி – பாலையடி பகுதியில் கடைவைத்துள்ள முதலாளி ஒருவர் செய்த செயல்தான் இன்றைய சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டிருந்ததது.

 

May be an image of outdoors

கடைமுதலாளி ஒருவர் தன்து கடையின் முன்னால் அரிசியை ஒரு பெரலில் வைத்துவிட்டு “இன்றைய உணவுக்கு அரிசி இல்லாமல் வருந்தும் உறவுகள் இதிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.” என ஒரு அறிவிப்பையும் பலகையில்  விடுத்துள்ளார்.

சமகால பொருளாதார நிலையில் அடுத்தவனை பற்றியே சிந்திக்காது ஓடிக்கொண்டிருக்கும் பலருக்குள் குறித்த கடைமுதலாளியின் செயல் பலராலும் பாராட்ப்பட்டுக்கொண்டிருக்கிறது.

முன்னைநாள் பிரபல செய்திவாசிப்பாளர் – இன்று சமோசா விற்கும் நிலை !

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம்.

அதில், ஆப்கான் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் சமோசா விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள்.

சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலிபான்களின் கெடுபிடி ஒருபுறம் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் தான், ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர், “தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை. மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறர். ஆப்கானில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்தி – மாலை மலர் (நன்றி)

முட்டாள்களிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் – பெற்றோல் வரிசைகளில் முடங்கும் நாட்டின் ஊழியப்படை !

கடந்த இரு தினங்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கான வரிசை, உணவுக்கான வரிசை, என பார்க்கும் இடமெங்கும் வரிசைகளே தொடர்கின்றன. பல இடங்களில் எரிபொருளுக்காக நின்ற இளைஞர் குழுக்களிடையே மோதல்கள்.அரச அதிகாரிகள் தொடங்கி தனியார்துறை ஊழியர்கள் என அனைவரும் பெற்றோல் செட்களில் கிடையாக கிடக்கின்றனர். நேற்றைய தினம் பெற்றோலுக்காக நான் சுமார் 12 மணிநேரங்களுக்கு மேலாக காத்திருந்தும் பெற்றோல் இல்லை. வந்த பெற்றோலும் பணம் உள்ளோருக்கும் – அதிகார வர்க்கத்துக்கும் போய் விட்டதாக வரிசையில் நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.
தலைமன்னாரில் நாள் முழுக்க மண்ணெண்ணெய்க்காக காத்து நின்ற மக்களுக்கு அதனை கொடுக்காமல் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் பின்புறமாக கொடுத்திருக்கிறார் பெற்றோல் செட் முகாமையாளர்.
மூவர் வரிசையில் நின்றே உயிரிழப்பு.
கடந்த இரு நாட்களில் பெற்றோல் செட்களில் பல மணிநேரம் வரிசையில் நின்றதால் மூவர் வரை மரணம். அதிலும் நேற்று ஒரு வீடியோவை காணக்கிடைத்தது. தந்தை பெற்றோலுக்காக ஆட்டோவுடன் காத்துக் கொண்டிருக்கிறார். மகன் பெற்றோலுக்காக மோட்டார்சைக்கிளுடன் காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட காத்திருப்பு முடிவில் ஆட்டோவில் காத்திருந்த தந்தை இறந்துவிட்டார். இது தெரியாத மகன் அப்பா அப்பா என் தட்டியெழுப்பியும் அவர் எழவில்லை. இறந்தவரின் தலை கீழே விழ மகன் உடைந்து போய் அழுதுகொண்டே கீழே உட்கார்ந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்த்தது முதல் அவ்வளவு வேதனையாக இருந்தது. https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0EUUPndwrY5aPi5YxADHTHX9yTQek8fR8h2mFD3FhSLXBnZuEB5RCRZy58rRk7bAGl&id=100006710538212
உண்மையில் நாம் மிக நெருக்கடியான சூழலை நெருங்கிகொண்டிருக்கிறோம் என்பதையே கடந்த இரண்டு நாட்கள் தெளிவாக எனக்கு காட்டியுள்ளன.
மருத்துவமனைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. இப்படியாக நாட்டினுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
கடந்த பல தினங்களாக இலங்கையின் பெட்ரோல் செட்களில் லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அங்கு இலங்கை மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட நாளாந்தம் தொழிலுக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வெளிப்படையான உண்மை. இத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் பெட்ரோல் செட்களில் மட்டுமே காத்துக்கொண்டிருந்த நாட்டினுடைய நாளாந்த வருமானம் என்னவென்பதை அரசாங்கம் நினைத்திருக்கவில்லை.  இது தொடர்பில் எந்த ஒரு ஆக்கபூர்வமான கருத்தையும் கூட இதுவரையில் அரசாங்கம் வெளியிட்டு இருக்கவில்லை.  அரசாங்கமும் அது சார்ந்த அதிகாரிகளும் இது தொடர்பில் எந்த ஒரு கவனமும் எடுக்காது இன்னமும் கடன் வாங்குவது தொடர்பில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த நிலைக்கு யார் காரணம்..?
ஒரு படிப்பறிவில்லாத சாதாரண நாட்கூலி வேலை செய்பவர்கள் கூட தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது. இந்த மாதத்துக்கான செலவுக்கு எவ்வளவு தேவைப்படும். வரவு எவ்வளவு..? செலவு எவ்வளவு..? மேலதிக செலவை எவ்வாறு கட்டுப்படுத்துவது..? மேலதிக செலவை ஈடு செய்ய என்னென்ன வழிகளில் உழைக்க வேண்டும். கையில் உள்ள பணத்தை மாதம் முடிவுவரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல கோணங்களில் சிந்தித்து தன்னுடைய குடும்பத்தை கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்தத் திட்டமிடல்கள் ஓரளவுக்கேனும் இருப்பதாலேயே இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் கூட  சாதாரண குடும்பங்கள் ஓரளவேனும் தாக்கப்பிடிக்கின்றன.
ஒரு சாதாரண பிரஜையிடம் – இந்த நாட்டின் சாதாரண கூலித் தொழிலாளியிடம் இருக்கக்கூடிய இந்த திட்டமிடல் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாமையை இன்றைய பிரச்சனைக்கான ஒட்டுமொத்த காரணமாகும்.
பிரச்சினைகளுக்கான காரணம் அரசியல்வாதிகளே !
சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இன்று பொருளாதார நெருக்கடி சார்ந்து நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் பொறுப்பற்ற அரசியல் தலைவர்களே.! இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக பதவியில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்.
மக்களின் உளவியல் நிலை மனோநிலை பற்றி கிஞ்சித்தும் யோசனை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் பதில்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய தினம் ஊடகங்களுக்கு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் “21ஆம் திகதியுடன் பெற்றோல் கையிருப்பு முடிந்துவிடும் அதற்குப் பிறகு இந்த நாட்டில் பெட்ரோல் இருக்காது.” எனக் குறிப்பிடுகின்றார். இவ்வளவு முட்டாள்தனமான ஒரு அறிவிப்பு இது. மக்களை கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத அதிகார வர்க்கத்தின் ஒரு குரலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது.
 பெட்ரோல் 21ஆம் திகதியுடன் முடிவடைந்த விடுகிறது என ஒரு அமைச்சர் அறிவித்தால் பாவம் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்..! வேறு வழியில்லை.  இரவு பகலாக காத்திருந்தேனும் அந்த பெட்ரோலை பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்களின் உடைய ஒரே நோக்கமாக இருக்கும். இன்று பெட்ரோல் செட்களின் நிரம்பி வழியும் இந்த கூட்டத்திற்கு இந்த அமைச்சரின் அறிவிப்பே காரணம்.
அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் அறிவு தொடர்பாக அழிவு தொடர்பில் ஆருடம் கூற பதவியேற்றுக் கொண்ட ஜோசியர் போலவே அவரைக் காண முடிகின்றது. “இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – எல்லாப் பொருட்களின் கையிருப்பு முடிந்துவிட்டது – கடனுதவி கிடைக்க பல மாதங்கள் செல்லும்.” என மக்களை மேலும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கருத்துக்களையே அவர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மக்களை தெரியப்படுத்த வேண்டியது ஒரு நாட்டின் பிரதமர் என்ற நிலை எவ்வளவு கனதியான பொறுப்பில் உள்ளார் ரணில். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவதை இந்த அரசினுடைய நோக்கம் போல தோன்றுகிறது. இவ்வளவு நாள் ராஜபக்சக்கள் விலகி விட்டால் நாடு செழித்து விடும் என போர்க்கொடி தூக்கி கொண்டிருந்த கோட்டகோகம போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க வந்ததும் என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.
ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் பின்னணியில் ரணில் உள்ளாரா..? என்ற சந்தேகங்களும் எழாமலில்லை.
உள்ளதே  உணவு பற்றாக்குறை – எரிபொருள் தட்டுப்பாடு – சமையல் வாயு இல்லை என பல பிரச்சினைகளால் நொந்து துவண்டு போயுள்ள மக்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலின் தேவை அவ்வளவு அவசியமாக உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில்  உணவுத்தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தற்கொலைகள் நடந்தேறிவிட்டன. விரைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது.
சரி என்னதான் தீர்வு..?
கடன்கள் தொடர்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய இறுதியான தருணத்தில் தற்போதைய தலைவர்கள் உள்ளனர். சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்கள் மட்டுமே நாட்டை முன்னேற்றும் என்ற ஒரு மாய பிம்பத்தை இலங்கையின் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். சரி வாங்க கூடிய கடன்கள் பற்றிய தெளிவு புரிதலாவது உள்ளதா எனக் கேட்டால் அதுவும் இல்லை. கடந்த காலங்களில் இலங்கை சர்வதேசநாணயநிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்பாலும் சலுகையற்ற கடன்களாகவே காணப்படுகின்றன. இந்த சலுகையற்ற கடன்களுக்கு வட்டி வீதமும் அதிகமாகும்.  மேலும் இந்த சர்வதேச அமைப்புகளிடமிருந்து நாம் பெறக்கூடிய கடன்கள் கூட தற்காலிகமாக ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியனவே தவிர பெரிதான மாற்றங்களை தரமாட்டாது. ஏனெனில் கடன்கள் அவ்வளவு அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புக்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் எங்களுடைய எதிர்கால தலைமுறையை முழுமையாக மீண்டும் வெள்ளைக்கார நாடுகளுக்கு அடிமையாக்கிவிடும் என்பதே உண்மை.
எங்களுடைய தலைமுறையும் சரி எங்களுக்கு முன்னைய தலைமுறையினரும் சரி முழுமையாக கேள்வி பதில் வினா விடை அமைப்புக்கு பழக்கப்பட்டு விட்டோம். அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படக் கூடிய கல்வியில் பொருளியல் சார்ந்த விஷயங்கள் அடிப்படையிலிருந்தே கற்பிக்கபடுதல் வேண்டும். பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுதல் வேண்டும். அப்போது மட்டுமே அந்த மாணவர்கள் பின்னாட்களில் வாக்காளர்களாக மாறுகின்ற போது அல்லது அரசியல் தலைவர்களாக மாறுகின்ற போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்க கூடிய பக்குவத்தை உருவாக்க முடியும். தேவையே இல்லாமல் யாரோ அரசன் மூன்று திருமணங்களை செய்து கொண்டார் – ஒரு அரசிக்கு 15 திருமணங்கள் நடந்தன என்றெல்லாம் மாணவர்களுக்கு கற்பித்து கொண்டிருக்கக்கூடிய பாடத்திட்டங்களுக்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் உடன் கூடிய கல்வி முறையை வழங்க முன்வரவேண்டும். விவசாயக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு தற் சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும்.   இப்படியாக கல்வித்துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் இலங்கையின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களுக்கு சிறப்பான அத்திவாரமாக அமைய வேண்டும் என்பது எதிர் வரக்கூடிய அரசாங்கங்கள் தெளிவாக செயற்பட வேண்டும்.
இனவாதம் சார்ந்த பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு ஒற்றுமையோடு அனைத்து இனத்தவர்களும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற இணைவது காலத்தின் கட்டாயமாகிள்ளது. மலேசியா,  சிங்கப்பூர் , குவைத் போன்ற நாடுகளின் பொருளாதார முறைமைகளை நமக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் எல்லாம் ஆட்சி மொழியாகவும் மதமாகவும் பிரதானமான ஒரு மதமும் மொழியும் செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும்கூட எல்லா இனத்தவர்களையும் இணைத்துக்கொண்டு பயணப்படக்கூடிய பொருளாதார கட்டமைப்பு ஒன்றை காணமுடிகின்றது. இதுவே இன்றைய கால இலங்கைக்கும் அத்தியாவசியமானது.
மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அரசியல் தலைவர்களை இனிமேல் சரி மக்கள் தெரிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனவாத அரசியலை பேசிப்பேசியே இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் இந்த அரசியல் தலைவர்கள்.
வடக்கு- கிழக்கில் உள்ள  தமிழ்தேசிய கட்சிகளின்  தலைவர்கள் கூட – பாராளுமன்ற உறுப்பினர்களும் தான் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள தமிழர்களிடம் நாட்டை அளியுங்கள் அவர்கள் இலங்கையை மீட்டுத் தருவார்கள் என்றெல்லாம் இன்னமும் பழைய புலி அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் தேசிய தலைவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீங்க கூடாது அதில் நீங்குவதில் இவர்களுக்கு இம்மியளவும் உடன்பாடு இல்லை. நுனி நாக்கில் தேனும் அடி நாக்கில் விஷமும் போல இந்த தமிழ் தலைவர்களின் உடைய நகர்வுகள் அமைகின்றன. பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தாலே வெளிநாட்டில் பலருக்கு குடியுரிமை கிடைக்கும். அவ்வாறு வெளிநாட்டில் குடியேறியோர் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு பண உதவி தொடங்கி அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவர். இப்படியாக இவர்கள் பேசக்கூடிய தமிழ் தேசியத்திற்கு பின்னாலேயே நூற்றுக்கணக்கான சுயநல அரசியல் புதைந்து போய் உள்ளது. இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழர்களுக்கு ராஜபக்சக்கள் செய்த கொடுமைகளை இலங்கை அனுபவிக்கிறது என்றெல்லாம் கடந்துவிட முடியாது. ஏனெனில் இங்கு எங்களுடைய தலைமுறையினரும் – எங்களுடைய பெரியவர்களும் – எங்களுடைய எதிர்கால சிறுவர்களும் கூட நடுத்தெருவில் தான் எரிபொருளுக்காகவும் பெற்றோலுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒன்றாய் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பது பற்றி சிந்திப்பதே இன்றைய காலத்தின் ஆகப்பெரிய தேவையாகும்.

மனித உரிமையும் ஜனநாயகமும் தனிச்சொத்துடமை என்கிறாரா பாண்டிபஜார் போராளி ராகவன்? இலக்கிய விமர்சகர் வாகீசன்

திரு.சின்னையா ராஜேஸ்குமார்(ராகவன்) அவர்களுக்கு,
‘தேசம்நெட்’ இதழில் வெளியாகியிருந்த ‘தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்’ என்ற எனது கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்த தாங்கள் என்னை நோக்கி “எனது பெயரைக் கூடக் குறிப்பிட திராணியற்று என்னை பாண்டிபஜார் போராளி என்று கூறி என் மீது அவதூறு பரப்புகிறார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அனைவரும் அறிவார்கள் கடந்த 2 வருடங்களாக தாங்களும் தங்களது இலண்டன் இலக்கியவாதியாகிய ஒரு நண்பரும் சேர்ந்து எனக்கு ‘தோழர் உஉ’ என்ற பட்டத்தை வழங்கி (நான் ‘உண்மைகள் உறங்குவதில்லை’ என்ற கட்டுரையொன்றினை எழுதியபடியால்) அந்தப் பெயரிலேயே என்னை நோக்கி செய்த அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்குரிய Screenshot எல்லாம் என்னிடம் ஆதாரமாக உண்டு, வேண்டுமானால் பதிவிடத்தாயார். அப்போதெல்லாம் உங்களுக்கு எனது பெயரைக் குறிப்பிட திராணி இருக்கவில்லையா ??? எவ்வளவு கேவலமாக எல்லாம் என்னை விழித்திருந்தீர்கள். விஷப்பாம்பு என்றீர்கள். விஷக்கிருமி என்றீர்கள். ஒரு மனநோயாளி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர் என்றீர்கள். அவதூறு என்பது உங்கள் போன்றவர்களுக்கு எல்லாம் இரத்தத்தில் ஊறிப் போன விடயம்.
நிற்க, இலண்டன் வந்த சபாலிங்கத்தை நீங்கள் சந்திக்க மறுத்ததாக நான் கூறிய விடயத்தை மறுத்த நீங்கள் “சபாலிங்கத்தை நான் சந்திக்க மறுத்ததாக அப்பட்டமான பொய் ஒன்றை உதிர்த்திருக்கிறார். சபாலிங்கம் எனக்கு சிறு வயதிலே பழக்கமானவர். எனது ஊர்க்காரரை தான் திருமணம் செய்து கொண்டார். அவரும் புஸ்பராஜாவும் லண்டன் வந்து என்னை சந்தித்து உரையாடினர். அது பற்றி ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள் புத்தகத்தில் புஸ்பராஜா படத்துடன் பதிவு செய்துள்ளார்.” என்று ஒரு அப்பட்டமான பொய்யினைக் கூறி புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற புத்தககத்தில் இருந்து ஏதோ இரண்டு பக்கங்களை Photocopy செய்து பதிவேற்றி மக்களை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறீர்கள். ஒரு சாதாரண முகநூல் வாசகன் இதையெல்லாம் check பண்ணி பார்க்க மாட்டான் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இப்படி ஒரு மாபெரும் மோசடியைச் செய்துள்ளீர்கள்.
இப்போது நான் குறிப்பிடுகிறேன். எனது கையில் உள்ள ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் (இது 2ம் பதிப்பு) 590 ம் பக்கத்தில் (இந்தப் புத்தகத்தின் 1வது பதிப்பில் 560ம் பக்கம்) உங்களைச் சந்தித்தது பற்றி புஷ்பராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்
“—அதன் பின்பு 1993 ம் ஆண்டு நவம்பரில் லண்டனில் சந்தித்தேன். நீண்ட காலத்திற்கு பின் சந்தித்ததால் பல விடயங்கள் பேச வேண்டி இருந்தது. இருவரும் நீண்ட நேரமாகப் பேசினோம்—-“. இதில் சபாலிங்கம் குறித்தோ அல்லது சபாலிங்கத்துடன் அவர் உங்களை வந்து சந்தித்தது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. இப்போது பகிரங்கமாக உங்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். நீங்கள் கூறியபடி சபாலிங்கத்துடன் வந்து உங்களைச் சந்தித்ததை புஷ்பராஜா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் என்றால் அது நீங்கள் வைத்திருக்கும் புத்தகத்தில் எத்தனையாவது பக்கத்தில் உள்ளது என்ன கூறியிருந்தார் என்று பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா ??? முப்பது வருடங்களாக மக்களை ஏமாற்றியது போதும். நிறுத்திவிடுங்கள். இனியாவது தயவு செய்து மனந்திரும்புங்கள்.
._._._._._.
அசோக் யோகன் கண்ணமுத்துவின் பதிவில் இருந்து…
 
நண்பர் சபாலிங்கம் தமிழிழ விடுதலைப்புலிகள் தொடர்பாக ஒரு ஆவணம் எழுத எண்ணி, பல தரப்பினரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த காலம் அது. சபாலிங்கம் புலிகளால் 1994 ஆண்டு படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவ் ஆவண முயற்சி தொடர்பாக இராகவனை சந்தித்து உரையாட லண்டன் சென்றிருந்தார். இரண்டு நாள் தங்கியிருந்து இராகவனோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயன்றும், அவரால் முடியவில்லை. இராகவன் பக்கத்திலிருந்து எந்த தொடர்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றதோடும், இராகவன் மீது கடுங்கோபத்தோடும் பிரான்சிக்கு திரும்பியிருந்தார்.
 
இந் நிகழ்வு சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்திருந்தது. லண்டனில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும் இது தெரியும். இச் சம்பவம் எனக்கும் சபாலிங்கம் ஊடாக தெரிந்திருந்தது.
இராகவனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இச் சம்பவம் தொடர்பாக கேட்டிருந்தேன். சபாலிங்கம் லண்டன் வந்து, புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததன் காரணமாக, சபாலிங்கத்தை தான் சந்திக்கவிரும்பவில்லையென்று என்று கூறினார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற நண்பர் சபாலிங்கம் அவர்களின் நினைவுக் கூட்டத்திற்கு தலைமை தாங்க இராகவன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் மீது மரியாதை கலந்திருந்த காலகட்டம்.
 
இந்த தலைமை தாங்கல் தொடர்பாக சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்கள் அதிருப்தியும், என் மீது கடும் விமர்சனங்களையும் கொண்டிருந்தனர்.
வாசன் இப் பிரச்சனையை எழுதிய போது, இராகவன் சபாலிங்கத்தை சந்திக்க விரும்பான்மைக்கான காரணத்தை (என்னிடம் சொன்னதை) சொல்லி இருக்கலாம். ஆனால், இதை மறைத்து, சபாலிங்கத்தை சந்தித்ததாக பொய் ஒன்றை கூறுகின்றார். தவறுகளை ஏற்றுக்கொள்வதில் ஏன் நமக்கு இத்தனை பொய்மை , கபடம், மோசடி .. ?
 
இராகவன் தன்மீது வைக்கப்படும் நேர்மையான – உண்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவராகவே, புலிகளின் காலத்திலிருந்து இற்றைவரை தன் வாழ்வை தொடர்கின்றார்.
விமர்சனங்கள் வைப்பவர்களை மனநோயாளிகள் என்றும் அவதூறாளர்கள் என்றும் பட்டம் சூட்டி மகிழ்வது அவரின் உளவியல் மனப்பாங்காக இருக்கின்றது. இப் பட்டங்களை எனக்கும் அவர் அடிக்கடி தாராளமாக வழங்கி மனமகிழ்வு கொள்ளும் ஒரு மனநிலையை தொடர்ச்சியாக பேணுகிறார்.
இராகவன் அவர்களுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள்; நாங்கள் இவ்வாறு முரண்பட்டு கொண்டிருப்பதை விடுத்து, நாம் எல்லோரும் சுயவிமர்சனங்களோடும், உண்மையோடும்- நேர்மையோடும் , பொது வெளி ஒன்றில் அனைத்து முரண்பாடுகளையும் பேசி உரையாடும் தளம் ஒன்றை உருவாக்குவோம். இவ் உரையாடலில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். நீங்களும் அவசியம் வரவேண்டுமென விரும்புகின்றேன்.

அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்கள் – உலக சுகாதார நிறுவனம் விசனம் !

ஆப்ரிக்காவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் இன்று உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது.

உலகளவில் 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 72 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என பொது அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில், “குரங்கு அம்மை வைரஸ் பரவல், ஆப்பிரிக்காவுடன் தெளிவான தொடர்பு இல்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பிரதான ஊடகங்களில், அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளனர். இதையடுத்து உலக சுகாதார நிறுவனம், நிபுணர்களுடன் இணைந்து, குரங்கு அம்மை வைரஸின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அந்த அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வைரஸ் தொற்று விரைவில் புதுப்பெயரில் அழைக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வாதிகாரம் ஒழியட்டும் கியூபாவில் மக்கள் போராட்டம் – அமெரிக்காவின் சதி என்கிறார் கியூப ஜனாதிபதி !

கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக 381 பேருக்கு  25 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்துள்ளது. இவர்களில் 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல் அல்லது கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சுதந்திரம் வேண்டும். சர்வாதிகாரம் ஒழியட்டும்”, “விடுதலை வேண்டும்” “எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்,”  என கோஷமிட்டே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விலைவாசி உயர்வு மற்றும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் “16 முதல் 18 வயதுடைய 16 இளைஞர்களும்” அடங்குவர் என்று அனைத்தின் அரச தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.

மிகவும் அரிதான போராட்டத்தையடுத்து, கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

1962-ஆம் ஆண்டில் இருந்து கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை, “பொருளாதாரத்தை முடக்கும் கொள்கை” என்று அவர் சாடினார். நாட்டை வீழ்த்துவதற்காக அமெரிக்கா அமர்த்திய கூலிப்படையினர்தான் இந்தப் போராட்டக்காரர்கள் என்று கூறிய அவர், தனது ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கியூப புரட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“புரட்சியாளர்களே! நீங்கள் வீதிக்கு வந்து போராட உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் – மேலும் இருவர் பலி !

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.

படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.